தலைப்பு

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

"சொர்க்கம்-- நரகம்'ன்னு ஒண்ணு இருக்கா சுவாமி?" என உம்மாச்சி பாபாவை கேள்வி கேட்ட குழந்தை

குழந்தைகள் பக்தியில் பழுத்திருப்பதைப் பார்க்கும் போது அவர்களே பிறருக்கு குருவாக செயல்படுகிறார்கள் ஞான சம்பந்தர் போல்... இத்தகைய குழந்தைகளின் பாபாவுடனான ஆன்மீகத் தொடர்பு பற்றி சுவாரஸ்யமாய் இதோ...!


ஒருசமயம் ஒரு குழந்தையிடம் ஒன்று கேட்கிறார் பாபா.. பள்ளி சிறுவன் அவன்... அவன் சொல்ல பதிலுக்காக மகிழ்ந்து போய் அவன் தோளை தட்டுகிறார் பாபா... பாபா கேட்டதாவது "நீ எங்கிருந்து வருகிறாய்?" என... அந்த குழந்தையோ ஆதிசங்கரரின் சாயலில்.. பேரானந்த அனுபவங்களில்  ஆகச் சிறந்த அத்வைதத்தையே ஒரே வரியில் அடக்கி விட்டிருந்தான் "சுவாமி நான் உங்களிடமிருந்தே வருகிறேன்!" என்ற பதிலின் வழியாக... ஆகவே தான் குழந்தைகள் தந்தைகளின் தந்தையாக பெரும் விந்தையாக திகழ்கிறார்கள்! 

பாபா பக்தர்களான ராகவன் கௌசல்யா தம்பதிகளின் குழந்தை காயத்ரி... "காயத்ரி சமர்த்து!" என வாய்மொழி சான்றிதழை பாபா வழியாக பலமுறை பெற்றிருக்கிறது அந்த குழந்தை... பள்ளிச் சிறுமி... ஒருமுறை அவர்கள் வீட்டு பஜனைக்கு வந்திருந்தவர்கள்... பாபா படத்தில் அப்பிக் கொண்டிருக்கிற ஏதோ ஒரு வெண்ணிற பொருளை பார்த்தபடி "இது என்ன விபூதியா?" என்று கேட்கிறார்கள்... அதற்கு காயத்ரி... இல்லை இல்லை... நாம் எல்லாம் பௌடர் பூசி பஜனைக்கு ரெடியாகிறோம் அல்லவா... சுவாமியும் ரெடியாக வேண்டாமா? ஆகவே தான் ஸ்நோ தடவினேன் என்கிறது அந்த வாண்டு... இது வெறும் குழந்தை குறும்பாக கருதுவதற்கில்லை... அந்தக் குழந்தை காயத்ரி பாபா படத்தை  வெறும் படமாகப் பார்க்கவில்லை... அதனை பாபாவாகவே உணர்கிறாள்... எப்பேர்ப்பட்ட ஞானமிது!


ஒருமுறை குழந்தை காயத்ரி தனது பெற்றோரோடு புட்டபர்த்தி போகிறார்... அங்கே தரிசனம் முடிந்தபிறகு தாய் கௌசல்யா "சுவாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே... பாத நமஸ்காரம் தரவில்லையே?" என குறைபட்டுக் கொள்கிறார்... உடனே குழந்தை காயத்ரி "ஏம்மா... வந்தவங்க எல்லார்ட்டயும் சுவாமி பேசணும்னா அவருக்கு வாய் வலிக்காதா? எல்லோர்க்கும் பாத நமஸ்காரம் கொடுக்கணும்னா சுவாமிக்கு கால் வலிக்காதா?" என்கிறார்... அது தான் பக்தி... பக்தி அப்படித்தான்... எதையும் எதிர்பார்க்காது... எதிர்பார்ப்பது எல்லாம் பக்தி இல்லை ஆசை! கசாப்புக் கடைக்கும் ஜீவகாருண்யத்துக்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தமே பக்திக்கும் எதிர்பார்ப்புக்கும்... ஆகவே தான் முதியவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் என்றால்... குழந்தைகள் வழிபாட்டுக்கு உரியவர்கள்!

இப்படி எல்லாம் பேசுகிற போது காயத்ரிக்கு ஐந்தே ஐந்து வயதுதான்! அதே புட்டபர்த்தி தரிசனத்தில் குழந்தை காயத்ரியிடம் அவரது பாட்டி சுவாமி உன்னைப் பார்த்தாரா? நீ எங்க இருந்த? எனக் கேட்க... "என்ன பாட்டி அப்படி கேட்குற... சுவாமி யாரைப் பார்த்தால் என்ன‌... எல்லாரும் ஒரே ஆன்மா தான்!" என ஒரு போடு போடுகிறாள்! அது தான் ஜீவ ஊற்று ஞானம்..‌ 

ஒரு முறை குழந்தை காயத்ரியின் ஆறாவது வயதில் பாபா அவரது கனவில் தோன்றுகிறார்.. பாபாவிடம் காயத்ரி "சொர்க்கம் நரகமுன்னு சொல்றாங்களே... அது உண்மையிலேயே இருக்கா சுவாமி?" எனக் கேட்கிறார்... அதற்கு பாபா "அது எல்லாம் மனதிலே தான் இருக்கு... நல்லதா நெனச்சா சந்தோஷம் வரும்... அது தான் சொர்க்கம்... கெட்டதா நெனச்சா கஷ்டம் வரும்... அது தான் நரகம்!" என்கிறார்... சுவாமி கனவுல வந்தார்'மா என குழந்தை காயத்ரி குதூகலப்படுகிறார்! பாபா கனவில் அளித்தது பிரம்மிக்கத் தகுந்த ஞானம் அது! "நீ ஓம்காரத்தோட இணைவ" என கனவில் பாபா சொன்னதும்..‌"அப்பா அம்மாவும் இணைவார்களா? எனக் கேட்கிறது குழந்தை காயத்ரி... "நிச்சயம் அவங்களும் இணைவாங்க!" என்கிறார் பாபா.. இப்போது அதனை காயத்ரி பகிர்ந்து கொள்ளும் போது.. இன்னும் எத்தனை ஜென்மம் ஆகுமோ? என வியக்கிறார்!

 

ஒரு கேள்வி அது எல்லா குழந்தைகளிடமும் கேட்கப்படும்‌.. அந்தக் கேள்வி "நீ பெரியவளானதும் என்ன பண்ணுவ?" என்பது தான்! அப்படி கேட்பவர்கள் பெரியவர்கள் தான்! அதற்கு டாக்டர், இஞ்சினியர், கலெக்டர் என ஒவ்வொரு குழந்தையும் பாவம் ஒவ்வொன்று சொல்லும்... சில குழந்தைகள் இரண்டு வெவ்வேறு தொழிலையும் சேர்த்துச் சொல்லி பெருமைப்படும்... சூப்பர் மேன், ஆவேன் ஸ்பைடர் மேன் ஆவேன்... சக்திமான் ஆவேன் எனச் சொல்லும்... ஆனால் குழந்தை காயத்ரி சொன்ன பதில் ஆத்ம அனுபூதத்தையே தலை நிமிர்த்திய பதில்... "என்னைக் கேட்டால்? சுவாமிக்கு எப்படி இஷ்டமோ அப்படித்தானே நான் ஆவேன்! அவரையே கேளுங்கள்!" என்கிறது...! எவ்வளவு சத்தியமான ஞான மொழி அது!

விமலநாதன் பிரேமா தம்பதியின் குழந்தைகள் டிசம்பர் லீவில் சென்னை மாமா வீட்டிற்கு வந்து.. தங்களது மாடி அறையிலிருந்து கீழேயே இறங்காமல் அடுத்த நாளே கிளம்பி விடுகிறார்கள்... காரணம் கேட்டால்... சதா கேளிக்கைகள் தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும்.. சுவாமிக்கு இப்படி எல்லாம் இருப்பது பிடிக்காது என்பதால் கிளம்பியதாகவும் தெரிவிக்கிறார்கள்! என்ன வகையான தெய்வ குழந்தைகள் அவர்கள்!!

1983 ஆம் ஆண்டு பாலவிகாஸ் மாநாடு பர்த்தியில் நிகழ... போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தல் புயல் காற்றில் சரிந்து தலைமேல் விழ‌... ஒரு குழந்தை கூட "அய்யோ அம்மா அப்பா!" என்றெல்லாம் கத்தாமல் கதறாமல்... "சாயிராம்!" என்றே கோரஸாக ஒலிக்கிறார்கள்... பிறகு அதிலிருந்து மீண்டு... "எந்த காயமும் இல்லை... சுவாமி காப்பாற்றி விட்டார்... வாழ்க்கையே ஒரு சவால் அதை தைரியமாக அணுக வேண்டும் என சுவாமியே சொல்லி இருக்கிறாரே!" என ஒரு போடு போடுகிறார்கள்... பட்டுப்போன மரங்கள் அல்ல பசுமரத்து ஆணிகள் அவை... அப்படி இருந்தால் அடுத்த ஜென்மமும் அவ்வகை அரிய பக்தி தொடரத் தானே செய்கிறது!

(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் : 251 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

குழந்தைகளின் இத்தகைய தூய பக்திக்கு அவர்களின் முற்பிறவிகளும் ஒரு காரணம் அதே சமயத்தில் அவர்களை இந்த ஜென்மத்தில் வளர்க்கும் விதமும் ஒரு காரணம்...! என்ன தான் வீரியமான விதையாக இருந்த போதும் சூழ்நிலை சரியில்லாத படி வளர்ச்சியில் தடைகள் இருந்தால் ஆன்ம முன்னேற்றம் வயதான பிறகும் கூட பலருக்கு வருவதில்லை! "குழந்தைகளின் ராஜ்ஜியங்களிலேயே தான் கடவுள் இருக்கிறார்!" என ஸ்ரீ ஏசுபிரான் சொன்னதும் உண்மையே என மேலே குறிப்பிட்ட அனுபவமே சாட்சி! ஆன்மீக வாழ்க்கையின் துவக்கத்திற்கு குழந்தை பருவமே சரியான பருவம்! வயதான பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனில் அப்போது பார்வை கூட மங்கலாய்த் தான் இருக்கிறது... அகப் பார்வையோடு சேர்த்து...!


 பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக