எவ்வாறு இமாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரே பக்தரின் இதயத்திலும் வீற்றிருக்கும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் என்பதை ஆன்மா வரை ஆழப்பதிய வைக்கும் அனுபவப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
அது 1961 ஆம் ஆண்டு! தானே தன்னை தரிசிக்க தன்னிகரில்லா இமயத்திற்கு வரப்போவதன் மகிமையை சுமந்த ஆச்சர்ய ஆண்டு! பர்த்தி பாபா பத்ரிக்கு விஜயம் செய்கிறார்! கூடச் செல்கின்றனர் கொடுத்து வைத்த 65 பக்தர்கள்! உத்தரப் பிரதேச கவர்னர் பர்குலா ராமகிருஷ்ண ராவும் அந்தப் புனிதப் பயணத்தில் பாபா அன்போடு அழைக்க இணைந்து கொள்கிறார்! பாபாவோடு வருகிற பக்தர்களை கவர்னர் ஹரித்வாரில் அன்பொழுக வரவேற்கிறார்!
"பொதுவாக ஆன்ம சாதகர்கள் கடவுளை நேரில் தரிசிப்பதற்காக தவம் இயற்றுவார்கள்! ஆக அவ்வாறே பத்ரிக்கும் யாத்திரை சென்று இறைவனை தரிசிப்பார்கள்! ஆனால் நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவர்கள்! இறைவனோடேயே இறை ஸ்தலத்திற்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்! பத்ரி நாராயணனை தரிசிக்க உடல் எடுத்த நாராயணனுடனேயே நீங்கள் வந்து கொண்டிருப்பது உங்களுடைய பூர்வ புண்ணிய கொடுப்பினை!" என்று பாபா சத்தியம் பேசுகிறார்!
பத்ரி செல்கிற வழியில் பாபா ஒரு பாறையில் அமர்கிறார்! அது யாருக்காகவோ காத்திருப்பது போல் தோன்றியது... ஆனால் அவர் குழுவோடு வந்திருந்த அனைத்து பக்தர்களுமே அங்கே தான் இருந்தும் கூட யாருக்காகவோ பாபாவின் அந்தக் காத்திருப்பு! காரணம் புரியவில்லை.. பாபா குழுவினருக்கு பின்னே வந்து கொண்டிருந்த யாத்ரீகர்கள் பாபா யார்? என்றே அறியாமல் கடந்து போய்க் கொண்டிருக்க... அது போலவே ஒரு யாத்ரீகப் பெண்மணி அங்கே வந்து கொண்டிருக்க.. பாபாவை எதேர்ச்சையாக பார்ப்பது போல் பார்க்கிறார்.. அப்போது தான் பாபாவையே முதன் முறையாகப் பார்க்கிறார் அந்தப் பெண்மணி.. இனம் புரியாத ஆன்மீக உணர்வு பாபாவின் மேல் எழ.. கண்கள் தானாகப் பனிக்கிறது! அப்படியே இமை அசையாமல் கண்கொட்ட பாபாவை தரிசிக்கிறார்.. பக்திப்பூர்வமாக பாபாவின் கால்களில் விழுந்து வணங்குகிறார் முன்பின் தெரியாத அந்தப் பெண்மணி!
"நீ இன்று இப்போது பத்ரி நாராயணனை தரிசித்து விட்டாய் அல்லவா! உனக்கு தரிசனம் கொடுப்பதற்காகத் தான் நான் இத்தனை நேரம் காத்திருந்தேன்!" என்கிறார் பாபா! "உங்கள் குழுவோடு நானும் இணைந்து கொள்ளவா?" என்று அந்தப் பெண்மணி கேட்க... "நீ அங்கே வந்து யாரை தரிசிக்கப் போகிறாயோ! அவரை இங்கேயே தரிசித்த பிறகு இதுவே போதுமானது அல்லவா.. எனவே இதோ பிரசாதம் பெற்றுக் கொள்!" என்று சிருஷ்டி விபூதி அளித்து அந்தப் பெண்மணியை அனுப்புகிறார் பாபா!
"யார் என்னோடு பத்ரிக்கு வரவில்லையோ அவர்கள் எல்லோரும் தங்களுக்கு புண்ணியம் இல்லாத காரணத்தினால் கலந்து கொள்ள முடியவில்லை என்று நினைக்க வேண்டாம்! அந்த ஸ்ரீ மன் நாராயணனே உங்கள் அருகில் இருக்கிறேன்! இந்த நொடியில் உங்களோடே வசிக்கிறேன்! ஆகவே பத்ரி வரை சென்று தரிசிக்க முடியாதவர்கள் நிதமும் அங்கே யாரை தரிசிப்பீர்களோ அவரையே இங்கே தரிசிக்கிறீர்களே! நீங்கள் என்னை ஊனக் கண்ணால் பார்க்க முயற்சி செய்யாமல் ஞானக் கண்ணால் தரிசிக்க முயலுங்கள்! நீங்கள் ஆன்மீக ரீதியாக ஆழமாக உற்று நோக்கினால் புட்டபர்த்தியே பத்ரி தான் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்! ஆகவே பக்தியோடும் இதய சுத்தியோடும் இந்த (தன்னை சுட்டிக் காட்டியபடி) நாராயண மூர்த்தியை வழிபடுங்கள்! ஆன்ம சரணாகதி அடைந்து ஆன்ம இலக்கான பேரானந்தத்தை இன்றே அனுபவிக்க முயலுங்கள்! எனது ஆசீர்வாதங்கள்!" என்று பாபா பத்ரி யாத்திரையில் இருந்து பிரசாந்தி நிலையத்திற்கு வந்தபிறகு தன் குழுவோடு பத்ரி யாத்திரை வராதவர்களுக்கும் சேர்த்து என்றும் நிலையான அந்த சத்தியப் பேருண்மையை ஆன்மா வரை பதிப்பிக்கிறார்!
பாபா எதனை நம் இதயத்தில் பதிப்பித்தாலும் அதன் கூடவே இலவச இணைப்பாக தொடர்ந்து வருவது நமக்கான ஆன்ம நலனே!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No : 123 - 125 | Author : Dr J. San Babu )
பத்ரி நாராயணனே பர்த்தி நாராயணன்! அதில் எள்முனை அளவிலும் சந்தேகமே இல்லை! அதற்கும் காரணம் பாபா ஸ்ரீ கிருஷ்ணராக அவதரிக்கையில் கீதையில் தெரிவித்ததே! "சம்பவாமி யுகே யுகே!" என்னும் தனது சத்திய வாக்கை மெய்ப்பிக்கவும் அனைவர் மனதிலும் தர்மம் தோற்றுக் கொண்டிருக்கிறதோ என்கிற மாயையை துடைத்தெறியவும் பாபா யுகந்தோறுமே அவதரித்துக் கொண்டு தான் இருக்கிறார்! ஸ்ரீ சத்ய சாயியின் அடுத்த அவதாரம் ஸ்ரீ பிரேம சாயி கிருஷ்ணர்! கோகுலக் கண்ணனே ஷிர்டியில் வாழ்ந்து சத்தியமாகப் பிறந்து... "பிரேமையே சத்தியம் - சத்தியமே பிரேமை!" என்பதனை அனுபவம் பூர்வமாக இந்த பூமி கிரகத்திற்கு நிரூபிக்கப் போகிறார்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக