தலைப்பு

புதன், 7 பிப்ரவரி, 2024

காஷ்மீரில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு வேற்றுருவில் தரிசனம் கொடுத்த பாபா!

ஒரு சாயி பக்தரின் பத்ரிநாத் பயணத்தில் அவருக்கு நேர்ந்த உயிர் பாதுகாப்பு மற்றும் தரிசன அனுபவமும் விறு விறு என இதோ..

அவர் பெயர் வி.பாலகிருஷ்ணா எராடி இந்தியாவின் (சுப்ரீம் கோர்ட்) உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர். அவர் மேலும் கேரளா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் தேசிய நுகர்வோர் தகராறு தீர்க்கும் ஆணையத்தின் தலைவராகவும் ரவி&பியாஸ் நீர் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் இருந்தார். மேலும் ஆன்மீகத் துறையிலும், கலாச்சாரத் துறையிலும், சமூக அமைப்புகளிலும் அனைவராலும் அறியப்பட்டவர். பொதுவாக 50 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்குத் தான் உயர் நீதிமன்றத்தில் பதவி உயர்வு வழங்குவது சட்டத்தின் வழக்கம், ஆனால் பேரிறைவன் பாபாவின் பரிபூர்ண அருளால் மட்டுமே தனது 44 ஆவது வயதிலேயே அவர் நீதிபதியாக உயர்ந்தவர் அவர்!

அது ஏப்ரல் 1966. தனது தந்தையாரையும் அழைத்துக் கொண்டு அவர் பத்ரிநாத் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்! உடனே பேரிறைவன் பாபாவிடம் அனுமதி வாங்கச் செல்கிறார்! பாபாவும் அதற்கு அனுமதி அளித்து தான் அங்கே தரிசனம் தருவதாகவும் வாக்களிக்கிறார்! அதைக் கேட்டு பரவசப்படுகிறார் பாலகிருஷ்ணா!


டெல்லியிலிருந்து பத்ரிநாத் செல்ல வேண்டும்! இரண்டு காரில் செல்கிறார்கள்! ரிஷிகேஷ் வரை சாலை சீராக இருக்கிறது! அதற்குப் பிறகு ஒடிசலாக , ஒற்றையடிப் பாதை போலேவே காட்சி அளிக்கிறது! அந்த காலத்தில் அப்படிப்பட்ட பாதை தான்! கால்வாய்களும் வருகின்றன! காஷ்மீர் ஸ்ரீநகர் வரை பயணம் நீள்கிறது! 

ஸ்ரீநகரில் இருந்து அதிகாலையே கிளம்பி விடலாம் என்று அவசர எண்ணம் கொள்கிறார்கள்! அப்படி பயணம் செய்தால் ஜோஷி மடத்திற்கு மதியத்திற்குள் சேர்ந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்! ஆனால் சூழ்நிலையோ தலைகீழாக இருக்கிறது! எதையும் அறியாமல் நீதிபதியின் இரண்டு கார்களும் அதிகாலை 6 மணிக்கே பயணிக்கின்றன...! ஆனால் அந்த சாலையில் வேறு எந்த வண்டிகளுமே தென்படவில்லை! இரண்டு மூன்று செக்கிங் போஸ்ட், ஏதோ கார் டிரைவரை பார்த்து நிறுத்தும் படி ஹிந்தியில் சத்தம் போடுவார்கள் செக்போஸ்ட்'டில் இருப்பவர்கள்! பாதையும் புரியவில்லை , சரிவர அவர்கள் பாஷையும் புரியவில்லை , ஆகவே அவரது வண்டிகளும் நிற்கவில்லை! அப்போது காலை 8.30 மணி, சுமார் 35 கிலோ மீட்டர் ஸ்ரீநகரை விட்டு வெளியே வந்துவிடுகிறார்கள்! 

ஒரு குக்கிராமம் தென்படுகிறது! ஒரு தடுப்பு கம்பி இருக்கிறது... அதற்கும் அந்தப் பக்கத்தில் இருந்து ஒரு சப் இன்ஸ்பெக்டர் வருகிறார்.. அவர் அருகே சில காவல்துறையினரும் இருக்கிறார்கள்! சிறப்பு அனுமதிச் சான்றிதழ் இருந்தபடியால் இரண்டு செக்போஸ்ட்டிலும் அவர்கள் கார்கள் நிற்கவில்லை! பாதுகாப்புத் துறையில் இருந்து பெறப்பட்ட சிறப்பு அனுமதி அது! அதை நீட்டுகிறார் பாலகிருஷ்ணா! இந்த ஒரு நாள் எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை! அது கான்வாய்களாகவே இருந்தாலும் சரி! பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோஷி மடம் - பத்ரிநாத் பயணப் பாதையை திறந்து வைக்க வருவதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடு என்று அந்த சப் இன்ஸ்பெக்டர் அமைதியாக பதில் தருகிறார்! ஆகவே அதே இடத்தில் இறங்கி தங்கும் சூழ்நிலையாகிவிடுகிறது! 

தலை மேல் கூரை இல்லை.. கடைத்தெரு இல்லை... கையில் உணவு இல்லை! மேலே ஆகாயம் கீழே பூமி.. சுற்றி குளிர்! என்ன செய்வது? ஒன்றும் விளங்கவில்லை..?! வழி ஏதும் இல்லை! மனம் சட்டென பேரிறைவன் பாபாவை நினைக்கிறது! நினைத்த அடுத்த நிமிடம்.. அந்த குக்கிராமத்தில் இருந்து ஒரு ஜீப் பறந்து வருகிறது... ஜீப்பின் வெளியே ஒரு சப் இன்ஸ்பெக்டர் இறங்கி வந்து, எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு மன்னிப்பு கேட்கிறார்! இங்கே இப்போது தான் வர வாய்ப்பே இல்லை என்றும், திடீரென தோன்றியதால் வந்ததாகவும், இரண்டு கார்களும் மேற்கொண்டு பயணிக்க சிறப்பு அனுமதியை தானே கைப்பட எழுதித் தருவதாகவும் சொல்லி, தான் மீண்டும் சாமோலிக்கு (ஓர் இடத்தின் பெயர்) விரைய வேண்டும் என்றும் தகவல் கூறி அவசரமாக விடை பெறுகிறார்! வேறு எந்த கேள்விகளும் அவர் கேட்கவே இல்லை... காவல்துறைக்கான வழக்கமான கண்டிப்போ ஜபர்தஸ்தோ எதையும் அவர் காட்டாமல்.. ஒருசில நிமிடங்களில் மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்கிறார்! பாலகிருஷ்ணா பரவச கிருஷ்ணனாகிறார்! தான் அங்கே தரிசனம் தருவேன் என்று பாபா சொன்னது எத்தனை சத்தியம் என்று கண் கலங்குகிறார்! அவரின் ஈர விழியோடு இமயத்தின் ஈரக் காற்றலை தழுவ.. பயணம் சுமூகப் பயணமாக மாறுகிறது!

(Source : Miracles of Divine Love - vol 1 | Page no : 65 - 68 | Complied by P. Gurumoorthy)


சாயி வாக்கு சத்ய வாக்கு! அது என்றும் பொய்ப்பதே இல்லை! நமது அன்றாட வாழ்க்கையில் பேரிறைவன் பாபாவே நமக்கு ஒரே வழித்துணையும், விழித்துணையும்! தனது பக்தர்களை பாபா ஒருபோதும் கைவிட்டதாக இதிகாசமே இல்லை! நல்வழியில் நாம் எங்கு சென்றாலும் பாபா நம் கூடவே வருகிறார் என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும்! அத்தகைய திடமான நம்பிக்கையே அவர் கூடவே இருப்பதற்கான ஆழமான ஆன்ம உணர்வை நமக்குள் ஊட்டுகிறது!


பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக