தலைப்பு

புதன், 27 டிசம்பர், 2023

யார் அந்த குடும்பத் தலைவன்?


எவ்வாறு ஒரு பக்தருக்கு விசித்திரமான ஒரு கனவு வழி பேசி மிகப்பெரிய உண்மையை விளங்கச் செய்ய பேரிறைவன் பாபா மேற்கொண்டவை என்ன? அந்த பக்தருக்கு பதில் தெரியாது போகவே...‌ யார் அந்த பதிலை இறுதியில் விளங்க வைத்தது எனும் ஒரு நூதன சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...!

அது 1992. வீடு முழுவதும் விபூதி சிருஷ்டித்த பாபாவிடம் பிரார்த்தனை செய்தபடி அந்தந்த குப்பிகளில் சேகரித்துவிட்டு ஈரத்துணியால் தரையை துடைத்த அடுத்த நாள் அதிகாலை...
பக்தர் ஹரிஹர கிருஷ்ணனுக்கு (ஹரி) ஒரு கனவு தோன்றுகிறது! 
கனவில் பாபா தோன்றி வழக்கம் போல் பாத நமஸ்காரம் எடுக்கச் சொல்லிவிட்டு... கனவு அதிகாலை நிகழ்ந்தாலும்... கனவில் அது சைப்ரசில் மதிய வேளை போல் காட்சி அளிக்கிறது...

பாபா ஹரியிடம் ஒரு கேள்வி கேட்கிறார்...
"இப்போது நீ என்னுடன் இருக்கிறாய்! குழந்தைகள் பள்ளியில் இருக்கிறார்கள்! உன் வீட்டில் தற்சமயம் யார் இருக்கிறார்?"
அதற்கு ஹரி...
"வீட்டில் என் மனைவி இருக்கிறார் சுவாமி" என்கிறார்! 
"உன் மனைவியோடு கூட வீட்டில் வேறு யார் இருக்கிறார்?" பாபா கேள்வியை தொடர்கிறார்...
"வீட்டில் என் மனைவி தனியாகத்தான் இருக்கிறார் சுவாமி!" என்கிறார் தொடர் பதிலோடு ஹரி...
காரணம் மாமனார் மாமியார் என வீட்டில் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டறியவே பாபா இத்தகைய கேள்வி கேட்கிறார் என நினைத்துக் கொள்கிறார் ஹரி..
மீண்டும் பாபா அதே கேள்வியை கேட்க... "என் மனைவி வீட்டில் தனியாகத்தான் இருக்கிறார்" என்பதை மீண்டும் சொல்கிறார் ஹரி!


பாபா சிரித்துக் கொண்டே ஹரியை சைப்ரஸ் நாட்டிற்கு 6 வருடம் முன்பு அழைத்துச் செல்கிறார்... "1986'ல் நீ சைப்ரஸ் நாட்டில் வேலை மும்முரத்தோடு இருந்த போது.. உன் மனைவி கை விரல்களில் ஏற்பட்ட வலியின் காரணமாக ஒரு வாடகைக் காரில் மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொண்டார்... குழந்தைகளோ சைப்ரசில் உள்ள ஒரு மழலையர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர்... அத்தருணத்தில் உன் மனைவியோடு கூட இருந்தது யார்?" என பாபா கேள்வி கேட்கிறார்!
வேலை மும்முரத்தில் குடும்பத்தை சரியாக கவனித்துக் கொள்ளாததை பாபா சுட்டிக் காட்டுகிறார் என்று நினைத்து "வேலை முடித்து வந்த உடன் என் மனைவிக்கு காய்கறி நறுக்குவது போன்ற சிறு சிறு வேலைகளை செய்வேன் சுவாமி!" என்கிறார் பாபாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்பதை அறியாத ஹரி! 
பாபா சிரித்துக் கொண்டே மீண்டும் "ஓ... உன் மனைவி மருத்துவரை நாடிச் சென்ற போது அவருக்கு துணையாக இருந்தது யார்?" என்று கேட்கிறார்! 
என்ன பதில் சொல்வது என்று ஹரிக்கு தெரியவில்லை! 
பாபாவே தொடர்ந்து ஒரு முக்கியமான கேள்வி கேட்கிறார் 
"உன் குடும்பத்திற்கு யார் தலைவர்?" என்று...
"நான் தான் குடும்பத்தலைவன்!" என்று சொல்ல வேண்டும் போல் ஹரிக்கு இருந்தாலும், குடும்பக் கடமைகள் செய்வதில் ஹரிக்கு சில தொய்வுகள் இருப்பதை ஹரியே உணர்ந்ததால்... பாபாவிடம் சுற்றி வளைத்து
"சுவாமி! நான் என் குடும்பத்தை அக்கறையுடன் கவனித்துக் கொண்டேன்!" என்று பதில் பேசுகிறார்!
அதற்கும் பாபா சிரித்துக் கொண்டே "ஹா ஹா ஹா! எனக்குச் சொல்! யார் உன் குடும்பத்தின் தலைவர்?" என்று பாபாவிடமிருந்து மீண்டும் அதே கொக்கிப்பிடிக் கேள்வி! ‌  
"சுவாமி நீங்களே தயவு செய்து கூறுங்கள் ! எங்கள் குடும்பத் தலைவன் யார்?" என்று ஹரி கெஞ்சுகிறார்!


"நீ உன் குடும்பத்தை நன்றாக கவனிப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன்!" என்று பாபா கூறுவார் என ஹரி எதிர்ப்பார்க்கிறார்... ஆனால் அதற்கு நேர்மாறாக பாபா 
"நான் கேட்ட கேள்வியை நீ மறந்துவிடு! நான் கேட்டது ஒரு பரிமாணத்தில்.. நீ சொன்னது வேறொரு பரிமாணத்தில்..!" என்கிறார்!
மீண்டும் பாபாவிடம் பதில் சொல்லும்படி ஹரி கெஞ்சுகிறார்! 
பேச்சுவார்த்தையை மடைமாற்ற பாபா "உன் மூத்த சகோதரி 1986'ல் புட்டபர்த்திக்கு வந்தும் என்னோடு பேச முடியவில்லை என்று உன்னிடம் வருத்தப்பட்டாள்! ஆனால் உனக்கொன்று தெரியுமா? என்னை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களிடமும் நான் அவர்களுக்குள் பேசுகிறேன்! அது உள்ளார்ந்த ஆன்மீக சம்பாஷணை! லௌகீக உலகில் சிந்தனை இருப்பதனால் ஆன்மீக பரிவர்த்தனையை உங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை!" என்கிறார்!
பாபா சொல்லியதும் 1987'ல் அவர் மூத்த சகோதரி ஹரியிடம் சொன்னதெல்லாம் அவருக்கு நினைவு வருகிறது! 
"அந்தக் குடும்பத் தலைவர் யார்?" எனும் கேள்வியை ஹரி விடவே இல்லை... பாபாவும் சிரித்துக் கொண்டே பதில் ஏதும் சொல்லவே இல்லை.. கனவும் கலைந்து போகிறது!

விழித்தெழுந்ததும் ஹரி, தனது மனைவியும் விழித்து அருகே அமர்ந்திருப்பதை கவனிக்கிறார்... உடனே தனது மனைவியிடம் "உமா! நம் குடும்பத்தின் தலைவர் யார்?" என்று ஹரி கேட்கிறார்...
மறு யோசனையே இன்றி 
"சுவாமி தான் நம் குடும்பத்தின் தலைவர்! என்ன நடந்தது சொல்லுங்கள்?" என்று ஹரியின் மனைவி கேட்க...
இந்த சின்ன விஷயம் கூட தனக்கு தெரியவில்லையே என்று கண்கலங்கி அழுகிறார் குழந்தை மனம் கொண்ட பழுத்த பக்தர் ஹரி! 

(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 129 - 133 | ஆசிரியர் : எஸ்.ஆர் ஹரிஹர கிருஷ்ணன்)

அவர் வீட்டில் மட்டுமல்ல நம் அனைவர் வீட்டிலும்  பேரிறைவன் பாபா ஒருவரே குடும்பத் தலைவர்! நம் சாமர்த்தியத்தால் தான் நமது குடும்பமே நடக்கிறது என்று நினைத்தால் அதை விட நமக்கு அறியாமை வேறேதும் இல்லை! அவரவர் கர்மாவிற்கு ஏற்றபடி குடும்பப் பிச்சை அளிக்கும் பாபாவே அதனை பராமரிக்கவும் செய்கிறார்! இதனை உணர்ந்துவிட்டால் குடும்பத்தில் நமக்கு அன்பு மட்டுமே மீதம் இருக்கிறது.. குடும்பத்தின் மேல் மனதை பிடித்தாட்டும் மாயப் பற்று போய்விடுகிறது! அப்போதே Emotional Bondage (உணர்ச்சி பந்தம்) முடிந்து Spiritual Bondage (ஆன்ம பந்தம்) ஆரம்பிக்கிறது! 

  பக்தியுடன் 
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக