தலைப்பு

சனி, 2 டிசம்பர், 2023

தீர்க்க தரிசன ஸ்ரீ காசி யோகி | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

எவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்பே முன்பின் அறிமுகமில்லாத ஒரு யோகி கூறிய வாக்கு எத்தனை சத்தியமாக நிகழ்ந்தது அதில் பாபா எவ்வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்... அவர் பாபா பற்றி கூறிய சத்திய மொழிகள் யாவை? சுவாரஸ்யமாக இதோ...


இல்லாண்டு ரங்கநாயகலு என்பவர் பாபாவின் அதிதீவிரபக்தர்... அவர் பெங்களூர் பிருந்தாவனில் சனாதன சாரதி அலுவலகத்தில் சேவையாற்றிக் கொண்டிருந்தவர்... "ஸ்ரீ சத்ய சாயி திவ்ய லீலாம்ருதமு" என்கிற பாபா அற்புதங்களின் ஒரு நூல் தொகுப்பை வெளியிட்டவர்...பாபட்லா எனும் மாவட்டத்தில் இருக்கிற வேதபாலம் (Vetapalem) என்கிற ஊரில் பிறந்து வளர்ந்தவர் அவர்! ஒருமுறை அவர் காசியில் தங்கி இருக்கிறார்... 


கங்கை பாரதத்தின் தாய்ப்பால்... காசி கங்கையின் தாய்மடி... துறவையும் தவத்தையும் காற்றலைகளின் வழி கீதை நடத்துகிற ஷேத்திரம்... பூமியில் பூக்கள் மலர்வது இயற்கை என்பதைப் போல காசியில் துறவிகள் மலர்வது இயல்பே! பல துறவிகளில் ஒருவர் தெய்வீக சக்தி வாய்ந்த மகானாக இருப்பர்.. வெளியே அடையாளம் தெரிவது கடினம்... பெரும்பாலும் உலக மாயையில் மூழ்கிய மக்களிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்வர் உத்தம மகான்கள்! அது சுயநலமல்ல... சுய பலம்... தனிமை என்பது அத்தனை எளிமை அல்ல.. தனிமையே ஆன்மாவின் பிரதேசம்...ஆன்மாவை உணர, தான் ஆன்மாவே என்பதை உணர தனிமையும் விழிப்பும் மனிதர்க்கு அவசியம்... ஆகவே தான் கூட்டம் கூட்டமாக காசியில் மக்கள் நடந்து போனாலும் ஒருவித தனிமையை நம்மால் உணர முடிகிறது...அதற்குக் காரணம் தவசிகளின் ஆன்ம அதிர்வலைகள்!


ஒரு சம்பவத்தை விவரிப்பதற்கு முன் அதன் சூழ்நிலையை விவரிக்க வேண்டும்.. ஆகவே தான் காசியை பற்றிய வர்ணனை அவசியப்படுகிறது! அப்பேர்ப்பட்ட புனிதங்களின் அலைகள் புரண்டோடும் காசியின் படகுத் துறையில் ரங்கநாயகலு தனது மனைவியோடும் அவரது சகோதரனோடும் அளவலாவிக் கொண்டிருக்கிறார்! எப்போது ஆன்மீக வாழ்வு ஒருவருக்கு நேரும் என சுவாமியை தவிர எவராலும் தீர்மானிக்கமுடியாது! அப்படி அவர்கள் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கும் போது கங்கை நதியில் ஒரு சிறு படகில் அவர்களை நோக்கி ஒருவர் வருகிறார்..


 அவருடைய ரூபம் அவர் ஒரு யோகி என்பதை அவர்களால் அனுமானிக்க முடிகிறது... ஆனால் அவர் ஏன் அவர்களை நோக்கி வருகிறார்...? 'திக்' என அவர்களுக்கு இருக்கிறது! எதிர்பாராத ஒரு காட்சி அது.. கனவு அல்ல... எதார்த்தமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போது நிகழ்கிற திருப்புமுனை சம்பவம் அது! திருப்புமுனை என்பதே எதிர்பாரா நேரத்தில் நிகழ்வது தான்! கரை ஒதுங்கிடும் அந்த தவ கலங்கரை விளக்கம் ரங்கநாயகலு தம்பதியினரை நோக்கியபடி "அதோ அங்கே மிதக்கிறதே அந்தப் பூக்களை எனக்கு தாருங்கள்!" எனக் கேட்கிறார்! ஒரு தவ யோகி கேட்கிறாரே என ரங்கநாயகலுவும் அதனை எடுத்து யோகியிடம் தர... யோகி அதனை அவர்களிடமே அளிக்கிறார்... தம்பதியினர் வாங்கிக் கொண்டவுடன் அந்தப் பூங்குவிலுக்கு நடுவே சிறிய பகவத் கீதை புத்தகம் தென்படுகிறது...அது வடமொழியில் எழுதப்பட்டிருக்கிறது! ஆச்சர்யப்படுகிறார்கள் அவர்கள்... அதை ரங்கநாயகலு மனைவியின் சகோதரரும் பார்க்கிறார்.. அவர் பெயர் ஆனந்த்... யோகி அவரைப் பார்த்து "நீ தென்பகுதிக்கு பயணித்து அங்கே பகவத்கீதையின் ரசங்களையும் ஞானத்தையும் எல்லோருக்கும் எடுத்துக்கூறுவாய்!" என ஆசீர்வதிக்கிறார்! அப்போது ரங்கநாயகலு தங்களுக்கு ஏதாவது வழிகாட்டுதல்கள் இருக்கிறதா என அந்த யோகியை பார்த்துக் கேட்க... யோகி சொன்ன பதிலில் சிலிர்த்துப் போகிறார்கள் தம்பதிகள்! 


"நீங்கள் இருவரும் நெடுநாள் கடவுளின் அவதாரத்தோடே வாழப்போகிறீர்கள்!" என ஆசீர்வதிக்கிறார்! அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த காசி யோகி அவர்களின் கண்ணில் படவே இல்லை! தேடிப் பார்த்தும் காசி நகரில் எங்கும் அவரை அவர்கள் அதற்குப் பிறகு தரிசிக்கவே இல்லை! யோகிகள் என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்பவர்கள்... என்ன சொல்ல அனுமதியோ அதை மட்டுமே பகிர்பவர்கள்! வருபவர் போகிறவர்களுக்கு எல்லாம் குறி சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள்! சுவாமியின் கைக்கருவிகள் அவர்கள்...! 


அந்த அபூர்வ காசி யோகி சொல்லியபடியே ஆனந்த் அவர்கள் பிற்காலத்தில் துறவியாகிறார்... ஸ்ரீ மலையாள சுவாமியின் சீடராகி ஸ்ரீ வித்ய பிரகாசானந்த கிரி எனும் பெயரோடு கீதை ரசங்களை தென்பகுதி மக்கள் ஆன்ம தாகம் தீர தெய்வீகம்  உணர்த்தி உரையாற்றுகிறார்! (இவரைப் பற்றிய குறிப்பும் பாபா அனுபவமும் யுகத்தில் பகிரப்பட்டிருக்கிறது) ரங்கநாயகலு தம்பதியினரோ அதே போல் புட்டபர்த்தியில் பாபாவுடனேயே  தங்கி சாயி சேவையில் தங்கள் வாழ்வு முழுவதையும் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்! யோகிகள் தீர்க்க தரிசிகள்! அந்த தீர்க்க தரிசனம் எப்போதும் பொய்ப்பதே இல்லை! 


(ஆதாரம்: Sri SathyaSai and Yogis / Page no: 79 / Author : Jantyala Suman babu)


ஞான - ராஜ- பக்தி- கர்ம ஆகிய நான்கு வகை யோக மார்க்கமும் ஒன்றுக்கொன்று பிணைந்திருப்பதே! ஒரு மார்க்கத்தை பின்பற்றும் யோகிகள் மூன்று மார்க்கங்களையும் தானாகவே பின்பற்றி விடுகிறார்கள்... மூக்கில் இரு துவாரம் இருந்தாலும்... தேங்காயில் மூன்று கண் இருந்தாலும் உள்ளே போய்வருகிற சுவாசமும்...உள்ளே இருக்கிற தேங்காய் நீரும் ஒன்றே என்பது போல யோக மார்க்கங்கள்! பாபாவோ இந்த நான்கையுமே தனது ஆன்மீக கோட்பாடுகளாக வைத்திருக்கிறார்! அதை தினசரி கடைபிடிப்பதில் தான் நாம் பாபாவை அனுபவிப்பதும்... அனுபவிக்காததும்...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக