தலைப்பு

வியாழன், 21 டிசம்பர், 2023

ஒரு பக்தர் குடும்பத்திற்கே பாபாவின் நேர்காணல் அறையில் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள்!

ஒரு குடும்பத்தையே அழைத்து இறைவன் பாபா நேர்காணல் தருகிற போது அங்கே என்னென்ன பேசினார் எனும் சுவாரஸ்ய அனுபவங்களில் பாபாவை சக்கர நாற்காலி விட்டு இயல்பாய் நடக்க விண்ணப்பித்த பக்தருக்கு பாபா அளித்த பதில்? சுவாரஸ்யமாக இதோ...!


அது ஜூன் 4, 2004 ஆம் ஆண்டு! பரம பக்தர் ஹரிஹரகிருஷ்ணன் (ஹரி) குடும்பத்திற்கு பாபா நேர்காணல் அளிக்கிறார்! அந்த நேர்காணலில் மே 31 - 2003 அன்று ஹரிக்கு பாபா அளித்த கனவை அவரிடமே பகிர்ந்து கொண்டுவிட்டு‌...

"என் பிரியமான பகவான் ஸ்ரீ இராமர் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதற்கு சக்கர நாற்காலியில் அமர்ந்து வருவதைக் கண்ணால் காண என்னால் தாங்கவே முடியவில்லை சுவாமி!" என்று அழுது கொண்டே ஹரி கூறுகிறார்! 

அவரின் விழி நீரை பாபாவே தனது அமுதக் கைகளால் துடைத்துவிடுகிறார்...

"ஏன் இந்த மாயத்திரை சுவாமி?" என்று ஹரி கேட்டவுடன்...

"இதில் மாயை ஒன்றுமில்லை! இதனை உன்னால் புரிந்து கொள்ள இயலாது!" என்று கூறியபடி பாபா"நான் தான் உன்னை இந்தியாவுக்குத் திரும்பி வரும்படிக் கூறினேன் ! நான் தான் உன்னை திரும்ப அழைத்து வந்தேன்! நீ திரும்ப வந்ததில் எனக்கு மகிழ்ச்சி!" என்கிறார்! 


சைப்ரஸ் தேசத்தில் இருந்த போது ஹரியின் கனவில் பாபா தோன்றி "பாரத தேசத்திற்கே திரும்பி வந்துவிடு!" என்று 1991'ல் சொன்னதை பாபாவே 2004'ல் நேரிலேயே உறுதிப்படுத்துகிறார்!

ஈராக் - குவைத் யுத்தத்தின் போது குவைத் நாட்டிலிருந்து தப்பித்து வெளியேறி ஜோர்டான் சென்றுவிட ஹரி மற்றும் அவரோடு காரில் பயணித்தவர்களோடு "நானும் உங்களோடு பயணம் செய்தேன்!" என்று பாபாவே அந்த நேர்காணலில் ஹரியின் குடும்பத்திற்கு தெளிவுப்படுத்துகிறார்!


மேலும் அப்படி அவர்கள் தப்பிச் செல்கிற போது அந்த "முதல் மற்றும் 14 ஆவது சோதனைச் சாவடியிலும் இராணுவ வீரனாக வந்து வழிகாட்டியது நானே!" என்ற ரகசியம் திறக்கிறார் பாபா! 

அதைக்கேட்ட ஹரி பாபாவிடம் "ஆம் சுவாமி! அந்த 14 ஆவது சோதனைச் சாவடியில் காரின் எரிபொருள் தீர்ந்து போனதை நாங்கள் அறிந்திடாத போது, எரிபொருளை நிரப்பிக் கொள்ள நீங்களே வழிகாட்டினீர்கள்!" என்று அப்போது நடந்ததை ஹரியே விவரிக்கிறார்!

அதைக் கேட்டு புன்னகை பூத்த பாபா "நான் தான் உன்னை இந்தியாவிற்கு மீட்டு வந்தேன்!" என்கிறார்! 

திடீரென ஹரியின் மனைவி உமா பக்கம் திரும்பி "உன் கணவருக்கு வயிற்றுப் புண் நோய் இருக்கிறது! கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்கிறார்! பாபா அப்படி சொல்லிய போது அப்படி ஒரு பிரச்சனையே ஹரிக்கு தென்படவில்லை.. ஏற்கனவே உள்ளே இருந்த அந்த நோய் சில மாதங்களில் தலைதூக்கி பிறகு 6 வருடங்கள் ஹரியை துன்புறுத்துகிறது! 

மேலும் நேர்காணலில் பாபாவே "உங்கள் மகள் கல்யாணத்தை நானே நடத்தி வைக்கிறேன்!" என்று சொல்லி ஆசீர்வதிக்கிறார்...!

அதைத் தொடர்ந்து ஒரு நாள் கனவில் ஹரியிடம் சித்ராவதிக்கு ஒரு இளைஞர் வருவார் என்று சொல்லியதற்கு இணங்க... ஒரு சுவாமி மாணவரின் ஜாதகம் ஹரியின் மகள் கிருபாவிற்கு பொருத்தமாக அமைந்தும்விட பாபா கனவில் சொன்ன அதே இளைஞரோடு ஹரியின் மகள் திருமணம் ஜாம் ஜாம் என ஜூன் 2010 ஆம் ஆண்டில் பாபா அப்போது அளித்த நேர்காணல் தேதியிலேயே வியக்கும்படி நடைபெறுகிறது!


(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 173 - 175 | ஆசிரியர் : எஸ்.ஆர் ஹரிஹர கிருஷ்ணன்) 


ஆகையால் இறைவன் பாபா கனவில் வருவது கனவல்ல.. சர்வ சத்திய நிகழ்வு! அது ஏதோ நாம் பாபாவை நினைத்துக் கொண்டே தூங்குவதால் அது அரங்கேறுவதில்லை! பாபாவினுடைய சங்கல்பத்தினால் அது அரங்கேறுகிறது! அவரவர்க்கு மட்டுமின்றி சிலருக்கு இன்னொருவரின் கனவு வழியாகவும் பாபா வழிகாட்டுகிறார்! பாபாவின் வழிமுறையை பாபாவே அறிவார்! "அவனிடம் ஏன் சொல்கிறார்.. ? என்னிடம் நேரடியாக சொல்லாமல்.." என்ற தேவையில்லாத அகந்தையை நாம் விட்டுவிட்டு இறைவன் பாபா சொல்படி வழிநடப்போம்! பாபா சொல்கிற விஷயமே முக்கியம்.. வழி அல்ல...! அந்த விஷயத்தை வைத்தே அது உண்மையா? பொய்யா? என்பதை நாமே உணர்ந்து கொள்ளலாம்! 

ஒரு எறும்புக்கே சர்க்கரை எது? ஆற்று மணல் எது? என்று தெரியவருகிறபோது... உண்மையான பக்தர்களுக்கு பாபாவின் உண்மையான செய்திகள் தெரியவராமலா போய்விடும்?!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக