தலைப்பு

செவ்வாய், 26 டிசம்பர், 2023

விபூதி பொட்டலங்களை பகிராமல் போனவர்க்கு பாபா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

வாழ்வதே பகிர்வதற்குத் தான் எனும் ஆன்ம அர்த்தத்தை பாபா எவ்வாறு செயல்வழி ஆன்மீகத்தில் உணர வைக்கிறார்? சுவாரஸ்யமாக இதோ...!

மதுரம் என்பவர் பாபா பக்தை! அவரது சகோதரர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றுகிறவர்! அவரும் பாபா பக்தரே ! ஒருமுறை விமான நிலையத்தின் தனது சக ஊழியர்களை அழைத்துக் கொண்டு பாபா தரிசனத்திற்காக புட்டபர்த்தி அழைத்து வருகிறார்! பாபா அவர்களுக்கு பேரன்போடு நேர்காணலும் தருகிறார்! அப்போது விபூதி பிரசாதம் கேட்கிறார் மதுரம் அவர்களின் சகோதரர்! பாபா அதற்கு அன்போடு சம்மதித்து கர சிருஷ்டி விபூதியை ஒரு கொத்து அள்ளித் தருகிறார்...! பிறகு ஒவ்வொரு பொட்டலமாக அந்த சிருஷ்டி விபூதியை தனித்தனியாகப் பிரிக்கிறார்... அப்போது வந்திருந்த விமான நிலைய அதிகாரிகளான இரண்டு நபர்களுக்கு அந்த விபூதி பொட்டலம்  குறைகிறது! பற்றாக்குறை வரவே தனது இரண்டு விபூதி பொட்டலங்களில் இருந்து ஒன்றை அதில் வைக்கிறார், இன்னொரு விபூதி பொட்டலமும் தேவைப்படுகிறது, உடனே தனது சகோதரி மதுரம் அவர்களிடம் கேட்கிறார்! 

ஆனால் மதுரமோ "சுவாமி எனக்கென கொடுத்த விபூதி பிரசாதங்களை நான் யாருக்கும் தருவதாக இல்லை!" என்று மறுத்து விடுகிறார்! பெயரில் மதுரம் ஆனால் அவர்களது செயலில் மதுரம் இல்லை, சரி பரவாயில்லை என்று தனது இன்னொரு விபூதி பொட்டலத்தையும் வந்திருந்த தனது சக ஊழியர்களுக்கே மதுரம் சகோதரர் வழங்கி விடுகிறார்!


பிறகு வேறொரு தெய்வீக சந்தர்ப்பத்தில் பாபா வேங்கடமுனி வீட்டில் தங்கி இருக்கிறார்! மீண்டும் அதே விமான அதிகாரிகளோடு லவுஞ்சில் மதுரம் சகோதரர் பாபா தரிசனத்திற்காக காத்திருக்கிறார்! சகோதரி மதுரமும் அப்போது உடன் இருக்கிறார்!

பாபா மாடியிலிருந்து அழகழகாய் அசைந்து அடைந்து நடந்து வருகிறார்! அவர்களை பாபா கண்ட அடுத்த கணமே , "இவர்களுக்கு எல்லாம் பிரசாதம் கொடுத்தீர்களா?" என்று அன்போடு மதுரம் சகோதரரிடம் பாபா கேட்கிறார்! 

அப்போது பாபா தனது தெய்வீகத் திருக்கரங்களை அசைத்து மதுரம் சகோதரர் உட்பட அனைவருக்கும் சிருஷ்டி விபூதி வழங்கிக் கொண்டே வருகிறார்... அடுத்த நபர் மதுரம், மதுரமும் கையை நீட்டுகிறார், ஆனால் பாபா மதுரத்திற்கு வழங்காமல் அடுத்த நபருக்கு வழங்க நகர்கிறார்! மதுரம் விடவில்லை.. கையை பாபாவின் பக்கம் நீட்டுகிறார்..

மதுரத்தின் செய்கையை திரும்பிப் பார்த்த பாபா 

"ஒரே சண்டை போட வேண்டியது! விபூதி கேட்டால் தர மாட்டேன் என்று சொல்ல வேண்டியது!" என்று சொல்லிவிட்டு மதுரத்திற்கு விபூதியே தராமல் பாபா நகர்ந்துவிடுகிறார்!

அனைத்தும் அறிபவர் பேரிறைவன் பாபா எனும் பிடிப்பினை வருவதற்காகவும், பகிர்வதே அன்பு எனும் படிப்பினை வருவதற்காகவும் பாபா விபூதி வழங்காமல் சென்றதில் வழங்கிய ஞானம் அது!

(ஆதாரம் : அற்புதம் 60 | பாகம் : 2,3 | ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)


நமக்கு இல்லை என்றாலும் பிறருக்காக நாம் நம்முடைய பொருட்களை வழங்கி ஆனந்தப்பட வேண்டும் என்பதே பாபா வகுத்த நடைமுறை ஆன்மீகம்! மனிதர்களை தியாகிகள் ஆக்குவதற்கே முதலில் அவர்களை தன் பக்தர்கள் ஆக்குகிறார்! தியாகத்தால் மட்டுமே முக்தி வாய்க்கிறது! தியாக உணர்வே ஆன்மீகம்! தியாக ஜோதியை நாம் நம் இதயத்தில் ஏற்றுகிற போதே சுயநல இருள் விலகுகிறது! உண்மையில் நம்முடையது என்று எதுவுமே இல்லை , உலகில் அனைத்தும் பாபாவின் உடமையே , இதை உணர்ந்து கொண்டால் எதன் மீதும் நமக்கிருக்கும் பற்று என்கிற அறியாமை விலகிவிடுகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக