தலைப்பு

திங்கள், 12 பிப்ரவரி, 2024

18 உபநிஷதங்களும் சாயி உன்னத மொழிகளும் ஒன்றே!

எவ்வாறு வேத உபநிஷதங்களும் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் ஞான மொழிகளும் ஒன்றாகவே திகழ்கின்றன எனும் பேராச்சர்ய பதிவுகள் சான்றாதாரங்களோடு சுவாரஸ்யமாக இதோ...!


வேதம் என்பது தர்மத்திற்கான தீப்பந்தம் என்றால், உபநிஷதங்களே அந்த தீப்பந்தத்தில் இருந்து எடுத்து வரப் பட்ட தீபச் சுடர்! இப்படி 18 தீபச் சுடர்களாக மிக முக்கியமான 18 உபநிஷதங்கள் பிரபஞ்ச இறை ரகசியத்தின் வெளிச்சத்தையே தன்னிடம் வைத்திருக்கிறது! 

எப்படி 18 வகை தீபச் சுடர் வெளிச்சமே சாயி எனும் சைதன்ய ஜோதியில் வெளிச்சமாக திகழ்கிறது என்பதனை பரவசத்தோடு இதோ தரிசிக்கப் போகிறோம்!

"யாமிருக்க பயமேன்?" என்பார் பேரிறைவன் பாபா!

அவர் வெறும் வார்த்தை சமாதானத்திற்காக இதைச் சொல்வதில்லை... அது சர்வ சத்தியம்!! 

ஆம் அது பிரானாக்னி உபநிஷத்தில் இருக்கிறது!


1."யாமிருக்க பயமேன்?" -- பாபா

"அபயம் சர்வ பூதேப்யஹ" -- பிராணாக்னிஹோத்ர உபநிஷதம்!

இதன் அர்த்தம் : நான் அனைத்து ஜீவன்களையும் பயத்திலிருந்து பாதுகாக்கிறேன்!


2. "நான் கடவுள்! நான் மட்டுமல்ல.. நீங்களும் கடவுளே!" -- பாபா

"த்வம் பிரம்மாஸி , அஹம் பிரம்மாஸ்மி , அவயோனதாரம் நவித்யதே!" 

நான் பிரம்மம், நீயும் பிரம்மம்! நம் இருவர் இடையே எந்த வேறுபாடும் இல்லை!

--- மகாநாராயண உபநிஷத்!


பேரிறைவன் பாபா சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனே என்பதை இந்த உபநிஷத் சாரம் வழி உணரலாம்!


"அஹம் த்வம் சைவ சின்மாத்ரம்" 

நானும் நீயும் அடிப்படையில் உயிராற்றலே!

-- தேஜோபிந்துபநிஷதம் 


இரண்டு உபநிஷதங்களுமே பேரிறைவன் பாபாவின் கூற்றை சத்தியம் என்று நிரூபிக்கிறது!


பாபா தனது பேரிருப்பை நமக்கு உணர்த்த..


3. "நான் உன் எதிரே இருக்கிறேன்! பின்னால் இருக்கிறேன்! நான் உன் இரு பக்கமும் இருக்கிறேன்! நான் உன்னோடு இருக்கிறேன்! நான் எப்போது உனது துணையாக உன்னை வீட்டிலும் வெளியிலும் பாதுகாக்கிறேன்!" என்கிறார் பாபா!


"அஹமேதஸ்தாத் : அஹம் உபரிஷஸ்த் : அஹம் பஸ்ஷத் : அஹம் தக்ஷினதோ : அஹம் உத்தரத : அஹமேவேதாம் சர்வம்"

"நான் உன் கீழே இருக்கிறேன், மேலே இருக்கிறேன், உனக்கு அப்பாற்பட்டும் இருக்கிறேன், பின்னால் இருக்கிறேன், உன் முன்னாலும் இருக்கிறேன், உனது வலது இடது பக்கங்களிலும் இருக்கிறேன்! நான் இந்த எல்லாமாகவும் இருக்கிறேன்!" 

-- சாந்தோக்ய உபநிஷதம்


4. "வேதங்கள் யாரை வலியுறுத்துகிறதோ அது நானே! என்னை பற்றி அறிந்து கொள்வதற்கு உங்களுக்கு  சாஸ்திரங்கள் ஓரளவுக்குப் பயன்படுகின்றன...!" -- பாபா


"அஹம் வேதைருபாசிதா : அஹம் சாஸ்த்ரேன நிர்நீதா " அதாவது நான் வேதத்தில் வழிபடப் படுகிறேன்! நான் சாஸ்திரங்களில் விளக்கப்படுகிறேன்! 

--- தேஜோ பிந்துபநிஷதம்


5. ஒவ்வொரு ஜீவனும் தினமும் ஸோஹம் ஸோஹம் எனும் "நானே அது! நானே அது!" எனும் மந்திரத்தை ஒரு நாளில் 21,000 முறை உள்மூச்சு வெளிமூச்சு விடுகிற போது உச்சரிக்கிறது! -- பாபா


"சகராம் ச ஹகராம் ச ஜீவோ ஜபதி சர்வதா " , அதாவது - ஒரு ஜீவன் ஸோஹம் எனும் மந்திரத்தை எல்லா நேரமும் உச்சரிக்கிறது! --- பிரம்ம வித்யா உபநிஷத்


6. "நானே பிரபஞ்சத்தை உருவாக்கியது!" -- பாபா

"அஹம் ஈஷா யோனின் சர்வஸ்ய:" 

அதாவது, நானே இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கம் என்கிறது நரசிங் பூர்வ தபனியா உபநிஷத்


7. "நானே பிரபஞ்சம் முழுமைக்கும் பரவி இருக்கிறேன்!" -- பாபா


"ஏனோ விஷ்ணுரானேகேஷு ஜங்கமா ஸ்தாவரேஷு ச" 

அதாவது , ஒரே ஒரு விஷ்ணுவே உள்ளேயும் வெளியேயும் நிறைந்திருப்பது  என்கிறது வாசுதேவ உபநிஷத்


8. "நானே எல்லா ஜீவராசிகளில் இதயத்திலும் நிறைந்திருக்கிறேன்!" -- பாபா

"அஹமேஷா சர்வ பூதாந்தராத்மா!" 

அதாவது ,"நானே எல்லா ஜீவராசிகளின் உள்ளும் நிறைந்திருக்கிறேன் என்கிறது அத்யாத்ம உபநிஷத்


9. "இந்த ஒட்டுமொத்த  பிரபஞ்சமும் கடவுளேலேயே நிறைந்திருக்கிறது... கடவுளை தவிர இதில் வேறெதுவும் இல்லை!" -- பாபா


"ஏகமேவாதிதீயம் பிரம்மா"

அதாவது பிரம்மம் மட்டுமே இருக்கிறது, ஒரு நொடி கூட விட்டு விலகாமல்... என்கிறது மகா நாராயண உபநிஷத்


10. "ஒருமை உணர்வு உண்மையில் ஞானம் என்பது" -- பாபா


"அபேதா தர்ஷனம் ஞானம்" 

அதாவது, பேதமற்ற பார்வையே ஞானம் என்கிறது மைத்ரேய உபநிஷத்


11. "பிரம்மத்திலேயே நிறைந்திருப்பது , பிரம்ம உணர்விலேயே திளைத்திருப்பதே பிரம்மச்சர்யம் என்பது!" -- பாபா

"பிரம்மபாவே மனஸ்சரம்  பிரம்மச்சர்யம்" 

அதாவது பிரம்ம பா'வமே மனதில் நிறைய , பிரம்மத்தையே சதா கவனித்துக் கொண்டிருக்க அதுவே பிரம்மச்சர்யமாகிறது என்கிறது தர்ஷன உபநிஷத்


12. இயந்திரம் போல் உங்கள் உடல் எப்போதும் வேலையில் ஈடுபட்டாலும் உங்களது மனமானது ஆன்மீகம் எனும் மந்திரத்திலேயே அப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்! -- பாபா


"ஆத்மகிருதா ஆத்மராதி க்ரியாவனேஷ பிரம்மவிதா வரிஷ்தா:"

அதாவது , ஆத்மாவோடு உத்வேகப்படுவது, ஆத்மாவோடு களிப்பது , ஆத்மாவையே அனுபவிப்பது , அப்படி இருப்பவர் எவரோ அவரே பிரம்மத்தை அறிந்தவர்களை விடவும் உயர்வானவர்! என்கிறது முண்டக உபநிஷத்


13. "ஒரு கஞ்சனின் கண்களுக்கு இறைவன் எங்கும் தெரிவதில்லை!

தாராள மனம் உள்ளவனுக்கே இறைவன் எங்கும் நிறைந்திருப்பதை உணர முடிகிறது!" -- பாபா


"ந கர்மனா ந பிரஜயா தனேன த்யாகேனைகே அமிர்தத்வ மானசு:" 

அதாவது, செயல்களால் அல்ல பிறவியோ அல்லது செல்வத்தாலோ அல்ல தியாகத்தால் மட்டுமே மோட்சம் கிடைக்கப் பெறுகிறது என்கிறது அவதூதக உபநிஷத்


14. "நானே எப்போதும் பேரானந்தத்தின் வடிவமாக இருக்கிறேன்!" -- பாபா


"அஹமாகாண்டானந்த விக்ரஹ" 

அதாவது, நானே இடைவிடா  தடையற்ற ஆனந்தத்தின் உருவமாக இருக்கிறேன் என்கிறது மைத்ரேய உபநிஷத்


அது போல் 

"ஆனந்த கனம் ஏவஹம்" 

அதாவது, "நானே உண்மையில் பேரானந்தத்தின் முழுமை என்கிறது தேஜோ பிந்துபநிஷத்


15. "எனக்கு தியானம் என்பது தேவையில்லை" -- பாபா

"அஹம் தியானம் விஹிநஹ"

அதாவது,  தியானத்தின் வெற்றிடமே நான் தான் என்கிறது மைத்ரேய உபநிஷத்


16. "இறைவனின் அவதாரமான நான் உண்மையில் இறைவனே! உங்களுக்கு மோட்சம் தர வேண்டியே வந்திருக்கிறேன் ஆனால் நீங்களோ என்னிடம் பயனற்ற தற்காலிக அர்ப்ப விஷயங்களையே கேட்க வருகிறீர்கள்! -- பாபா


த்வமேவ சர்வம் (3 முறை) 

த்வமேவ மோக்ஷ (2 முறை)

த்வமேவ அகில மோக்ஷ சாதனம் 

அதாவது, நீயே நீயே நீ மட்டுமே அனைத்தும், நீயே மோட்சம், மோட்சத்திற்கான வழியும் என்கிறது மஹா நாராயண உபநிஷத்


17. "என்னை விட சிறந்தது எதுவும் இல்லை!" -- பாபா


"மத்யவ்த்ரிக்தம் அனுமாத்ரம் ந வித்யதே"

அதாவது என்னை தவிர எதுவும் நிறைந்திருக்கவில்லை, ஒரு அணு கூட என்னை விட்டு தூரத்தில் இல்லை என்கிறது மஹா நாராயண உபநிஷத்


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page no: 205 - 207 | Author : Dr. J. Suman Babu ) 


பாபா தன்னையே இறைவன் என்கிறார் என சமயச் சின்னங்களை நிரந்தரமாக தன்னுடம்பில் வார்த்துக் கொண்ட சிலர் விமர்சிப்பது உண்டு! அவர்களுக்கு உபநிஷதங்கள் பற்றி எதுவும் தெரியாது என்பதாலேயே அத்தகைய விமர்சனமும்...!

வேத உபநிஷதங்களை விடவும் சடங்குகள் எந்த வகையிலும் தெய்வீக மெய்யுணர்வை நமக்குக் கொடுப்பதில்லை!

வேதமும் உபநிஷதங்களும் எதை இறைவன் என்று சுட்டிக் காட்டியதோ.. அதே மெய்ப் பொருளே "சம்பவாமி யுகே யுகே" என்று யுகந்தோறும் அவதாரம் எடுக்கிறது! மாபெரும் அந்த பரம்பொருளே பாபா! ஆகவே பாபாவின் வாய் மொழி பொய் மொழி அல்ல உபநிஷதங்களின் தாய்மொழி! அதையே நமக்கும் நினைவூட்டுகிறார்! ஆன்மாவின் அடியாழத்தில் உறைந்திருக்கும் ஆன்மீகத்தை தனது பேரன்பினாலேயே பாபா தட்டி எழுப்புகிறார்!

பாபாவே இறைவன்! அதற்கு உபநிஷதங்களே சாட்சி!

பாபா புரிந்தது வெறும் உபநிஷத் வார்த்தைகள் மட்டுமல்ல உபநிஷத் வாழ்க்கையையே இன்றளவும் வாழ்ந்தே காண்பிக்கிறார்! ஆகவே தான் பாபா சாட்சாத் பரிபூர்ண பரப்பிரம்ம இறைவன்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக