தலைப்பு

சனி, 3 பிப்ரவரி, 2024

விபத்திலிருந்து உயிர் காத்திடும் இரு வினய அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகத்திலும் இரு அவதாரங்களும் தங்களது பக்தர்களுக்கு ஏற்படும் விபத்திலிருந்து உயிரை காப்பாற்றுகின்றனர் எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்ய சுருக்கமாக இதோ...!

அது துவாபர யுகம்! உலகத்தின் முதல் பங்காளிச் சண்டை யுத்தமாக மாறி கிரக பாரங்களை குறைப்பதற்காகவே ஸ்ரீ கிருஷ்ண சங்கல்பம் நிகழ்ந்து முடிந்த தருணம்! போர்க்களம் அதகளமாக மாறி இருந்தது! மழை பெய்து முடிந்தால் ஏற்படும் மண் சகதி போல் அம்பு மழை முடிந்த பிறகு அங்கு ஒரே ரத்தச் சகதி! சொத சொத என இருந்தது மணல்! மண்ணுக்காக போரிட்டவர்கள் மண்ணிலேயே சாய்ந்தார்கள்! ஆசையின் முடிவு அழிவு என்பதை புத்தராக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்து சொல்வதற்கு முன்பே யுத்த களத்தையே சாட்சியாக அவர் காட்டிக் கொண்டிருந்த காலம் அது! சுதர்சன சக்கரத்திற்கு மகாபாரதப் போரில் வேலையே இன்றி அது நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தது! வீடுகளில் மனைவிமார்களின் இதயமோ தங்களது கணவன்மார்கள் உயிரோடு வருவார்களா? என ஏங்கிக் கொண்டிருந்தது! ஸ்ரீ கிருஷ்ணர் குதிரையின் கயிற்றை விடுவிக்கிறார்.. பின்னால் நின்று கொண்டிருக்கிறார் அர்ஜுனன்! "இதற்குத் தானே கீதை சொன்னாய் கிருஷ்ணா?" என்பது போல் அர்ஜுனர் ஸ்ரீகிருஷ்ணரை பார்க்கிறார்! போரின் பாதிப்பு சிறிதும் கூட முகத்தில் காட்டவில்லை ஸ்ரீகிருஷ்ணர்! "அர்ஜுனா நீ முதலில் ரதத்தை விட்டு வெளியே வா!" என்கிறார் மர்மப் புன்னகை உதிர்த்தபடி ஸ்ரீ கிருஷ்ணர்! ரத்தத்தை (ரத்த பாசம்) விட்டு வெளியே வந்த அர்ஜுனர் ரதத்தை விட்டு வெளியேறாமல் மரியாதை நிமித்தமாக "நீயே முதலில் இறங்கு கிருஷ்ணா!" என்கிறார்! பெரியவர்கள் அமர்ந்த பிறகே நாம் அமர வேண்டும் என்பது பாரதப் பண்பாடு! அது போல் நினைத்து அர்ஜுனர் தெரிவிக்க‌.. "இல்லை இல்லை நீயே முதலில் இறங்கு!" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! "நீ தேரோட்டி மட்டுமல்ல எனக்கு வழிகாட்டியும் கூட! ஆக நீ முதலில் இறங்குவதே உனக்கு நான் தரும் மரியாதை!" என்று அர்ஜுனர் சொன்னதற்கு.." "ஒரு காரணத்தோடு தான் சொல்கிறேன்!" என்று ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் மர்மப் புன்னகை உதிர்க்கிறார்!

இப்படிப் போர் முழுக்க ஸ்ரீ கிருஷ்ணர் புரிந்தது மர்மப் புன்னகையே! அந்தப் புன்னகை ஒன்றை வைத்தே தர்ம வழி நடந்த ஐவர்களை வெல்ல வைத்தார்!

ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னால் ஏதாவது காரணம் இருக்கும் என்பது அர்ஜுனர் அறிந்ததே! ஆகவே சரி என அர்ஜுனரும் தனது ஆயுதாதிகளோடு ரதத்தை விட்டு இறங்குகிறார்! அர்ஜுனர் இறங்கிய கையோடு ஸ்ரீ கிருஷ்ணர் ஒரே குதி! ரதத்தை விட்டு ஸ்ரீ கிருஷ்ணர் குதித்த அடுத்த நொடி ரதம் வெடித்து சுக்கு நூறாக உடைகிறது! அதிர்ந்தே போகிறார் அர்ஜுனர்!

யுத்த காலத்தில் அர்ஜுனருக்கு எதிராக  கௌரவப் படையினர் ஏவிவிட்ட அக்னி அஸ்திரம், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் மந்திர அஸ்திரம் போன்றவை அர்ஜுனரை எதுவும் செய்யாமல் தடுத்தது ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமையே! இல்லையேல் எப்போதோ அர்ஜுனரின் ரதம் சுக்கு நூறாக வெடித்திருக்கும்! ஒரு தடுப்பணையாக ஸ்ரீ கிருஷ்ணர் திகழ்ந்தார்! ஆகவே எந்த அஸ்திரமும் எதுவும் வேலை செய்யவில்லை! இதை ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கிச் சொன்ன போது கண்கலங்கிப் போகிறார் அர்ஜுனர்! அப்போது ரத்தம் பார்த்த அந்தப் போர்க்கள மண் பக்தியால் சிந்தப்பட்ட கண்ணீரைத் தாங்கி தனக்கு பால் வார்த்துக் கொண்டது!


இதே போலவே ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி அர்ஜுனரை காப்பாற்றினாரோ, பெருத்த அவமானத்திலிருந்து துரௌபதியை காப்பாற்றினாரோ, உடல் ஒடிந்து போகாமல் இருக்க பொன் உருவ மாதிரி சிலை செய்ய வைத்து பீமனை காப்பாற்றினாரோ, அரக்கு மாளிகையிலிருந்து ஒட்டு மொத்த பாண்டவர்களையும் காப்பாற்றினாரோ, இறுதியாக அவர்களுக்காகவே ராஜ்ஜியங்களை காப்பாற்றிக் கொடுத்தாரோ அதைப் போல் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் தனது பக்தர்களை கைவிடாமல் காப்பாற்றிய திருச்சம்பவம் ஒன்று இரண்டல்ல...! அதை விவரிக்க ஆரம்பித்தால் அதுவே இன்னொரு மகாபாரத புத்தகமாகும்! இன்றளவும் பாபாவின் பாதுகாவல் தொடர்ந்த வண்ணமாய் இருக்கிறது! 

ஆதியிலிருந்தே அரவம்  தீண்டாதபடி இரவில் தூங்குகிற பக்தர்களை தானே வலம் வருவார்! சோதனை இடுவார்! எத்தனையோ பக்தர்களை சூழ்ந்த ஆபத்துகளை முன்னமே சொல்லி அவர்களை அதிலிருந்து தடுக்கவும் செய்திருக்கிறார்! பக்தரை பதம் பார்த்த வந்த பாம்பையும் அதன் கடியையும் தானே வாங்கி மண்ணில் பாபா சாய்ந்திருக்கிறார்! தனது முந்தைய ஷிர்டி அவதாரத்தில்  நெருப்பில் விழப் போன தனது பக்தையின் குழந்தையை இருந்த இடத்தில் இருந்தே நெருப்பில் தனது கைவிட்டுத் தடுத்து தீக் காயத்தை தான் வாங்கி இருக்கிறார்! 

பாபாவுக்கு மட்டுமல்ல பாபாவின் பக்தர்களுக்கும் பலர் விஷம் வைத்தனர்! அதை அவர்களின் தூக்கத்திலேயே ஒரு சிறு பின் விளைவுகள் ஏற்படாதவாறு எடுத்திருக்கிறார்!

இதற்கு பல உதாரணங்கள்! இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் மீராவுக்கும் இது நிகழ்ந்திருக்கிறது! அடியேனுக்கும் நிகழ்ந்திருக்கிறது! இப்படிப் பலருக்கு! இதற்கான சான்றாதாரங்கள் அவரவர்கள் தங்கள் அனுபவங்களை எழுதிய தனிப்பட்ட புத்தகங்கள்! அந்த உயிர் மீட்பு அனுபவத்தை அடைந்த பலர் இன்னமும் உயிரோடும் இருக்கிறார்கள்! அவர்கள் வெறும் சான்றாதாரங்கள் மட்டுமல்ல பாபா ஸ்ரீ கிருஷ்ணரே என்று சாட்சியாய் வாழும் உயிராதாரங்களாய் மண்ணிலேயே உலாவுகிறார்கள்!


சாயி பக்தை திருமதி லீலா எஸ்‌‌. மூர்த்தி தனது தனிப்பட்ட அனுபவத்தை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார்!         

 ஒருமுறை அலுவலகத்தில் இருந்து திரும்பி வர வேண்டிய தனது கணவருக்காக வீட்டில் காத்திருக்கிறார் அவர்! அது மாலை 5 மணி! கார் சப்தம் கேட்கிறது! அது அவரது கார் சப்தமே என கண்டுணர்கிறார் லீலா! லீலா கூலாக வீதியில் வர... அந்த எதிர்பாராத கோர சம்பவம் லீலாவின் கண் முன்னமே ஏற்படுகிறது! இரு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன‌ பாண்டவர்களும் கௌரவர்களும் மோதிக் கொண்டது போல்...!  ஒரு நிமிடம் இதயத் துடிப்பு நின்றே விடுகிறது லீலாவுக்கு... பேரதிர்ச்சி! ஒரே புகை! வாகனங்களின் உதிரி பாகங்களில் பாகங்களைக் காணவில்லை.. உதிரி மட்டுமே மண்ணில் உதிர்ந்திருக்கிறது! லீலாவின் கணவர் மூர்த்தியின் கார் ஓட்டுனருக்கும் அடி! சப்த நாடியும் ஒடுங்கி விடுகிறது லீலாவுக்கு! என்ன ஆனதோ? ஏதானதோ...? பாவம் டிரைவருக்கும் அடி.. அவர் உயிரோடு தான் இருக்கிறாரா? என கணவரின் பரிதாப நிலை காண ஓடிப்போகிறார் லீலா! மூச்சு வாங்குகிறது! கண்ணில் கண்ணீர் மாலை மாலையாக விழுகிறது! சம்பவ இடத்தின் அருகே செல்கிற போது ஆச்சர்யம் காத்திருந்தது லீவாவுக்கு... அரிசி அப்பளமாக நொறுங்கிப் போயிருந்த காருக்குள் பார்த்த போது தனது கணவரை காணவில்லை... மோதிய மோதலில் தானாக கதவு திறந்து எங்கேனும் தனது கணவர் வீசி எறியப்பட்டிருப்பாரோ? என்ற பயம் லீலாவுக்கு... ஆனால் எந்தவித சேதமும் இன்றி ரத்த சேதாரமும் இன்றி அவர்களின் வாழ்வாதாரமான பாபா காப்பாற்றியதை அவர்களே உணரும் வண்ணம் லீலாவின் கணவர் மூர்த்தி வீதியில் நடந்து  வருகிறார்! 

    விபத்து நடக்கும் ஒருநிமிடம் முன்பாக காரை விட்டு வெளியே நடந்து வீதிக்குச் சென்றிருக்கிறார் மூர்த்தி... அந்த ஒரு நிமிட இடைவெளியில் ஒரு பேருந்து வந்து காரை பதம் பார்த்து இருக்கிறது எனும் விபரம் கணவர் மூலமாக அறிந்து... மயிரிழையில் உயிரை தப்பிக்க வைத்த பாபாவை கண்ணீரோடு வணங்கி ஓட்டுனருக்கும் முதல் உதவி செய்கிறார்கள் இருவரும்...! கார் காயலாங்கடைக்கும்‌... காரின் ஓனர் மூர்த்தி தம்பதிகளின் வாழ்க்கை பாபாவின் கருணைக் கடைவிழிக்கும் சென்றது!

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 138 - 139 | Author : Dr J. Suman Babu ) 


ஏன் அந்த கார் டரைவரையும் ரத்தமே இன்றி பாபா காப்பாற்றி இருக்கலாமே? என்ற சந்தேகக் கேள்வி எழலாம்! அவர் மட்டுமல்ல அந்த டிரைவர் உயிர் பிழைத்ததே பாபா இட்ட பிச்சையே! தன்னை பக்தியே செலுத்தாவிட்டாலும் தனது பக்தரோடு பயணித்து வந்ததால் பாபா காட்டிய பரிவு அது! பக்தி ஒன்றே நமது பாதுகாவலுக்கான கடவுச் சொல்லும்! (Password).. அதுவே கடவுள் சொல்லும்! மனிதர் நாம் இந்த ஒரே ஒரு வாழ்க்கையை வைத்தே எல்லாவற்றையும் கம்பேர் செய்து கேள்வி எழுப்புகிறோம்! ஆனால் நமது இந்த வாழ்க்கையானது இந்த ஒரே ஒரு ஜென்மத்து வாழ்க்கை அல்ல! அதற்குள்ளே பல ஜென்மங்கள் அடங்கி இருக்கின்றன...! ஆகவே நடப்பது யாவும் சரியாகவே நடந்து கொண்டிருக்கிறது! அதில் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே யாவற்றுக்கும் ஆதாரமாகத் திகழ்கிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக