தலைப்பு

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

கருத்தரிக்கக் கூடாத பெண்மணிக்கு சாயி கீர்த்தியை அருளிய சாயி கீர்த்தி!

கர்ப்பம் தரிக்கவே இயலாத உடல் கேட்டில் இருந்த பெண்மணிக்கு பேரிறைவன் பாபா நிகழ்த்திய மகிமை என்ன? சுவாரஸ்யமாக இதோ..!


அவள் பெயர் கௌசல்யா ராணி.. கணவர் ராகவன்! சாயி பக்தை அவள்! ஒரு சமயம் ரத்தப் போக்கு விடாமல் நிகழ்ந்தபடி அவள் உயிரை வாட்டி வதைக்கிறது! மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில் ரத்தத்தை உறைய வைக்கும் பிளேட்லெட் எனும் அணுக்கள் இருக்க வேண்டிய அளவை விட மிகக் குறைவாக இருக்கிறது என்கிறார்! 

"உடனே அட்மிட் செய்ய வேண்டும்! ஸ்ப்ளீன் எடுத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும்! ஒன்றில் மட்டும் கவனமாக இருங்கள்! இனி நீங்கள் கருத்தரிக்கவே கூடாது!" என்று தலையில் கடப்பாறைச் சொற்களை இறக்குகிறார் மருத்துவர்! 

ஒரே அதிர்ச்சி கௌசல்யாவுக்கு! அந்த கௌசல்யாவுக்கு ஸ்ரீ ராமர் பிறந்தார்! ஆனால் இந்த கௌசல்யாவுக்கு புத்திர பாக்கியமே இல்லை என்ற தகவலில் இதயமே நொறுங்குகிறது! நேராக ஸ்ரீ ராமரையே தரிசிக்க கௌசல்யா புட்டபர்த்தி விரைகிறார்! 


ஆனால் ஸ்ரீ சத்ய சாயி ராமரோ மருத்துவ வாக்கிற்கு முற்றிலும் வேறு விதமாக பதில் அளிக்கிறார்! "மருத்துவர்கள் அப்படித் தான் சொல்வார்கள்! சுவாமி நான் இருக்கிறேன்! கவலைப்படாதே! எனது அனுகிரகம் உனக்கு நிறைய இருக்கிறது! உனக்கு குழந்தை பிறக்கும்! அந்தக் குழந்தைக்கு சுவாமியே பெயர் சூட்டுகிறேன்!" என்கிறார்! ஒரே வியப்பு! பாபா விட்ட வழி என்று தனது ஊருக்கே திரும்புகிறார்! சாயி வாக்கு சத்ய வாக்கு! என்பதற்கு இணங்க கௌசல்யா கருவுறுகிறாள்! அட்மிட் ஆக வேண்டும்! கருவுறவே கூடாது என்று சொன்ன டாக்டரிடம் காட்டவே பயம்! ஆகவே கம் என்று இருக்கிறாள்! குழந்தையும் வயிற்றில் ஜம் என்று வளர்கிறது! 

அந்தக் கருவை வயிற்றில் சுமந்தபடியே பாலவிகாஸ் குழந்தைகளுடைய ராஜ மகேந்திர புர சாயி மாநாட்டுக்குச் செல்கிறாள்! 

ஆஸ்துமா வேறு அவளை வாட்டி வதைக்க... அதிலிருந்தும் பாபாவின் அருளினால் குணம் பெறுகிறார்! பிறகு 8 மாத கர்ப்பிணியாக 1974 ஆம் ஆண்டு பாபா நிகழ்த்தும் சம்மர் கோர்ஸ் அதற்கும் சென்று 1 மாத காலம் பரவச சாயி தரிசனமும் பெற்று திரும்புகிறார்! ஹெமடாலஜிஸ்ட்'டிடம் மாதம் இருமுறை பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்! அதையும் அவள் செய்யவே இல்லை! எந்த மருத்துவமனை கதவையும் அவள் தட்டவே இல்லை! புட்டபர்த்தியின் பாபா கட்டிய மருத்துவமனையிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறாள்! ஆனால் பாபாவோ அங்கே பிரசவம் பார்க்க அவளை அனுமதிக்கவில்லை.. "மெட்ராஸ் (சென்னை) போ!" என்று சொல்லி விட்டு நகர்கிறார்!


அது சென்னை! இத்தனை மாதங்கள் மருத்துவமனைக்கே செல்லாதது குறித்து டாக்டர் மிகவும் கோபப்படுகிறார்! இப்படி பிரசவத்தின் கடைசி சமயத்தில் வந்திருப்பதைக் குறித்து டாக்டர் அதிருப்தி அடைகிறார்! பரிசோதனை செய்து, ஒரு தேதி குறிக்கிறார்! இந்த தேதிக்குள் குழந்தை பிறக்க வேண்டும் என்கிறார்! ஆனால் குழந்தையோ மருத்துவர் குறித்த தேதியில் வயிற்றில் கல்லாக அமர்ந்திருக்கிறது... ஒரு பொட்டு அசைவும் இல்லை! இனி வளரவிட்டால் ஆபத்து என்கிறார் மருத்துவர்! மறுநாள் பாபாவின் சென்னை விஜயம் என்று கேள்விப்பட்டு , தரிசனம் செய்துவிட்டு சிசேரியனுக்கு உடன்படுவதாக மருத்துவரிடம் கோரிக்கை விடுக்கிறார்! மருத்துவரும் சரி என்று ஒப்புக் கொள்கிறார்! ஆனால் பாபா அந்த சமயம் சென்னைக்கு விஜயம் புரியவே இல்லை! 

குழந்தையோ அசையவில்லை 

பாபாவோ இசையவில்லை.. 

ஒன்றுமே புரியவில்லை கௌசல்யா ராணிக்கு...


உடனே பாபாவின் தெய்வீகத் திருப்படத்தின் முன் தீவிரமாகப் பிரார்த்தனை செய்கிறார்! தவிப்பை அவர் திருவடிகளில் இறக்கி வைக்கிறார்! தசராவின் போது ஷிர்டி பாபாவுக்கு ஸ்ரீ சத்ய சாயி பாபா புரிந்த அபிஷேக விபூதி அவளிடம் இருக்கிறது! திடீரென அது நினைவுக்கு வர.. அதை எடுத்து ஒரு டம்ப்ளரில் தண்ணீர் கலந்து அப்படியே குடித்துவிடுகிறார்! தண்ணீரில் விபூதி கலந்த அந்த வெள்ளை திரவம்... கருவறை எனும் இருட்டறைக்கு விடியல் தருகிறது! ஆம் விபூதி கலந்த தண்ணீரை பருகிய உடன் அந்தக் குழந்தை வயிற்றில் அசைகிறது.. மருத்துவமனை விரைகிறார்.. அன்றே சுகப்பிரசவம் ஆகிறது! மருத்துவரே ஆச்சர்யப்படுகிறார்! பிறகு புட்டபர்த்திக்கு பிறந்த குழந்தையை எடுத்துச் செல்கிற போது பாபா அந்தக் குழந்தையை தன் மடியில் வாங்கி சிருஷ்டி டாலர் தந்து, சாயி கீர்த்தி என்ற பெயரையும் சூட்டுகிறார்! பரம பாக்கியமான அந்த நாள் 26 /1 / 1975. 

(ஆதாரம் : அற்புதம் அறுபது | பக்கம் :42 - 45 | ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


சாயி வாக்கு சத்ய வாக்கு என்பதற்கான பதிவு இது! பேரிறைவன் பாபா அறிவித்தது நிகழும்! அதில் எந்தவிதமான சந்தேகமும் நமக்கு தேவையே இல்லை! எந்த தருணம் மிகச் சரியானதோ அந்தத் தருணம் அது நிகழும்! அதில் மாற்றமே இல்லை! வெறும் ஊண் உடம்பு பிரசவம் மட்டுமல்ல நமக்கான ஞான பிரசவத்தையே புரிய இருக்கிறார், தனது பிரேம சாயி பேரவதாரத்தின் வாயிலாக... ஆகையால் பாபாவின் வாக்கு ஒருபோதும் பொய்த்ததே இல்லை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக