தலைப்பு

புதன், 13 டிசம்பர், 2023

கனவில் கொடுத்த அதே புடவையை நேரில் அளித்த பாபா!!

பேரிறைவன் பாபா தோன்றுகிற கனவுகள் எல்லாமே சர்வ சத்தியம் என்பதை நிரூபிக்கும் உன்னதமான அனுபவப் பதிவு சுவராஸ்யமாக இதோ...!


அது 1985. பஹ்ரைனில் தங்கி பணியாற்றுகிறார் பக்தர் ஹரிஹர கிருஷ்ணன், அப்போது அங்கே அவரது நண்பர் தில்லைநாயகம் வீட்டில் பஜனை ஏற்பாடாகி இருந்தது... ஹரியும் (ஹரிஹர கிருஷ்ணன்) பஜனில் கலந்து கொள்கிறார்...அப்போது ஒரு பஜன் பாடல் ஒலிக்கிறது "கோடி பிரணாம் சத கோடி பிரணாம்" என... திருமதி தில்லை நாயகம் அந்த பஜனை பாடுகிறார்!

அப்போது ஒரு எண்ணம் ஹரியின் மனதை மையம் கொள்கிறது! 

"இந்த பாடலை இவர்களுக்கு பதிலாக வேறொரு பெண்மணி பாடுவாரே.. அவர் பாடியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்குமே!" என்பதே அந்த எண்ணப் புயல்!

பஜன் நிறைகிறது... பிரசாதம் விரைகிறது... இல்லம் சென்ற பிறகு கண்களோ தூக்கத்தை வரைகிறது!

அடுத்தநாள் அதிகாலை பேரிறைவன் பாபா ஹரியின் கனவில் தோன்றுகிறார்! 

அப்போது பாபா ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருக்க... அவர் கையிலோ வெற்றிலை பழத்தட்டு கூடவே ஒரு பட்டுப்புடவை... பாபா நின்று கொண்டிருக்கும் எதிர்திசையில் திருமதி தில்லைநாயகம் நிற்க... அவரிடம் அந்த பழத்தட்டை புடவையோடு அளித்து...

"நீ பாடியது எனக்கு பிடித்திருந்தது! அதற்காக நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்!" என்று கூறி புன்னகை சிந்துகிறார் பாபா! இதனை பக்கவாட்டில் பாபாவின் அருகே நின்று கொண்டு அனைத்தையும் ஒரு சாட்சியாய் இருந்து பார்த்தபடி விக்கித்துப் போகிறார் ஹரி.. தன் எண்ணப்புயலை எண்ணி வருத்தப்படுகிறார்! 

கனவு கலைகிறது... ஹரியின் கனவுகளில் தோன்றும் பாபா பாதநமஸ்காரம் மற்றும் அவரோடு  பேசாமல் சென்றதே இல்லை.. ஆனால் இந்த முறை சாயி கனவில் இரண்டும் இல்லை.. உண்மை உணர்கிறார் ஹரி!


திருமதி தில்லை நாயகம் வீட்டிற்கு சென்று தனது எண்ணப்புயலைப் பகிர்ந்து.. நேர்ந்த கனவையும் சொல்லி மன்னிப்புக் கேட்கிறார்! அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பாபா உங்கள் கனவில் எனக்கு புடவை பிரசாதம் அளித்தது எத்தனை பெரிய ஆசீர்வாதம் என அந்த அம்மையார் ஆனந்தப்படுகிறார்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு.. 1995 அன்று பஹ்ரைன் சாயி பக்தர்கள் புட்டபர்த்தியில் குழும... அதில் வந்திருந்த பெண் பக்தர்களுக்கு பாபா புடவை பிரசாதம் அளிக்க... அதைப் பெற்றுக் கொண்டு... உடுத்தி வருகிற போது... அதைப் பார்த்த ஹரி ஆச்சர்யத்தில் உறைந்து போகிறார்... ஆம் அதே புடவை... பாபா பத்துவருடத்திற்கு முன் கனவில் அம்மையாருக்கு அளித்த அதே புடவை இப்போது நேரிலேயே அளித்து இருவருக்கும் தான் தோன்றிய அந்தக் கனவு சத்தியம் என்பதை நிரூபிக்கிறார்!


(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 59 - 61 | ஆசிரியர் : எஸ்.ஆர்.ஹரிஹர கிருஷ்ணன்) 


பாபா வருகிற கனவுகள் வெறும் கனவுகள் அல்ல.. மாயத்தோற்றம் அல்ல.. சத்தியம் என்பதற்கான கோடி சான்றுகளில் இதுவும் ஒன்று! பிறரின் கனவில் பாபா வருவதை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என நாம் நினைக்கலாம்! நம் கனவில் தோன்றுவது பாபாவுக்கு பெரிய விஷயம் இல்லை ஆனால் அந்த கனவின் வாசல் வழி நமக்கு பாபா தருகிற அனுபவம்.. அந்த அனுபவ வாசல் வழி நாம் பெறுகிற படிப்பினை... அந்தப் படிப்பினையின் வாசல் வழி நாம் அடைகிற ஞானம்... மெய்சிலிர்க்கும்படியானது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக