தலைப்பு

வியாழன், 14 செப்டம்பர், 2023

தற்கொலை புரிய இருந்தவரை சிறையில் அடைத்து சிறைச்சாலையில் காட்சி கொடுத்த பாபா!

தற்கொலை செய்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக இருந்த ஒருவரை பாபா எவ்வாறு இருமுறை தடுத்தாட் கொள்கிறார் எனும் பரவச அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

அவர் பெயர் விராஜிலால் வி. பரேக்! பெங்களூரில் ஒரு கடை நடத்தி வருகிறார்! 1996 ஆம் ஆண்டு பேரிறைவன் பாபாவை தரிசிக்கிறார்! அப்போது "தைரியமாக இரு! நம்பிக்கையோடு இரு! சுவாமியின் ஆசீர்வாதம் உன்னுடன் எப்போதுமே இருக்கிறது!" என்று அருள் மொழியும் வழங்கி இருக்கிறார்! 

ஆனால் பரேக்கின் வாழ்க்கை பிரேக் மக்கர் செய்கிறது! தொழில் நலிந்து கொண்டே போக அவருக்கு பாபாவின் மேல் இருக்கும் நம்பிக்கையும் நலிந்து கொண்டே போகிறது! வியாபார நஷ்டத்தை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது! சரி, தற்கொலையே மிகச் சரியான முடிவு என்று எதிர்மறையாகக் கற்பனை செய்து கொள்கிறார்! பி.காம் பிடித்திருந்தும் அவர் மனசு Calm'மாக இல்லை! ஒரே வருத்தம் ! ஏக்கம் ! எதிர்பார்ப்பு! தற்கொலைக்கான தேதியும் தானே குறிக்கிறார்! அது ஒரு விநாயகச் சதுர்த்தி தினம்! "போயும் போயும் உனக்கு என் பிறந்த நாளா தற்கொலை செய்து கொள்ள கிடைத்தது!" என்று விநாயகப் பெருமானே நினைக்கிற அளவுக்கு அந்த தற்கொலைத் திட்டம் சூடுபிடித்தது! விஷத்தையும் மறக்காமல் வாங்கி வைத்துக் கொள்கிறார்! 


ஆனால் அதே விநாயக சதுர்த்தி அன்று ஏற்கனவே நோய் வாய்ப்பட்டிருந்த அவரது சகோதரி இறந்து போகிறார்! ஆகவே தற்கொலை தள்ளிப் போகிறது... தற்கொலை செய்ய வேண்டும் என்ற வீர்யம் சற்று குறைகிறது... ஆயினும் வேறொரு நாளை தேர்ந்தெடுத்து தனது கடையில் அமர்ந்திருக்கிறார்! சனாதன சாரதியை வாசிக்கிறார்! இந்தக் கேடு கெட்ட உலகத்திலிருந்து விடுதலை அடையப் போவதை நினைத்து ஒரு நொடி மகிழ்கிறார்! அடுத்த நொடியே அந்த நொடியை சம்மட்டியால் அடிப்பதைப் போல், போலீஸ் அவர் கடை தேடி வந்து கைது செய்கிறது, தற்கொலை புரிய இருந்த தன்னை கைது செய்வதில் அதிர்ச்சி அடைகிறார்! பரேக் ஒருவருக்கு தர வேண்டிய பணத்துக்கு காலக் கெடு கேட்டும்... கெடு கெடுவாக இன்றி கேடாக முடிவது போல் , காவல்துறையில் அந்த நபர் புகார் தர, அந்த பூம்புகார் கோவலன் போல் காலர்களோடு செல்கிறார் பரேக்!


 உயர் காவல் துறை அதிகாரி வந்தும் அதையே சொல்கிறார்! வேறு வழியே இல்லை- சிறைக்குள் செல்கிறார்! பரேக் அந்த சிறைக் கம்பிகளைத் தாண்டி வலது காலை வைக்கிற போது, பாபா அவரிடம் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வர "என் ஆசீர்வாதம் உனக்கு என்றுமே இருக்கிறது!" என்ற ஒலி சிறைச் சுவர் எங்கும் அவருக்கு மட்டும் கேட்பதாய் ஒலிக்கிறது! கைது செய்ய வேண்டாம் , பணத்தை திருப்பித் தந்து விடுவேன் என்று பரேக் கெஞ்சிக் கேட்டபிறகும் காவலர்கள் ஏற்கவில்லை! மனம் உடைகிறது... பாபாவின் குரலும் மனதில் எதிரொலிக்கிறது! ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் , பாபா அந்தச் சிறை அறையில் தோன்றி அவருக்கு காட்சி அளிக்கிறார்! அவரை நோக்கி சிரிக்கிறார்! வைத்த கண் வாங்காமல் பார்க்கும் பரேக்'கிற்கு ஒன்றும் விளங்கவில்லை, சில நேரத்திற்கு உள்ளாக பரேக்கின் சகோதரர் வக்கீலோடு வந்து ஜாமீன் எடுக்க... தற்கொலை செய்ய வேண்டும் என்ற அந்த எண்ண மீன் ஜாமீனால் அப்படியே செத்துப் போகிறது! அதுவரை அந்தத் தற்கொலை எனும் தேவதைக்கு செய்யப்பட வேண்டிய அபிஷேகமாகிய விஷமும் அந்தச் சட்டைப் பாக்கெட்டை விட்டு அகலவே இல்லை! அப்போது தான் பாபா தன் தற்கொலையை சகோதரி மரணம் மற்றும் சிறை அடைப்பு என்கிற இரண்டு திடுக்கிடும் சந்தர்ப்ப சம்பவம் அமைத்து தடுத்தாட் கொண்டிருக்கிறார் என்பதை உணர்கிறார் பரேக்!

"இனி நான் சாகப்போவதில்லை! என் உயிரைக் காப்பாற்றிய பாபாவின் மகிமையை நாலா பக்கமும் பாடப் போகிறேன்!" என்பதே பரேக்கிடம் இருந்து வந்த மனசாட்சி எனும் நீதிமன்றத்தின் வாக்குமூலம்!

(Source : Miracles of Divine love - vol 1 | Page no : 88 - 90 | Compiled by P.Guru moorthy) 


தற்கொலை செய்வதற்கான தைரியத்தை மனிதன் வாழ்வதில் மேற்கொண்டால் வாழ்க்கை பாபாவுக்குரிய பரிசாக மாறுகிறது! உலகம் அவ்வளவு ஆறுதலாக இல்லை! உண்மையான அன்பு வாசம் இன்னும் இந்த உலகம் சக மனிதரிடம் இருந்து தரவும் இல்லை - பெறவும் இல்லை! ஆகவே தான் தற்கொலை எண்ணமும், தற்கொலை செயலும் உலகில் தலைவிரித்து ஆடுகிறது! ஆயினும் பேரிறைவன் பாபா நம் கூடவே இருக்கிறார் என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும்! நம்பாவிட்டாலும் அது தான் சத்தியம்! நம்புவது நமக்கே ஆன்ம நன்மையை அளிக்கிறது! உண்மையில் நாம் தற்கொலை புரிய வேண்டியது நம் உடலை அல்ல நமது தீய குணங்களையே! அதைத் தான் நாம் அவசியமாகக் கொலை செய்ய வேண்டும்! அது கொலை அல்ல - ஆன்மீகக் கலை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக