எவ்வாறு திகைப்பூட்டும் இரு அபூர்வக் காட்சிகள் இக்கலியுகத்திலேயே நிகழ்ந்து ஸ்ரீசத்ய சாயியே ஸ்ரீ கிருஷ்ணர் என்பதை வலியுறுத்தும் ஆச்சர்ய திருச்சம்பவம் சுவாரஸ்யமாக இதோ..!
இது கலியுகம்! ஒரு மாணவர்! அதுவும் பாபாவின் கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருக்கும் கொடுத்து வைத்த புண்ணிய இளைஞர் அவர்! அவர் பெயர் பிரபால் மால்! வடநாட்டவர்! பி.எச் டி பட்டதாரி! பயோ அறிவியலில் பாபா கல்லூரியில் அறிவியல் அனுபவமும் , பாபாவின் நெருக்கத்தில் ஆன்மீக அனுபவமும் பெற்று வருபவர்!
அவருடைய வாழ்வில் ஒரு அபூர்வ அனுபவம்! அவர் பாபா மாணவராக இருந்த போதல்ல... அது நிகழ்ந்தது அவரது 16 ஆவது வயதில்...
ஒரு இன்பச் சுற்றுலாவுக்காக காஷ்மீர் செல்கிறார்! காஷ்மீர் முழுதுமாக இந்தியாவோடு இணையாத காலம் அது! ஆனால் பிரபால் மாலின் இதயத்தில் எவ்வாறு அந்த அபூர்வ அனுபவம் இணைந்தது என்பது பெரும் விசித்திர ஆச்சர்யமே! அந்த 16'ரே வயதான பாலகன் எதிரே பார்க்காத ஆச்சர்யம் அது ! அப்படி பெரிய பக்திமானோ தவசீலனோ இல்லை அந்த மாணவன்!
அவன் சென்றது ஆன்மீகச் சுற்றுலா அல்ல அது ஒரு இன்பச் சுற்றுலாவே! காஷ்மீர கோஹோஹோய் மலைகளின் வழியே சுற்றிப் பயணம்! ஒரு சுற்றுப் பயணம்! அப்போது 16 வயது பிரபால் மால் தான் தங்கியிருந்த அந்த காட்டேஜ் ஜன்னல் அருகேயே மலை பிரம்மாண்டமாய் தெரிந்து கொண்டிருக்க... அப்படியே அவன் மலைத் தொடர்களில் நடக்க ஆரம்பிக்கிறான்! நடத்தலின் சோர்வால் அங்குள்ள ஒரு குகையின் வாசலில் அப்பாடா என அப்படியே சாய்ந்து கொள்கிறான்! இமைகள் சாயலாம் என உத்தேசித்த போது அவன் கண் எதிரே ஒரு அபூர்வக் காட்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது!
பல சிறுவர்கள் ஒரு சிறுவனைச் சுற்றி விளையாடுகிறார்கள்! அந்தச் சிறுவர்கள் மாடு மேய்ப்பவர்களாக தோன்றுகிறார்கள்! அந்த நடுச் சிறுவன் நீல நிறத்தில் இருக்கிறான்! அவர்கள் விளையாடுகிற மணல் திடல் தங்க நிறமாக ஜொலிக்கிறது! அப்படியே விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவர்கள் அயர்வாகி வட்டமாக அமர்ந்து கொண்டு வந்த உணவைச் சாப்பிடுகிறார்கள்! பிறகு பரந்திருந்த அந்த மணலை கோபுரமாகக் குவிக்கிறார் அந்த நடுச் சிறுவன்.. அவன் தான் அந்த சிறுவர்களின் தலைவன்! யார் என்று அந்த 16 வயது பாலகன் பார்க்க.. அது சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணர் என புரிந்து போகிறது! எதிர்பாரா பரவசம் அது! அப்படியே மணலை கோபுர கூம்பாக்கிய ஸ்ரீ கிருஷ்ணர் உள்ளே கைவிட்டு வெளியே எடுக்கிறார் தங்கத்தாலான ஒன்று மினுமினுக்கிறது... அதை வேடிக்கை பார்க்கும் அந்த 16 வயது பாலகனால் அது என்னவென்று கண்டுணர முடிகிறது... மினுங்கிய அது ஒரு தங்கச் சிலை! அது யாருடைய சிலை என்று பார்க்கிற போது மேலும் ஆச்சர்யம்.. அது ஸ்ரீ சத்ய சாயியின் திருவுருவச் சிலையே!
அதை அந்த பாலகன் மடியில் வைத்து ஸ்ரீ கிருஷ்ணர் ஏதோ சொல்ல.. அதனை புரிந்து கொள்ள முடியவில்லை அவனுக்கு... அந்தச் சிலையை காட்டியபடி அவர்.. "இந்தத் தோற்றத்தில் தான் நான் வருங்காலத்தில் அவதாரம் எடுக்கப் போகிறேன்!" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! அதைக் கேட்டுக் கொண்டிருந்தபடி அப்படியே இமை திறக்கிறான் அந்தச் சிறுவன்.. அதே மலை குகை வாசல்... காலம் உருண்டோடுகிறது அதே அந்த பாலகன் பாபா மாணவனாகிறார்! ஆம் அவன் வளர்ந்து அவராகிறார்!
அது தரிசன வரிசை!
பாபாவிடம் ஆன்மீக முன்னேற்றம் அளிப்பதற்கான ஏதேனும் ஓர் மந்திரம் கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்கிறார்! பாபா அவர் முன் அப்படியே நடந்து வந்து அவரின் மிக மிக ரகசியமான இரண்டு விஷயத்திற்கும் ஒரே பதிலில் அடக்கிவிடுகிறார்... ஒரு விஷயம் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அந்த அபூர்வ ஸ்ரீ கிருஷ்ண சம்பவம்.. இரண்டாவது ஆன்மீக முன்னேற்றத்துக்கான மந்திரம்!
பாபாவே அவரைப் பார்த்த வண்ணம் புன்னகைத்துக் கொண்டு சொன்ன ஒரே பதில்
"சாயி கிருஷ்ணர்!"
அது மே 1970. மும்பையில் (பாம்பே) தர்ம ஷேத்திராவை திறந்து வைக்கிறார்.. அந்த வைபவத்தில் இறைத் தாய் ஈஸ்வராம்பாவும்... நவாநகர் ராஜா மாதாவும் கலந்து கொள்கிறார்கள்! அங்கிருந்து துவாரகா செல்கிறார்கள் அவர்கள் பாபாவுடன் சேர்ந்து! துவாரகையில் பெரிய ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் பக்தர்கள் குவிந்திருக்கின்றனர்... "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா!" என்ற நாம கோஷங்கள் வானம் வரை எதிரொலிக்கின்றன... மீண்டும் துவாரகை கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும் என்ற பேரார்வம் இறைத் தாய்க்கு! ஆனாலும் கார் கார்மேக அளவிற்கு வேகமாகக் கடந்து போக... அது மிடாப்பூர் செல்கிறது...அரை மணி நேரம் கடந்து... ஒரு கடற்கரை... துவாபர யுகத்தில் துவாரகையே மூழ்கிய இடத்தை சுட்டிக் காட்டுகிறார் பாபா.. மூழ்கிய இடத்திற்குப் பெயர் குறங்கா!
அந்தக் கடற்கரையின் மணல் வெளியில் அமர்ந்து எப்படி தனது மாணவருக்கு காஷ்மீரில் காட்சி கொடுத்தாரோ அதே போல் அந்த மணலை கோபுரக் கூம்பாக்கி அதன் உள்ளே தனது தாமரைக் கைகளை உள்ளே விட்டு ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்ததைப் போலவே ஒன்றை எடுக்கிறார்.. ஸ்ரீ கிருஷ்ணர் கைகளில் மினுங்கியது போல் பாபாவின் கையிலும் இப்போது ஒன்று மினுங்குகிறது!
அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் மணலில் இருந்து எடுத்ததோ ஸ்ரீ சத்ய சாயி தங்க விக்ரஹம் (சிலை).. இப்போது ஸ்ரீ சத்ய சாயி மணலில் இருந்து எடுத்ததோ ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரஹம்!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No : 129 - 132 | Author : Dr. J. Suman Babu )
இருவரும் ஒருவரே! இரண்டு பேருக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை! அணுகுவதில் - பழகுவதில் - குறும்புகளில் - ஆனந்த சுபாவத்தில் - பற்றற்ற தன்மையில் - பிரபஞ்ச ஞானத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஸ்ரீ சத்ய சாயியிக்கும் வித்தியாசமே இல்லை! கிருஷ்ணா என்றாலும் சாயி என்றாலும் பக்தி மட்டுமல்ல பரப்பிரம்மமாகிய இரு பேரவதாரங்களும் ஒன்றே!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக