தலைப்பு

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

இறந்த ஆறு வயது உடலுக்கு மீண்டும் உயிர் அளித்த இறவா இறைவன் ஸ்ரீ சத்ய சாயி!

எவ்வாறு ஆறே ஆறு வயதான ஒரு குழந்தையின் இறந்த உடலுக்கு பாபா எவ்வகையில் மீண்டும் உயிர் அளிக்கிறார் என்கிற பரவச மகிமா சம்பவம், சுவாரஸ்யமாக இதோ...


அது 1976. அது கோலாலம்பூர்.  டாக்டர் கே.வி. சேகரா அவர் பெயர்! அவரின் பிள்ளை தேவேந்திரன்! ஆறே ஆறு வயது தான்! பச்சிளம் பிள்ளை! திடீரென ஒரு நாள் அந்தக் குழந்தைக்கு தொண்டையில் ஓர் உபாதை ஏற்படுகிறது! டான்ஸிலிடிஸ் என்று கருதி சேகரா டிரீட்மென்ட் செய்கிறார்! ஆனாலும் குணமாகவில்லை! உபாதை அதிகமாகிறது! ஈ.என்.டி ஸ்பெஷலிஸ்டிடம் காட்டுகிறார்! தொண்டையில் இருந்து ரத்தம் ஓடுகிறது... ஆகவே மருத்துவமனையில் அட்மிட் ஆகிறது குழந்தை! 


என்ன‌ வியாதி என்றே புரியவில்லை! அந்த ஸ்பெஷலிஸ்ட் வேறு சில ஸ்பெஷலிஸ்ட்'களிடம் கலந்து ஆலோசிக்கிறார்! மறு தினம் ரத்தம் கொடுக்கப்படுகிறது! அது மேலும் புதிய விபரீதத்தையே வரவழைத்துவிடுகிறது! ஆம்! உடல் எல்லாம் சொறி போல் ஏற்பட்டு மேலும் உபத்திரவம் (இன்னல்) அளிக்கிறது! 

வைத்தியத்தால் எதுவும் சரிசெய்ய இயலாது என்ன புரிந்து போன சேகரா கடைசியான ஒரு பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கிறார்! அது தான் பிரார்த்தனை! இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்! அதுவரை அவர் பேரிறைவன் பாபா பக்தர் கூட இல்லை!

அவரது சகோதரரின் மனைவி வழியாக சேகராவுக்கு ஒரு பாபா படம் வந்து சேர்கிறது! அதை அவர் தனது வீட்டு வாயிற் கதவில் மாட்டி வைக்கிறார்! ஆனால் வழிபாடு எதுவும் செய்யவில்லை! அதே சகோதரி மனைவி குழந்தை தேவேந்திரனை நலம் விசாரிக்க வந்து, பாபாவின் விபூதி பிரசாதத்தையும் தருகிறார்! பாபாவின் லீலா விநோதம் ஆரம்பமாகிறது! 


வாலியம் ஊசி போட்டத்தில் வீட்டிலேயே குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது! இனி நிரந்தர உறக்கம் தான் போல என்று தந்தை சேகரா கண் கலங்குகிறார்! அந்தக் கண்ணீர் குழந்தை மேல் சிந்தி அதன் தூக்கத்திற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்று கன்னத்தைத் தாண்டாதவாறு துடைத்துக் கொள்கிறார்! துக்கம் தொண்டையை அடைக்கிறது! இனி இறைவனே கதி என்று பாபா விபூதி பிரசாதத்தை குழந்தைக்குப் பூசுகிறார்! பிள்ளை இனி கண் திறப்பானா? தெரியவில்லை! இரவே கண் மூடித் தூங்கி , அடுத்த நாள் விடிகிறது, அது புது விடியலா? புதிர் விடியலா? தந்தைக்குப் புரியவில்லை! 

ஓர் திடீர் திருப்பம்! தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை!

    குழந்தை புதுத் தெம்போடு எழுந்து பேசுகிறான்... பல மருத்துவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டும் குணமாகாத மர்ம நோய், ஒரே இரவில் எப்படி சரியானது!?


"அப்பா, வீட்டு வாசலுக்கு மேலே, ஒருத்தரோட படம் மாட்டி இருக்குமே, அவர் யார் அப்பா? அவர் என் அருகே வந்தார், அது கனவு எல்லாம் இல்ல... அவர் என் தலையில் கையை வைத்து ,"உன்னோட மரணத்த மாத்தி நான் பிழைக்க வெச்சுட்டேன், இனி எந்த பிரச்சனையும் இல்ல... நான் இருக்கேன்!" என்றார்" என்கிறது அந்தக் குழந்தை!

ஒரு நிமிடம் தந்தை பேரிறைவன் பாபாவின் புகைப்படத்தை ஆனந்தக் கண்ணீரோடு உற்றுப் பார்க்கிறார்! 

சோர்வடையச் செய்யும் வாலியம் ஊசி போட்ட போதும், அந்தக் குழந்தைக்கே உதித்த புனர் காலை உற்சாகமடையச் செய்கிறது!

குழந்தை விடவில்லை *"அவர போய் நான் பார்க்கணும் அப்பா, போய் பார்த்து நன்றி சொல்லணும் !"* என்கிறது!

"தரிசனத்தில் பாபா உன்னை எல்லாம் பார்ப்பாரா?" என்று தந்தை சேகரா ஆச்சர்யத்தோடு கேட்கிறார்! 

"அவர் என்னை பார்த்தாலும் , பார்க்காவிட்டாலும் பரவாயில்ல.. நான் உடனே போய் பாபாக்கு நன்றி சொல்லணும்.. கூட்டிட்டு போங்கப்பா!" என்கிறது குழந்தை! 

அந்தக் குழந்தையின் நன்றி உணர்வை நினைத்து கண் கலங்குவதா?!

பேரிறைவன் பாபாவின் பெருங்கருணையை நினைத்து கண் கலங்குவதா?!


(ஆதாரம் : அற்புதம் அறுபது | பக்கம் : 59 - 61 | ஆசிரியர் : அமரர் ரா. கணபதி) 


அந்த நன்றி உணர்வு தான் பேரிறைவன் பாபா நமக்கு நிகழ்த்தி வரும் மகிமையை காட்டிலும் அத்தியாவசியமானது! அந்த நன்றி உணர்வே நமக்கு ஆழமான பக்தியை தருகிறது! பாபா நமக்கு எவ்வளவு செய்தாலும் , இன்னும் அது செய்யவில்லை , பாபா இதை சரி செய்யவில்லை என்று புலம்பித் தீர்க்கும் பக்குவமற்ற மனத்திற்கு நன்றி உணர்வே வைத்தியம் பார்க்கிறது! குறை காண்பது என்கிற மன நோயை நன்றி உணர்வே தீர்த்து , தெளிவு தருகிறது! அத்தெளிவே நம்மை ஆன்ம ஞானத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக