எவ்வாறு தங்களது பெயரை ஒருமுறை உச்சரித்தாலே இரு பெரும் அவதாரங்களும் ஆபத்தில் உதவுகின்றனர் எனும் ஆச்சர்யப் பொருத்தப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...
"ஓ அர்ஜுனா! உன் மனதை என்னிடம் சரணாகதி அடையச் செய்! உனது செயல்களை எனக்கே அர்ப்பணி! ஒருமித்த பக்தியில் என்னையே வழிபடு! நான் எப்போதும் எனது ஆத்மார்த்த பக்தர்களை தொடர் பிறப்பு - இறப்பு எனும் ஜென்மச் சுழலில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கிறேன்! நான் உடனடி பாதுகாப்பை அவர்களுக்கு வழங்குகிறேன் காரணம் அவர்கள் என்னையே சதா நினைத்துக்கொண்டே இருப்பதால்... ஆகையால் தான் எனது அருட் கவசத்திலேயே என்னுடைய ஆத்மார்த்த பக்தர்கள் சதா திளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்!"
-- பரிபூர்ணாவதார ஸ்ரீ கிருஷ்ணர்
(ஆதாரம் : ஸ்ரீ மத் பகவத் கீதை 12.7)
"என்னை உங்கள் வாழ்வின் தேரோட்டியாக வைத்துக் கொள்ளுங்கள்! உங்களுடைய ஆன்ம விடுதலைக்காக என்னிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்! வருகிற நாட்களில் எனது தரிசனம் கூட உங்களுக்கு சுலபம் இல்லாமல் போய்விடும்! எட்டு திசைகளில் இருந்தும் எல்லாத வித மக்களும் திரள்வர்! எனது தெய்வீக சக்தி அனைவருக்கும் அடைக்கலம் தரும் ஆன்மீக விருட்சமாகத் திகழும்! உங்களுடைய அறிவாற்றலை என்னிடம் சமர்ப்பித்துவிடுங்கள்! உங்கள் மனதை அழுத்தி வரும் எல்லா பாரங்களையும் என்னிடம் கொட்டிவிட்டு சமாதானமாகவும் எண்ணமற்றும் சந்தோஷமாகவும் இருங்கள்! உங்களை நான் துயரம் தரும் இந்த பிறவிச் சுழலில் இருந்து மீட்டெடுப்பேன்!
நீங்கள் என்னை மறந்தாலும்... ஒருநாளும் நான் உங்களை மறக்கவோ புறக்கணிக்கவோ மாட்டேன்! எல்லா மனிதர்களும் அதில் நாத்திகர்கள் உட்பட அனைவரும் என்னுடையவர்களே! இந்த மனித வடிவத்தை நான் எடுத்ததே எல்லா மனிதரையும் என்னோடு அழைத்துக் கொள்வதற்கே! மேலும் அவர்களுக்கு என் மகிமையை உணர்த்தி பாதுகாப்பையும் முக்தியையும் வழங்குவதற்கே அவர்களை அழைத்துக் கொள்ளவே அவதரித்திருக்கிறேன்!"
-- பரிபூர்ணாவதார ஸ்ரீ சத்ய சாயி
ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் இந்த சத்தியக் கூற்றுக்கு சான்றாக இன்றளவும் ஏராளமான அனுபவங்கள்! அதில் ஒரு சில...
ராஜாரெட்டி எனும் நீண்ட நாளைய பக்தருக்கு திருமணம் செய்து வைக்க பாபா சங்கல்பிக்கிறார்... ஆதாரமாக இருக்கும் பாபா அவருக்கு தாரமாக தேர்ந்தெடுத்தது ஒரு பஜனை பாடகியையே... பழைய மந்திரத்தில் திருமண வைபவம் நிகழ்த்த ஏற்பாடு செய்கிறார்! திடீரென எதுவும் தெரியாதது போல் அந்த மணப்பெண்ணிடம் "உன் பெயர் என்ன?" என்று கேட்கிறார்! "சுவாமிக்கு தெரியாதது ஏதேனும் உலகில் உண்டா?" எனும் படியான ஆச்சர்யத்தில் "தீட்ஷித்" என்கிறார்.. அதற்கு உடனே பாபா அர்த்தப் புன்னகையோடு "தீட்சித் இல்லை ரட்ஷித்" என்று மாற்றி அழைக்கிறார்... ஏன் இந்தப் பெயர் மாற்றம்.. ரட்ஷித் என்றால் காப்பாற்றப்பட்டவர்! எதிலிருந்து? பின்னோக்கிப் பார்த்தால்...
தீட்சித் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்... அப்போது மகாராஷ்டிரா கர்நாடகா மத்தியில் கலவரம் நடந்து கொண்டிருந்தது... அதன் பெயர் "பெல்காம் சர்ச்சை"..பெல்காம் என்ற பகுதியை எந்த மாநிலத்தோடு இணைப்பது.. இது தான் பிரச்சனை... சண்டை ...சச்சரவு... கல்வீச்சு... இப்படி வீதியே 'விதி'யாக மாறி இருந்த காலகட்டம்! செல்வி தீட்சித் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்... அந்த களேபர சமயத்தில் ஒரு நாள் காரில் பயணம் செய்கிறார்... மிகச் சரியாக தெருவில் சண்டை சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது.. சில ரவுடி கும்பல் காரை வழி மறிக்கிறது.. கையில் ஆயுதம்... எப்படி மனதில் வரும் ஓர் இதம்?! தீட்சித்தை கேள்வி கேட்க ஆரம்பிக்கிறது அந்த கும்பல் மிக சப்தமாக... "ஏய் எங்கே செல்கிறாய்? யார் நீ ?" என அதட்ட... திடீரென்று மனதில் தைரியம் பூக்க.. "நாங்கள் புட்டபர்த்தி செல்கிறோம்! பகவான் சத்ய சாயி பாபாவை தரிசனம் செய்ய...!" என்று தீட்சித் சொன்ன மாத்திரத்தில்... பாபா பெயர் கேட்ட அடுத்த நொடி.. மகுடியை கேட்ட பாம்பாய் அந்த விஷ கும்பல் பின்னால் நகர்ந்து சென்றுவிடுகிறது.. பிறகு காரின் பயணம் காரின் (மேகம்) பயணமாய் சுமூகமாகிறது! ஆகவே தான் பாபா "நீ தீட்சித் இல்லை ரட்சித்!" என்றே தான் தீட்சித்தை மீட்டுப் பாதுகாத்த அந்த சம்பவத்தை மறைமுகமாக பொருள் பொதிந்து பேசுகிறார்!
இதே போல் தான் அமெரிக்க நியூயார்க்கில் ஒரு பக்தை... அவர் சாயி யோகினி ஹில்டா சார்லடன் அவர்களால் பாபா வழியில் நடத்தப்படுபவர்! ஒரு முறை அந்தி மாலை இருள.. பார்க்கில் காற்று வாங்க அமர்ந்திருக்கிறார்.. காற்று வாங்கப் போனவர் கவலை வாங்குவது போல் திடீரென ஒரு நபர் அந்தப் பெண்மணி அருகே வந்து கற்பை சூறையாட நினைத்து கையில் சிறு வாள் ஏந்தி பணிய வைக்க முயற்சிக்கிறான்... அங்கே இருவரை தவிர ஆள் அரவமே இல்லை! என்ன செய்வதென தெரியவில்லை அந்த பக்தைக்கு... "சாயிராம் சாயிராம்" என்று கத்துகிறார்.. அந்த சப்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்து "என்ன சொன்னாய்? இதற்கு என்ன அர்த்தம்?" என்று சீறுகிறான் அந்த பெண் விழுங்கிப் பேர்வழி! "அதன் அர்த்தம் அமைதி" என்கிறார் அந்த பக்தை.. அந்த "சாயிராம்" என்ற நாமம் கேட்ட மாத்திரத்தில் பின்வாங்குகிறான் அந்த நபர்.. பிறகு அந்தப் பக்தையை விட்டு ஓட்டம் எடுக்கிறான்!
ஜமுனா தாஸ் படேல் எனும் ஓர் பக்தை புட்டபர்த்தியின் பாபா தரிசனத்தின் போது... "சரியான நேரத்தில் அந்த மருத்துவரின் மிக ஆத்மார்த்தமான பிரார்த்தனை உன்னை காப்பாற்றியது.. அது உனக்கு நினைவில் இருக்கிறதா?" என்று பாபா கேட்கிறார்..
நினைவு சற்று பின்னோக்க...
அது 1971. இதய வலி நேர்கிறது ஜமுனாவிற்கு .. தான்சானியாவில் டாக்டர் சி.ஜே காடியாவிடம் சேர்கிறார்... ஏற்கனவே கடிகாரம் முள் அசைவதை நிறுத்துவது போல் இதயம் துடிப்பை நிறுத்தி இருந்தது... பாபா பக்தரான டாக்டர் காடியாவுக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை.. உடனே பாக்கெட்டில் இருந்த பாபா விபூதியை எடுத்து இதயப் பகுதியில் விபூதியோடும் நன்றாக மசாஜ் செய்கிறார் ஆழ்ந்த பிரார்த்தனையோடும்... சில நிமிடங்களுக்குப் பிறகு ஆச்சர்யமாக இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது... அதன் ஓசை லப் டப் லப் டப் என்று துடிக்காமல் ... சாயிராம் சாயிராம் என்றே துடிக்கும் அளவிற்கு சம்பவம் அற்புதமாகிறது! அதையே தான் பாபா தரிசனத்தின் போது நினைவூட்டுகிறார்!
ஒருமுறை சூரிய நாராயண மூர்த்தி எனும் பக்தர்.. அது ஆந்திர பிரதேசம்! ஞாயிற்றுக் கிழமை! அது 20 ஜுன் 1965. எங்கேயோ அவசரமாக செல்வதால் விஸ்வநாத சர்மாவிடம் பாபாவின் வாழ்க்கையை அவரையே வாசிக்கச் சொல்லி கிளம்புகிறார்! அந்த சமயத்தில் மூர்த்தியின் 4 வயது குழந்தை 15 அடி உயர மாடியிலிருந்து தவறி விழுகிறது... விழுகிற போது அந்தப் பிஞ்சு உதடு "பாபா பாபா பாபா!" என்றே கத்துகிறது! சப்தம் கேட்டு வாசிக்கும் படலத்தை நிறுத்தி அனைவரும் எட்டிப் பார்த்துப் பதைக்கிறார்கள்.. மூச்சு வாங்கியபடி கீழே இறங்குகிறார்கள்! அந்த குழந்தையோ ஒன்றுமே நடக்காதது போல் கண்களை மூடி ஒருவித அதீத நிலையில் இருக்கிறது! ஒரு பொட்டு ரத்தக் காயமோ , கை கால் முறிவோ ஒன்றுமில்லை.. ஏதோ பாராசூட்டிலிருந்து தரை இறங்கியது போல் குழந்தை நார்மலாக அமர்ந்திருக்கிறது! பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம் தாங்கவே இல்லை!
"யார் என்னை உளமாற அழைக்கிறார்களோ! அவர்கள் என்னுடையவர்கள்! எந்த மொழியில் என்னை அழைத்தாலும் அவர்களுக்காக நான் விரைந்து வருவேன்! அது எந்த தேசமானாலும் சரி! அது வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ எங்கே ஆனாலும் சரி! எந்த இடத்திலிருந்து எனை நோக்கி பிரார்த்தனை செய்தாலும் நான் உங்களுக்கு அமைதி தருவேன்! ஏதோ என்னை நீங்கள் பிரசாந்தி நிலையத்தில் மட்டும் இருப்பது போல் குறுகலாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! நான் எங்கும் பரந்து விரிந்தவன்!" என்று ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் மொழிவதற்கு சாட்சியம் கூறும் அற்புத சான்றாதாரங்கள் இன்னும் அநேகம்!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 94 - 98 | Author : Dr. J. Suman Babu )
துரௌபதி "கிருஷ்ணா" என்று அழைக்கையில் சேலை மழையையே பொழிந்தார் சுவாமி! அவள் சேவை கொடுத்தாள்.. ஸ்ரீ கிருஷ்ணரோ சேலை கொடுத்தார்! அதே ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி! கிருஷ்ணா கிருஷ்ணா என்பதும் சாயி சாயி என்பதும் ஒன்றே! எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் இறைவன் பாபா உதவிக்கரம் நீட்டுவார்! அது ஆத்மார்த்தமான அழைப்புக் குரலாக இருந்தால் போதுமானது! ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் கருணைக்கு முன் நமது உலக வாழ்க்கை என்பது அவருக்கே அர்ப்பணமாக்க வேண்டிய ஒரு சிறு துரும்பே!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக