எவ்வாறு ஒரு ஐரோப்பிய முதியவரின் மாரடைப்பை பேரிறைவன் பாபா காற்றில் தோன்றி குணமாக்கிய அற்புத அனுபவம் மிக சுவாரஸ்யமாக இதோ...!
அவர் ஒரு ஐரோப்பிய முதியவர்! அவர் பெயர் ஹோல்டென்டர் நிக்கோலஸ். அவர் புட்டபர்த்திக்கு ஒருமுறை வருகிறார்! முதன்முதலாக வருகிற போதே அவருக்கு பாபாவை தரிசித்த முதல் நொடியே பக்தியும், பாபாவின் மீது நம்பிக்கையும் வலுப்பெற்று விட்டதாக பதிவு செய்கிறார்! வெளிநாட்டவர்களுக்கு எப்போதும் அப்படி ஒரு ஆச்சர்யமான பக்தி! அவரது தனது ஐரோப்பா வீட்டில் , பாபாவின் புகைப்படத்தை வரைகிறார்! வரைதல் முடிந்த உடன் விரைதல் ஏற்படுகிறது! ஆம் பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதில் கிளம்பி புட்டபர்த்திக்கு விரைந்து வந்து விடுகிறார்! அது தசரா பண்டிகை காலகட்டம்! தசரா ஆரம்பிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே வந்துவிடுகிறார் அவர்! நிரம்ப தரிசன அனுபவம் பெறுகிறார்! வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை என்கிறார் நிக்கோலஸ்!
தசரா பண்டிகையின் போது அவருக்கு ஜுரம் ஏற்படுகிறது! ஜுரமோ ஜுரம் அப்படி ஒரு ஜுரம்! அவரது உடம்போ செங்கல் சூளையைப் போல் கொதிக்கிறது! காய்ச்சல் உடலைக் கவ்விக் கொள்கிறது! சிந்தனை சுருள்கிறது! டாக்டர் அவர் உடலை பரிசோதித்து "சாயிராம்! நீங்கள் தான் இவரை குணப்படுத்த முடியும்!" என்று வேண்டிக் கொள்கிறார்!
டாக்டரே வேண்டுவதைப் பார்த்த நிக்கோலஸ் , தனக்கு வந்திருப்பது ஏதோ சரிசெய்ய முடியாத பிரச்சனை என்கிற புரிதலில் "பாபா என்னை காப்பாற்றுங்கள்! உயிரை இப்போதே விடுவதற்கு எனக்கு உடன்பாடில்லை... இன்னும் எனக்கான பணிகள் சில இருக்கின்றன..." என்று மனதிற்குள் குமுறி வேண்டிக் கொள்கிறார்! அவர் வேண்டுதல் முடிந்த அடுத்த நொடி பாபா டாக்டர் அமர்ந்திருக்கும் அந்தப் பக்கத்தில் காட்சி தருகிறார், பாபாவின் திருக்கேசமும் , கண்களும் தரிசனம் தருகின்றன... தியானத்தில் நிக்கோலஸ் அவர்களுக்கு பாபா காட்சி தருவது போலவே, அவர் நோய்வாய்ப்பட்ட அந்த நொடியும் கண் திறந்த அவரின் இயலாமை தருணத்திலும் அதே போல் பாபா காட்சி தர... அந்த நேரத்தில் ஓம் என்ற பிரணவ மந்திரமும் காற்றெங்கும் எதிரொலிப்பது, அவரது காதுகளில் கேட்கிறது!
அடுத்த நாள் காலை.. உடல் பழைய உஷ்ண நிலையில் இல்லை.. வானிலை மாற்றம் போல் உடல்நிலையும் மாற்றம் அடைகிறது! உடல் கொஞ்சம் தேறுகிறது!
அப்போது முன்பின் தெரியாத ஒரு வெளிநாட்டவர் நிக்கோலஸ் அவர்களை சந்திக்கிறார்! இருவருக்கும் அதற்கு முன் அறிமுகமே இல்லை!
"பாபா உங்களைப் பற்றி என்னிடம் பேசினார், உங்களுக்கு நிக் தெரியுமா ? என்று கேட்டார்! அவரிடம் சொல்லுங்கள் நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு! அவர் கூடவே தான் நேற்று இரவு முழுக்க இருந்தேன்! ஒரு பிரச்சனையும் இல்லை! இப்போது அவருக்கு எல்லாம் சரியாகிவிட்டது!" என்றார்! என்று பாபா தன்னிடம் பகிர்ந்ததை நிக்கோலஸ் அவர்களிடம் அந்த வெளிநாட்டவர் தெரிவிக்கிறார்! அந்த நொடி பரவசத்தின் குன்றில் ஏறி நின்று நன்றி அருவியை கண் வழி பொழிகிறார் நிக்கோலஸ்! தனக்கு *தேவையான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் பாபா தனக்கு உதவி புரிய வருகிறார், இனியும் வருவார்* என்பதை நிக் என்ற நிக்கோலஸ் ஆழமாக உணர்ந்து கொள்கிறார்!
(Source :Miracles of Divine Love - vol 1 | Page no : 69,70 | compiled by P. Gurumoorthy)
பாபாவே எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதால் காற்று புகா இடங்களிலும் கடவுள் பாபா இருக்கிறார்! ஆகவே அவருக்கு எங்கே எது நடந்தாலும் தெரிகிறது! சர்வாந்தர்யாமியும், அந்தர்யாமியும் அவரே! ஆகவே தான் பாபா பேரிறைவன்! உயிர் இருக்கிறது-போகிறது என்பது பெரிய விஷயமே இல்லை! உயிர் உடலை விட்டு ஒருநாள் போக வேண்டிய பொருள் தான்! அதை பாபா காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற அவசியமும் இல்லை! கையில் ஏந்திய தண்ணீர் போல் தான் நமது ஆயுள் காலமே! அது ஒழுகி ஓடுகிற பொருள் தான்! ஆனால் என்றும் மாறாத ஒரே பொருள் ஸ்ரீ சத்ய சாயி பாபா என்கிற பரம்பொருளே! அதுவே நமக்கு ஒரே நிரந்தரம்! நம்மை விட்டு நீங்கக் கூடாத ஒரே ஒரு பொருள் உயிர் அல்ல உயரிய பக்தியே! அதுவே ஜென்ம ஜென்மமாக தொடர்கிறது! பக்தியே ஜென்ம ஜென்மமாக ஆன்மாவை காப்பாற்றுகிறது; குடும்பமோ, உறவோ, நட்போ, பணமோ அல்ல...!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக