தலைப்பு

வியாழன், 8 பிப்ரவரி, 2024

தூர தரிசனத்திலேயே தீராத நோயை பாபா தூர விரட்டினார்!

எவ்வாறு ஒரு நபருக்கு இருந்த உடற் பிரச்சனையை தனது தூர தரிசனத்திலேயே பாபா அதை நீக்கினார் எனும் அதிசய அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!

அவர் பெயர் எருச். கே. வாடியா! (Eruch K.wadia) இந்த சம்பவம் நிகழ்கையில் அவர் அந்த சாயி அனுபவத்தை பெங்களூரில் இருந்து எழுதுகிறார்! 

அவரோ பாவம் நியூமோதோராக்ஸ் எனும் நோயால் பாதிக்கப்படுகிறார்! நியூமோதோராக்ஸ் என்பது நுரையீரல் சுற்றி காற்று மண்டலம் சூழ்ந்திருக்கும்! அது வலுக்கிற போது சேதமான நுரையீரல் என்று பொருள் கொள்ளப்படுகிறது! ஏனெனில் அது வலுக்கிற போதோ உணவுக் குழாய் மற்றும் ரத்த ஓட்ட இயக்கத்தை வெகுவாக அது பாதிக்கிறது! ஒரு பகுதியில் பெய்கிற மழை பலமான காற்று வீசுகிற போது வேறொரு இடத்தில் மழை பொழிகிறது அல்லவா.. அது பூமிக்கு நல்லது.. ஆனால் சீராக ஓடுகிற ரத்தம், அதிக காற்றழுத்ததால் மாற்றி ஓடினால் என்ன ஆகும்? இது நியூமோதோராக்ஸ் என்பதில் மூன்றாவது நிலையாகக் கருதப்படுகிறது! அவருக்கு எப்போது வேண்டுமானாலும் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் , காரணம் அவர் அந்த மூன்றாவது கட்டத்தில் இருக்கிறார்! என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நேரலாம்!


அவரை விக்டோரியா மருத்துவமனையில் உள்ள மருத்துவரை இதைக் குறித்து அணுகச் சொல்கிறார்கள் அவரின் அன்பர்கள்! எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டு சோர்வாகவும், களைப்பாகவும் மாறி இருந்த அவர், அந்த விக்டோரியா மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் புட்டபர்த்தி வருகிறார்! மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்தாயிற்று, இன்னும் உயிர் எத்தனை நாளோ என பிரசாந்தி நிலையம் வந்து சேர்கிறார்!

அப்போது பேரிறைவன் பாபாவின் தரிசனம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது! தூர இருந்து பாபாவை தரிசிக்கிறார்! தூர இருந்தே பிரார்த்தனையும் செய்து கொள்கிறார்! பிறகு மருத்துவரை சந்திக்க செல்கிறார்! அந்த மருத்துவர் வேறு என்ன சிகிச்சை தரப் போகிறாரோ... "பாபா இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கொடுமை!" என்றவாறு மருத்துவமனைக்கு நுழைகிறார்! 

அது விக்டோரியா மருத்துவமனை! 

மருத்துவர்கள் அவர் உடம்பை சோதிக்கிறார்கள்!

"சோதனை மேல் சோதனை ! போதுமே சுவாமி!" என்பது போல் எருச் அவர்களின் மனநிலை! சோதனை முடிந்து ரிப்போர்ட் வருகிறது! ஏற்கனவே எரிச்சலில் எருச் , இனி என்ன வகை சிகிச்சை நேரப்போகிறதோ?! என்றவாறு எரிச் பார்க்கிறார்!


"யார் உங்களுக்கு நியூமோதோராக்ஸ் என்று சொன்னது?" என்று ஒரு கேள்வி கேட்கிறார் அந்த விக்டோரியா மருத்துவமனை டாக்டர்! திக் என்று இருக்கிறது எரிச்'சுக்கு! எத்தனை மருத்துவமனை - எத்தனை சிகிச்சை; இறுதியாக விக்டோரியா மருத்துவமனை... ஏன் அந்த மருத்துவர் இப்படி கேட்கிறார் என்று ஒரே புதிர் அவருக்கு! 

"எஸ்.டி.எஸ் சானடோரியத்தில் சிகிச்சை எடுத்தேன், அவர்கள் எனக்கு வலது நுரையீரலில் அந்தப் பிரச்சனை இருப்பதாகச் சொன்னார்கள்!" என்று எரிச் பதில் அளிக்க... 

"ஓ... ஆச்சர்யம்! ஆனால் உங்கள் வலது நுரையீரல் தான் இடது நுரையீரலை விட மேலும் வலிமையாக இருக்கிறது!" என்று டாக்டர் ஒரு போடு போடுகிறார்! 

மேலும், "உங்களுக்கு ஒரு பிரச்சனையுமே இல்லை, ஆக எந்த சிகிச்சையும் தேவையே இல்லை!" என்று சொல்லி விடுகிறார் அந்த விக்டோரியா மருத்துவமனை டாக்டர்!

எரிச் பாபாவை நினைந்து கண்களை நனைக்கிறார்! 

அப்போது காற்று மண்டலம் பக்தியில் தோய்ந்து நுரையீரலைச் சுற்றாமல் அவரின் நெஞ்சுப் பகுதியைச் சுற்றிக் கொண்டே இருக்கிறது!

( Source : Miracle of Divine Love - vol1 | page: 48 | compiled by p.gurumoorthy )


பேரிறைவன் பாபா எரிச் அவர்களின் அருகே வரவில்லை, என்ன உடம்புக்கு? என்று விசாரிக்கவில்லை, விபூதி தரவில்லை! எரிச் அவர்களுக்கு தரிசனமே தொலைவில் இருந்து தான்! அதுவே மாமருந்தாக அமைந்துவிடுகிறது! இப்போது பாபாவை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமே வேண்டியதில்லை! பேரிறைவன் பாபா பக்தரை விட்டு விலகியதும் இல்லை விலகுவதும் இல்லை! பாபாவின் புகைப்படமே போதும், பாபாவின் நாமமே போதும் ; (பாபாவே தனது சுய சங்கல்பப்படி தனது பிரத்யட்ச தரிசனத்தை பல வகைகளில் இன்றளவும் பலருக்கு வழங்கிக் கொண்டே தான் இருக்கிறார்!) ஆக அது உடல் நோயை மட்டுமல்ல மாயை பீடித்த நமது மன நோயையும், புனரபி ஜனனம் (மீண்டும் பிறப்பு) என்கிற ஜென்ம நோயையுமே குணமாக்கிவிடுகிறது! பாபாவை தவிர வேறு எவராலும் பிறவாமை எனும் ஆன்ம ஆரோக்கியம் தர இயலாது என்பதே கலியுகத்தின் அனுபவ சத்தியம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக