எவ்வாறு இரு அவதாரங்களும் தனது பக்தர்களின் அகமும் புறமும் வளம் சேர்த்தன எனும் ஆச்சர்யப் பொருத்த திருச்சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...
அது துவாபர யுகம்! அந்தணர் ஒருவர் நற்பண்புகளோடும் வழுவாத பிராமணீய ஒழுக்கத்தோடும் வாழ்ந்து வருகிறார்! அவர் பெயர் சுதாமா! தர்ம மகிமையை அவர் எந்த நிலையிலும் கைவிடவில்லை... அதே போல கர்ம வறுமையும் அவரை கைவிடவில்லை...! சுத்தமான இதயம் இருந்தும் கிழிசல்களை உடுத்திக் கொள்கிறார்! கிளிஞ்சல்களை அணியும் கடல் போல் வறுமையால் அவரது வாழ்க்கை தள்ளாட்டம் காண்கிறது! மணிமணியாகக் குழந்தைகள் ஆனாலும் ஒலி இழந்த மணிகளாய் பொலிவிழந்த குழந்தைகள்! இதனால் குசேலரின் மனைவி துவண்டு போகிறாள்! ஆனாலும் யாரிடமும் உதவி கேளாதவர் சுதாமா! இருப்பதை வைத்து வாழும், யாருக்குமே கிட்டாத திருப்தி எனும் அகச் செல்வத்தை வைத்திருக்கும் பண்பாளர் அவர்!
ஒரு காலத்தில் சாந்தீப மகரிஷி ஆசிரமத்தில் அவரும் ஒரு குருகுலவாசி! ஆம் பேரவதார ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய நண்பர்! அதை நினைத்து நினைத்து எப்போதும் ஆனந்தப்படுபவர் சுதாமா! தங்களது வறிய நிலையை ஸ்ரீ கிருஷ்ணரிடம் தெரியப்படுத்தலாம் என்று ஆலோசனை சொல்லியும் அதை மறுக்கிறது சுதாமா இதயம்... ஆயினும் மனைவி சொல்லுக்கு மதிப்பளித்து விடை பெறுகிறார்! ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை மனதிலும் அவலை கையிலும் முடிந்து எடுத்துக் கொண்டு செல்கிறார்!
அரண்மனைக் காவலாளியிடம் விளக்கிக் கொண்டிருந்த சுதாமாவை கவனித்துவிட்டு ஓடோடிப் போகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்... தான் பெரிய மகாராஜா என்றோ அவதாரம் என்றோ அவர் காட்டிக் கொள்ளவே இல்லை.. அவரது பால்ய நண்பரை பார்த்த மாத்திரத்தில் பரவசம் மிக கட்டிப்பிடிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்... தோளோடு தோளாக அணைத்து அவரை வரவேற்று கடந்த கால நினைவுகளை வேடிக்கையாகவும் ஸ்ரீ கிருஷ்ணர் பேச... சுதாமாவோ ஆச்சர்யப்படுகிறார்! தன் நண்பன் கிருஷ்ணன் எப்போதும் நண்பன் கிருஷ்ணனாகவே இருப்பதை அறிந்து ஆனந்தப்படுகிறார்!
பொருளாதார பேதமே தங்கள் இருவருக்கும் இடையே பார்க்கவே இல்லை ஸ்ரீ கிருஷ்ணர்! "அடியேன் எத்தனை கொடுத்து வைத்திருக்கிறேன் பரப்பிரம்மமே நண்பராக கிடைக்க!" என சுதாமா குதூகலப்பட... அந்தண சுதாமாவுக்கு ஸ்ரீ கிருஷ்ணரே பாதபூஜை புரிய... கையில் முடிந்து வைத்திருந்த அவலை அந்த பக்தி ஆவலை தானே கேட்டு ஸ்ரீ கிருஷ்ணர் உண்ண... இறுதி வரை எதற்காக வந்தோம் என்று கடைசி வரை அறிவிக்காத சுதாமா "ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்தும் அறிவார்! என்னிடம் குடும்ப விஷயம் எதுவுமே அவர் பேசாத போது நாம் ஏன் அன்போடு நடத்தும் அவரிடம் லௌகீக வறுமையைச் சொல்லி அவரை தர்ம சங்கடப் படுத்த வேண்டும்?" என்று மன்கி பாத் எனும் அவரது "மனதின் குரல்" சுதாமாவிடம் நியாயம் பேச... நியாய தர்மத்தை வாழ்வில் நூல் அளவிலும் பிறழாத சுதாமா கேள்விக் குறியாக அரண்மனைக்குள் வந்தவர் ஆச்சர்யக் குறியாக வெளியே திரும்புகிறார்...! தனது கிராமத்திற்கு வந்து பார்க்க அது தலை கீழாக மாறி இருக்கிறது.. அவர் குடிசை வீடு அரண்மனையாகக் காட்சி அளிக்கிறது... சுதாமா மனைவியோ கிரக லட்சுமி போல் வீற்றிருக்கிறாள்! கனவா? என்று கண்களைக் கசக்கிப் பார்க்கிறார்... சுதாமாவால் அதனை நம்பவே முடியவில்லை.. அவர் அதனை எதிரே பார்க்கவில்லை... ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமையை அறிந்து லௌகீக செல்வங்கள் நிரந்தரமல்ல என்ற உண்மை உணர்ந்து ஆன்மீக செல்வங்களை மட்டுமே அடையும் நோக்கில் ஸ்ரீ கிருஷ்ணரை மேலும் தீவிரமாக பக்தி செலுத்த ஆரம்பிக்கிறார்! அந்த சுதாமாவை இன்றளவும் உலகம் குசேலர் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது!
(ஆதாரம் : ஸ்ரீமத் பாகவதம் - 10.971)
இதே ஸ்ரீகிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில்...
ஒரு பண்டிதர் ஒருவர் பாபாவை தரிசிக்க வருகிறார்! "தங்களுக்கு என்ன வேண்டும்?" என்று பாபா கேட்க... "எனக்கு எதுவும் வேண்டாம் சுவாமி! உங்களை நேருக்கு நேர் தரிசித்து உங்களோடு பேசுவதே அடியேனுக்கு 10,000 ரூபாய் மதிப்பை விட அதிகமானது!" என்று ஆனந்தப்படுகிறார்! இது நடந்தது ஆரம்ப காலத்தில்.. பண்டிதர் சொல்கிற 10,000 ரூபாய் அந்த காலத்தில் பல லட்சத்திற்கு சமானம்!
பிறகு தனது கிராமம் வந்து பாபாவின் மகிமையை அநேகரோடு பகிர்ந்து கொள்கிறார் பண்டிதர்! புட்டபர்த்தியே வைகுண்டம் என்கிறார்! பாபாவே பெருமாள் எனும் பேருண்மையை அனைவருக்கும் பறைசாற்றுகிறார்! பண்டிதரின் வாரிசு தனக்கு அங்கிருந்து என்ன வாங்கிக் கொண்டு வந்தீர்கள்? என்று கேட்க... என்ன பதில் சொல்ல முடியும் அவரால்? காலி பாக்கெட் சட்டை கோட் ஸ்டான்ட்டில் ஆடிக் கொண்டிருக்கிறது! மகனோ ஒரு ஆர்வத்தில் அதை கைவிட்டுப் பார்க்கிறான் ... உள்ளே பணக்கட்டு ... ஆச்சர்யப்படுகிறான்.... "இந்த பணம் எங்கிருந்து கிடைத்தது?" என்று தந்தையிடம் சந்தோஷமாகக் கேட்கிறான்... பணமா? வெற்றுச் சட்டையிலா? பண்டிதரால் அதனை நம்பவே முடியவில்லை... எண்ணிப் பார்க்கிறார்.. எண்ணியும் பார்க்கிறார்... 10,000 ரூபாய்! அப்போது தான் அவர் பாபாவிடம் சொன்னது நினைவுக்கு வர.. இது முழுக்க முழுக்க பாபாவின் அருள் லீலை என்று பேராச்சர்யப்பட்டு... எதையுமே எதிர்பாராமல் பக்தி செலுத்திய பண்டிதருக்கு பாபா கொடுத்த பரிசை அந்த எளிய குடும்பமே கைகூப்பி பாபாவுக்கு கண்ணீரால் நன்றி கூறுகிறது!
இது போல் ஒரு முறை நாதல்லா தீக்ஷிதலு என்கிற ஒரு நபர் நல்ல வாழ்வை நடத்தி வருகிறார்! அவரது 75 ஆவது வயதில் அவரது பொருளாதாரம் சரிந்து வறுமை அவரை பீடிக்கிறது! சோறு கிடைக்கும் போது பறந்து வரும் காக்காய் கூட்டங்களான அல்ப உறவு ஜந்துக்கள் அவரது வறுமை கண்டு அப்படியே நிர்கதியாக விட்டுச் செல்கின்றனர்...!
கண்களைக் கொத்தும் பாம்புகளுக்குப் பால் ஊட்டி வளர்த்த கதை ஆகிவிட்டது அவரது பரிதாப நிலை! நான்கு நாள் கொலைப் பட்டினி! கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முடிவு செய்கிறார் மனைவியோடு சேர்ந்து! வேறு வழியில்லாத முடிவு அது! இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர் நிலையை அறிந்து பாபா சமிதி கிருஷ்ண மூர்த்தி அவருக்கு வேண்டிய உதவிகள் சேவையாகச் செய்கிறார்! அவரை தானே புட்டபர்த்திக்கு அழைத்துச் செல்கிறார்! கிட்டத்தட்ட குசேலர் போல் அந்த பிரசாந்தி நிலைய அரண்மனைக்குள் நுழைகிறார் அந்த வறுமைப் பெரியவர்! அப்போது அங்கே தசரா விழா! பாபா அப்படியே தரிசன நேரத்தில் நடந்தே நேராக வறுமைப் பெரியவரான தீக்ஷிதலு தலையில் கைகளை வைத்து "எப்படி இப்படி ஒரு முடிவை நீ எடுக்க யோசிக்கலாம்? வாழ்க்கையின் மீது உனக்கு பிடிமானம் இல்லையா? உன் சக்தியால் உனது வாழ்க்கையை நீ நடத்த முடியவில்லை என்றால் என்னுடைய சக்தியை தருகிறேன்!" என்று உறுதி அளித்து.. நாளை நேர்காணல் தருகிறேன் என்றும் பாபா சொல்லிவிட்டு நகர்கிறார்!
சொல்லியபடியே பாபா நேர்காணல் தருகிறார்!
"நீங்கள் கடவுளுக்கு பழம், பூ இவை எல்லாம் தருவீர்கள்.. ஆனால் பூ வாடிவிடும்... பழம் அழுகிவிடும் அல்லவா? அவை நிரந்தரமா? இல்லையே! அதற்குப் பதிலாக என்னிடம் மலர் போன்ற பக்தியையும் பழம் போன்ற தூய இதயத்தையையும் தரக் கூடாதா?" என்று கேட்கிறார்! அந்தப் பெரியவருக்கு பாபா ஊக்கம் தருகிறார்... பாபாவின் வார்த்தை பெரிதாக தாக்கம் ஏற்படுத்துகிறது!
பிறகு பாபாவின் மகிமையால் அவர் பிள்ளைகளில் ஒருவன் மனம் திருந்தி அந்தப் பெரியவரிடமே சரண் அடைய... அந்தக் காகம் குயிலாக மாறியதில் .. வறுமை வானம் வசந்த வானமாய் மாறுகிறது!
பாபாவின் 1008 நாமாவளியிலேயே
"ஓம் ஸ்ரீ சாயி ஐஸ்வர்யப் பிரதாயகாய நமஹ"
"ஓம் ஸ்ரீ சாயி தான சீலாய நமஹ"
"ஓம் ஸ்ரீ சாயி தான சூராய நமஹ" என்பவை அவதார செல்வமே பாபா என்பதை சுட்டிக்காட்டுகிறது!
"பக்தியோடு இங்கே வாருங்கள்! சக்தியை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்! உங்களுடைய எல்லா ஆதங்கம், கவலை, ஏக்கம் , பிரச்சனைகள் யாவையும் என்னிடமே விட்டுவிட்டு .. அதற்குப் பதிலாக நம்பிக்கை, தைரியம் , ஆனந்தம் ஆகியவற்றை பண்டமாற்று முறையாக எடுத்துச் செல்லுங்கள்! இந்த அவதாரம் தியானம் , ஜபம் , யோகம் , சடங்கு , பிரார்த்தனை என எதையும் புரிந்ததும் இல்லை கற்றுத் தருவதும் இல்லை.. காரணம் இந்த சத்ய சாயி அவதாரமே கடவுள் தான்!" என்கிறார் பாபா!
கடவுளை அடைவதற்காகவே பாபா மேற்சொன்ன அத்தனை ஆன்மீக வழிகளும்... ஆனால் கடவுளே வந்துவிட்ட பின் எதற்காக இவை எல்லாம் என்ற உள்ளர்த்தத்தில் பாபா பொருள் பொதிந்து பேசுகிறார்! அதில் ஆயிரம் அர்த்தம் ரீங்கரிக்கிறது!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page no: 98 - 102 | Author : Dr. J. Suman Babu )
*கடவுள் ஸ்ரீ சத்ய சாயியாக பொது தரிசனம் தந்தவரை தந்த அவரை நாம் தரிசிக்கும் போதெல்லாம் கண் திறந்து தியானமே செய்தோம்!* நாம் அதனை அறிந்தாலும் அறியாவிட்டாலும் அதுவே சத்தியம்! அதுவரை நாம் முறையான தியானம் செய்யாத காரணத்தினால் அது தான் தியானம்... அவர் வெளிப்படுத்தியது தான் தியான சக்தி என்பதை நாம் அறியாமல் இருந்திருக்கிறோம்.. அவ்வளவே! இப்போது அந்த பொது தரிசனத்தை பாபாவே நிறுத்திக் கொண்டார்... அதனால் எந்த குறையும் இல்லை... *அந்த தியான சக்தி அப்படியே* *உலகம்தோறும் உலா வருகிறது!* *அதனை அப்படியே நாம் கண் மூடி உள்வாங்குவோம்! மனதை கண்மூடி கவனிப்போம்! அப்போதே ஆன்மா என்கிற நாம் திறந்து கொள்வோம்!* பாபா தியானம் செய்தாரா? பிறகு எப்படி அவரிடம் இருந்து தியான சக்தி வெளிப்பட்டது? என்கிற கேள்விக்கு... *பாபாவே சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணர்... ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரை நாம் தியானம் செய்ய வேண்டும்! அப்போதே நமக்கு ஆன்ம விழிப்பு ஏற்படும்!* பாபாவே அந்த தியானம்! தியானமே ஏன் தியானம் செய்ய வேண்டும்? கங்கையில் நாம் குளிக்க வேண்டும்! கங்கையே ஏன் குளிக்க வேண்டும்?
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக