எவ்வாறு இரு யுகத்தின் இரு அவதாரங்களும் ஒரே விதமான சொற்களையே பேசி ஒரே செயல்களையே செய்து வருகிறார்கள் எனும் ஆச்சர்ய வாய்மொழி தெய்வீகத் தாய்மொழியாக இதோ...
"ந மே பார்த்தா அஸ்டி கர்த்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சனா
நநவாப்த மவப்தவ்யம் வர்த்த ஏவ ச கர்மானி:"
- பரிபூர்ண அவதார ஸ்ரீ கிருஷ்ணர் (ஸ்ரீமத் பகவத் கீதா - 3:22)
இதனுடைய தமிழ் ஞான விளக்கமானது:
பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் பார்த்தனை (அர்ஜுனரை) பார்த்து...
"ஓ பார்த்தா! இந்த மூன்று உலகிலும் எனக்கு செய்ய வேண்டிய பணிகள் எதுவும் இல்லை! அதே போல் அடைய வேண்டியது எதுவும் அந்த மூன்று உலகிலும் எனக்கு இல்லை! நான் எந்த கடமைக்குள்ளும் கட்டுப்பட்டவன் அல்லன்! ஆனாலும் என் கடமையை செய்கிறேன்! அப்படி என் கடமையை நானே வகுத்து செயல்படுத்தாவிட்டால் என்னை பின்தொடர்பவர் அதையே உதாரணமாகக் கொண்டு எந்த கடமையும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பர்! பிறகு இந்த உலகம் தீமையின் வழியிலேயே ஒட்டு மொத்தமாக திசைமாறிவிடும்! பிறகு அதற்கு நானே காரணமாக அமைந்துவிடுவேன்! அதற்காகவே நான் பற்றே இன்றி என் கடமையை செய்து வருகிறேன்! நான் எதை எப்படி எவ்வாறு கடமை ஆற்றுகிறேனோ அவ்வாறே அதன்படியே நீங்களும் செயலாற்ற வேண்டும்! நான் உங்களுக்கு எல்லாம் பற்றில்லாமல் கடமை ஆற்றுவதற்கான உதாரணம்!"
என்று விவரித்து அதன் "கர்ம யோக" ஆழத்தை தெளிவுப்படுத்துகிறார்!
அதே போல் கலியுகத்தில் "சம்பவாமி யுகே யுகே" என தான் கீதையில் சொன்னது போலவே ஸ்ரீ சத்ய சாயியாய் அவதரித்து...
"நான் எப்போதுமே ஏதாவது ஒரு சேவையை செய்து கொண்டிருக்கிறேன்! அதற்கு ஒரே காரணம்: உங்களுக்கு அதில் ஏதேனும் ஒரு நன்மை இருக்கும் என்பதனால் மட்டுமே...! அப்படி நான் எந்த சேவையை எடுத்துச் செய்யவில்லை என்றால் யாரும் என்னை ஏன் என்று கேள்விக் கேட்கப் போவதில்லை... நான் சேவை செய்யாததினால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை! ஆனாலும் ஏன் சேவை செய்கிறேன்? நீங்கள் அனைவரும் சேவை செய்வதற்கான உத்வேகமும் பேரார்வமும் பெற வேண்டும்! ஆன்மீக வழியில் நீங்கள் திரும்ப வேண்டும்! அதற்கு நான் ஒரு முதல் உதாரணமாக திகழ்ந்தால் தான் நீங்களும் சுயநலமில்லா சேவையை பின்பற்றுவார்கள்! ஆகவே தொடர்ந்து பல்வேறு விதமான சேவைகளை ஓய்வே இன்றி செய்து வருகிறேன்!
நானே இவ்வாறு சேவை எனும் ஆன்மீக செயல் புரியவில்லை என்றால் பிரபஞ்ச சக்கரம் எவ்வாறு தர்ம வழியில் திரும்பும்! எனக்கு காரியதரிசியோ, தனிப்பட்ட வேலையாட்களோ யாருமில்லை! எத்தனை சிறு வேலை ஆயினும் என் கையாலேயே நானே செய்கிறேன்! அதில் எனக்கு சிரமமே இல்லை! முழுக்க முழுக்க ஆனந்தமாகவே செய்கிறேன்! ஆனந்தமே எனது இயற்கையான சுபாவம்! ஆனந்தமே எனது கையெழுத்து , அந்தப் பேரானந்தம் நானே!" என்கிறார் பேரிறைவன் பாபா...
இருவரும் ஒரே சத்தியத்தை வெவ்வேறு மொழியில் வெவ்வேறு வெளிப்பாட்டில் பேசி இருப்பதில் ஆச்சர்யமில்லை ! காரணம் ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி என்பதனால் இரு அவதாரங்களின் நோக்கமும் ஒன்றே என்பதை நம்மால் தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 113 | Author : Dr. J. Suman Babu )
சேவை என்பது கை கால்களை அசைத்து செய்யும் ஒரு இயந்திர செயல்முறையோ, அர்த்தம் புரியாத சடங்கோ அல்ல! சேவை செய்வதை எல்லாம் புகைப்படம் எடுத்து , அதை பட்டியல் இட்டு கூட்டத்தில் பேசும் அரசியல் அணுகுமுறையோ அல்ல! ஆன்மீக இயக்கம் என்பது ஐ.டி கம்பெனி அல்ல!
அன்பின் செயல்வடிவமே சேவை! செயலற்ற அன்பின் அமர்வே தியான சேவை! சேவை தியானமும் தியான சேவையும் இரண்டு சிறகுகள்! எண்ணிக்கையில் அல்ல சேவை எண்ணத்திலேயே அடங்கி இருக்கிறது! அதற்கு முழுமுதற் கிரியா ஊக்கி இரு அவதாரங்களே! வேறு யாரும் இல்லை! போர்க்களத்தில் போர் புரிவதே தர்மம்! அதையே வலியுறுத்துகிறார் பாபா கீதையில் கிருஷ்ணராக அவதரித்த போது!
எப்படி புத்த பிட்சுகள் துப்பாக்கி எடுப்பது அதர்மமோ அவ்வாறே இராணுவ வீரர்கள் எல்லைப் பணியில் தியானம் செய்வதும் தவறு! அதைப் போலவே ஆன்மீக வாழ்க்கை வாழ்கிறோம் என்று பிறர் முன்னே காட்டிக் கொள்பவர்களுக்கு சேவையும் தியானமும் இரண்டு சிறகுகள்! அதில் ஒன்று இல்லை என்றாலும் அது ஆன்மீக வாழ்க்கையாக பாபா ஏற்றுக் கொள்வதில்லை! காரணம் இரண்டிலும் இழையோடியபடி அதிகரிப்பது சுயநலமற்ற பேரன்பு மட்டுமே! தியானமோ சேவையோ இதில் ஏதேனும் ஒன்று மட்டும் செய்து கொண்டு வந்தால் கர்வம் மட்டுமே அதிகரித்து பாவ கர்மா மட்டுமே சேர்கிறது!
மனப் பக்குவம் எனும் பறவைக்கு தியானம் - சேவை என்பதே இரு சிறகுகள்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக