தலைப்பு

சனி, 10 பிப்ரவரி, 2024

கடும் பிரச்சனைகளே இரு அவதாரங்களையும் பக்தர் பால் இழுத்திடும் காந்தம்!

எவ்வாறு இரு யுகங்களிலும் கடும் பிரச்சனைகள் வரும் போதெல்லாம் அது பக்தியை, ஆன்மீகத்தை , பரிபக்குவத்தை ஏற்படுத்துகிறது  எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!


விபத: ஸந்து தா: ஷஷ்வத் 

தத்ர தத்ர ஜகத்-குரோ 

 பவதோ தர்ஷனம் யத் ஸ்யாத் 

அபுனர் பவ-தர்ஷனம் 

"ஓ பிரபஞ்ச ஆசானே! எங்களுக்கு பிரச்சனைகளையே எப்போதும் கொடுத்து கொண்டிரு! அதனால் தானே எங்களுக்கு உனது அற்புதமான தரிசனம் கிடைத்துக் கொண்டிருக்கிறது! அந்தப் பிரச்சனைகளே எங்களது பாவங்களை கரைத்துக் கொண்டிருக்கிறது!" என்கிறார்! யார் இந்த அபார ஞான மொழிகளை உதிர்த்தது? வேறு யாருமல்ல.. சாட்சாத் பாண்டவர்களின் தவத்தாய் குந்தி தேவி அம்மையாரே!

இதனை கேட்ட ஸ்ரீகிருஷ்ணரோ ஆச்சர்யப்படுவது போல் "அது எப்படி அத்தை!! எதனால் அப்படி கேட்கிறீர்கள்?!" என்று கேட்கிறார்!

"ஆம் கிருஷ்ணா! அது உண்மை தான்... எங்களுக்கு பிரச்சனைகள் வரும் போதெல்லாம் நாங்கள் உனது அருகிலேயே வருவதை உணர முடிகிறது!" என்கிறார் குந்தி மாதா!

அதுவே சத்தியமான சத்தியம்! எப்போதெல்லாம் பாண்டவர்களுக்கு இடரும் இன்னலும் நேர்கிறதோ அப்போதெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை தேடியே சென்று அபயம் அளித்திருக்கிறார்! தர்மருக்கு நியாயமாக சேர வேண்டிய ராஜ்ஜியத்தை அளித்த பிறகே தனது ராஜ்ஜிய துவாரகைக்கு செல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! அது வரை தனது ராஜ்ஜிய பரிபாலனையை கூட ஸ்ரீ கிருஷ்ணர் கவனிக்கவில்லை.. பக்தர்க்கு ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவிக் கரத்தை அபய கரமாக நீட்டுவதே பேரவதார ஸ்ரீ கிருஷ்ணரின் இறை சுபாவம்!


இதைப் போலவே இதில் இம்மி அளவிற்கும் பிசகாமல் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் திகழ்கிறார்! அதற்கான ஏராள அனுபவச் சான்றுகள் இன்றளவும் உலா வந்து கொண்டிருக்கின்றன..

ஆகவே தான் பாபாவின் 1008 நாமாவளிகளில் 

"ஓம் ஸ்ரீ சாயி சதா பக்த சிந்தனாய நமஹ"

"ஓம் ஸ்ரீ சாயி பக்த பரிபாலனாய நமஹ" என்கிற மந்திரச் சொல்லே இடம் பெற்றன...!

        ஒருமுறை அது கோடை கால விடுப்பு.. ஆகவே பாபாவினால் நடத்தப்படுகிற கோடை கால வகுப்பு! ஊட்டியில்...! பாபா தனது மாணவர்களை தொட்ட பேட்டாவை சுற்றிப் பார்க்கும்படி சொல்லிவிட்டு... அப்படியே பின்னால் காரில் பாபாவே புறப்பட்டுப் போகிறார்! பல மாணவர்கள் சேர்ந்து தனியான பேருந்தில் புறப்பட... இரு மாணவர் மட்டும்  பாபாவின் கார் தரிசனமும் காண வேகமாக காரில் புறப்பட்டுச் செல்கிறார்கள்!

முன்னால் பேருந்து.. பின்னால் பாபாவின் கார்.. அதற்கும் பின்னால் இரு மாணவரின் கார்.. சர் சர் சர் என வேகமாக மூன்றுமே காற்றைக் கிழித்துச் செல்கின்றன... சடாரென வெகு வேகத்தில் இரு மாணவர் வந்த கார் பாபாவின் காருக்கும் முன் வர .. அவசர திருப்பத்தில் அவர்கள் காரை நிறுத்தி கதவைத் திறக்கையில் கால்கள் இடறி விழுகிறார்கள்! விழுந்த அடுத்த நொடியே பாபா கார் நிற்க.. கதவை திறந்து பாபா ஓடி வந்து 

"ஓ.. பங்காரு! அதிகமாக அடி பட்டு காயம் ஏற்பட்டுவிட்டதா?" என கருணையோடு கேட்க...

"அது ஒரு பிரச்சனையே இல்லை சுவாமி! நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்! மிகவும் கொடுத்து வைத்திருக்கிறோம்! இல்லை என்றால் நீங்கள் இப்படி எங்களைத் தேடியே அருகே வந்திருப்பீர்களா?" என்று அதே குந்தி தேவி சொன்னதைப்  போலவே அந்த இரண்டு மாணவர்களும் சொல்ல.. பாபா பூரிப்போடு புன்னகைத்துச் சிரிக்கிறார்! 

காயமோ அந்த கணமே வலி தருவதை நிறத்திக் கொள்கிறது!

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 140 | Author : Dr. J. Suman Babu )


கசக்கிப் பிழிந்தால் துணி மட்டுமல்ல கஷ்டங்கள் பிழியப் பிழிய அப்போது தான் துணிவே மனதிற்கு வருகிறது...! கறை நல்லது என்று ஒளிபரப்பப்படும் விளம்பரம் போலவே கஷ்டம் நல்லது என்பதை மனிதர்கள் உணர வேண்டும்! கஷ்டத்தின் தாய் இஷ்டமே! இஷ்டம் குறையக் குறைய கஷ்டமும் குறைந்து போகிறது! வலிமை என்ற சொல்லில் வலி என்ற சொல் இருப்பது போல் வலியை எதிர்கொள்ள எதிர்கொள்ள வலிமை உயிர்க்கிறது! பிரச்சனைகளில் பெரிய பிரச்சனை மனப் பிரச்சனையே! அது வெறும் நாமே செய்து கொள்ளும் பூதாகாரக் கற்பனையே! என்ன ஆகிவிடுமோ? என்ற தேவையற்ற பயமே! வருகிற பிரச்சனைகளை, அதனால் ஏற்படும் குழப்ப எண்ணங்களை ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் பாதங்களில் ஒருதுளி மிச்சமில்லாமல் ஒப்படைத்துவிட்டு பாரமின்றி வாழ்க்கையை நடத்துவதே புத்திசாலித்தனம்! அந்த புத்திசாலித்தனம் உண்மையான பக்தர்களுக்கே வாய்க்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக