தலைப்பு

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

"ஸ்ரீ சத்ய சாயி - மருத்துவர்களுக்கெல்லாம் மேலான மருத்துவர்" - ரிஷி பரத்வாஜ்

ஸ்வாமியே மருத்துவர்களுக்கெல்லாம் மேலான மருத்துவர். சிறந்த மருத்துவர்கள் தோல்வியடையும் போது, அவர் வெற்றி பெறுகிறார்! இதை பற்றி சொல்வதற்கு எனக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கிறது...


என் அம்மா எப்பொழுதுமே  வயிற்றில் அதீத வலியை அனுபவித்துக் கொண்டிருந்தார். ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவருக்கு மிகப் பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். அவர் கருப்பையை அகற்ற வேண்டியிருந்தது. என் தந்தை சிம்லா மாநிலத் தலைவர் மூலம் சுவாமிக்கு உடனே கடிதம் அனுப்பினார். இதற்கிடையில், மார்ச் 8, 1986 அன்று, எனது தாயார் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


ஸ்வாமி கடிதத்தை எடுத்துப் படித்துவிட்டு, “ஆபரேஷன் நடக்கட்டும்” என்றார். உடனடியாக மாநிலத் தலைவர் விமானம் மூலம் டெல்லிக்குத் திரும்பி வந்து என் தந்தையிடம் இந்தச் செய்தியைக் கூறினார். என் அம்மா அறை எண் 18 இல் தங்க வைக்கப்பட்டார், மார்ச் 18 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடக்க இருந்தது. என் தந்தை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து, அறுவை சிகிச்சை அறையில் சுவாமியின் படத்தை வைத்தார். 18ஆம் தேதி விரைவில் வந்தது, அழகிய நறுமணம் மருத்துவமனையை நிரப்பியது.


என் அம்மா ஆபரேஷன் வார்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு மருத்துவர் அவரிடம் வந்து ஷீரடி சாய் மோதிரத்தை காட்டினார். என் அம்மா அதை உற்றுப் பார்த்துவிட்டு ஸ்வாமியை வேண்டிக் கொண்டிருந்தார். மருத்துவர், “நீங்கள் உங்கள் சாயியிடம் பிரார்த்தனை செய்யுங்கள், நான் என் சாயியிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்றார்.

ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து  முடிந்தது. மருத்துவர் வெளியே வந்து அப்பாவிடம் இந்த நல்ல செய்தியை  சொன்னார். இவ்வளவு கடினமான அறுவை சிகிச்சையை சுவாமியால் மட்டுமே செய்திருக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சில நாட்களுக்குப் பிறகு, ஷீரடி சாயியின் மோதிரத்தைக் காட்டிய மருத்துவருக்கு என் அம்மா நன்றி சொல்ல விரும்பினார். அந்த மருத்துவரை குறித்து விசாரித்தார். மற்ற மருத்துவர்கள்  திகைப்புற்று, அப்படி ஒரு மருத்துவர் இங்கு இல்லவே இல்லை என்று சொன்னார்கள்! மார்ச் 27 அன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


அறுவை சிகிச்சை நன்றாக முடிந்ததற்கு என் தந்தை சுவாமிக்கு நன்றி சொல்ல விரும்பி புட்டபர்த்திக்கு சென்றார். அப்பொழுது சுவாமி பிருந்தாவனத்தில் இருந்தார். ஆனால் மறுநாளே சுவாமி புட்டபர்த்திக்கு திரும்பினார். சுவாமி என் தந்தையை நேர்காணலுக்கு அழைத்தார். சுவாமி சிரித்துக்கொண்டே தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். அடுத்த வார்த்தைகள் மெய் சிலிர்க்க வைத்தது. ஸ்வாமி சொன்னார், “ஆபரேஷன் பண்ணிட்டேன், உன் மனைவி கூப்பிட்டார். நான் வந்தேன், ஒரு மருத்துவர் உன் மனைவியிடம்  சொன்னாரல்லவா; "நீ உன் சாயியிடம் பிரார்த்தனை செய், நான் என் சாயியிடம் பிரார்த்தனை செய்கிறேன்!!" என்று. நான் தான்  அந்த மருத்துவர்” என்று சுவாமி தெறிவித்தார்.


என் தந்தை மகிழ்ச்சியில் திளைத்தார். கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. பிறகு ஸ்வாமி தொடர்ந்தார், “பார், சாயி வேலை கச்சிதமாக இருக்கும், உன் மனைவியின்  தையலில் சீழோ அல்லது வேறு தொந்தரவோ ஒன்றுமே  இல்லை. உடம்பில் உயிர் இல்லை. சுவாமி வந்தேன். அறுவை சிகிச்சை செய்யும் போது ஏன் இவ்வளவு பெரிய ஆபரேஷனை செய்ய எடுத்துக்கொண்டோம் என்று மருத்துவர்கள் நினைத்தார்கள், ஒன்பது நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்தார்கள்" என்றார்!


ஆம், இதுவே இறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் மகிமை. அவர் எல்லா மருத்துவர்களையும் விட பெரிய மருத்துவர். நீங்கள் கவனித்திருந்தால்; என் அம்மா அறை எண் 18ல் இருந்தார் (1+8=9). அவருக்கு 18ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் 27 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் (2+7=9). ஆபரேஷனுக்கான மொத்தச் செலவை கூட்டிப் பார்த்தால் அதுவும் ஒன்பதுதான் என்று என் தந்தை கூறினார். இந்த அனுபவத்தைத் தான்  நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்..


✍️ Rishi Bharadwaj

Class X, Sri Sathya Sai Higher Secondary School

Prasanthi Nilayam


Source: Sai Nandana 1985 (60th Birthday Issue)

தமிழில் தொகுத்தளித்தவர்:  திருமதி சிந்துஜா, நெமிலிச்சேரி சமிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக