ஒரு பக்தையின் மகளுக்கு குழந்தையே இல்லை... பரிதவித்து பல்வேறு பரிகாரம் செய்தும் எதுவும் பலிக்கவே இல்லை! இதில் ஒரு மந்திரவாதி வேறு சவால் விடுகிறார் , அது என்ன சவால்? அந்த பக்தை என்ன செய்தாள்? குழந்தை பிறந்ததா? இல்லையா? சுவாரஸ்யமாக இதோ...!
அவள் பெயர் விமலா! அவளின் மூத்த மகளுக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தையே இல்லை! சுற்றாத இடம் இல்லை! செய்யாத பரிகாரம் இல்லை! சுற்றத்தினரின் வற்புறுத்தலால் வேண்டாத தெய்வங்களே இல்லை! ஏறி இறங்காத கோவில்களும் இல்லை! முட்டி தேய்ந்தது தான் மிச்சம்! வயிற்றில் பாரம் ஏறாததால் இதயத்தில் பாரம் ஏறியது! என்ன கர்மாவோ?! பாபா எப்போது அந்த கர்மாவை தீர்ப்பாரோ? அந்த அங்கலாய்ப்பு ஒரு புறம்... எங்கெங்கோ சென்று பரிகாரம் என்கிற பெயரில் வீண் அலைச்சல் மறுபுறம்!
புட்டபர்த்திக்கு விஜயம் புரிகிறாள் விமலா! பேரிறைவன் பாபா அருகில் கூட வரவில்லை! இரண்டு முறை தரிசனங்களிலும் இப்படியே! ஆதங்கம் தாளவில்லை! அடுத்த தரிசனத்திற்கு செல்லாமல் அறையிலேயே அழுகிறாள்! அவள் அழுகிற நேரம் எதையோ யோசித்தபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கிறார் பாபா, பிறகு சிம்மாசனத்தில் அமர்கிறார் ! மனம் கேட்கவில்லை... மீண்டும் தரிசனத்திற்கு வந்து விடுகிறாள் விமலா!
இப்படி ஒருமுறை பக்தை விமலா தனது இரண்டாவது மகளுக்கும் மகப்பேறு அருள வேண்டி பேரிறைவன் பாபாவிடம் மன்றாடுகிறாள்! மூத்த மகளுக்கு செய்தது போலவே இளைய மகளுக்கும் உற்றார் உறவினர் உந்தித் தள்ள ஏகப்பட்ட பூஜை - பரிகாரங்கள்! சரி அனுமனின் திருப்பாதங்களை பிடிப்போம் என்று அவருக்கும் பூஜை! பாபா தான் ஸ்ரீ ராமராயிற்றே அனுமனை வழிபட்டால் பாபாவிடம் இந்த விஷயத்தை எடுத்துச் செல்வார் - எடுத்துச் சொல்வார் என்ற ஒரு ஆழமான உணர்வு!
பிறகு புட்டபர்த்திக்கு வருகிறார், அங்கே எப்போதும் இல்லாதது போல் ஆஞ்சநேயர் பஜனை பாடப்படுகிறது! ஆனந்தப்படுகிறாள் விமலா! தரிசனத்தின் போது பாபா அவள் அருகே வந்து வேறொருவரின் சொல்வது போல் சொல்லிவிட்டு நகர்கிறார்.. அந்த வார்த்தை அவளுக்கே சரியாகப் பொருந்துகிறது! அந்த வார்த்தை வார்த்தை அல்ல... ஒரே ஒரு சொல் தான்.. ஆனால் அதற்குள் ஒரு கடலே ஒளிந்திருக்கிறது! அந்தச் சொல் "ரெக்கமென்டேஷன்" (recommendation) ஆஞ்சநேயரிடம் விமலா சென்றதே அதற்குத் தானே.. ஆக பாபா சொல்லி, அதைக் கேட்க வியந்தே போகிறாள் விமலா!
முதல் மகளுக்கோ மகப்பேறு மருத்துவர் கூறிய பதில் அதிர்ச்சியை அளிக்கிறது! குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை , தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று வேறு ஆலோசனை வழங்குகிறார்! மனம் வலிக்கிறது, பிறகு
ஹோமங்கள் செய்யும் ஒரு மந்திரவாதியிடம் அணுக... ஏதேதோ பெரிய பெரிய யாகம் செய்யச் சொல்லி பெரிய பெரிய செலவை இழுத்துவிடுகிறார்! விமலாவோ பின் வாங்குகிறாள்! "பிறகு, என்ன தான் செய்ய உத்தேசம்?" என்று அந்த மந்திரவாதி கேட்க... "எங்களுக்கு பாபா மீது நம்பிக்கை, அவர் செய்கிற போது செய்யட்டும் என்று விட்டுவிடப் போகிறோம்!" என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிற போது, மந்திரவாதி ஆணவத் தொனியோடு "உங்கள் பாபாவுக்கோ, இந்தப் பெண்ணுக்கு அனுகிரகம் ஒன்றுமே செய்ய இயலாது!" என்று தன்னிடம் மீண்டும் வியாபார நோக்கில் இழுப்பதற்காப் பேசுகிறார்! இதற்காகவே பாபா அவளுக்கு அந்தப் பேறு அருள வேண்டும் என்ற ஒரு அங்கலாய்ப்பு விமலாவுக்கு அதிகமாகிறது! அவர் விட்ட சவாலை சந்திக்கிறது பேரிறைவன் பாபாவின் சங்கல்பம்! அந்த சவால் விடுத்த ஒரே மாதத்தில் விமாலாவின் மூத்த மகள் கருவுறுகிறாள்! பிறகு விமலா புட்டபர்த்தியில் இருக்கும் போதே குழந்தை பிறந்த நற்செய்தியும் கிடைக்கிறது! குழந்தையின் ஆயுஷ் ஹோம அழைப்பிதழை பாபாவிடம் கொண்டு செல்கிற போது, பாபாவே வந்து, அந்தக் கடிதத்தை புன்னகையோடு வாங்கிக் கொள்கிறார்! இப்படி இரு மகளுக்கும் இனிதே குழந்தைகளும் பிறக்கிறது!
இதைப் போல் இன்னொரு சவால்.. இதை விடுத்தது இன்னொரு மந்திரவாதி அல்ல மருத்துவரே! சாயி பக்தை கௌசல்யா ராணியின் முதல் குழந்தைக்கு கட்டி ஏற்படுகிறது! டாக்டர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்! இதற்கு முன் அறுவை சிகிச்சை அனுபவம் நிகழ்ந்ததில் அதனை தவிர்க்க முயற்சி செய்கிறார்.. வேறு வழி ஏதேனும் இருக்கிறதா? என்று டாக்டரிடம் கேட்கையில், அதற்கு டாக்டர் "நீங்கள் பாபா பாபா என்று தெய்வமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே! அவர் வேண்டுமானால் குணப்படுத்தட்டும்!" என்று சொல்கிறார்!
இதையே சவாலாக எடுத்துக் கொண்டு, அந்தக் கட்டியின் மீது விபூதி பூசிக் கொண்டு இருக்க..அந்தக் கட்டியும் கரைந்து காணாமல் போய்விடுகிறது!
விடுவதாக இல்லை என்று "இப்போது நீங்களே சொல்லுங்கள்! எங்கள் பாபாவின் சக்தி பற்றி? அவர் இறைவனே என்பதைப் பற்றி?" என்று கௌசல்யா ராணி கேட்க...
"நான் அன்று பேசியது தப்பு! எக்ஸ்க்யூஸ் மீ (excuse me)" என்கிறார்!
(ஆதாரம் : அற்புதம் அறுபது | பக்கம் : 45 - 53 | ஆசிரியர் - அமரர் ரா.கணபதி)
காற்றிடம் மூச்சு சவால் விட்டு என்ன நேர்ந்துவிடப் போகிறது! தாயிடம் பிள்ளைகளே சவால்விட்டாலும் தாய் கடிந்து கொள்வதே இல்லை! பல தாய் புலம்புகிறாள், சில தாய் சொல்லியும் திருந்தாத மனம் பட்டு புத்தி வரட்டும் என்று காத்திருக்கிறாள்! அதில் ஒரு தாய் சாய்! அனுபவப் பாடத்தைக் விட ஆன்மீக சாஸ்திரங்கள் கூட மனிதனுக்கு ஆழமான ஞானம் தந்துவிடுவதில்லை! வேதனை தரும் சோதனையை காட்டிலுமான உயரிய போதனை இல்லை! பக்குவம் விளக்கிடாத ஒரு சிறந்த ஆன்ம தத்துவம் உலகத்தில் எதுவுமே இல்லை!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக