தலைப்பு

புதன், 18 அக்டோபர், 2023

அட்சயப் பாத்திரம் அருளிய இரு அருட்பெரும் அவதாரங்கள்!

எவ்வாறு துவாபர மற்றும் கலியுகத்தில் ஆச்சர்யம் மிகுந்த அட்சய பாத்திரம் எத்தகைய மகிமைகளைச் செய்தது... ? அதற்கு இரு அவதாரங்களின் பங்கும் மகிமையும் என்னென்ன? சுவாரஸ்யமாக இதோ...

அது துவாபர யுகம்! பகடைப் பந்தயத்தில் தோற்றுப் போன பாண்டவர்கள் .. குலுக்கிப் போடும் பகடைக் காய்களாய் ராஜ்ஜியத்தை விட்டு சிதறிப் போகிறார்கள்! தின வாழ்வு வன வாழ்வாக மாறிப் போகிறது! அங்கே மகரிஷி தவ்மியர் சூரியனை நோக்கி தவம் செய்யச் சொல்கிறார்! ரிஷி வாக்கை ஏற்று தவம் செய்ததில் அவர்களது பசி வாழ்க்கைக்கு நல்லதொரு ஏற்பாடாகிறது! எப்படி? 


            எதிரே பார்க்காமல் செய் தவத்தில் சூரியன் தோன்றி தவம் செய்த தர்மரிடம் அட்சயப் பாத்திரத்தைப் பரிசாக அளித்து... இதில் துரௌபதி ஏதேனும் இட்டால் பன்மடங்காகப் பெருகும்... எத்தனைப் பேர் வந்தாலும் அத்தனைப் பேருக்கும் உணவு சுரக்கும்... "அனைவரும் பசியாறுங்கள்! ஆனால் தினந்தோறும் அது ஒருமுறை தான் சுரக்கும்!" என்று அட்சயப் பாத்திரத்தின் அருள்மயமான செயல்பாடு பற்றி விவரித்து விட்டு மறைந்து போகிறார்!

அதிலிருந்து பஞ்ச பாண்டவர்கள் பஞ்சமான பாண்டவர்களாக இல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணர் கருணையால் வயிறாற உண்கிறார்கள்! ஆனால் தாங்கள் மட்டும் அல்ல... விருந்தோம்பல் செய்து விட்ட பிறகே உண்கிறார்கள்! ராஜ்ஜியமோ வனமோ எங்கே வாழ்ந்தாலும் விருந்தோம்பலை பாண்டவர்கள் நிறுத்தியதே இல்லை! அந்த வனத்திலும் பிராமணர்களும் ரிஷிகளும் அவர்களைத் தேடி வருவார்கள்! அவர்களுக்கு உணவளித்து விட்டு.. பாண்டவர்கள் உண்ட பிறகே கடைசியாக துரௌபதி உண்பாள்! அதுவே துவாபர யுகத்து பதிவிரதா தர்மம்!


ஒருமுறை பாண்டவர்களை மேலும் இன்னலுக்கு ஆட்படுத்த வேண்டும் என்ற கொடும் வன்மத்தில் தீமையின் விந்தில் பிறந்த துரியோதனன் தன்னிடம் வந்த துர்வாச முனிவரிடம் பாண்டவரின் விருந்தோம்பலைப் பற்றி வஞ்சப் புகழ்ச்சி செய்து அங்கே அனுப்புகிறான்! அவரும் நீண்ட நெடும் பசியோடு வருகிறார்! அவரைக் கண்டு ஆனந்தப்படாமல் பதைபதைக்கிறாள் துரௌபதி.. காரணம் அட்சயப் பாத்திரம் கவிழ்த்தப்பட்டுவிட்டது! "விருந்து இல்லையேல் வருந்து!" என்றபடி துர்வாசர் சபித்து விடுவாரோ என்ற பயம்! கோபத்தை மூக்கின் மேல் எப்போதும் கூடுகட்டிக் கொண்டே நடப்பவர் துர்வாசர்! என்ன செய்வதென்று? கையைப் பிசைகிறாள் துரௌபதி! அதற்குள்ளே ஸ்நானம் (குளியல்) செய்துவிட்டு வாருங்கள் என்று தர்மர் சமாளிக்கிறார்! கொஞ்ச நேரத்து ஆசுவாசம் தான் அதுவும்! அவரும் நதியில் குளிக்கச் செல்கிறார்! ஆனால் அந்த எரிமலை ரிஷி எப்போது வேண்டுமானாலும் கோபத்தை வெடித்துக் கொப்பளிக்கலாம்... ஆகவே ஒரே சகாயம் ஸ்ரீ கிருஷ்ணரே! "கிருஷ்ணா கிருஷ்ணா" என்று துரௌபதி பதட்டத்தோடு அழைக்க... ஆபத் சஹாய ஸ்ரீ கிருஷ்ணர் உடனே அவள் முன் தோன்றி "என்ன தங்கை என்னானது?" என ஒன்றும் தெரியாதது போல் கேட்கிறார்.. நடந்ததை வேர்க்க விறுவிறுக்க விவரிக்கிறாள் அவள்!

மிகவும் கூலான கிருஷ்ணர் "சரி சரி அந்தப் பாத்திரத்தை எடு!" என்று சொல்ல..

"அதில் ஒன்றுமில்லை!" என்று துரௌபதி சோக சுதியில் பேச.. "நீ முதலில் எடு!" என்று ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் தெரிவிக்க.. அட்சயப் பாத்திரம் நிமிர்த்தப்பட... "ஏ.. அங்கே பார்த்தாயா!" என்று ஆச்சர்யம் தரும்படி.. ஒரே ஒரு பருக்கை அனாதையாக பாத்திரத்தில் ஒட்டி இருக்கிறது... அநாத ரட்சகரான ஸ்ரீ கிருஷ்ணர் அதை உடனே எடுத்து தனது வாயில் போட்டுக் கொண்டு உண்கிறார்! இங்கே அவரோ மர்மப் புன்னகையோடு உண்ண... 

"நாராயணா! முழுதாய் சாப்பிட்டது போல் வயிறு வீங்கிவிட்டதே.. இனி பாண்டவர்களின் விருந்தோம்பல் தேவையா?" என்று அங்கே நதிக்கரையில் துர்வாசர் எண்ண... பாண்டவர்களிடம் சொல்லாமலேயே ஏப்பம் விட்டுக் கொண்டே நடையைக் கட்டுகிறார் துர்வாசர்! அது பசி ஏப்பம் அல்ல! ஸ்ரீ கிருஷ்ணர் உண்ட அந்தப் பருக்கையின் ருசி ஏப்பம்!

(ஆதாரம் : ஸ்ரீ மத் பாகவதம் - ஆரண்ய பர்வம்)


இதைப் போலவே கலியுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்து அருள்பாலிப்பதில் அட்சயப் பாத்திரம் தருகிறார்! அவர் தந்த சூழ்நிலையும்... பெறப்பட்ட நபர்களும் சாதாரணமானவர்கள் இல்லை!


 

ஒருமுறை பாபாவே தேர்ந்தெடுக்கிறார்... எதற்காக? சேவை செய்வதற்காக? என்ன சேவை அது? தவம் ! ஆம் தவம் செய்தலும் ஒரு சமூக சேவையே! அச் சேவையை செய்திட அப்பழுக்கற்ற புண்ணியாத்மாக்களை பூர்வ புண்ணிய காரணாதிகளுக்கு ஏற்ப தேர்வு செய்கிறார் பாபா! அவர்கள் மொத்தம் 11 பேர்கள்! அவர்கள் உடன் பாபாவே அறிவுறுத்தி முதிர் சுவாமிஜிகளான விரஜானந்தரும் ... வாமதேவரும் இணைந்து கொள்கிறார்கள்! அந்த 11 புண்ணியாத்மாக்களும் இளைஞர்கள்! உலகக் கல்வி கற்றவர்கள்! எல்லோருமே முதுகலை அறிவியல்! இதில் ஒன்பது நபர்கள் பீஹார் மிதில்யா நகரத்தில் இருந்து வருகிறவர்கள்! அவர்களை பாபா நேர்காணலுக்கு அழைத்து ஆன்மீக ரகசியங்கள் பேசி அவர்களைப் பரவசப்படுத்தி... அவர்கள் செல்லப் போகும் இடங்கள் குறித்து விபரமாக விவரித்த பின்னர்... 

கையை சுழற்றி ஒன்றை சிருஷ்டிக்கிறார்...அது மினுமினுக்கிறது... தெய்வீகமான அழகுக் கலை வேலைப்பாடுகள் அந்தப் பாத்திரத்தில்... மயனே வடிவமைத்தது போல் இருக்கிறது! அதனை பாபா காட்டியபடி... 

"தர்மருக்கு என் சங்கல்பத்தினால் சூரியன் அளித்த அட்சயப் பாத்திரம் பற்றி தெரியுமா? அது ஒரு நாளைக்கு ஒருமுறை உணவு சுரக்கும்... துரௌபதி அதில் தான் அனைவருக்கும் விருந்தோம்பல் இடுவாள்! உணவு வைத்தாலும் அது பெருகும்... ஆனால் இப்போது நான் உங்களுக்குத் தரப் போகும் இந்த அட்சயப் பாத்திரமோ (அதைக் காட்டியபடி) அதை விட அளப்பரிய ஆற்றல் மிகுந்தது! நீங்கள் அதில் எதையும் இடவும் தேவையில்லை... உங்களுக்கு எப்போதெல்லாம் பசி எடுக்கிறதோ அப்போதெல்லாம் அதுவே உங்கள் அனைவருக்கும் வேண்டிய உணவைத் தரும்! ஆகவே நீங்கள் எந்தவித முற்றுக்கட்டையும் இன்றி முடியா தவத்தை முடிக்கலாம்!" என்கிறார்!

அவர்கள் அப்படியே அந்த அட்சயப் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு இமாலய நேபாளில் ஒரு வருடம் தங்கி... பிறகு ஊர்வசி குண்டம் என அங்கே நரநாராயணா குகையை கண்டறிந்து தியானம் இயற்றுகிறார்கள்! *lஅவர்களின் அன்றாடமே தியான மயம் தான்! இருக்கிற சில மணி நேரத்தில் கொஞ்சம் தூக்கம்! கொஞ்சம் சத்சங்கம்! அவர்களுக்குப் பசிக்கிற போதெல்லாம் குறிப்பறிந்து உணவு பரிமாறும் தாயைப் போலவே பாபா சொல்லி அளித்த அட்சயப் பாத்திரம் செயல்படுகிறது! அந்த அட்சயப் பாத்திர உணவு பிரசாதத்தை உண்ண 1000 வருடமாக அங்கே வாழ்ந்து வரும் இமாலய யோகிகளே வந்து போகிறார்கள்!

எப்படி அந்த அட்சயப் பாத்திரத்தின் ஒரு பருக்கையை ஸ்ரீ கிருஷ்ணர் உண்டாரோ... அப்படியே இந்த யுகத்திலும் அந்த குகையில் பாபா தோன்றி அட்சயப் பாத்திரத்தில் ஊறித் ததும்பிய பழச்சாற்றை அவர்களோடு சேர்ந்து அருந்துகிறார்! முதலில் அவர்களுக்கு அந்த பழரசம் கசக்கிறது... சிரித்தபடி பாபா தனது கோப்பையில் உள்ள பழரசத்துளிகளை தனது நுனி விரலால் 11 கோப்பைகளிலும் தெளித்தவுடன் அது திதிக்கிறது! அந்த குகை 18,000 அடி உயரத்தில் இருக்கிறது! எலும்பும் உறைந்து போகும் இமாலய கடுங்குளிரில் சுடச்சுட தியானித்த அந்த 11 யோகிகளுக்கு பாபா அளித்தப் பாத்திரமோ அட்சயப் பாத்திரம் அதுமட்டுமல்ல அவர்களுக்காக பாபா ஏற்ற பாத்திரமோ அன்னை எனும் பாத்திரம்!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No : 109 - 113 | Author : Dr. J. Suman Babu ) 


இது போலவே டாக்டர் காடியா பாபா அளித்த ஒரு குட்டி அட்சயப் பெட்டி வைத்திருந்தார்... அதுவும் அட்சயப் பாத்திரம் போல் தான்.. எப்போதும் விபூதி குறையாமல் சுரந்து கொண்டே இருக்கும்.. இதே போல் வடமாநில தத்தாத்ரேய கோவிலில் ஒருவரை தவம் செய்ய அனுப்பி அவருக்கும் அட்சயப் பாத்திரம் அருளி இருக்கிறார் பாபா! இப்படி ஏராள மகிமைச் சம்பவங்கள் தானே ஸ்ரீ கிருஷ்ணர் என்பதை துல்லியமாக நம் இதயங்களில் பதிவு செய்து கொண்டே நம்மை காத்து வருகிறார் பாபா! 

அட்சயப் பாத்திரமாய் நம் இதயம் பாபா மேலான பக்தியில் சுரந்து கொண்டே இருக்க வேண்டும்! அதுவே பாபா ஸ்ரீ கிருஷ்ணர் என்பதற்கான நம்மாலான செயல்முறை ஆன்மீகம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக