தலைப்பு

புதன், 27 செப்டம்பர், 2023

ஸ்ரீ லோகநாத முதலியார் | புண்ணியாத்மாக்கள்


பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி பாபா, தனது அவதாரத்தின் துவக்க காலங்களில்... தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ந்த பக்தர்களுக்காக தன்னுடைய லீலைகளை மகிமைகளை வெகுவாகப் பொழிந்தார். அது வெறுமனே அவருடைய அவதார மகிமைப் பிரகடனத்துக்கானது அல்ல! மாறாக... பல ஜென்மங்களாக இறைவனை எண்ணி பக்தித் தொண்டாற்றிய ஆன்மாக்களுக்கு அவர் பிரதிபலனாகக் கொடுத்த தெய்வீக சன்மானம். அத்தகைய பெரும்பேறு வாய்த்த சில உன்னதமான பக்தர்களில், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ லோகநாத முதலியார் குறிப்பிடத் தகுந்த ஒருவர். இறைவனின் சமீபத்தை சம்பாதித்த பேரதிர்ஷ்டம் பெற்ற புண்ணியாத்மா ஸ்ரீ லோகநாத முதலியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இதோ...








 சென்னை மாநகரத்தின் கிண்டி சாயிபாபா கோவிலை அறியாத சாயி பக்தர்களே இருக்கமுடியாது எனலாம். ஷிரடியில் சாயிபாபா விக்ரஹ ரூபத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் முன்னரே.. பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்கள், சென்னை கிண்டியில் 1949ம் ஆண்டு ஷீரடி சாயி பாபாவின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். உலகத்தின் முதல் சாயி மூர்த்தியாக அது அமைந்தது குறிப்பிடத் தகுந்தது. அத்தகு சிறப்பு வாய்ந்த அந்த திருக்கோவில் உருப்பெறுவது தொடர்பான நிகழ்வுகளில் அதிமுக்கியமான நிகழ்வு ஸ்ரீ லோகநாத முதலியார் தொடர்பானது. 

துவக்க காலத்தில், சுவாமியுடன் நெருங்கிய தொடர்புடைய லோகநாத முதலியாரின் வாழ்வு ஒரு புண்ணியாத்மாவினுடைய வாழ்வாகும். 


🌹இருளிலிருந்து ஒளிக்கு:

சென்னை கிண்டியில், குடும்ப சொத்தாக தனக்கு வந்து சேர்ந்த ஒரு நிலத்தை லோகநாத முதலியார் ஒரு குஜராத்தி சாமியார் தங்குவதற்காகக் கொடுத்தார். சிறிது காலத்திற்குள்ளாகவே அந்த குஜராத்தி சாமியார் ஒரு ஆன்மீக சாதகனல்ல! மாறாக தீய செயல்களைச் செய்கின்ற மாந்த்ரீகன் என்று இவருக்குத் தெரிய வந்தது. ஆனால் சுமூகமான பேச்சுக்களால் தீர்வு ஏற்படவில்லை, எனவே கோர்ட்டை அணுகி வழக்குத் தொடுத்தார். அதனால் ஏமாற்றமும் கோபமும் அடைந்த அந்த மாந்த்ரீகன்... திரு.லோகநாத முதலியாருக்கு தீங்கு நேரும்படி  ஏதேதோ தீய சடங்குளை மேற்கொண்டான். இது நடைபெற்றது 1943ம் ஆண்டு செப்டம்பர் மாதம். அது தசரா சமயம் ஒரு வெள்ளிக்கிழமை மாலை, திருவல்லிக்கேணியில் இருந்த தங்கள் வீட்டிலிருந்து கிண்டிக்குச் சென்று திரும்பிய லோகநாத முதலியார் வழக்கத்திற்கு மாறாக மூர்க்கமாக  நடந்துகொண்டார்.  "சக்ரவர்த்தி ராஜகோபலாச்சாரி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனெரல். சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூரில் இருக்கிறார்" என்று ஏதேதோ தனக்குத் தானே சப்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஒரு மனநல மருத்துவர் வந்து பரிசோதித்தும் எந்தப் பயனும் இல்லாமல் போனது. சனிக்கிழமை நள்ளிரவு வரை இதேபோன்ற நடவடிக்கைகளால் அயற்சியுற்றுப்  பின்னர்  தூங்கிப்போனார். 


அவரது கனவில், ஒரு அழகான இளம் வாலிபன் துளசி இலைகள்  மிதக்கும் தண்ணீருடனான ஒரு பாத்திரத்தைக் கொடுத்து அந்த நீரைப் பருகச் செய்தார். ஞாயிறு காலை தூக்கத்திலிருந்து விழிக்கும் போது, தனக்கு ஏற்பட்ட பேதலிப்பு  நீங்கியிருந்ததை நன்கு உணர்ந்தார். முந்தைய இரவில் தனக்கு வந்த கனவைக் குறித்தும் அதில் சிவப்பு அங்கியணிந்து பெண்ணைப் போல் அடர் கேசம் கொண்ட ஒரு இளைஞன் குறித்தும் தனது மனைவி மற்றும் மகள் லீலாவிடம் விளக்கினார். 

அதே நாள், சென்னையில் ஒரு பக்தரின் வீட்டிற்கு திருவல்லிக்கேணி வழியாக சென்றுகொண்டிருந்த ஸ்ரீ சத்யசாயி பாபா  தனது காரை நிறுத்தி... பக்தர்களைக் காரிலேயே இருக்கும்படி செய்துவிட்டு லோகநாத முதலியாரின் இல்லத்திற்குள் நுழைந்தார். கனவில் தான் கண்ட அதே தெய்வீக இளைஞன் என்று... பார்த்ததுமே புரிந்துகொண்டார் லோகநாத முதலியார். "நேற்று உன்னிடம் வந்து துளசி தீர்த்தம் கொடுத்தேன்.  உன்னைப் பிடித்த பித்து முற்றிலும் அற்றுப்போகச் செய்யவே இப்போது வந்திருக்கிறேன்" என்றார். அங்கை அசைப்பில் ஒரு தாயத்தை வரவழைத்து முதலியாரின் கழுத்தில் அணியச் செய்தார். உடனே லோகநாத முதலியார் சுவாமியின் கால்களைத் தொட்டு வணங்க முயற்சித்தார், அனால் தனது கால் முட்டிகள் ஒத்துழைக்காததை எண்ணி வருந்தினார். அதைக்கண்ட பாபா, அவரின் கால்களில் ஒரு தட்டு தட்ட... அடுத்த கணமே தனது மூட்டுப் பிரச்சனை சரியாகி எழுந்து நின்றார். இறைவனே தன்னைத் தேடி வந்து குணம்செய்ததை எண்ணி பாபாவைத் தன்  தோளில் சுமக்கும்படி தூக்க ஆரம்பித்தார். சுவாமி அன்புடன் அவரின் முதுகில் தட்டி அந்த செயலைத் தவிர்த்தார். அதற்குப்பின் அவர்கள் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த  மாந்த்ரீக பொருட்களை நீக்கும் விதமாக சில குறிப்புகளை அவர்களுக்கு கொடுத்துவிட்டு , விபூதி வரவழைத்தும் கொடுத்தார். விரைவில் புட்டபர்த்தியில் வந்து  தன்னை சந்திக்குமாறும் அறிவுறுத்தினார்.


🌹இரு சாயியும் ஒருவரே:


அடுத்த நாளே, புட்டபர்த்திக்குக் கிளம்பிச் சென்றது அந்த பாக்யசாலிக் குடும்பம். புட்டபர்த்தியில் பாபாவின் அணுக்கத்தில் அளவற்ற தெய்வீக ஆனந்தத்தை அனுபவித்தனர். அந்த முதல் பயணத்தின் முடிவிலேயே , "சத்யசாயி பாபா இறைவனின் அவதாரம்" என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தனர். இறைவனைக் கண்டதோடு நெருங்கிப் பழகும் வாழ்க்கையும் தனக்கு அமைந்து விட்டதை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தார் லோகநாத முதலியார். எனவே சுவாமிக்கென சென்னை கிண்டியில் ஒரு வீடு கட்டி அவருக்கு அர்ப்பணிக்க  எண்ணினார். அந்தத் திட்டத்தைத் தொடங்கும்முன்னரே ஒருநாள் கனவில் ஷீரடி பாபா தோன்றி தனக்கு ஒரு கோவில் கட்டும்படி கூறினார். அவருக்கு கனவில் கிடைத்த அந்த தெய்வீகக் காட்சி மற்றும் குறிப்புகள் கிடைத்த மறுநாளே புட்டபர்த்தியில் இருந்து ஒரு கடிதம் வந்தது. கனவில் ஷீரடி சாயி பாபா மூலம் கிடைத்த அதே குறிப்புகள் அந்தக் கடிதத்திலும் விளக்கப்பட்டிருந்தன. உடனடியாக தன்னிடம் இருந்த மூன்று வீடுகளை விலைக்கு விற்று, கோவில் கட்டுவதற்கெனப்  பணம் சேகரித்துக் கொண்டார் லோகநாத முதலியார். 


அதே சமயம், ஒரு கல்தச்சர்... தனக்கு மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட தெய்வீகக் காட்சி வருவதாகவும் அதில் மதிப்பு மிக்க ஒருவர் கிண்டியில் பணி இருப்பதாக கூறி அவ்விடத்திற்கு வந்துசேரும்படி செய்தார் என்று கூறி லோகநாத முதலியாரிடம் வந்து சேர்ந்தார். ஒரு பழைய ஷீரடி சாயி படத்தை வைத்துக்கொண்டு தனது சிற்ப வேலையைத் துவக்கிய அவரால், தெய்வீகக் கரமொன்று தன்னுடைய கைகள் மூலம் பணி  செய்வதை நன்றாக உணர முடிந்தது. 

ஷீரடி பாபாவின் முதல் சிலை, சென்னை கிண்டி கோவிலில்  3 பிப்.1949 அன்று இறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் தெய்வீக கரங்களால் நிறுவப்பட்டது. ஷீரடி சாயிபாபாவின் சிலையானது சத்யசாயியால் நிறுவப்படும் அந்தத் தருணத்தில் சிலநொடிகள்... மூன்று அடிவரை அந்த சிலையானது அந்தரத்தில் எழும்பிப் பின்னர் பீடத்தில் சரியாக அமர்ந்தது.


அந்த மங்களகரமான புனித நாளில்...சுவாமி, முதலியாரிடம் ஒரு துணியை விரிக்கச் சொல்லி அதன் மேல் தனது கால்தடம் பதியும்படி ஏறி நின்றார். ஸ்ரீ சத்ய சாயியின் பாதச் சுவடு அவர் பாதத்தைப் போல  சிறியதாக அல்லாமல் , ஷீரடி பாபாவின் பெரிய பாத சுவடு அதில் பதிந்தது . அந்த புனிதச் சுவடு தாங்கிய துணி இப்போதும்  கிண்டி கோவில் கருவறையை அலங்கரிக்கிறது. ஒரு நாள் முதலியாரின் மகள் லீலா பூஜை அறையில் ஷீரடி பாபாவின்  சிலைக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று பாபாவின் தலையில் கட்டப்பட்டிருந்த துணி பலமாக அசைந்து, ஸ்ரீ சத்ய சாயியின் சுருள் முடி கொண்ட தலையாக மாறியது. திடீரென நிகழ்ந்த இந்த அதிசயத்தினால் அதிர்ந்து போய் மாலையை அப்படியே விட்டுவிட்டு அம்மாவை அழைக்க லீலா வெளியே ஓடிவிட்டாள். இரண்டு  சாயி அவதாரங்களும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு மனித ரூபங்களே என்ற பேருண்மையை வெளிக்காட்டும்படியான இது போன்ற சம்பவங்கள் எத்தனையோ நிகழ்ந்தது.. இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.










🌹ஆனந்த லீலாவிநோத சாயி:

சுவாமி, லோகநாத முதலியார் குடும்பத்தினருடன் இருக்கும்போது, ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது  ஒரு தெய்வீக லீலையை  நிகழ்த்திய வண்ணம் இருப்பார். ஒருமுறை உணவின்போது சுவாமி "குர்மா" கேட்டார். அது அவர்களால் தயாரிக்கப் பட்டிருக்கவில்லை. உடனே சுவாமி ஒரு காலி பாத்திரத்தை மூடி அதன் மேல் மெலிதாக ஒரு தட்டு தட்டினார். திறந்து பார்க்கும்போது அதில் சூடான குர்மா நிரம்பி  இருந்தது. சில சமயங்களில் ஷீரடியிலுள்ள சாயி சமாதிக்கு முன்பு பக்தர்கள் படைக்கும் பிரசாதத்தை, சென்னையில் இருக்கும் சுவாமி தனது அங்கை அசைப்பின் மூலம் வரவழைத்து தன்னைச் சுற்றியிருக்கும் பக்தர்களுக்கு விநியோகிப்பார். ஒருமுறை ஷீரடி பாபா  அணிந்திருந்த பழைய 'கஃபினி'யின் துண்டுகளை அதிசயமான  முறையில் வரவழைத்துக் கொடுத்தார். மற்றொரு முறை லோகநாத முதலியார் குடும்பத்தினருடன் இருக்கும் வேளையில் டிரான்ஸ் என்று சொல்லப்படும் (உடலைக் கீழே விடுத்த) சூக்ஷும பயணத்தை  மேற்கொண்டார் சுவாமி. 

ஒரு அரைமணி நேரம் கழிந்த பிறகு தனது தேகத்தில் திரும்பிய பாபா, ஷீரடியில் உள்ள அப்துல் பாபாவுக்கு (ஷீரடி சாயியின் சீடர்) தரிசனம் கொடுக்கச் சென்றதாகவும்  அந்த சமயம் அப்துல் பாபா இறைவனின் தாமரை பாதங்களில் சேர்ந்தார் எனவும் கூறினார். அதை ஊர்ஜிதப் படுத்தும் விதமாக மறுநாள் செய்தித்தாள்களில் அப்துல் பாபா சமாதியடைந்த செய்தி வந்திருந்தது.

 

மற்றொருமுறை லோகநாத முதலியாரின் மகள் லீலாவின் ஸ்டாம்ப் ஆல்பத்தை உற்றுப் பார்த்த சுவாமி அதன் மீது தனது கையை வைத்தார் . உடனே அந்த ஸ்டாம்ப்புகளில் இருந்த வெவ்வேறு தலைகள்/சின்னங்கள் அனைத்தும் மறைந்து, அவற்றின் இடத்தில் பகவானின் உருவம் அச்சாகியிருந்தது. லீலா  தனது தேர்வுகளின் போது... எல்லாத் தாள்களிலும் விபூதியை தடவியபின் விடை எழுதுவாள். அதன்பின் பர்த்திக்குச் சென்றபோது, ​​சுவாமி , "ஏன் பேனாவிலும் பேப்பரிலும் விபூதி பூசினாய்? அப்போது நான் உனக்குப் பதில் சொல்வேன் என்று நினைத்தாயோ?" என்று கூறி தனது சர்வ வியாபகத்தைக் காட்டினார் சுவாமி. லோகநாத முதலியாரின் மகள் லீலா உள்ளிட்ட சிறுவர் சிறுமியர்கள்  கூடி  கேரம் விளையாடும் சமயங்களில் சுவாமி.. தனது விரலால் ஒரு கேரம் காயின் மேல் சிறு வட்டம் போடுவார், அதன் பின்னர் அதிசய வேடிக்கையாக அந்தக் காயின் அசையாமல் அப்படியே நின்றுவிடும்! ஒரு தாவரவியல் மாணவியாக லீலாவிற்கு, ஒரு  இலையை பக்குவப்படுத்திக் காயவைத்து நரம்புகள் மட்டுமே எஞ்சும் அச்சு எடுக்க வேண்டி  இருந்தது. புதியதான இலை ஒன்றை  புத்தகத்திற்குள் வைத்து  மூடிவிட்டு,  சுவாமி புத்தகத்தின் வெளியட்டையில்  ஒரு தடவை தட்டிவிட்டு திறந்து பார்க்கச் சொன்னார். இலை… அதன் நரம்பு மட்டும் எஞ்சிய காய்ந்த வடிவுக்கு மாறியிருந்தது. சாதாரணமாக குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகக்கூடிய அந்த செயலை சுவாமியின் கரங்கள் ஒரு நொடியில் நிகழ்த்தியதைக் கண்டார்கள்.

 

🌹ஆபத்பாந்தவ சாயி:

1949 முதல் கிண்டி சாயிபாபா கோவிலில் ஒரு முழுநேர சேவகராகவே லோகநாத முதலியார் வாழ்ந்து வந்தார். ஓர்நாள் மாலை பாபா சிலை உயிர்பெற்று "உன் வீட்டிற்கு விரைந்து செல் - உன் மகளின் உயிருக்கு ஆபத்து" என்று அவரிடம் பேசியது. உடனே ஒரு டாக்ஸியில் வீடு நோக்கி விரைந்தார். அதேசமயம் அவரின் இல்லத்திற்கு அருகில்... சில குத்தகைதாரர்கள், இவரின் குடும்பத்திற்கு  தீங்கு செய்ய எண்ணி முதலியாரின் மகள் லீலாவை மிரட்டுகின்ற வகையில்  ஒரு தடியுடன்  தாக்கிவிட்டு ஓட எத்தனித்தனர்.  சரியான சமயத்தில் அங்கு சென்று சேர்ந்த லோகநாத முதலியார் "நிறுத்து; என் மகளை என்ன செய்யப் போகிறாய்?" என்று ஓங்கிய குரலில் அவர்களை நோக்கிப் பாய... அந்த விஷமக்காரர்கள் ஓடிவிட்டனர். சரியான நேரத்தில் சுவாமி சிலையிலிருந்து பேசி அவரது மகளைக் காப்பாற்ற அனுப்பப்பட்டார்.

 

🌹ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில்:

ஒருமுறை சுவாமி தனது குன்னூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பினார். சுவாமியை வரவேற்கும் பக்தர் குழுவைக் கண்ட சுவாமி ஏன் லோகநாத முதலியார் தன்னை வரவேற்க வரவில்லை என்று அவரின் குடும்பத்தினரிடம் கேட்டார். அவருக்கு அந்த சமயம் கடுமையான  மலேரியா தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்று சுவாமியிடம் கூறினார்கள். அந்த பதிலை வெறுமனே கேட்டுக்கொண்டவர் போல் காணப்பட்டார் சுவாமி. அனால் வரவேற்பு நிகழ்வு முடிந்து மந்திரில் சென்று பார்க்கும்போது அங்கே லோகநாத முதலியார் மிகவும் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் நடந்து வந்து சுவாமியின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். மலேரியாவினால் துவண்டு போயிருந்தவர், அத்தனை ஆரோக்கியத்துடன் நடமாடுவது கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயினர். சிறிது நேரத்திற்கு முன்பு சுவாமி தன்முன் நேரடியாகத் தோன்றி  தரிசனம் தந்ததோடு விபூதி வரவழைத்துக்  கொடுத்து விட்டு மறைந்தார் என்று நன்றியுடன் சுவாமியின் லீலையை விவரித்தார் முதலியார். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் சுவாமி இருந்த அந்த நிகழ்வினை அனுபவித்த பக்தர்கள் நெகிழ்ந்துபோயினர்.

 

🌹லக்ஷ்மி விஷ்ணு திருக்கல்யாணம்:

ஒருமுறை சுவாமி, சித்திராவதிக் கரை மணலில் பக்தர்களோடு அமர்ந்திருக்கும் போது... தமக்கே உரியபாணியில் மணலைக் குவித்து அதனுள் கைநுழைத்து அழகிய  இரு சிலைகளை வெளியே எடுத்தார். ஒன்று வெங்கடேஸ்வரர் சிலை... அதனை லோகநாத முதலியாருக்குக் கொடுத்தார; மற்றொன்று  லட்சுமி தேவியின் சிலை... அதனை சேஷகிரி ராவின் மகள் சுந்தரம்மாளுக்குக் கொடுத்தார். லோகநாத முதலியார் வெங்கடேசப் பெருமானை தரிசனம் செய்வதற்காக மாதம் இருமுறை திருப்பதி செல்லும் வழக்கமுடையவர். ஆனால் பிற்காலத்த்தில் பலமுறை முயற்சித்தும், பல்வேறு காரணங்களால்  திருப்பதி பயணம் மேற்கொள்ள முடியாமல் போனது. அன்றைய தினம்  சுவாமி அந்த விக்ரஹங்களைப் படைத்தபின் லட்சுமிதேவி விஷ்ணுவின் (மூர்த்திகளின்)  திருமணத்தை அறிவித்தார். பழைய மந்திர் மணமகனின் (விஷ்ணுவின்) இடமாகவும், கர்ணம் சுப்பம்மாவினுடைய இடம் மணமகளின் ( லட்சுமி தேவியின்) இருப்பிடமாகவும் அறிவிக்கப் பட்டது . முதலியார் மனைவி கொடுத்த சிவப்பு பட்டுசேலையை சுவாமியே  அழகிய முறையில் மடிப்பு வைத்து மூர்த்திகளை அலங்கரித்தார். மேலும் அன்றைய தினம்... சுவாமியே  புரோகிதராக செயல்பட்டதோடு  ஒரு மங்கள சூத்திரத்தை வரவழைத்து லட்சுமி சிலைக்கு கட்டினார். வெங்கடேசப் பெருமானுக்குப் பவள மாலை ஒன்றை வரவழைத்து அணிவித்தார். அன்று மாலையில் லட்சுமி விஷ்ணு  வீதி உலா வருவதற்கும்  ஏற்பாடு செய்தார்.


 திருமணத்தின் அனைத்து சடங்குகளோடு  இசை மேளாதாள வாத்தியம் மற்றும்   பஜனைகள் நடைபெற்றது. கலியுகத்தின் சாயி நாராயணனே ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையினை உணர்ந்த லோகநாத முதலியார் மற்றும் அனைத்து பக்தர்களும் ஆனந்தத்தில் மெய்மறந்து போயினர்.

 

"ஷீரடி சாயி என்ற ரூபத்தில் எழுந்தருளி அந்தக் காலகட்டத்துக்கும் சமூக சூழலுக்கும் ஏற்ப, தன்னுடைய தெய்வீகத்தின் அடிப்படைத் தன்மையை  பிரகடனப் படுத்தியது சத்யசாயி பாபாவே". இந்த எளிய உண்மையைக் கூட "சாயி பக்தர்கள்" என்று தங்களை அடையாளப் படுத்திக்க கொள்ளும் பலரும் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மேலும் அதே "சாயி" என்கிற திவ்ய ஷக்திதான் மீண்டும் பிரேம சாயி என்ற ரூபத்தில் நம்மிடையே நடமாடி தர்ம ஸ்தாபனத்தைப் பூர்த்தியாகச் செய்யவிருக்கிறது!. எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதர்கள் வழிபடும் அத்துணை தெய்வ வடிவங்களுக்குள்ளும் இருப்பது ஒரே தெய்வீக ஷக்தி தான் என்பது மட்டுமல்லாமல்... ஒவ்வொரு மனிதற்குள்ளும்... ஏன்? அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் அதே தெய்வீக சக்திதான் குடி கொண்டுள்ளது. தன்னுடைய ஷீரடி சாயி அவதாரத்தைக் குறித்த நம் சுவாமியின் ரகசிய வெளிப்பாடுகள்... நம்மை மேற்சொன்ன ஞானமுதிர்ச்சிக்கு இட்டு செல்லும் முதல் படியாகும். அந்த விஷயத்தில்... குறிப்பாக தமிழ்நாட்டின் சென்னை மாநகரத்தைப் பொறுத்தமட்டில், முதன்மையாக நின்று அனுபவித்தவரும்... சாட்சியுமாகத் திகழும் புண்ணியாத்மாவும் ஸ்ரீ லோகநாத முதலியார் அவர்களே!


 ✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்

மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக