தலைப்பு

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

"அன்புள்ள பக்தனே...‌ அருள் தரும் ஓர் கடிதம்!" -பாபாவின் அதிசய கடிதங்கள்

பேரிறைவன் பாபா தனது பக்தர்களுக்கு எழுதிய அதிசய கடிதங்களில் பேரன்பு சொட்டும் விதத்தையும் படித்து பரவசம் பெறப் போகிறோம் இதோ...

கடிதம் எழுதுவது ஒரு கலை. படிப்பவர் கண் முன்னே அது காட்சியாக விரிந்து உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதி பலிக்க வேண்டும் . இவ்வகையில், பேரிறைவன் பாபா தமது அருள்  சொட்டும் எழுத்தால் அந்தக்காலப் பக்தர்களுக்கு எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். மதுர மொழியில், மதுர பாவத்தில், மதுர அன்பைக் குழைத்து பாபா எழுதிய கடிதங்கள் மகா வாக்கியங்களான வேத உபதேசங்கள் எனப் பரிமளிக்கின்றன.

பாபாவின் பக்தரான குப்பம்  V.Kகிருஷ்ண குமார் அவர்களுக்கு  தமது 20 வயதில் ,பாபா அன்பு சொட்டச் சொட்ட எழுதிய கடிதத்தை படியுங்கள்..அல்ல அல்ல.. அமுதமெனப் பருகி ரசியுங்கள்.

இனி சாய்ராம் கிருஷ்ண குமார் அவர்களின் வாயிலாக , பாபாவின் கடிதத்தை கண்டு ரசிப்போம்.


🌷அந்த வியாழக்கிழமைகள்:

வியாழக்கிழமைகளை ஆவலோடு நாங்கள் எதிர் பார்ப்போம். ஆம் அப்புனித நாட்களில்தான் பாபாவின் கடிதங்கள் எங்களுக்கு வரும் . அதில் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரின் பெயரையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு, தமது பரிபூரண ஆசிகளை வழங்கி இருப்பார். அவரது கைஎழுத்து முத்து முத்தாகவும், அவரது நம்பிக்கை ஊட்டும் சொற்கள் பாயாசம் போற்றும் இனிக்கும். அவர் அளிக்கும் உறுதி, நமக்கு மிகுந்த மனோ தைரியத்தை அளிக்கும். சொற்களில் நெளிந்தோடும் அன்பு , கண்களில் நீர்தனைப் பெருக்க வைக்கும். அத்தகைய நிகரில்லா அன்பினை நாங்கள் அதுவரை எங்கும் அனுபவித்ததில்லை. அன்னை தனது பச்சிளம் குழந்தையை அணைப்பது போல, அவரது சொற்கள் எங்களை அணைத்துக் கொள்ளும். அவர் எங்களுக்கு சிற்றுருவில் வந்த பிரம்மாண்ட இறைவன். இதனால் நாங்கள் அவரிடம் பரிபூரண சரணாகதியுடனும், திட நம்பிக்கையுடனும் எங்களை ஒப்படைத்தோம்.


🌷பக்த பராதீனன்.. பாபா:

பாபா பக்தர்களின் மனவாட்டத்தை தாங்கமாட்டார். வருந்தும் பக்தர்களின் விசனத்தை தாங்காமல் அவர் மிகுதியாக வருந்துவார். சில நேரங்களில் அவரது தெய்வீகத்தை மறந்து, ஒரு நண்பரைப் போல அவரிடம் பழகுவோம். பூர்வஜென்ம தொடர்போ, பழம் பிறவிகளின் தவமோ எங்களுக்கு பகவானின் நெருக்கத்தை அருளியது என நாங்கள் நம்பினோம்!


🌷சுவாமியின்  09/08/1946 கடிதம் (தமிழாக்கம்):

என் அன்பான பக்தா, கிருஷ்ணகுமார்  அரிப்பு குமார்/பைத்தியக்காரா!

(பாபா எனக்கு வைத்துள்ள புனைப் பெயர்கள் அனேகம்) உன் மதிப்புக்குரிய பாபா ஆசிகளுடன் எழுதுவதாவது. 

பங்காரு, நீ தற்போது குப்பத்தில்தான் இருக்கிறாயா? என் நினைவு உனக்கு சிறிதாவது இருக்கிறதா. நான்தான் புட்டபர்த்தி சாயிபாபா. சிணுங்காதே ! சும்மா ஒரு விளையாட்டுக்காகச்  சொன்னேன். அனவரதமும் அனைவரின் ஆத்மாவாக ஒளிரும் எனக்கு என் பக்தர்களைத் தெரியாதா? இந்தக் கடிதத்தை படிக்கும் குமாரி( உன் சகோதரி) அம்பா (  சகோதரன்) மற்றும் உன்அன்னைஅனைவரும் கோபம் கொள்வது  திண்ணம். இதுநாள்வரை நான் அவர்களுக்கு இதுபோன்ற ஆத்மார்த்தக் கடிதங்கள் எழுதியது இல்லை. ஆனால் நம் கரத்தில் உள்ள ஐந்து விரல்களில் ஒன்று இயங்கினால், மற்றவை ஒரு சேர இயங்குவதுபோல, ஒரு  இல்லத்தில் உள்ள பக்தருக்கு  புரியும் கருணை அங்குள்ள மற்ற  பக்தர்களையும் சென்றடையும். அது போகட்டும், தற்சமயம் நான் உங்கள் ஊருக்கு வருவதாகத் தெரிந்ததால், மைசூர் பக்தர்கள் தமது பர்த்தி பிரயாணத்தை சிவராத்திரிக்கு ஒத்தி வைத்துள்ளனர். ஆகவே நீங்கள் யாராவது பர்த்திக்கு காரில் வரும் பட்சத்தில், உங்களுடன் நான் குப்பம் வருகிறேன். நாகமுனி, சுசீலா மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் எனது ஆசிகள். அவர்களையும் குப்பத்தில் சந்திப்பேன்.

துள்ளும் இதய ஆசிகளுடன்

பாபா


பாபாவின் குதூகலம் இந்தக் கடிதத்தில் எப்படிக் கொப்பளிக்கிறது பாருங்கள். நான் ஸ்வாமியின் தரிசனத்திற்கு ஏங்கிய போது, அவரை மறந்துவிட்டதாக என்னைக் கேலி செய்கிறார்.இக்கடிதம் கண்டவுடன் நானும், அமரேந்திர குமாரும் பர்த்தி சென்று பகவானை எங்களுடன் குப்பம் அழைத்து வந்தோம்.

🌻சாயிராம். அன்பிலே அன்னையாய், நெருக்கத்திலே நண்பனாய், அருளிலே ஆண்டவனாய், அனைவரது இதய வாசியாய், பகவான் பரிமளிக்கும் பாங்கை இந்தக் கடிதம் முலம் நாம் அறிந்து இன்புறுவோம். ஓம் ஸ்ரீ சாய்ராம்.

✍️தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக