தலைப்பு

வியாழன், 26 அக்டோபர், 2023

ஸ்ரீமத் பகவத் கீதையும் ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திரமும்...!

எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் கீதை மொழியில் பகிர்ந்தது போலவே பேரிறைவன் பாபா தனது அவதாரத்தை பிரவகித்ததன் அருட்சுவடாக திகழும் ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திரத்தில் அது மிகவும் பொருந்திப் போகிறது எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!


ஸ்ரீகிருஷ்ணரை புருஷோத்தமன் என வியந்து கொண்டாடுவது போல் பாபா அஷ்டோத்திரத்தில் "ஓம் ஸ்ரீ சாயி புருஷோத்தமாய நமஹ" "ஓம் ஸ்ரீ சாயி புராண புருஷாய நமஹ" எனும் ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திரத்தில் பொருந்திப் போகிறது! 


"அஜோபி சன்னவ்யாத்மா , பூதானாமேஷ ரூபி சந்

பிரக்ருதம் ஸ்வாமதிஷ்டாய , சம்பவாம்யாத்ம மாயயா" 

(கீதை : 4/6)


அதாவது, நான் பிறவாமையில் இருக்கிறேன், மனித உடலைக் கடந்து நிறைந்திருக்கிறேன்! ஆயினும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நானே இறைவனாக இருக்கிறேன்! நானே என் சுய தோற்றத்தைக் கடந்தும் யுகந்தோறும் பூமியில் தோன்றுகிறேன்! என்கிறார் பரிபூரண பேரவதார ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா!

தான் அனைத்தையும் கடந்திருக்கிறேன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்! ஆகவே தான் அவரை புருஷோத்தமராக வேதம் கொண்டாடுகிறது!


பேரிறைவன் பாபாவுக்கு அனைத்து ஆன்மீக ஸித்தியும் கைவந்த கலையே! காரணம் அந்த ஸித்திகளின் பிறப்பிடமே பாபா தான்!

இந்த கடந்து போதல் எனும் தனது இறை நிலையை 

"ஓம் ஸ்ரீ சாயி அதீதாய நமஹ"

"ஓம் ஸ்ரீ சாயி காலாதீதாய நமஹ" என்கிறது ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்ரம்!

அதீதம் என்றால் கடந்திருத்தல் மற்றும் அளவுக்கு அதிகமாக என்று இரு பொருள்! 

ஆக பேரிறைவன் பாபா காலம் உட்பட அனைத்தையும் கடந்திருக்கிறார்! 

அனைத்தும் அறிந்தவர் - யாவற்றிலும் நிறைந்தவர் பாபா! இதுவே இறை நிலை! அதையே வேதம் உணர்த்துகிறது!

அனைத்தும் அறிந்தவர் என்பதற்குத் தான் 

"ஓம் ஸ்ரீ சாயி சர்வக்ஞாய நமஹ"

அனைத்திலும் நிறைந்திருக்கிறார் என்பதே 

"ஓம் ஸ்ரீ சாயி சர்வ ஹ்ருத் வாசினே நமஹ" எனும் ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திரம்!


வேதாஹம் சமதீதானி வர்த்தமானானி ச்சார்ஜுனா

பவிஷ்யானி ச பூதானி மாம் தீ வேத ந கஷ்சனா 

(கீதை : 7/26)


ஓ அர்ஜுனா, நேற்றோ இன்றோ அல்லது நாளை வரப்போகிற ஜீவன்கள் யாவுமே என்னை அறிந்திருக்கவில்லை, நான் அவற்றுள் தான் கலந்து நிறைந்திருக்கிறேன்! அவைகளின் மகிழ்வில் மகிழ்ந்திருந்திருக்கிறேன்! அவைகளின் செய்கைப் பலனாகவும் இருக்கிறேன் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்!

சுலபத்தில் பாபா மகிழ்பவர் என்பதற்கே "ஓம் ஸ்ரீ சாயி சுலப பிரசன்னாய நமஹ" எனும் அஷ்டோத்திரம் சான்றாகிறது!


(Source : Story and Glory of Sai's Mahasamadhi | introduction | compiled by Suresh G. Bhatnagar) 


கீதை சாரம் மிகுந்தவையே ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திரம் என்பதை ஆதாரப்பூர்வமாக வலியுறுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம்! ஆக நாம் தினசரி உச்சரிக்கும் பாபா அஷ்டோத்திரம் நம்மை புனிதப்படுத்துகிறது! புண்ணியப் படுத்துகிறது! ஆன்மீக சாதனைக்கு அஸ்திவாரமிடுகிறது!


பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக