தலைப்பு

சனி, 16 டிசம்பர், 2023

இரு யுகத்து மகரிஷிகளும் அனுபவித்த இரு அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகத்திலும் முனி சிரேஷ்டர்கள் இரு யுகத்து அவதாரங்களின் மகிமையை உணர்ந்து அனுபவித்து கடைத்தேறினார்கள் எனும் ஆச்சர்ய சானறாதாரங்கள் சுவாரஸ்யமாக இதோ...!

இஷ்வாகு பரம்பரையில் மகராஜா மாந்தாதனின் மூத்த மகன் அம்பரீஷனின் சகோதரன் முசுகுந்தசக்கரவர்த்தி ஆவான். பக்திக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு முசுகுந்தன்! ஒருமுறை கடவுளருக்கும் ராட்சசர்களுக்கும் பெரும்போர்! இருட்டுக்கும் வெளிச்சத்திற்குமான போர் போல... நற்குணத்திற்கும் தீய குணத்திற்குமான போர் போல.. மனதிற்கும் மனசாட்சிக்குமான போர் போல.. அது நீண்ட நெடும் போர்! அந்தப் போர் சூழ்நிலையில் கடவுளரின் பக்கம் நின்று அவர்களுக்கு போர் சமயத்தில் துரும்பாய் உதவுகிறான் முசுகுந்தன்! அதற்கு மகிழ்ந்து வரம் கேள் என்கிறார்கள் கடவுளர்! "தனக்கு முக்தி வேண்டும்!" என்று கேட்கிறார் பக்திமானான முசுகுந்தன்! "அது எங்களால் சாத்தியமில்லை! ஸ்ரீ ஹரி ஒருவராலேயே அதை வழங்கிட இயலும்!" என்று கடவுளர் கூறுகிற காலகட்டத்தில் முசுகுந்தன் தனது ராஜ்ஜியத்தை துறந்து ஒரு மலையின் குகைக்குள் சென்று ஸ்ரீ ஹரியை வேண்டி முக்திக்காக காத்திருந்தபடி அப்படியே தூங்கிவிடுகிறான்! கும்பகர்ணனை விட அதிகமான தூக்கம்! உடல் பொட்டு அசையவில்லை... அவன் தூங்கிய தூக்கத்தில் பல நூற்றாண்டு உருண்டோடுகிறது! துவாபர யுகமே வந்துவிடுகிறது!


இப்படி இருக்க ஒருமுறை அரக்கன் கால யவனன் ஸ்ரீ கிருஷ்ணரை கட்டிப்போட துரத்துகிறான்... எப்போதும் எதிர்த்துப் போராடும் ஸ்ரீ கிருஷ்ணரோ அந்த நேரத்தில் ஏனோ விசித்திரமாய் ஓடுகிறார்... காற்று போல் ஓடும் ஸ்ரீ கிருஷ்ணரை பிடிக்க பட்டம் போல் பின்னே பாய்ந்து வருகிறான் அரக்கன்! நேராக ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மலை குகைக்குள் சடார் என்று புகுந்து ஒளிந்து கொள்கிறார்! 

"நன்றாக மாட்டிக் கொண்டான் அந்த கண்ணப் பயல்!" என்றபடி குகைக்குள் நுழைகிறான் அரக்கன்... "ஓ மூச்சிறைக்க ஓடி வந்ததால் படுத்தே விட்டாயா" என ஸ்ரீ கிருஷ்ணர் என்று நினைத்தபடி ஓங்கி ஒரு உதை கொடுக்கிறான் அரக்கன்! படார் என்ற உடல் அதிர்வால் கோபத்தோடு அசைந்து ஒரு எத்து விடுகிறது ஒரு கால்... கிருஷ்ணரா என்று கூர்ந்து பார்த்தால் அது ஸ்ரீ கிருஷ்ணர் இல்லை... முசுகுந்தன்! ஸ்ரீ கிருஷ்ணர் பதுங்கியதோ அவன் பல நூற்றாண்டுகளாக அசந்து தூங்கிய குகைக்குள்ளே தான்! 

அவன் கொடுத்த உதையில் விழுந்த அரக்கன் சாம்பலாகிறான்! எழுந்த முசுகுந்தன் ஸ்ரீ கிருஷ்ணரின் லாவண்யத்தை கண்களால் பருகி ஏதோ ஒரு தெய்வீக புருஷர் என்பதை உணர்ந்து "யார் சுவாமி தாங்கள்?" என்று கேட்கிறார்!

"விவரிக்கவே இயலாத விஸ்வரூப தெய்வீகத்தை எப்படி விளக்க முடியும்?" என்று ஸ்ரீ கிருஷ்ணர் தெரியப்படுத்தி மேலும் "நீ என்னை முன்பு வழிபட்டிருக்கிறாய்! ஆகவே தான் உனக்கு அருள் பாலிக்க இந்த குகையில் தான் நீ தூங்குகிறாய் என்று தெரிந்தே நுழைந்தேன்!" என்று  தெளிவுபடுத்துகிறார்!

எட்டாவது மகாயுகத்தில் ஸ்ரீமன்நாராயணர் வருவார் என்ற கர்க மகரிஷி வாக்கியத்தை நினைவுபடுத்தி ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீமன் நாராயணன் என்பதை உணர்ந்து தனது பிறவியை கடைத்தேற்றுமாறு வேண்டுதல் விடுக்கிறார் முசுகுந்தர்! பிறகு வெளியே வருகிறார்! தான் தூங்கியதற்கு முன் இருந்த உலகையும் எழுந்த பிறகான மாறிய உலகையும் பார்க்கிறார்! கலி நெருங்குகிறது என்பதை உணர்ந்து கொள்கிறார்! நேராக ஸ்ரீ நரநாராயணர் வசித்த பத்ரிகா ஆசிரமத்திற்கு சென்று ரிஷி வாழ்க்கை வாழ்ந்தபடி ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கி தவமியற்றியபடி பிறவாமை கிடைக்கப் பெறுகிறார்! இவரை முஷிகுந்த மகரிஷி என உலகம் இவரது பக்தி சிரத்தையோடு கூடிய தவத்தை இன்றளவும் போற்றுகிறது!

(ஆதாரம் : ஸ்ரீ மத் பாகவதம் : 10 - 1663) 


இதைப் போலவே ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக கலியுகத்தில் அவதரித்த போதும் கலியுக மகரிஷிகள் நிறைய பேர் பாபாவை தரிசித்திருக்கிறார்கள்! பாபாவே சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணர் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்! தரிசனம் - பேருணர்வு - சம்பாஷனை - பாத நமஸ்காரம் - ஆரத்தி - இறை சேவை - பேரனுபவம் என எல்லாமே நிரம்பப் பெற்றிருக்கிறார்கள்! 


இதில் முக்கியமானவர்கள் ரிஷிகேஷ் சுவாமிஜி சிவானந்தர்! அவரின் வழிபாட்டு தெய்வம் ஸ்ரீ கிருஷ்ணரே! அவரது அன்றாட ஆன்மீக அட்டவணையில் ஸ்ரீ கிருஷ்ண ரூபத்தையே (புகைப்படம்) 30 நிமிடம் வரை தரிசிக்க வேண்டும் என்ற தனது ஆசிரம கோட்பாடுகளில் சீடர்களுக்கு வழங்கி இருப்பவர்! அத்தனை ஸ்ரீ கிருஷ்ண பக்தி அவருக்கு! அதற்காகவே ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் தானே தேடிப் போய் அவரோடு ஒரு மாதகாலம் மேல் தங்கி.. அவரது முடக்கு வாதத்தையும் சரியாக்கி அருள் பாலிக்கிறார்! அவரைத் தொடர்ந்து அவரது சீடர்களான சதானந்தா, சச்சிதானந்தா , சின்மயானந்தா, சிதானந்தா , சித்பவானந்தா என பல கலியுக முனி சிரேஷ்டர்கள் பாபாவின் அருள் பெற்றிருக்கிறார்கள்! 

          "நீ உனது ஆன்ம இலக்கை நோக்கி வேகமாக உள்நகர்ந்து செல்கிறாய்! ஆகவே திட வைராக்கியத்தோடு ஆன்ம சாதனையை தொடர்ந்து செய்து வா! நான் எப்போதும் உன் கூடவே இருந்து உனக்கு ஆன்மீக மலர்ச்சியை விரைவில் அளிப்பேன்!" என்கிறார் பாபா சுவாமிஜி சச்சிதானந்தரிடம்... சுவாமிஜியோ தொடர் தியானம் புரிபவர்! பௌர்ணமி நாள் தியானத்தில் தன்னை கரைத்துக் கொள்பவர்! கடலையும் நிலாவையும் உள்ளுலகில் காண்பவர்! அவருக்கு பாபா எதையோ தர கையை அசைக்கிறார்... உடனே சுவாமிஜி "சுவாமி! விபூதியோ, தங்கமோ, வெள்ளியோ எதுவும் வேண்டாம்! எனக்கு வேண்டியதெல்லாம் நீங்கள் நீங்கள் நீங்கள் மட்டுமே!" என்கிறார் சுவாமிஜி சச்சிதானந்தா! ஆகவே அதனை ஏற்று பாபா தனது தெய்வீகத்தை அவர் முன் காட்டுகிறார். 


அது போல் ஒருமுறை இரவு ஒன்பது மணி இருக்கும்.. அது பத்ரி... பத்ரியில் பழம்பெரும் புனித இடமான வசிஷ்ட குகை! முதிர் மகரிஷி புருஷோத்தமானந்தாவை பாபாவே தேடிச் சென்று அருள் பாலிக்கிறார்! நீண்ட நெடுங்காலமாக அவருள் இருந்த ஆன்மீக ஏக்கமான "ஜோதி பத்மநாப தரிசனம்", அதனை பாபாவே அனுகிரகம் செய்ய விஜயம் செய்கிறார்! சுவாமிஜியோ அனந்த பத்மநாபரின் பக்தர்! ஆகையால் அவரின் மடியில் பாபா சயனித்தபடியே அவர் ஆன்மீகப் பிரார்த்தனையை நிறைவேற்ற... பேரொளி தரிசனம் காட்டுகிறார் குகையின் உள்ளறையில்...!


சுவாமிஜி காருண்யானந்தாவோ பாபா துயிலும் கட்டிலின் கீழே படுத்துக் கொள்கிறார்! காற்றுக்கும் கடவுளுக்கும் உறக்கம் இல்லை எனும்படி பாபா கண்களை மூடிக் கொண்டே இருக்கிறார்..! ஆனால் உறங்கவில்லை... படுத்துக் கொண்ட காருண்யானந்தர் ஆச்சர்யப்படுகிறார்.. அவர் கண்களுக்கு ஒரு குழந்தை படுத்திருப்பது போல் தோன்றுகிறது.. என்ன குழந்தை என்று கழுத்தை உயர்த்த... அது சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணர்‌... பிறகு அதே குழந்தை கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக உருவ மாற்றம் எடுப்பதையும் உற்று நோக்குகிறார்! அது மாயை இல்லை‌... கனவில்லை...கற்பனை இல்லை! நான் தூங்கவும் இல்லை...எனக்கு பாபாவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டதில் விளைந்த பேரனுபவம் என்று அந்த ஆனந்தத்திற்கு சாட்சியாகிறார் சுவாமிஜி காருண்யானந்தர்! 


அது 1950.. மகாசமாதிக்கு முன்...பகவான் ரமண மகரிஷி ஒரு பக்தரிடம் "இறைவன் ஆந்திராவில் அவதரித்திருக்கிறான்!" என்பதில் அந்த பக்தர் இருவர் தேடிப் பிடித்து புட்டபர்த்தி வந்ததை உடனிருந்து பார்த்தவர் அனுபவப் புத்தகம் எழுதி இருக்கிறார்... "சத்ய சாயி ஆனந்த தாயி" அந்தப் புத்தகம் பெயர்! 

ஸ்ரீ அரவிந்த மகரிஷி யோ ஸ்ரீ கிருஷ்ணரின் மெய்யுணர்வு பூமியில் இறங்கிவிட்டது! என்று 1926 நவம்பர் 24 அன்று அதிகாலை வெளிப்படுத்துகிறார்! நவம்பர் 23 அன்று தான் பாபாவின் அவதாரம்! மகரிஷிகளின் இந்த தெய்வீகப் பட்டியலுக்கு முடிவே இல்லை! 

குறிப்பாக ஸ்ரீ அரவிந்தரோ ஸ்ரீ கிருஷ்ண பக்தர்! 

ஆண் ரிஷிகள் மட்டுமல்ல பெண் ரிஷிகளும் இதில் விதிவிலக்கில்லை! அதே ஸ்ரீகிருஷ்ண பக்தையான மாதா ஆனந்தமயியும் அமிர்த்னந்தமயியும் பாபாவை "பூர்ணாவதாரம்!" என தங்களுடைய அனுபவ வாக்கை பகிர்ந்திருக்கிறார்கள்!

அதில் அம்மாச்சி அமிர்தானந்தமயி "நான் ஒரு சாதாரண மெழுகுவர்த்தி.. பாபாவோ சூரியன்!" என்கிறார்! ஆனால் பாபா உதய சூரியன் அல்ல தினந்தோறும் அஸ்தமனம் ஆவதற்கு... இரவே இல்லாத நமக்கு இருளே தராத 'இதய சூரியன்' பாபா! 


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 125 - 128 | Author : Dr . J. Suman Babu )


ரிஷிகள் பாபாவை பற்றி தெரிவித்த அனுபவ உண்மைகளை தெளிவுற வாசிக்க ஸ்ரீ சத்ய சாயி யுகத்தின் "சாயி அவதாரம் பற்றி மகான்கள்" தொடர் மேன்மேலும் விளங்க வைக்கும்! பாபாவே சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணர் என்பதை மனதில் துலங்க வைக்கும்! 

பகவான் ரமணர் அருளிய "அவரவர் பிராப்த பிரகாரம் 'அதற்கானவன்' ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்!" என்கிற நிதர்சன ஞான மொழியில் "அதற்கானவன்" என்பதே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே! இந்தப் பேருண்மையை நாம் ஆன்ம சாதனை (தியானம்) பழகப் பழக அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ளலாம்! 


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக