தலைப்பு

திங்கள், 18 டிசம்பர், 2023

"வெளியே பகீர் யுத்தம்! உள்ளே பஜனை சத்தம்! பழுதான காலிங் பெல் தானாக ஒலிக்கிறது...!"

பரபரப்பான யுத்த சூழ்நிலையிலும் , உறக்கமற்ற இரவுகளிலும் கழித்த பக்தருக்கு எவ்வாறு தான் அருகே இருக்கிறேன் என்று பாபா உணர வைத்த திக் திக் கலந்த மெய் சிலிர்க்கும் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...!

அது 1990. குவைத் - ஈராக் போர்! கருப்பு மேகங்கள் இன்னும் வெடிகுண்டு புகையை குடித்து கருப்பாவதற்கான இருண்ட சூழல் தரையில் ஏற்பாடாகிறது! குவைத்'தில் அப்போது வேலை பார்க்கிறார் ஹரிஹரகிருஷ்ணன்! குவைத் தெருக்களில் ஈராக் படைகள் நிறுத்தப்படுகின்றன... 

புறா நடக்கும் புல்வெளியில் கூட பூட்ஸ் கால்கள்! 

வெடி குண்டு சப்தத்தில் இதயம் வேகமாக துடிக்கிறதா...?

அல்லது இதயம் வேகமாக துடிக்கிற படி தோட்டாக்கள் தெறிக்கிறதா...? புரியாத அளவிற்கு போர் சூழல்!

பக்தர் ஹரி பாபாவை வேண்டுகிறார்! அப்படியே மரணம் வந்தாலும் யாரிடமும் பிடிபட்டு மோசமான முடிவாக இல்லாமல் நிம்மதியான நித்திரை மரணம் வேண்டுகிறார்!


பாலஸ்தீனிய நண்பர் ரீபி என்பவர் குவைத்'திலிருந்து தப்பிப்பதற்கான ஆலோசனையை சொல்கிறார்! கண்ணி வெடி மேல் கால் வைப்பது போன்ற தரை வழி தப்பித்தல் அது! கம்பி மேல் கரணம் தப்பினால் மரணம் என்றபடியான வெளியேற்றம் அது! ஆயினும் பாபாவின் மேல் பாரத்தை போட்டு பக்தர் ஹரியோடு சில குடும்பம் அங்கிருந்து வெளியேற தவிக்கிறது!

அந்த நேரம் ஹரியின் குடும்பம் சென்னையில் என்பது ஹரிக்கு ஒரு வகை ஆறுதல்! அவர்களுக்கு தொலைபேசி செய்து தகவல்கள் பரிமாறப்படுகின்றன...! 

ஆகஸ்ட் 6,7,8 அனந்தபத்மநாபன் வீட்டில் கழிக்கிறார்! 

குவைத் நாட்டிலிருந்து தப்பித்து ஈராக் வழியாக ஜோர்டான் சென்று விட வேண்டும்... அதன் தலைநகரம் அம்மான்... அது தான் அவர்களின் திட்டம்! 

வழியே என்ன நேரும்! செக் போஸ்ட்'டில் மாட்டுவார்களா? எத்தனை துப்பாக்கி முனைகள் தப்பித்துச் செல்பவர்களை குறி வைக்கும்? காரில் தப்பித்துச் செல்லும் வரை ரூட் மேப்? வழிகாட்டி? 

பாபாவை தவிர கதி யாருமே இல்லை ஹரி மற்றும் அவரது குழுவினருக்கு...!

அவர்கள் தப்பிச் செல்லும் புதன்கிழமை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது...

காரணம் அடுத்த நாள் வியாழக்கிழமை - பாபா தினம்! 

இந்த திட்ட சூழ்நிலையில்... அவர்கள் தங்கி இருக்கும் கீழ்தளத்தில் ஏற்கனவே ஈராக்கிய வீரர்கள் தங்க ஆரம்பித்துவிட்டனர்! 

அந்த 7 நாட்கள் ஹரிக்கு சிவராத்திரியே... தூங்கவே இல்லை! எது கடைசி தூக்கமாக இருக்கும் என்று யோசிக்கிற ஹரிக்கு வந்த தூக்கமும் ஈராக் வீரர்களின் பூட்ஸ் காலால் மிதிபட்டு சாகிறது!


அடுத்த நாள் காரில் அம்மான் தப்பிக்க வேண்டும்... அம்மானை தேடி போகிற ஸ்ரீ ராமராய் அம்மானை தேடி பயணிக்கிற ராம ஜப பக்தர் ஹரி முந்தைய இரவு சாயி பஜனைகள் செய்கிறார்! அவர் பாடப்பாட அனைவரும் பின்பாடல் பாடுகிறார்கள்! அப்போது திடீரென காலிங் பெல் சத்தம் வாசலில் கேட்கிறது... ஒருவேளை கீழ்தளத்தை ஆக்கிரமித்த ஈராக் வீரர்களா? அனந்தபத்மநாபன் கிலியோடு சென்று வாசல் கதவை திறக்கிறார்! அங்கே யாருமில்லை! இப்படி ஒருமுறை இருமுறை அல்ல மூன்று முறை மணி ஒலிக்கிறது! பஜனை நிற்கவில்லை! நிகழ்ந்து கொண்டே இருக்கிறது!

அவருக்கு இரட்டிப்பு மிரட்சி... ஒன்று யாருமின்றி காலிங் பெல் ஒலிக்கிறது... இன்னொன்று அந்த காலிங் பெல் பழுதடைந்து மௌனமாகி பல நாட்களாகி விட்டது! யார்? யார்? 

பஜனை பாடிக் கொண்டே இருந்த ஹரிக்கு இது பாபா லீலை... பாபா தங்களின் கூடவே இருப்பதை உணர்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டு கண்கலங்குகிறார்! 


தப்பிப்பதற்கு முக்கியமான துணிமணி, மருந்து... போதும்...!! நிலையாமையை நேரலையில் அனுபவிக்கும் அவர்களுக்கு எடுத்து வைக்க வேண்டும் என்ற ஆவல் நின்றுவிடுகிறது! அப்போது ஹரி அனந்தா வீட்டில் மங்கையர் மலரில் பாபா பற்றிய செய்தி வாசிக்கிறார்...அதில் அபய ஹஸ்தத்தோடு பாபா.. ரா.கணபதி எழுதிய 'சுவாமி' என்கிற பாபா வாழ்க்கைப் புத்தகம் பற்றிய விளம்பரக் குறிப்பு! பாபா தரிசனம் பத்திரிகையில் ஆகிறது! அதையும் கூட எடுத்துப் பயணிக்கின்றனர் ஹரியோடு சில குடும்பம்!!

குழந்தைகள் தூங்குவதற்கு இருமல் மருந்து கொடுத்து அழைத்துச் செல்லப்படுகிறது!

அது திக் திக் பயணம்... ஸ்டியரிங்கோடு உயிரையும் சேர்த்து கையில் பிடித்துக் கொண்டு ஓட்ட வேண்டிய கார் பயணம்! காரின் சக்கரங்களாக தலைகள் அழுத்தத்தோடும் சுற்றுதலோடும் அடுத்து என்ன? அடுத்த நொடி ? என்ன நிகழும்? என்ற திகில் கிளப்பும் பரபரப்போடு மேற்கொண்டு பாபா அருளால் மீண்ட பயணம்!

செக் போஸ்ட் காவலர் கூட வழிகாட்டியபடி உதவ... வேறொரு திசை வந்தும் அங்கிருந்து சதாம் உசேனின் தலைமை அதிகாரி மனம் மாறி ஹரியை கட்டி அணைத்து... பாஸ்போர்ட்டை சீல் செய்து கொடுத்து அனுப்ப... புறப்பட்ட காரும் ஈராக்'கிற்கே சொந்தம் என்ற கிடுக்குப்பிடி உத்தரவில் நடந்தே பாலைவனம் கடக்கிறோம் அல்லது மணலிலேயே மூச்சயர்ந்து கிடக்கிறோம் என்ற சம்மதத்தில்... அவர்கள் நான்கடி நடக்க...மணல் பரப்பில் எந்நாளும் வராத ஒரு பேருந்து விரைந்து அவர்களை ஏற்றிக் கொண்டு தப்பிக்க உதவ... நிகழ்ந்தவை மனிதனாலும் யூகித்து செயல்படுத்த முடியாத பாபாவின் திரைக்கதை தப்பித்தல் அது! பிறகு பக்தர் ஹரி குடும்பத்திற்கு நேர்காணல் தருகிற போது பாபாவே நடந்தவை ஒவ்வொன்றாக விவரித்து தானே காப்பாற்றியதாக தெளிவாக்கி உணர்த்துகிறார்!


(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 84 - 90 | ஆசிரியர் : எஸ்.ஆர் ஹரிஹர கிருஷ்ணன்) 


உயிர் சதமில்லை என்பதை கண்ணுக்குக் கண் உணர வைக்கப்பட்ட உற்சவம் அது! ஞானம் தருகிற எந்த நிகழ்வும் ஆரோக்கியமானதே! நிகழ்ந்த - நிகழும் - நிகழவிருக்கும்  எந்த சூழ்நிலையும் ஆன்மாவுக்கு பலமே சேர்க்கிறது! ஆன்மீகத்தில் பாபா பக்தியில் தோய்பவருக்கு வாழ்வில் எந்த சம்பவமும் ஆன்ம யாகத்தில் விடப்படும் ஒரு துளி நெய்யாகவே உணரப்படுகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக