தலைப்பு

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

இறைவன் பாபா மடியில் தலை சாய்த்து இன்னுயிர் நீத்த மகான்!

ஸ்ரீ சத்ய சாயி பாபாவாரு அவர்களின் பாட்டனார், ரத்னாகரம் கொண்டமராஜு அவர்கள் தவ வாழ்வு வாழ்ந்த தயாசீலர். நூற்றுப்பத்தாண்டு நிறைவாழ்வு வாழ்ந்து, மண்ணுலகில் அவதாரம் எடுத்த பாபாவை இறைவன் என அறிந்து அவர் மடியில் படுத்தபடி விண்ணுலகம் ஏகிய பேற்றைப் பெற்றவர்...

விஜய நகர சக்ரவர்த்தி புக்கரின் பெயரால் அமைந்துள்ள புக்கப்பட்டினம் அருகில் உள்ள புட்டபர்த்தி அக்காலத்தில் ஒரு பாளையமாக விளங்கியது. ராஜு வம்சத்தினருக்கு அங்கு நிரம்ப செல்வாக்கும் அதிகாரமும் இருந்தது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ராஜு வம்சத்தில் வந்தவர்தான் ரத்னாகரம் கொண்டமராஜு. இசையிலும் நடிப்பிலும் தேர்ந்தவர். லேபாக்ஷி ராமாயண செய்யுள் பாடல்கள் அனைத்தும் அவர் அறிந்திருந்தார். அக்கம் பக்கத்திலுள்ள அனேக கிராமங்களில் நடந்த ராமாயண நாடகங்களில் அவர் லட்சுமணனாக பக்தியுடன் நடித்ததை அனைவரும் வியந்து பாராட்டுவர். புலால் உணவைத் தவிர்த்த அவர், எளிய குடிசையில் தனிமையாக இறை சிந்தனையுடன் வசித்து வந்தார். ஆறு வயது பேரனான சத்யாவையும், அப்போது 92 வயதான தாத்தா கொண்டம ராஜு அவர்களையும் இணைத்தது தெய்வீகமும், சாத்வீக காய்கறி உணவும்தான். தாத்தாவின் குடிசையில் இருந்த சொற்ப சாமான்களைக் கொண்டு , சத்யா சுவையான உணவு, காய்கறி மற்றும் துவையல் செய்வதில் தனது ஆறு வயதிலேயே சிறந்து விளங்கினார் .

கொண்டம ராஜுவின் இறுதிக்காலம். எப்படி பாபாவால் ஆசீர்வதிக்கப்பட்டு , அவர் மடியிலேயே தலை சாய்த்துப் படுத்து உயிர் நீத்தார் என்பதை இனி காண்போம்.


🌹ஈஸ்வரம்மா ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வா:

பாபா கூறுகிறார்... 

பிரசாந்தி நிலையம் கட்டி முடிக்கப் பட்டபின், ஒருநாள் நான் கொண்டம ராஜூ அவர்களைக் காணச் சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் அவர் மகிழ்ந்து, "ஈஸ்வரம்மா ஒரு குவளையில் தண்ணீர் கொண்டுவா. இறைவன் என்னை தமது திருவடி மலரில் ஐக்கியமாக்க வந்துள்ளார். எனது உயிர் பிரிவதற்கு முன்பு அவர் தமது திருக்கரத்தால் புனித நீரை எனக்கு அளிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை நிறைவேற்ற அவர் இன்று வந்துள்ளார்."


பக்குவ ஜீவன்களுக்கே உரித்தான மனோ சக்தியால் அவர் இவ்வாறு கூறவும், திகைத்த ஈஸ்வரம்மா... "ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள். நீங்கள் நல்ல உடல் நலத்துடன்தான் உள்ளீர்கள். காய்ச்சலோ, கபமோ கூட இல்லையே. எதனால் உங்களுக்கு முடிவு வந்தவிட்டதாக எண்ணி இவ்வாறு கூறுகிறீர்கள்" எனக் கூறினார்கள்.

இதற்கு வைராக்ய சீலரும், வாழ்வாங்கு வாழ்ந்த பெருந்தகையுமான கொண்டமராஜு அவர்கள் "இவ்வுலகில் இறப்பு என்பது தெய்வ சித்தம். பிறவிக்கும், மரணத்திற்கும் காரணங்கள் இல்லை. இதுவே சத்தியம். உயர்ந்த சத்தியம்."

இதைக்கேட்ட ஈஸ்வரம்மா, மேலும் எந்தவித தர்க்கமும் செய்யாமல் ஒரு குவளையில் நீர் கொண்டு தந்தார். 

பிறகு நடந்ததை ஸ்வாமியே சொல்லக் கேட்போம்.

என்னை கட்டிலில் அமரச் செய்த கொண்டமராஜு அவர்கள், தரையில் அமர்ந்து, எனது முழங்காலில் தன் தலையை சாய்த்து, "ஸ்வாமி நான் என் வாழ்வை நடத்த ஒரு சிறிய வியாபாரத்தை செய்து வந்தேன். அவ்வகையில் நான் சிலரிடம் பட்ட கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்திருக்கலாம். இறக்கும் இத்தருவாயில், அந்தக் கடன்களின் கர்மச் சுமை என்னைத் தாக்காமல் காக்கவேண்டும்!" இதைக் கேட்ட நான் அவ்வாறே ஆகட்டும் எனக்கூறி, அவர் வாயில் சறிது நீரைப் புகட்டினேன். அதை அருந்தியவாறே, அவர் தனது இன்னுயிரை நீத்தார்.


துயரத்தால் வாடிய அன்னை ஈஸ்வரம்பாவிடம், பாபா கூறியதாவது.

"உடல் சார்ந்த உறவுகள் அநித்தியமானவை. ஆத்மீக உறவுகள் தான் நிரந்தரம். ஆகவே உடற் பற்றை நீக்கி, ஆத்மாவின் மீது பற்று வைக்க முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்."


சாயிராம்.... பற்றற்ற யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் தான் தெரியும், தமது பிறப்பு, இறப்பின் ரகசியம். ரத்னாகரம் கொண்டமராஜு அவர்கள் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை மட்டும் வாழ்ந்து காட்டாமல், எப்படி இறக்க வேண்டும் என்பதையும் நமக்கு ஒரு பாடமாக போதித்துள்ளார்..கடன் பாக்கி இருந்தால் மறுபிறவி எடுக்க நேரிடும் என்ற தொடர் கர்ம வினைகளிலிருந்து விடுபட்டு பரமபதம் அடைந்தடவே அவர் அவ்வாறு வரம் வேண்டினார். பாபாவும் மனம் கனிந்து அந்த பரம பக்தரை ஆசீர்வதித்து தம் திருவடி நிழலில் நிலையாக இளைப்பாற வைத்துள்ளார்!


ஓம் ஸ்ரீ சாயி தீனஜன போஷணாய நமஹ.


ஆதாரம்: From Bhagavan’s Easwaramma Day Discourses

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக