பார்க்கிற காட்சியில் பதறிப் போன பக்தர்... அந்த சக்கர நாற்காலியில் தான் அமர்ந்து தரிசனம் தந்ததை குறித்து பாபா அவருக்கு அளித்த விளக்கம் சுவாரஸ்யமாக இதோ...
அது 31/05/2003. அதிகாலை பரம பக்தர் ஹரிஹரகிருஷ்ணன் (ஹரி) அவர்களுக்கு ஒரு கனவு தோன்றுகிறது! அந்த கனவு பெங்களூர் வொயிட் ஃபீல்டை காட்டுகிறது! அதில் பாபா சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வருகிறார்... இதில் ஒரு ஆச்சர்ய தகவல் என்னவெனில் அந்த கனவு சமயத்தில் நேரில் ஹரியின் மனைவியும் மகனும் வொயிட் ஃபீல்ட்'டில் பாபா தரிசனத்திற்குத்தான் சென்றிருக்கிறார்கள்! ஹரி மட்டும் வேலை நிமித்தமாக சென்னையிலேயே தங்கிவிடுகிறார்!
அந்தக் கனவில் பாபா பிருந்தாவனத்தில் அமைந்திருக்கும் சரஸ்வதி சிலை அருகே அமர்ந்திருக்கிறார்.. அவர் அருகே ஹரியும் வேறொரு பாபா மாணவரும் நின்றிருக்கிறார்கள்!
பாபா ஹரியை நோக்கி "பிரதான வாசலை நோக்கி சக்கர நாற்காலியை நகர்த்து!" என்கிறார்! அதற்கு ஹரி உடனே "ஹே ராமா! நீங்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்து வருவதைக் காண என்னால் தாங்கவே முடியவில்லை... இது என்ன நாடகம்???" என்று கதறி அழுகிறார்!
அதற்கு பாபா கூலாக
"எனக்கொன்றுமில்லை! உன்னால் சில விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது!" என்று சொன்னபடியே எழுந்து பிரதான வாசல் வரை நடந்து சென்று , மீண்டும் திரும்பி வந்து சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மீண்டும் ஹரியை நகர்த்தச் சொல்கிறார்! மீண்டும் ஹரி அழுகிறார்!
உடனே பாபா தனது கையில் ஒரு கலசத்தை வரவழைத்து அதை வாயைத் திறக்கச் சொல்லியபடி கொஞ்சம் அமிர்தத்தை ஹரிக்கு ஊட்டுகிறார்! தனக்கு இடது புறத்தில் நின்றிருந்த மாணவருக்கும் பாபா தருகிறார்... உடனே ஹரியின் கனவும் கலைந்து விடுகிறது!
அய்யகோ இந்த கனவு நேரில் நிகழவே கூடாது .. பாபா சக்கர நாற்காலியில் நகர்ந்து வரவே கூடாது என்று ஹரி நினைத்தும், பாபாவிடம் வேண்டிக் கொண்டும், அந்தக் கனவை மனைவியிடம் பகிர்ந்து கொண்டு தன் உள்ளடக் கிடங்கை திறந்தபோதும் பலனேதுமில்லை... கனவு தோன்றிய 3 ஆவது நாளே "சுவாமி கீழே விழுந்துவிட்டார்!" என்று ஒரு தகவல் 3/06/2003 அன்று வெளியானது!
ஆக தான் விழுவதற்கு முன்பே அந்தத் தகவலை பாபா கனவு வழி ஹரியின் விழிகளுக்குள் விழ வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
அது 2004. அதே வொயிட் ஃபீல்ட்.. பிருந்தாவன ஆசிரமம்.. ஹரியின் மகன் விஜய் பாபா கல்லூரியில் சேர எம்.பி.ஏக்கு சேர விண்ணப்பித்திருந்தார்!
அந்த சேர்க்கை முடிவுகள் வருவதற்கு முன்பே பாபா விஜயிடம் "எம்.பி.ஏ சேர்க்கை முடிவுகள் வந்துவிட்டதா?" என்று தமிழிலேயே கேட்கிறார்.. ஓரிரு நாட்கள் இருக்கிறது என்று விஜய் சொல்ல வருவதற்குள் "உன் தந்தை மிகுந்த மகிழ்ச்சி அடைவார்!" என்று சேர்க்கை முடிவை மறைமுகமாக சொல்லிவிட்டு நகர்கிறார்!
2/06/2004 என்று "உன் குடும்பத்தை அழைத்து பேச இருக்கிறேன்!" என்று பாபா விஜயிடம் சொல்கிறார்!
பிறகு பாபா ஹரியிடம் "நீ எப்போது ஓய்வு பெற்றாய்?" என்று கேட்கிறார்!
மீண்டும் "எப்போது நீ ஓய்வு பெறப் போகிறாய்?" என்று சற்று மாற்றி கேட்கிறார்! ஹரிக்கு தலைகால் புரியவில்லை!
"எல்லா பணிகளும் இறைவனின் பணிகளே!" என்று பாபா ஹரியிடம் மூன்று முறை சொல்கிறார்!
இது எல்லாம் நேர்காணலில் இல்லை... பாபா தரிசனம் தரும் போதே பேசியது...
பிறகு விஜயிடம் "உன் தந்தைக்கு நிறைய பொறுப்புகள் காத்திருக்கின்றன.. நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்கிறார் பாபா!
தரிசனம் முடித்த பின்பு வெளியே நின்றிருந்த ஹரியின் மனைவி "நேர்காணல் என்னானது?" என்று கேட்ட போதுதான் ஹரிக்கு பாபா நேர்காணல் அளிக்கிறேன் என்று சொன்னதே நினைவுக்கு வருகிறது! பிறகு ஜுன் 5 - 2004 அன்று பாபா ஹரியின் குடும்பத்தினருக்கு பிரத்யேக நேர்காணல் தருகிறார்!
(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 169 - 172 | ஆசிரியர் : எஸ்.ஆர் ஹரிஹர கிருஷ்ணன்)
சக்கர நாற்காலியில் நகர்ந்து தரிசனம் தந்த இறைவன் பாபா உண்மையில் இறைவனா? என்று கேட்பது ஏதோ நியாயமான கேள்வி போல் மனிதனுக்குத் தோன்றுகிறது! தன் குறைகளை ஆராய்ச்சி செய்து திருத்திக் கொள்ள திராணி இல்லாத மனிதன் ஏதும் புரிந்து கொள்ள முடியாத இறைவனின் செய்கையை அலசி ஆராய்ந்து தோற்றுப் போய் இறைவனே இல்லை என்று தனது அவசர புத்தியால் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறான்!
அவதாரமெனில் பிறர் மனைவியை கவர்ந்த வாலியை மறைந்திருந்து தாக்கிய ராமர் ஏன் இராவணனையும் மறைந்திருந்து தாக்கவில்லை?
கம்சனை ஆயுதத்தால் கொன்ற கண்ணன் ஏன் அதைவிட முக்கியமான பாரதப் போரில் ஆயுதமே ஏந்தவில்லை?
பிறருக்கு அருட் பிச்சையிடும் ஷிர்டி பாபா அல்ப உணவுக்காக ஏன் யாசித்தார்?
தண்ணீரை எண்ணெய் ஆக்க தெரிந்தவர்க்கு, மண்ணை உணவாக்க தெரியாதா? பிச்சை ஏந்தி உண்ணும் அளவிற்கு அவரை பசி என்ன செய்துவிடும்?
ஆக! இறைவன் அவதாரமாக இறங்கி வருகையில் அவனுக்கான நிகழ்ச்சி நிரலையும் (Divine Programs) அவனே தயார் செய்து கொள்கிறான்!
இறைவனை இறைவன் என எல்லா மனிதரும் உணர்ந்து விட்டால் பிறகு கலியுகத்திற்கு என்ன வேலை?!
கோலி விளையாடுபவர்கள் யாராவது கைகளில் வைரங்களை வைத்திருப்பார்களா ? வைரங்கள் வைத்திருப்பவர்கள் அதை வைத்து கோலி விளையாடுவார்களா?
அவ்வளவு சீக்கிரம் எல்லாம் இறைவனை இறைவன் என மனிதனால் எப்படி உணர முடியும்? பிறகு கர்மாவிற்கு என்ன வேலை!?
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக