எவ்வாறு இரு அவதாரங்களே இவ்வுலகத்தையும் இப்பிரபஞ்சத்தையும் நிர்வகித்து ஆள்கின்றன எனும் ஆச்சர்யமான அனுபவம் இருவரின் வாய் மொழி வழியாக சுவாரஸ்யமாக இதோ...!
அது துவாபர யுகம்! ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனரிடம் தன்னிலை விளக்கம் அளிக்கிறார்! அது தெய்வீக பேருண்மை பொதிந்திருக்கும் விளக்கம்! அறிவிற்கு அப்பாற்பட்டு இதய உணர்வினால் உணரப்பட வேண்டிய இதிகாச விளக்கம்! அதுவே உயிர்கள் கரை சேர்வதற்கான கலங்கரை விளக்கம்!
காமாவிஷ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா।
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:॥
(ஸ்ரீ மத் பகவத் கீதை - 15. 13)
"நானே பூமியில் நிகரே இல்லாதவாறு மண்ணில் உள்ள உயிரினங்களை எனது தெய்வீகப் பேராற்றலினால் ஆதரித்து வருகிறேன்... குளிர் நிலா போல் அவைகளுக்கு நானே ஊட்டச்சத்தும் அளிக்கிறேன்!"
என்கிறார்!
மேலும்,
அஹம் வைஷ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஷ்ரித:।
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம்॥
( ஸ்ரீமத் பகவத் கீதை - 15.14)
அதாவது, "நானே வைஷ்வானரர் எனும் அக்னியாக ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் நிறைந்திருந்தது பிரான - அபான வாயுவோடு கலந்து , நான்கு வித உணவுகளையும் நானே ஏற்கிறேன்!" என்கிறார் பரப்பிரம்ம பொருள் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்
இதே போல் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில்... தனது சர்வ வியாபகத்தை வாழ்ந்தும் போதித்தும் வருகிறார்!
ஒருமுறை பெங்களூர் சிஞ்சோலி மகாராணியார் அரண்மனைக்கு சேவைத் திலகம் கஸ்தூரி மற்றும் சில பக்தர்களோடு பாபா விஜயம் புரிகிறார்! ராஜம்மா சீதாம்மா என்கிற இரு பெண்மணிகள்! அதில் இருவருக்கும் கணவரில்லை... ராஜம்மாவுக்கு ஒரு குழந்தையும் இறந்து விட்டிருந்தது! பாபாவோ அவர்களிடம் பாசமிகு மகன் எப்படிப் பேசுவானோ அப்படிப் பேசுகிறார்.. அதுவும் அவர்களின் தாய்மொழியான கன்னடத்திலேயே! பேரன்பின் தாய்மொழியான *பாபா அவர்கள் இருவரும் எவ்வாறு தனது பூர்விக ஷிர்டி அவதாரத்திலும் தன்னிடம் பக்தியோடு இருந்தார்கள் என்பதையும் விளக்குகிறார்!* மூன்று காலங்களையும் தன் கைகளுக்குள்ளேயே வைத்திருக்கும் பாபா அந்த காலங்களை பின்னிழுக்கும்படி அதனை நினைவூட்டுகிறார்! முகலாய படையெடுப்பினரின் அராஜகக் காலகட்டம் அவை! அப்போது ஷிர்டி அவதாரத்தில் இருந்த பாபா அவர்களைக் காண தானே ஹைதராபாத் வந்ததாகவும் தெரிவிக்கிறார்! பிறகு பேச்சு ஆன்மீகம் பக்கம் திரும்புகிறது... எவ்வாறு ஒருவர் ஆன்மீக சாதகராக உருமாறுவது ? மனதை நிலைப்படுத்தி இறைவனை அடைவது என்பதை தெளிவுற விளக்குகிறார்!
இதில் ராஜம்மாவின் மற்றொரு மகன் இந்திய போலீஸ் துறையில் வேலையில் சேர இருப்பதால் ... தேர்வு பெறும் பயிற்சிக்குச் செல்ல வேண்டும்... அது மவுன்ட் அபுவில் இருக்கிறது! அதற்கு முன்னதாக பாபாவிடம் தன்னை ஆசீர்வதிக்கும்படி"சுவாமி என்னை வழிநடத்தி , எனது வேலையை நான் கண்ணாகக் கண்டு செயலாற்ற எனக்கு உதவிடுங்கள்!" என்று கேட்கிறார்... அப்போது பாபா தனது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பேசிய அதே ஞான மொழியை அவனோடும் பேசுகிறார்!
"உன்னுடைய கடமையை மிகவும் துணிவோடு செய்! யாரெல்லாம் என்னிடம் உதவி கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் நான் எப்போதும் எனது உதவிக் கரம் நீட்டுகிறேன்! அது என் தெய்வீகக் கடமை! எப்போதும் நானே உனது எல்லாவித பிறவிகளுக்கும் பொறுப்பாளராக இருக்கிறேன் என்பதால் என்னால் உன்னை பராமரிக்கவும் பாதுகாக்கவும் இயலாதா?" என்று கேட்டு அவனை மட்டும் அல்ல, இதனை வாசிக்கும் நம்மையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறார் பாபா!
ஆக அந்த வருங்கால காவல் இளைஞன் சதா காவல் காக்கும் கடவுள் ஸ்ரீ சத்ய சாயி கருணை நிழலைப் பெறுகிறான்!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 141 | Author : Dr. J. Suman Babu )
நம்மை தாங்கியபடி பயணிக்கிற ரயில் வண்டி நம் பாரங்களையும் சுமப்பது போல்.. நமக்கு நமது கர்ம வினைகளின் படி பிறவியை தந்தருளிய இறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் நமது வாழ்க்கைப் பயணத்தையும் கையில் எடுத்திருக்கிறார்...! இதில் நாம் சந்தேகப்படவே தேவையில்லை... ஏழு குதிரைகளையும் ஒரே ரதத்தில் பூட்டினாலும் அதை ஒரே ஒருவர் தான் ஓட்டிச் செல்ல வேண்டும்... வண்டியில் அமர்ந்திருப்பவரும் நானும் கூட சேர்ந்து ஓட்டுகிறேன் என்கிறபோது வண்டி குடை சாய்கிறது... அது தான் கார் பயணத்திலும்.. ஸ்டியரிங்கை சாரதி அந்தப் பக்கம் திருப்புகிற போதே.. அருகில் அமர்ந்திருப்பவர் இந்தப் பக்கம் திருப்பினால் என்னாகும்? விபத்தே! அதைப் போலவே *நமது வாழ்க்கைப் பயணத்தை பாபாவின் சங்கல்பத்தில் நிகழும் படி விட்டுவிட வேண்டும்! நாமும் அதை நடத்திச் செல்லலாம் என்ற நினைப்பே பல குழப்பங்களை நமக்கு விளைவிக்கிறது! சிலர் பாதை கறடுமுறடாக இருக்கலாம்.. ஆனால் அதை பாபாவே ஓட்டிச் செல்வதால் விபத்தின்றியும் இலக்கை சுபமாகவும் அடைந்துவிடுகிறோம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக