தலைப்பு

சனி, 30 டிசம்பர், 2023

தனது ஊதா நிற ஆராவால் ஒரு பக்தித் தம்பதிகளை குளிப்பாட்டிய பாபா!

பேரிறைவன் பாபாவின் ஆரா (Aura) பேரன்பின் பிரதிபலிப்பாக ஊதா நிறமாக பரவும் என்பது கிர்லியன் கேமரா வழி நாம் கண்டுணர்ந்ததே! அத்தகைய பாபாவின் ஊதா நிற ஆரா எவ்வாறு ஒரு தம்பதிகளுக்கு மகிமை புரிந்தது? சுவாரஸ்யமாக இதோ...


அவர் டில்லி பல்கலைக்கழக கல்லூரிகளின் ஒன்றில் முன்னாள் முதல்வர்! அவர் பெயர் ஐ.என்.பட்நகர்! பாபாவை தினசரி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர் ஒயிட்ஃபீல்டில் வாடகை வீடு எடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்! அத்தனை பக்தி! ஆனால் அவருக்கு ஒரு முறை கடும் ஜுரம் ஏற்படுகிறது! 

கொதிக்கிற காய்ச்சல் அவரை படுக்கையில் கிடத்தி விடுகிறது! அவருக்கு டாக்டரான அவரது மனைவியே சிகிச்சை அளிக்கிறார்! அவரும் தீவிர ஓய்வு எடுக்கிறார்! இதனால் பாபாவின் தரிசனம் பெற செல்ல இயலவில்லை!

அவரது மனைவியான டாக்டர் ஸ்ரீமதி மட்டும் பாபா தரிசனத்திற்கு செல்கிறார்!

தரிசனத்தில் பாபா ஸ்ரீமதியை பார்த்துவிட்டு மிக நகைச்சுவையாக "அவர் எங்கே? ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறாரா?" என்று கேட்கிறார்! 

"இல்லை சுவாமி அவருக்கு 106 டிகிரி கடுமையான ஜுரம்!" என்கிறார் ஸ்ரீமதி 

"ஓ 106'ரா" என வேடிகையாக கேட்பதைப் போல் கேட்டுவிட்டு 

"பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லி விட்டு எதுவும் தராமல் திரும்பிவிடுகிறார்!

ஸ்ரீமதிக்கு ஒன்றுமே புரியவில்லை! 

மறுநாள் தரிசனத்திலும் ஸ்ரீமதியிடம் அவ்வாறே வேடிக்கையாக நடந்து கொண்டு நகர்கிறார்!

பாபாவின் முக தரிசனமே மருந்து பிரசாதம் என வீட்டிற்கே திரும்புகிறார்!

அன்று மாலை இருவரும் எதிரே பார்க்காதவாறு ஒரு ஆச்சர்ய சம்பவம் நிகழ்கிறது!

பாபா கொடுத்து அனுப்பியதில் பாபா கல்லூரி மாணவர்கள் பட்நகரின் வீட்டுக்கே வந்து விபூதி பிரசாதம் வழங்குகிறார்கள்! பாபாவின் மகா கருணையை நினைந்து உருகியபடி பாபா கொடுத்து அனுப்பிய விபூதி பிரசாதத்தை உண்ட பிறகு உடனே காய்ச்சல் சரியாகி அவர் புத்துணர்ச்சி அடைகிறார்!


காய்ச்சல் தணிந்து பட்நகர் அமைதியாகப் படுத்திருந்தார்! டாக்டர் ஸ்ரீ மதியோ வாசலில் நின்றிருந்தார்! அப்போது திடும் என்றொரு பரவச நிகழ்வு கண்களை நிரப்புகிறது! உடனே தனது கணவரை அழைக்கிறார்! அவரும் மெதுவாக எழுந்து வந்து பார்க்க.. தன் கண்களை தன்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு அற்புதக் காட்சி! இருவரும் திகைத்துப் போகிறார்கள்! 

அது மாலை நேரம்! ஆனால் வெறும் மாலை நேரமாக இன்றி சாயியின் ஜால நேரமாக கண்களில் விரிகிறது! அவர்களின் வீட்டு காம்பவுண்ட் முழுவதும் ஊதா நிறத்தால் மெழுகி இருப்பதைப் போன்ற ஒரே ஊதா மயம்! பிங்க் நிற பிரவாகம்! பார்க்கப் பார்க்கப் பரவசப்படுகிறார்கள்! அது வெறும் கற்பனை அல்ல என்பதை இருவருமே நேருக்கு நேர் அடைந்த தரிசனத்தில் உணர்ந்து கொள்கிறார்கள்! 

அதில் அவர் உடல் மட்டுமல்ல ஆன்மாவே குணமாகிறது!

(ஆதாரம் : அற்புதம் அறுபது | பக்கம் : 5,6,7 | ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)


ஊதா நிறம் பேரன்பை குறிக்கிறது! பேரன்பின் பிரம்மாண்ட ரூபமே பேரிறைவன் பாபா! அவர் உடலோடு தான் தரிசனம் தர வேண்டும் என்பது கூட இல்லை.. ஒளி மய தரிசனமும் சரி , இதைப் போல் தனது ஆராவை பரப்பியும் சரி , தனது தெய்வீக நறுமணத்தை நிரப்பியும் சரி, எப்படி வேண்டுமானாலும் தனது பேரிருப்பை பேரிறைவன் பாபா உணர்த்துகிறார்.. அதை அனுபவிப்பதற்கு நமக்கு தேவை நிறைய பக்தியும் , கொஞ்சம் ஆன்ம விழிப்புணர்வு மட்டுமே!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக