தலைப்பு

சனி, 30 செப்டம்பர், 2023

கால நேர இடத்தையே மாற்றி அமைக்கும் இரு கடவுளவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகத்தின் இரு அவதாரங்களும் கால-நேர - இடத்தின் வர்த்தமானங்களை கடந்து வாழ்வாங்கு வாழ்கிறது எனும் பேராச்சர்ய சான்றாதாரங்கள் சுவாரஸ்யமாக இதோ...!


அது துவாபர யுகம்! கம்சனை ஸ்ரீ கிருஷ்ணர் அழித்து முக்தி கொடுத்துவிட்டார்... கம்சனின் இரு கைகளையும் கோர்த்திருந்த.. இரு கைகளாகவே இருந்த இரு மனைவிகள்.. பெயர் அஸ்தி பிரஸ்தி! அவர்களின் ஒரே ஆஸ்தியான கம்சன் இறந்த பிறகு அஸ்திக்கும் பிரஸ்திக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை அஸ்தியாக்க வேண்டும் என்ற வன்மம்! பழிக்குப் பழி - வதைக்கு வதை! ஆகையால் அவர்களது தந்தையார் ஜராசந்தனிடம் கண்ணீர் வடிக்கிறார்கள்! மகள்கள் மேல் மாளாத பாசம் ஆகவே கொதித்து எழுகிறான் ஜராசந்தன்! 

பாசத்திற்கு கண் இல்லை என்கிற வகையில் கம்சனுக்கு ஏற்பட்ட நிலையை அறிந்திருந்தும் ஸ்ரீ கிருஷ்ணரோடு போர் புரிகிறான்... ஒவ்வொரு போர் இறுதியிலும் ஸ்ரீ கிருஷ்ணர் ஜராசந்தனின் படைகளை அழிக்கிறாரே தவிர ஜராசந்தனை மன்னித்து விடுவிக்கிறார்...இப்படியே 17 முறை... அவனும் வெட்கமே இன்றி மீண்டும் மீண்டும் இறைவனோடே போர் புரிய வருகிறான்! மீசையில் மண் ஒட்டிய பிறகும் அதை 17 முறை துடைத்துத் துடைத்து வாயிலும் மண் விழ அவனே முடிவு செய்து கொள்கிறான்... போரோ ஓயவில்லை.. சுதர்சன சக்ராதி போர் ஆயுதங்களுக்கு ஓய்வே இல்லை! அது 18 ஆவது முறை... காலாயவனா என்பவனோடு சேர்ந்து இறைவனையே போர் புரிய வலை விரிக்கிறான் ஜராசந்தன் ... மதுராவை சுற்றி வளைக்கிறார்கள் அவர்கள்... ஸ்ரீ கிருஷ்ணரை எதுவும் செய்ய முடியவில்லை என்ற கோபக் காரணத்தினால் மதுராவாசிகளை வதைக்கலாம் என்ற திட்டம் ஜராசந்தனின் துரு பிடித்த மூளைக்கு...


எந்த மூலையிலும் எவன் மூளையிலும் ஊடுறுவும் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் இதனை அறிந்து கொண்டு தனது மதுரா மக்களை இரவோடு இரவாக அப்படியே துவாரகையை எழுப்பி அங்கே குடி அமர்த்துகிறார்! அதுவும் அவர்கள் தூங்குகிற நேரத்தில்... அடுத்த நாள் அவர்களுக்கு வேறொரு பிரம்மாண்ட இடத்தில் விடிகிறது! விடிந்து எழுந்து திகைத்துப் போகிறார்கள் மதுரா வாசிகள்! அந்த ஜராசந்தன் அப்படியே காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போகிறான்.. அவன் குதிரைக்குக் கால் கடுத்தது தான் மிச்சம்! இப்படி கால நேர இடத்தையே இம்மி அளவும் பிசகாமல் மாற்றி அமைத்து காவலாகிறார் , அமாவாசையையே மாற்றி அமைத்த சாமர்த்திய பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்!

(ஆதாரம் : ஸ்ரீமத் பாகவதம் - 10: 1520)


இதே போலவே ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரிக்கையில்.. பல இடம் மாற்று தெய்வீக சம்பவ லீலைகள் புரிந்திருக்கிறார்! 

        ஒருமுறை காசித் துறவி ஸ்ரீ விரஜானந்தா புட்டபர்த்திக்கு வருகிறார்...! காசியில் அவரது ஆசிரமம் தசஸ்வமேதா காட்'டில் இருக்கிறது! அவருக்கு ஏராளமான சீடர்கள் இருக்கிறார்கள்!

அவர் பாபா இறைவன் என கேள்விப் பட்டு பர்த்தி விஜயம் புரிகிறார்! அவர் மட்டுமல்ல அவர் தனது சீடர்களையும் அழைத்து வருகிறார்! ஆனால் பாபாவோ அவரை கண்டு கொள்ள கூட இல்லை! பாபாவின் அன்றாட ஆன்மீக சேவை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது! ஆனால் விரஜானந்தா மீது மட்டும் பாராமுகம்! சலிப்பாகிறார் சுவாமிஜி! அந்த காசிக் காற்று தனக்குள்ளே சூறைக் காற்றாகிறது!


"பாபா வெளிநாட்டவர்க்கு மட்டுமே இறைவன்! இல்லை என்றால் இப்படியா நடந்து கொள்வார்...? துறவிகள் நாம் ஏழைகள்.. ஆகவே தான் இந்தப் பாராமுகம்!" என அவரே விரக்தியில் ஒரு முடிவுக்கு வந்து புட்டபர்த்தியில் இருந்து கிளம்பி விடுகிறார்... கங்கையில் தாமரை மிதக்காமல் வேப்பங் கொழுந்து மிதப்பது போல் கசந்து போகிறது அவர் மனம்! பிரசாந்தி நிலைய ஆசிரமத்தில் அவர் சாப்பிடக் கூட இல்லை...அங்கிருந்து தர்மாவரம் சென்று தனது சீடர் பரிவாரங்களோடு தங்கிக் கொள்கிறார்! சில நேரங்களில் அவரை தேடி ஒரு கார் வருகிறது.. அதில் பாபா அனுப்பிய நபர் அவரை அழைத்துப் போக வருகிறார்! பாபா "மிகச் சரியாக அங்கே இருக்கிறார்!" என்று இடம் சொல்லி அனுப்பியதால் சரியாக வந்து சேர்கிறார் அந்த நபர்... அவர் ஒரு சேவாதளர்! ஆனால் சுவாமிஜியோ தரையில் பசை தடவியது போல் எழுந்து கொள்ளவே இல்லை.. வரமுடியாது என்று சப்தம் போட்டு மறுக்கிறார்.. மீண்டும் "பாபா பணக்காரர்களின் கடவுள் தான்!" என்று ஆரம்பிக்கிறார்! 

வந்த நபரோ "சுவாமிஜி தாங்கள் வராமல் நான் இந்த இடம் விட்டு அசையக் கூட மாட்டேன்!" என்று சேவைப் பிடிவாதம் பிடிக்கிறார்! சரி என்று சுவாமிஜி கிளம்ப... புட்டபர்த்தி வர... ஆசிரமத்தில் பாபா அவரை பார்த்ததும் அன்போடு வரவேற்கிறார்.. சுவாமிஜி தனது ஆதங்கத்தைக் கொட்ட வருகையில் அவரை இடைமறித்து இரவு உணவு சாப்பிட அழைக்கிறார் பாபா! தன்னோடு அமர வைத்து உண்ண வைக்கிறார்! 

பிறகு பாபா அவரை அருகே அமர்த்தி தன் உள்ளங்கையை காண்பிக்கிறார்.. வேர்த்து வழிகிறது சுவாமிஜிக்கு...!

ஆம் அந்த உள்ளங்கையில் சுவாமிஜியின் காசி ஆசிரமம் , அவரது சீடர்கள் தெரிகிறார்கள்! 

"துறவு என்பது ஆசிரமம் மற்றும் சீடர்கள் மேல் பற்று வைப்பதா? அதை மேலும் விரிவடையச் செய்ய வேண்டும்.. புகழ் பரவ வேண்டும் என்று நினைப்பதெல்லாம் வெறும் பற்று தான்.. அதற்குப் பெயர் சன்யாசமா?" என்று பாபா விளக்கியதில் உண்மை உணர்ந்து பாபாவின் காலடியில் விழுகிறார் சுவாமிஜி விரஜானந்தா! மனம் திருந்தி "சரி! விடைபெறுகிறேன்!" என்று சுவாமிஜி உத்தரவு கேட்ட போது.. பாபா அவரை அமரச் சொல்லி கண்களை மூடச் சொல்கிறார்.. அவரும் அவ்வாறு செய்யவே.. அடுத்த நொடி இமை திறக்க அவரால் அதனை நம்பவே முடியவில்லை‌... அவர் அந்த இரவு தங்கி இருந்த தர்மாவரத்தில் இருக்கிறார்! ஒரே ஒரு நொடியில் பாபா அவரை 25 கி.மீ இட மாற்றம் புரிந்து விடுகிறார்! 


இதைப் போலவே இன்னமும் அகலமாக வேறொரு இட மாற்றம் பேராச்சர்யம் தருகிறது!

அது 1993 ஆம் ஆண்டு!

 29 நவம்பர் அன்று ... அது நேர்காணல் அறை! ஆன்மீக விஷயம் பேசிக் கொண்டிருக்கிறார் பாபா! அங்கே எட்டு ஆஸ்திரேலியா பக்தர்கள் இருக்கிறார்கள்! ஒருவர் சோகமாக இருக்க... பாபா "உன் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை தானே!" என்று விசாரிக்கிறார்! அவர் பாபாவோடு எதையும் பகிரவில்லை... ஆனால் பாபா அப்படி கேட்டவுடன் ஆச்சர்யமும் சோகமும் அவருக்கு.. ஆம்! என பதில் அளிக்கிறார்! "நீ அங்கே செல்ல வேண்டும் அல்லவா?" எனக் கேட்கிறார் பாபா! "ஆம்! ஆனால் இப்போது இங்கே இருக்கிறேன்!" என்கிறார் ஆஸ்திரேலிய பக்தர்!


  "எப்போது அவளை காண செல்லப் போகிறாய்?" என்று பாபா மீண்டும் கேட்க.. "இந்த நேர்காணல் முடிந்த உடனே!" என்கிறார்! "இல்லை இல்லை இப்போதே செல்!" என்று பாபா புதிர் பதில் அளிக்க... "எப்படி?" என்று அந்த பக்தர் குழம்ப... பாபா சுவரை காட்டுகிறார்‌... அதில் அவரது தேசம், நகரம் எல்லாம் கண் முன் ஒரு கலர்ப் படமாக (like An Artificial intelligent Screen) தோன்றுகிறது! "இது தானே உன் வீடு?" என்று பாபா சுட்டிக் காட்ட.. ஆம் என்று பதில் ஆச்சர்ய தொனியில் வருகிறது.. "போ இதற்குள்ளே போ!" என்கிறார்... என்ன இதற்குள்ளா? என ஆச்சர்யப்பட்டு சுவற்றுக்கு அருகே வர அந்த Artificial intelligence போன்ற வரைபடமான அதற்குள் நுழைந்து விடுகிறார்! உடனே அவர் மறைந்தும் விடுகிறார்! 

"அவரது பெட்டிப் படுக்கையை நீங்கள் அங்கே செல்கிற போது கொண்டு போய் கொடுத்திடுங்கள்!" என்று அந்த 7 பேரிடம் ஞாபகமோடு தெரிவிக்க.. இவர்களோ நேர்காணல் முடிந்து தொலைபேசியில் அந்த 8 ஆவது நபரை அழைத்து விசாரிக்க... நேர்காணல் அறையில் மறைந்த அந்த நபர் மறுமுனை தொலைபேசியில் தான் வீட்டுக்கு வந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கிறார்! ஆச்சர்யத்தில் அந்த 7 ஆஸ்திரேலியா பக்தர்களின் இதயமும் ஆரோஹணமாய் குதூகலத்தில் ஏறிப் போகிறது!

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 102 - 106 | Author : Dr. J. Suman Babu )


இப்படி ஒரு முறை பொது தரிசனத்திலேயே ஆள் உயர உலக வரை படம் உருவாக்கி இதில் உன் தேசம் எங்கிருக்கிறது? , அதில் எந்த நகரம்? எந்தப் பகுதி என்றெல்லாம் அதில் சுட்டிக் காட்டி... அப்படியே பாபா ஒரு வெளிநாட்டவரை மறையச் செய்திருக்கிறார்..‌ இதை நேரில் பார்த்த பக்தரே அடியேனோடு அதே ஆச்சர்யம் பொங்கப் பொங்கப் பகிர்ந்திருக்கிறார்! அந்த மகிமை சம்பவத்தைப் பகிர்ந்த எனது நண்பர் திருச்சியில் வசிக்கிறார்! அவர் பெயர் சுந்தர் ஆனந்த்! 

இப்படி இறைவன் பாபாவின் மகிமைகள் கடலளவு... நாம் அறிந்ததோ / அனுபவித்து வருவதோ வெறும் கையளவே! இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.. காரணம் பாபாவே சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணர்! அவர் துவாபர யுகத்தில் செய்த மகிமைகளைத் தான் யுகத்திற்கு தகுந்தாற் போல் செய்து கொண்டே வருகிறார்!


பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக