தலைப்பு

திங்கள், 27 நவம்பர், 2023

திருப்பதி பெருமாளான ஸ்ரீ கிருஷ்ணரும் புட்டபர்த்தி பெருமாளான ஸ்ரீ சத்ய சாயியும் ஒருவரே!

எவ்வாறு இரு அவதாரங்களும் ஒன்றே எனும் அனுபவப்பூர்வமான சத்தியத்தை ஒரு பரம‌பாக்கிய பக்தர் பெறுகிறார் எனும் சான்றாதார அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...!


திருப்பதி பெருமாளான ஸ்ரீ வெங்கடேஷ்வரரே ஸ்ரீ சத்ய சாயி என்பதை தன்னுடைய தனிப்பட்ட வாயிலாக சேவைத் திலகம் கஸ்தூரி பதிவு செய்கிறார்! அவருடைய குடும்ப தெய்வம் திருப்பதி பெருமாள்! அவருடைய மகன் உபநயனம் (பூநூல் வைபவம்) , திருமணம் போன்ற வீட்டு சுபநிகழ்ச்சிகள் யாவையும் முடிப்பதற்கு முன்னும் பின்னும் அவர் செல்வது திருப்பதிக்கே! இதுவே தொடர் வழக்கம்! 

இந்த நடைமுறையும் வழக்கமும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயியிடம் வந்த பிறகு எதார்த்தமாகவும் , பாபாவிடம் சேர்ந்த ஆன்ம திருப்தியினாலும் குறைந்து போகிறது! அப்படியே 15 வருடம் கடந்து போகிறது! திருப்பதி விஜயம் குறைந்து போகிறது! 


ஒருமுறை திருப்பதி செல்ல வேண்டும் என்று ஒரே உந்துதல்.. உடனே சேவைத் திலகம் கஸ்தூரி பாபாவிடம் அனுமதி கேட்கிறார்! "சரி! சென்று வா! ஆனால் அங்கே யாரை தரிசிப்பாய்?" என்று பாபா கேட்கிறார்!"உங்களைத் தான் சுவாமி!" என்கிறார்! "நல்லது! சென்று வா!" என்று மீண்டும் பாபா தெரிவிக்க...

எழுபது வயதான கஸ்தூரி திருப்பதிக்கு செல்கிறார்!

அங்கே கஸ்தூரித் திலகம் கஸ்தூரி திலகத்தை காண நெருங்குகிற போது..‌தனது இரண்டு கண்களையும் அவரால் நம்ப முடியவில்லை.. கண்களை கசக்கிறார்.. மீண்டும் தரிசிக்கிறார்... அது திருப்பதி சந்நதி! அவரால் நம்பவே முடியவில்லை.. அதை எதிரே பார்க்கவில்லை! 

சந்நதியில் திருப்பதி பெருமாள் சிலா விக்ரஹம் கண்ணுக்கே தெரியவில்லை.. அங்கே ஸ்ரீ சத்ய சாயியே நின்று கொண்டிருக்கிறார்! தான் பாபாவை நினைத்ததால் தான் அவர் தெரிவது போல் பிரமையோ என்று நினைத்து.. மீண்டும் திருப்பதி பெருமாளை நினைவுபடுத்தி நோக்குகிறார்.. ஹூம்! இப்படி  எத்தனை தடவை உற்று நோக்கினாலும் பாபாவே நின்று கொண்டிருக்க மீண்டும் தான் சேவை இன்றும் ஸ்தலமான புட்டபர்த்திக்கே வருகிறார்.. அவர் திரும்புகிற போது "பெருமாளே பாபா!" என்கிற பேரனுபவத்தோடு இதயம் பூரணமாய் திரும்புகிறது! அது முற்றிலும் அவருக்கு பிரத்யேகமாக நிகழ்ந்த தெய்வீகத் திருப்பம்!


சேவைத் திலகம் கஸ்தூரியின் முழுப்பெயர் கஸ்தூரி ரங்கநாத சர்மா! ஒருமுறை அவர் ஸ்ரீரங்கம் செல்கிறார்... 20 அடி கொண்ட சந்நிதான சிலா மூர்த்தியாக ரங்கநாதர் ஆஜானுபாகுவாய் சயனித்தபடி (சயனம் - சாய்ந்த நிலை) இருக்க... அப்படியே மூலஸ்தான ஸ்ரீ ரங்கநாதரின் பாதத்தை தரிசித்த அடுத்த நொடி பிரம்மிக்கறார்.. ஆனந்த ஆச்சர்யம்! எதிர்பாரா சம்பவம்! அங்கே உடல் கொண்ட பாபாவின் பாதங்களையே தரிசிக்கிறார்! அது மிகவும் மிருதுவாக , பேரழகோடு இருந்ததாகவும் விவரிக்கிறார்!


அது டிசம்பர் 1998 - 3 ஆம் தேதி! அது திருப்பதி தேவஸ்தானம்! மூல விக்ரஹ பெருமாளுக்கு திருமஞ்சனம் நிகழ்த்த உள்ளே இருக்கிற பட்டர் (பூஜாரி) சேவையாற்ற வர... அலங்கார இத்யாதிகளை கலைக்கிறார்‌.. அதுவும் எப்படி? கண்களை துணியால் கட்டிக் கொண்டே அதனை செய்வார்! இறைவன் திருமேனியை நாம் ஆடையின்றி தரிசிக்கக் கூடாது என்ற மிக உணர்வுப்பூர்வமான ஐதீகம்! காரணம் : இறைவனே நமது தந்தையும் தாயும் என்பதால் எழுந்த அர்த்தமுள்ள ஐதீகம் அது! அப்படி ஒரு பட்டர் தனது கைகளால் தொட்டுத் தொட்டு ஆபரணங்களை கலைக்கும் போது.. கண்களைத் தொடுகிறார்..அது நிஜ கண்கள் போல் விரல்களால் உணரப்படவே... உடனே தனது கண்கட்டை அவிழ்க்கிறார்! பேரானந்தப் பரவசம்.. ஒரு நொடி அதிர்ச்சியும் ஏற்படுகிறது! 

       ஆம் அங்கே பெருமாள் சிலா ரூபத்திற்கு பதிலாக பாபாவே நின்று கொண்டிருக்கிறார்! உணர்ச்சிவசப்பட்டு... "பா... பா...பாபா வந்திருக்கிறார் .. பாபா! சத்ய சாயி.. சத்ய சாயி!" என்று உடல் குலுங்க கை கால் நடுங்க கத்துகிறார்! "நான் இங்கே இருப்பேன்! போய் உன் நபர்களை தரிசிக்க அழைத்து வா!" என்று பாபா தெரிவிக்க...  திருப்பதி தேவஸ்தான அலுவல் அதிகாரிகளும் அந்தப் பரவசத்தை தரிசிக்க.. உடனே புட்டபர்த்திக்கு டெலிபோன் செய்ய.. பாபா வொயிட் ஃபீல்டில் இருப்பதாக தகவல் வர.. உடனே அவர்கள் பூரண கும்பத்தோடு வொயிட் ஃபீல்ட் பிருந்தாவனம் வந்து சேர...


 நேர்காணலில் பாபா "நான் தான் உங்களுக்கு அங்கேயே தரிசனம் கொடுத்தேனே! இங்கேயும் எதற்கு வந்தீர்கள்?" என்று புன்னகையோடு கேட்கிறார்!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page no: 121 - 123 | Author : Dr J. Suman Babu ) 


கலியுகத்தில் சிலா வடிவமாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் முதன்முதலாக வீற்ற இடம் திருப்பதி... ஸ்ரீ கிருஷ்ணர் பரிபூர்ண அவதாரம் என்பதால் திருப்பதி பெருமாளே அம்பாளாகவும் கண்களுக்குத் தெரிகிறார்! முருகனாகவும் தெரிகிறார்! அதற்குக் காரணம் அனைத்து அவதாரங்களும் ஸ்ரீ கிருஷ்ணருக்குள்ளேயே அடக்கம்!  பிறகே ஸ்ரீ ஷிர்டி சாயி ஸ்ரீ சத்ய சாயியாக ஸ்ரீ கிருஷ்ணர் கலியில் அவதரித்தது! திருப்பதி செல்வதும் பெருமாளை தரிசிப்பதும் ஆன்ம லாபம்! கர்ம நிவர்த்தி! அப்படி அந்த திருப்பதி பெருமாளே பாபாவாக உடல் கொண்டு தரை இறங்கியதே நம்மோடு ஞான நெறிகளைக் கடைபிடிக்க வைத்து தன்னோடு நம்மை ஐக்கியப் படுத்தவே!


விநா வெங்கடேசம் நநா சோ நநா ஸ:

சதா வெங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி! 

ஸ்ரீ நிவாசா வெங்கடேஷா

ஸ்ருத ஜன பரிபாலா சாயீஷா! 


  பக்தியுடன் 

*வைரபாரதி*

1 கருத்து:

  1. அருமையான பகிர்வு! இரண்டு தெய்வீக வடிவங்களும் ஒரே மாதிரி தான் என அனுபவத்திலும் உணர்கிறோம்!!

    பதிலளிநீக்கு