தலைப்பு

சனி, 7 அக்டோபர், 2023

மதுராவாசியும் புட்டபர்த்திவாசியும் பக்தர்களின் இதயவாசியே!

எவ்வாறு இரு பெரும் பூரண அவதாரங்களும் சதா நமது இதயத்திற்குள்ளேயே வீற்றிருந்து அனைத்தும் அறிந்து நமக்கு உடனுக்குடன் உதவிக்கரம் நீட்டுகிறார்கள் என்பது சான்றாதாரங்களோடு சுவாரஸ்யமாக இதோ...


அது துவாபர யுகம்! அநியாய கௌரவர்கள் வன்ம கொப்பளிப்பில் வக்கிர கொக்கரிப்பில் துரௌபதியை சபையில் வைத்து அவமானப்படுத்துகிறார்கள்! பசுவை சவுக்கால் அடிப்பது போன்றதான மனவலி அது! பகடையில் தோற்றுப் போன பாண்டு புத்திரர்களான பரிதாப புத்திரர்கள் தலை கவிழ்ந்து நாணலாய் வளைந்து போகிறார்கள்! தாயம் ஏற்படுத்திய காயம் அது! ஐவரில் ஒருவர் கூட தடுக்கும் துணிவில் இல்லை... சகதியில் முக்கிய துணியாய் சகுனியின் சதியால் முக்கி எடுக்கப்பட்டு மூலையில் கிடக்கிறார்கள்! 


அந்த அவமானம் வாய் மொழியாக ஆரம்பிக்கிறது... அரண்மனைத் தூண்களில் கூட கௌரவரின் ஏளனச் சிரிப்பு சப்தம் பட்டு பட்டு எதிரொலிக்கிறது! அரூபமாக அனைத்தையும் வேடிக்கைப் பார்க்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! மெல்ல வாய் வழி அவமானம் துரௌபதிக்கு கை வழியாக நிகழத் துவங்குகிறது! துச்சாதனன் அந்த பாவத்தை மூட்டை கட்டிக் கொள்கிறான்! குரங்கின் கையில் பூமாலை போல் துரௌபதியை ஆளாக்க முயற்சிக்கிறது கௌரவ மிருகங்கள்! அக ஒழுக்கம் எனும் கௌரவத்தை இழந்த கௌரவர்கள்! அவர்களை பொறுத்தவரை தற்போது பாண்டவர்கள் நாடிழந்த அடிமைகள்! நாடிழப்பது நாதி இழப்பதற்குச் சமம்! ஆக அடிமைகளின் மனைவி அவள் என்ற இளக்காரத்தில் பலர் கூடி இருக்கும் சபையில் அவள் சேலையை இழுக்கிறது துச்சாதன மிருகம்! பதைபதைத்துப் போகிறாள் திரௌபதி! 


"ஓ கிருஷ்ணா ... மதுரா வாசியே காப்பாற்று!" என்கிறாள் ஸ்ரீ கிருஷ்ணர் வரவில்லை!

"ஓ கோகுல வாசியே.. உன் பக்தை அழைக்கிறேன்! வரமாட்டாயா?" கத்தி கூக்குரல் இடுகிறாள்...கௌரவர்களுக்கு சிரிப்பையே அடக்க முடியவில்லை.. கிருஷ்ணனாவது வருவதாவது! அகந்தை ஆடிக் கொண்டிருக்கிற சபையில் அவை அடக்கமே இல்லை!

இறுதியாக துரௌபதி தனது இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி "ஓ இதய வாசியே என் கிருஷ்ணனே! நீயே எனக்கு ஒரே கதி!" என்று கண்ணீர் வழிய வழிய.. வழியும் கண்ணீர் இமைக் கதவுகளை சாற்ற...தனை மறந்து அழைக்கிறாள்... உடனே  ஸ்ரீ கிருஷ்ணர் பிரசன்னமாகிறார்! (தோன்றுகிறார்)


கடல் அலை போல கொத்துக் கொத்தாக சேலையை அருளச் செய்கிறார்... துச்சாதனன் இழுத்துக் கொண்டே இருக்கிறான்... சேலையோ வளர்ந்து கொண்டே இருக்கிறது... மயக்கம் போட்டு விழ வேண்டிய துரௌபதிக்கு பதிலாக இழுத்த சோர்வில் துச்சாதனனே மயங்கி விழுகிறான்! ஆயினும் கௌரவர்களின் அகந்தை மயக்கமோ இன்னமும் தெளியவில்லை...!

    

சில நாட்கள் கடந்தபிறகு... துரௌபதி ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க நேர்கிறது... அப்போது அவள் மனதில் உறுத்திக் கொண்டிருந்த ஒரு கேள்வி.. அதனை சந்தர்ப்பம் அமைந்ததால் கேட்டுவிடுகிறாள்... "ஏன் கிருஷ்ணா! நான் அழைத்த உடனேயே  நீ ஏன் வந்து என்னை காப்பாற்றவில்லை?" என்பதே அந்தக் கேள்வி! 

அதை அவள் கேட்ட உடனேயே ... "நீ என்னென்ன சொல்லி அழைத்தாய்... நினைவிருக்கிறதா? யோசித்துப் பார்!" என்று கிருஷ்ணர் குறும்போடு கேட்கிறார்! பிறகு அவரே "ஓ மதுரா வாசியே என்கிறாய்! மதுரா எங்கே இருக்கிறது.. நீ அழைத்த இடம் எங்கே இருக்கிறது.. தூரம் இல்லையா? நான் வர நேரம் எடுக்காதா? கோகுலவாசி என்றாயே! அது கூட என்ன அருகிலா இருக்கிறது...? நீ எப்போது இதய வாசி என்றாயோ ... அடுத்த நொடி கூட நான் தாமதிக்கவில்லை தானே! நீயே யோசித்துப் பார்! நான் எங்கே எப்போதும் இருக்கிறேன் என்பது உனக்கே இப்போது தெள்ளத் தெளிவாய் புரிந்திருக்குமே!" என்று ஸ்ரீ கிருஷ்ணர் தனது நிரந்தர இருப்பிடத்தை புரிய வைக்க... பூரிப்போடு உணர்ந்து கொள்கிறாள் துரௌபதி!

மேலும்"நான் அங்கே இங்கே சஞ்சரிப்பது எல்லாம் என் நிரந்தர முகவரி அல்ல .... பக்தர்களின் இதயமே எனது நிரந்தர முகவரி! என் பெயர் சொல்லி அழைத்தால் போதும்! நான் வந்து விடுவேன்!" என்று ஸ்ரீ கிருஷ்ணரே ஆன்மீக உத்தரவாதம் தருகிறார்!


இதைப் போலவே ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் தானே இதய வாசி என்பதனை இன்றளவும் நிரூபித்து வருகிறார்! 

       சத்தியத்தைக் கடைபிடித்து- கடைபிடிக்க வைத்து - போஷித்து (ஊட்டம்) - போதித்து வருவதற்காகவே உலகில் அவதாரம் வருகிறது! 


ஒருமுறை விஞ்ஞானி  டாக்டர் பகவந்தம் வெளி தேசம் செல்கிறார்.. ஒரு மாதம் அவர் ஊரில் இருக்கப் போவதில்லை... ஆகவே பாபா பக்தரான திருமதி பகவந்தம் பாபாவிடம் "சுவாமி! என் கணவர் ஊரில் இல்லை.. வெளி தேசம் செல்கிறார்... நீங்கள் தான் அவரை கவனித்துக் கொள்ள வேண்டும்.. எங்கே அவர் சென்றாலும் கூடவே நீங்கள் சென்று காவலாக பாதுகாக்க வேண்டும்!" என்று வேண்டிக் கொள்கிறார்!

கணவர் இல்லாத நேரத்தில் பாபாவை காலையும் மாலையும் தரிசனம் செய்யலாம் என பிரசாந்தி நிலைய ஆசிரமத்திற்குள் நுழைகிற போது பாபாவால் அவர் தடுக்கப்படுகிறார்... இப்படி ஒருமாத காலம் திருமதி பகவந்தம் அவர்களுக்கு பாபா தரிசனம் தரவே இல்லை... எப்படி துரௌபதி முதல் இரண்டு முறை மதுராவாசி கோகுலவாசி என்று அழைத்த போது வரவில்லையோ அப்படி!

பிறகு பகவந்தம் வந்த பிறகு இருவரும் பாபா தரிசனத்திற்கு வர... திருமதி பகவந்தம் காரணம் கேட்க.. "நீ தானே பகவந்தம் கூடவே போ என்று என்னை வேண்டிக் கொண்டாய்! நான் உன் கணவனுக்கு காவலாக அவனோடு பயணிக்கிற போது... உனக்கு எப்படி தரிசனம் தர முடியும்? நீ பிரார்த்தனை செய்த படியே தான் நடந்து கொண்டேன்!" என்கிறார் பாபா!


"இன்று வரை பக்தர்கள் சிலர் இப்படியே தான் நடந்து கொள்கிறார்கள்! வெவ்வேறு வகையில் என்னிடம் பிரார்த்தனை செய்து கொண்டு தவறான முகவரிக்கு அதனை அனுப்பிவிடுகிறார்கள்! புட்டபர்த்தியில் நான் இருக்கிற போது நீங்கள் வொயிட் ஃபீல்ட் பிருந்தாவனத்திற்கு கடிதம் எழுதினால் என் கையில் வருமா? அது போல் நீங்கள் என்னை இதயவாசியாக உணர்ந்தால் உங்கள் பிரார்த்தனை உடனே எனக்கு வந்து சேர்ந்துவிடும்! இல்லை என்றால் தாமதமாகும்! ஆகவே முறையான படி பிரார்த்தனை செய்து அதை சரியான இடத்தில் சேர்க்க வேண்டும்! அப்போதே உங்களுக்கான எனது  சங்கல்பம் துரிதமாக  நிகழும்!" என்கிறார் பாபா!

    மேலும் "ஒரு அரசனுக்கு முழு தேசமும் உடமையானது! அவனுக்கு உரிமையானது! அதில் அவன் எங்கேயும் தங்கலாம்! அதற்காக அவன் முள்ளும் கல்லும் நிறைந்த இடத்திலா தங்குவான்? இல்லையே! அது போலவே நான் அனைவருக்குள்ளும் நீக்கமற நிறைந்திருந்தாலும் தூய்மையான இதயத்தில் மட்டுமே தேடி வந்து குடி அமர்வேன்!" என்கிற பேருண்மையைப் பகிர்ந்து கொள்கிறார் பாபா!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 106 - 109 | Author : Dr. J  Suman Babu )


பாபாவிடம் நாம் இதயத் தூய்மையையே பிரார்த்தனை செய்து பெறுவோம்! அது ஒன்றே ஆன்மாவை கரை சேர்க்கும்! மற்ற எந்த உலக விஷயத்தை பிரார்த்தனை செய்து நாம் பெற்றாலும் அது பாதி வழியில் நம்மையும் கவிழ்த்தி அதுவும் கவிழ்ந்து விடும் ஓட்டைப் படகு போல்... ஆக காகிதப் படகுகளுக்கு நாம் ஆசைப்படாமல் பாபாவின் பாதம் என்கிற கடவுள் படகில் ஏற தூய இதயத்தை நாம் பெற ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் வரம் அருளட்டும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக