தலைப்பு

சனி, 23 டிசம்பர், 2023

வேண்டுதலின் பேரில் வந்திறங்கிய இரு வானுலக அவதாரங்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களும் வேண்டுதலின் பேரில் வானுலகம் விட்டு பூமியில் வந்திறங்கினார்கள் என்பதை இரு அவதாரங்களின் வாய் மொழியிலேயே கேட்பது விசேஷம்...அந்த புனித உரையாடல் பூரிப்பாக்கிட இதோ...


அது துவாபர யுகம்!  நெடு யுகமாக ஒரு மலை குகையில் உறங்கிக் கொண்டிருக்கிறான் முசுகுந்தன்! அதே சமயம் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்திய அரக்கன்... அந்த குகையில் வந்து ஸ்ரீ கிருஷ்ணர் பதுங்க... அது ஸ்ரீ கிருஷ்ணர் என்றே நினைத்து உறங்கிய முஷிகுந்தனை மிதிக்க... அவன் கோபத்தில் உதைக்க... அரக்கன் சாம்பலாக.. பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் நடந்ததை விளக்க...

நாராயணராக தோன்றிய ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கித் துதித்த முசுகுந்தன் அந்த தெய்வீகப் பரவசத்தில்...

"சுவாமி தாங்கள் யார்? சந்திரனா? சூரியனா? அக்னியா ? இந்திரனா? சிவனா? விதாதனா? விஷ்ணுவா? உங்கள் பேரிறை ரூபம் வானுக்கும் பூமிக்கும் விரிந்திருக்கிறதே!" என்று பேராச்சர்யத்தில் அவன் வாய் பிளக்க ...‌ அதற்கு வாய்மை பிளக்கும்படி "என்னுடைய இந்தப் பேரிறைப் பேராற்றலை , அதன் மகிமையை , அதன் சங்கல்ப செயல்பாட்டை என்னால் கூட விவரிக்க இயலாது! தர்மத்தை மீட்டெடுக்க வேண்டியே... பிரம்ம தேவருடைய பிரார்த்தனைக்கு இரங்கியே நான் வசுதேவரின் மகனாக இறங்கி வந்தேன்! உனக்கு தரிசனம் தரவே இப்போது வந்தேன்! என் தரிசனம் பெற்றவர்கள் எவரும் சோகக் கடலில் மூழ்கவும் மாட்டார்கள், மலிவான சந்தோஷத்தில் மிதக்கவும் மாட்டார்கள்!" என்ற  பேருண்மையை தெளிவாக்குகிறார் பரிபூர்ண அவதார ஸ்ரீ கிருஷ்ணர்!

(ஆதாரம் : ஸ்ரீமத் பாகவதம் : 10 - 1664)


இதே போல் அதே  ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில்...

"நானாக இந்த பூமியில் வந்திறங்கவில்லை! பல தேசங்களிலும் இருக்கும் பல சாதுக்கள் , சன்யாசிகள், ஞானிகள், யோகிகள் இவர்களின் தீவிர பிரார்த்தனையை முன்னிட்டே வந்திறங்கிய என்னை இதோ நீங்கள் இந்த இடத்தில் தரிசித்து கொண்டிருக்கிறீர்கள்! காலா காலமாகவே நீங்கள் அனைவரும் என்னால் ஏற்கனவே நன்கு அறியப்பட்டவர்களே! உங்கள் அனைவருக்குள்ளும் இருக்கும் மிருக குணங்களை மாற்றி மனித குணங்களை கொண்டு சேர்த்து.. அதனை தெய்வத்துவமாக அகத்தை மாற்றி அமைப்பதே என்னுடைய ஒரே அவதார நோக்கம்! ஆகவே எனை நோக்கி நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் நானே உங்களை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பேன்! யாராவது மன வருத்தத்தோடு இருந்தால் என்னருகே வாருங்கள்... மனப்பூர்வமாக அவர்களை ஏற்றுக் கொண்டு ஆன்மாவுக்கு ஆனந்தம் அளிப்பேன்! காரணம் : உலகம்  இதுவரை ஏங்கிக் கொண்டிருக்கிற அந்த பிரம்மாண்ட பரமானந்தம் நானே! மன வருத்தப்படுபவர்களே என்னுடையவர்கள்! அவர்களுக்காகவே எனது சுயநலமற்ற சேவை! நீங்கள் என் சங்கல்பித்தினாலேயே என்னிடம் வர இயலும்! உங்களை ஒருபோதும் என்னிலிருந்து ஒதுக்கவே என்னால் ஒருபோதும் இயலாது! அப்படி உங்களை என்னிடமிருந்து விலக்குவது எனது பேரிறை குணத்திற்கே விரோதமானது!"

என்கிறார் பாபா மிகத் தெளிவோடு தன் அவதார மேன்மையை அகம் திறந்து உணர வைக்கிறார்!

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No : 129 | Author : Dr. J. Suman Babu ) 


ஞானிகளின் சுயநலமற்ற பிரார்த்தனையால் தான் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியால் அதர்மம் புறையோடி இருக்கிற இந்த பூமி இன்னமும் பொடிந்து போகாமல் பாதுகாக்கப்படுகிறது! அந்த தூய தவ சீலர்களின் உருக்கமான வேண்டுதலாலேயே சூரியன் நேரடியாக மொட்டை மாடியில் காயாமல் வானத்திலாவது காய்ந்து கொண்டிருக்கிறது...! தவமே பாலை எனும் அதர்ம பிரதேசங்களுக்கு பாலை வார்க்கிறது! மகான்கள் அளித்து வருகிற தவ மனு அது! தவம் என்கிற தியானம் என்பது மிகப் பெரிய சமூக சேவை! பத்து நாள் குளிக்காமல் யார் பக்கத்திலும் நம்மால் நெருங்க இயலாது! இப்படி இருக்க ஜென்ம ஜென்மமாக நாம் அக சுத்தமே செய்யாமல் அதனை கொஞ்சம் கூட உணராமல் சமூகத்தோடு எப்படி சுமூகமாக வாழ முடியும்? எப்படி புற சுத்தம் இல்லை எனில் பிற மனிதர்கள் நம்மை நெருங்க மாட்டார்களோ அதுபோல் நமக்கு அக சுத்தம் இல்லாமல் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் மட்டும் எவ்வாறு நம்மிடம் நெருங்கி வருவார்?


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக