தலைப்பு

செவ்வாய், 10 அக்டோபர், 2023

தற்கொலையின் விளிம்பில் இருந்த இளைஞருக்கு அந்த நொடியில் கேட்ட பாபாவின் குரல்!

எவ்வாறு ஒருவர் தற்கொலை செய்ய இருந்த நிலையில் காப்பாற்றப்படுகிறார்? அவருக்கு என்ன நிகழ்ந்தது? சுவாரஸ்யமாக இதோ...

அவர் ஒரு இளைஞர். பாபா பக்தர் எல்லாம் இல்லை! ஆனால் அவர் தாய் பாபா பக்தை! அந்த இளைஞர் ஒரு தனியார் அலுவலகத்தின் கணக்காளர் (Accountant). ஒருநாள் அவருக்கு வாழ்க்கையில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நேர்கிறது! எதிர்பாராத சம்பவம்! அவரது வாழ்க்கையையே அந்தச் சம்பவம் புரட்டிப் போடப் பார்க்கிறது!


அவர் மேல் ஒரு வீண் பழி அலுவலகத்தில் சுமத்தப்படுகிறது! பழி என்பதே வீணானது தான்! அதனால் தீமையே தவிர நன்மை இல்லை! அலுவலகத்தில் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை கணக்காளரான அந்த இளைஞர் அபகரித்துவிட்டதாக அபாண்டமான ஒரு குற்றச்சாட்டு! அலுவலகமே சந்தேகப்படுகிறது! சந்தேகமோ நிம்மதியை குலைக்கிறது! இதனால் வருத்தம் பெரிதாகி அந்த இளைஞரின் சாயி பக்தையான தாயார் பாபாவின் திருவுருவப் படத்திற்கு முன் வீழ்ந்து வணங்கி, அழுது, தனது துக்கத்தை கொப்பளித்து, சுவாமியிடம் மன்றாடி... "பாபா உங்களிடம் எப்படி இந்தக் கடிதத்தைச் சேர்க்க வேண்டும் என்று தெரியவில்லை!" என்று தனது மனக்குமுறல்களை வார்த்தைக்குள் அடக்கி, கடலை கடுகுக்குள் அடக்குவது போல் கடிதத்திற்குள் கவலைகளை அடக்கி..  அந்த பேரிறைவன் பாபாவின் திருவுருவப் படத்திலேயே கடிதத்தை வைத்து விடுகிறார்! அதே நேரத்தில் வீண் பழியை ஏற்றுக் கொள்ள முடியாமல், இதயம் தாளாமல் அந்த அம்மையாரின் மகன் ஹவ்ரா பாலத்தில் நின்று தற்கொலை செய்ய எத்தனிக்கிறார்! உயிரை விட மானமே முக்கியம் நல்ல மனிதர்களுக்கு, அந்த மானமே சென்ற பிறகு உயிர் எதற்கு? என்று உடலை தண்ணீரில் வீழ்த்த உத்தேசிக்கிறார்! மிகச் சரியாக அவர் விழப் போகிற அதே நொடி... அவரின் காதுகளில் "புட்டபர்த்திக்கு வா! புட்டபர்த்திக்கு வா!" என்ற குரல் கேட்கிறது! சுற்றும் முற்றும் பார்க்கிறார் யாருமே இல்லை! அந்த அழைப்பை ஆச்சர்யத்தோடு ஏற்று, ஹவ்ரா நிலையத்தில் புட்டபர்த்தி செல்வதற்காக, பெங்களூருக்கு டிக்கட் எடுத்து, பிறகு அந்த நிலையத்தில் பெனுகோண்டாவிற்கு டிக்கட் எடுக்கிற போது...!


பெரும்பாலான பயணிகள் பெனுகோண்டாவிற்கு டிக்கட் எடுப்பது புட்டபர்த்திக்கு சென்று பாபாவை தரிசிப்பதற்கே! ஆகவே அந்தப் புரிதலில் பாபா இப்போது இங்கே பெங்களூர் வொயிட் ஃபீல்டில் தான் இருக்கிறார் அன்று அந்த ரயில்வே டிக்கட் கவுன்ட்டர் ஊழியர் சொல்கிற போதும், அந்த இளைஞர் புட்டபர்த்திக்கே செல்ல பெனுகோன்டாவுக்கே டிக்கட் கேட்கிறார்! காரணம் -; அவர் காதுகளில் விழுந்ததனால் , அவருக்கு "புட்டபர்த்தி வா!" என்று மட்டுமே கேட்ட அந்த அசரீரிக் குரலுக்கு மதிப்பளிக்கும் வகையில் புட்டபர்த்திக்கு வந்து சேர்கிறார்! 

அவர் வந்து சேர்ந்த அதே நாள், பாபாவும் அரிசி வாங்க புட்டபர்த்தி வரை வந்ததான தகவல்! அந்த இளைஞர் கல்கத்தாவில் இருந்து வெகுநேரம் பயணித்து மாறி மாறி புட்டபர்த்தி வந்து சேர்கிற போது கடிகாரத்தின் முட்கள் இரவு எட்டு மணியை முட்டிக் கொண்டிருந்தன! 


அடுத்த நாள் காலை தரிசனத்தில், அந்தக் கூட்டத்திலும் பாபா அவரை "ஹே கல்கத்தா..! வந்துட்டியா?" என்று அழைத்து நேர்காணல் அறையில் அவரோடு பேசி.. அவரின் எல்லா பிரச்சனைகளையும் பாபாவே ஒன்று விடாமல் பகிர்ந்து, 9 நாள் வரை புட்டபர்த்தியிலேயே தங்குமாறு அந்த இளைஞரை பயணிக்கிறார்! அந்த இளைஞரும் தினசரி தரிசனம் - பஜனை என்று நாட்கள் அவருக்கு ஆன்மீகமாக நகர்கிறது! பத்தாம் நாள் பாபா அவரை கல்கத்தாவிற்கே திரும்பச் சொல்கிறார்! அங்கே செல்கிற போது எல்லாம் நேராகவும் சீராகவும் மாறி இருக்கிறது! அந்த சந்தேகப் பிரச்சனை, பழி போடும் படலம் யாவும் அலுவலகத்தில் ஒரு கறை இன்றி சுத்தமாகத் துடைத்தெறியப்பட்டிருக்கிறது! பாபாவின் அருட் காவலையும், அவமானத்திலிருந்து மீட்டதை நினைத்தும் அந்த இளைஞரின் உள்ளம் உருகுகிறது!

தேவை அற்ற அவமான எண்ணம் பிறருக்கு ஏற்படும் என்பதால் இந்த தற்கொலை வரை சென்ற அந்த இளைஞரின் பெயர் நூலாசிரியரால் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நம்மால் உணர முடிகிறது! 

(Source : Miracles of Divine love - vol 1 | page : 83 - 84 | compiled by p.gurumoorthy ) 


உயிரை மீட்டெடுப்பதல்ல பல பக்தர்களின் குடும்பத்தை அவமானத்திலிருந்து பேரிறைவன் பாபா மீட்டெடுப்பது என்பதே சாயி பெருங்கருணையாகப் போற்றப்பட வேண்டியது! "மானம் உயிரினும் ஓம்பப்படும்" என்பதே பாரத அறமும்! அறத்தை காப்பதற்கு எனவே எடுக்கப்பட்ட அவதாரங்கள் மூன்று சாயி அவதாரங்கள்! அவமானப்படுவது பக்குவத்தை விளைவித்தாலும் அவமானப்படுத்துவதே பெருங்குற்றம் என்பதை நமக்கு உணர்த்தி ஆன்மீக வாழ்க்கைக்குள் நம்மை ஆற்றுப்படுத்துகிற அவதாரங்களே மூன்று சாயி அவதாரங்களும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக