தலைப்பு

வியாழன், 4 ஜனவரி, 2024

"உலகத் தலைவர்களையே உருவாக்குகிறார் ஸ்ரீ சத்ய சாயி பாபா!" - மனம் திறக்கும் காந்தியவாதி வி.கே.நரசிம்மன்

The entire book of 'Bapu to Baba' by V. K. Narasimhan has been condensed into a single post.

மகாத்மா காந்தியின் அறவழியில் ஈர்க்கப்பட்ட வி.கே நரசிம்மன் நீண்ட நெடிய நேர்மையான பத்திரிகையாளராக திகழ்ந்து , அதன் வாயிலாக பாபாவின் ஆன்மீக அணுகுமுறையை எவ்வாறு உணர்கிறார்? என்பது மிகத் தெளிவாக சுவாரஸ்யமாக இதோ...


இவர் பெயர் வி.கே நரசிம்மன்! இவரது சிறு வயதிலேயே மகாத்மா காந்தியால் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்! ஆனால் இவருடைய இளமைக்காலத் துடிப்போ மார்க்ஸிய சிந்தனையிலும் தூண்டப்பட்டு பிறகு மகாத்மா காந்தியின் அறவழியே சரியென உலக நாட்டு நடப்புகளை உற்று கவனித்த பிறகு உணர்ந்து கொள்கிறார்!

தேச இயக்கத்தை மகாத்மா காந்தியின் தனித்துவ குரலே தேச விடுதலையை நோக்கி பெரிதாக ஈர்த்து வழிநடத்துகிறது! வி.கே நரசிம்மருக்கு சின்னஞ்சிறிய வயது என்பதால் மகாத்மாவின் அகிம்சை , சத்தியம் , சத்தியாகிரகம் போன்றவற்றை முழுமையாக உணர முடியவில்லை, ஆயினும் மகாத்மா காந்தி மீதுள்ள ஈர்ப்பு ஆன்மா வரை நிரம்புகிறது! 


அப்போது அவருக்கு வெறும் 8 வயதே! அப்போது இதயத்திலிருந்து ஒலித்து திசைதோறும் எதிரொலித்த "வந்தே மாதரமும் - பாரத் மாதா கி ஜெய்'யும்" சிறு வயது நரசிம்மரின் உறுமல் கர்ஜனை ஆனது! அவரே நரசிம்மர் தானே! சுதந்திரத்திற்கான கனல் மகாத்மா காந்தியால் அவருக்குள் ஏற்றப்படுகிறது!


அது 1921 ஆம் ஆண்டு , மகாத்மா காந்திஜி பிரிட்டிஷ் அரசாங்க வெள்ளையர்களின் உடையை புறக்கணிக்கும் புரட்சியில் சிறு வயது நரசிம்மரும் ஈடுபடுகிறார்! தன்னிடம் இருந்த அத்தனை வெளிநாட்டுத் துணிகளையும் எரிப்பதற்கு காந்திய தன்னார்வலத் தொண்டரான ஒரு இஸ்லாமியரிடம் ஒப்படைக்கிறார்! பொதுவாக சிறுவர்களுக்கு உடை மீது இருக்கும் பிரியத்தை விட இளம் நரசிம்மருக்கு மகாத்மா மீதிருந்த பிரியமே அதிகமாக இருந்தது! ஆந்திரா சித்தூரே வி.கே.நரசிம்மர் (வி.கே.என்) அவர்களது சிறுவயது வாசஸ்தலம்! அப்படி வெளிநாட்டுத் துணிகளை புறம்தள்ளுகிற அந்த ஆண்டு 1921 , மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்ததாகப் பதிவு செய்கிறார் இவர்! 

அடுத்த பத்து வருடமும் அதாவது 8 வயது முதல் 18 வயது மிகத் தீவிர காந்தியவாதியாகவே அகம் மாறுகிறார் வி.கே.என்! தேசத்தின் தேசிய இயக்கத்தில் ஈடுபடுகிறார்! கல்லூரி பயில்கிற வி.கே.என் அப்போது சைமன் (புறக்கணிப்பு) கமிஷனிலும் பாடுபடுகிறார்! 

1930'ல் தண்டி யாத்திரை மற்றும் 1931 ஆம் ஆண்டின் சட்ட மறுப்பு இயக்கம் போன்றவற்றில் ஈர்க்கப்படுகிறார்! அந்த இளம் வயதில் என்ன தான் மார்க்ஸிய சித்தாந்தம் , சில நேர்மையான மார்க்ஸியவாதிகளின் உரைகளால் பெரிய பாதிப்பை மூளையில் ஏற்படுத்தினாலும், மகாத்மா வழியிலேயே புனிதமும் , கண்ணியமும் , நேர்மையான மற்றும் இனிமையான சத்தியம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறார்! அவரது மார்க்ஸிய மூளையை அவரது காந்திய இதயமே வெல்கிறது!

 சமூக- பொருளாதார அணுகுமுறையில் மார்க்ஸிய சிந்தாந்தத்தை விட காந்திய சித்தாந்தமே மூர்க்கத்தனமற்று, மன ரணங்களைத் தராமல் இயங்குவதாக நிதர்சனமாக உணர்கிறார்!


அரசியல் ஈடுபாட்டால் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வி.கே.என் கைது செய்யும் நிலைமை வரைச் செல்கிறார்! சிறை அல்லது 500 ரூபாய் அபராதம் என்ற நிபந்தனைக்குத் தள்ளப்பட.. அபராதம் கட்டியதில் அவருக்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பில்லை, ஆகையால் அந்த சூழலே அவரை பத்திரிகைத் துறையில் தள்ளுகிறது! மிக நேர்மையான பத்திரிகையாளராகத் திகழ்கிறார்! 

35 வருடம் ஹிந்து, 10 வருடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஃபைனான்ஸ் எக்ஸ்பிரஸ் , 3 வருடம் டெக்கான் க்ரோனிக்கல் என பிரபலமான பத்திரிகையிலும் வேலை பார்க்கிறார்! 

மார்க்ஸிய மாயை அவருக்கு சர்வாதிகாரிகள் நிகழ்த்திய உலக சேதத்தால் நீங்கிவிடுகிறது! 

போர் சமயங்களில் இந்திய தேசத்திற்கான முன்னெடுப்புகளை, மேம்பாடுகளை காந்திய அணுகுமுறையே தந்தது என்பதை அனுபவப்பூர்வமாக வி.கே.என் பதிவு செய்கிறார்! கம்யூனிஸமோ, மார்க்ஸிஸமோ போர் சமயங்களில் தேச பக்தியோடு நடந்து கொள்ளவில்லை என்பது அவரது அனுபவம்! 1947'ல் சுதந்திரம் அடைந்த பிறகு கம்யூனிஸமும் தனது நேர்மைத்தன்மையை இழந்துவிட்டதாக பதிவு செய்கிறார்! 

ஸ்வராஜ்யா பத்திரிகையில் 1960'ல் தனது ஆழமான வருத்தத்தை ஒரு கட்டுரையின் வழி (Source : The Indian Review, January , 1981) கண்கலங்குகிறார்! 


மகாத்மா காந்தி மறைந்த பிறகு தேசத்தின் மிகப் பெரிய முதுகெலும்பே ஒடிந்து போனதாக உளமாற அதைப் பதிவு செய்கிறார்! தேசத்தின் புற மேம்பாடுகளை தேசத்தின் அப்போதைய தலைவர்கள் கவனம் செலுத்தினார்களே தவிர அக மேம்பாட்டை கவனிக்கவே இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார்! 

தேசத்திற்கும் ஏழை மக்களுக்கும் அணைகள் தேவை, சாலை வசதிகள் தேவை ஆனால் அதை எல்லாம் விட மிக முக்கியமாக பண்பு நலன்கள் மக்களிடையே மிகவும் தேவை , அது குறைந்து போய்விட்டதாக அழுத்தம் திருத்தமாய் உள்ளதை உள்ளபடி எழுதுகிறார் வி.கே.என்! 

அவரின் அனுபவத்தில் மகாத்மா காந்தியின் அற வழியை விட ஒரு மடங்கு அதிகமானது பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சமூகப் பங்கு, ஏனெனில் சுதந்திரத்திற்குப் பின் மகாத்மா காந்தி எந்த தேசப் பொறுப்பையும் ஏற்று , அரசாட்சி புரியவில்லை.. அவருக்கு அதன் மேல் பற்றே இல்லை! சபர்மதி ஆசிரமத்தில் பாபாவின் ஆசிரமத்தைப் போலவே பண்பும் ஒழுக்கமும் நிறைந்திருந்த போதும், பாபா தலைவர்களை உருவாக்குகிறார் , அதுவும் ஜாதி-மத பேதம் கடந்து உலக தேசங்களுக்கான தலைவர்களை தார்மீக ரீதியில் உருவாக்கும் ஆன்மீக சமூக சேவையைச் செய்து வருகிறார் என்பதை வி.கே.என் தான் கண்ட அனுபவத்தைப் பகிர்கிறார்! அரசியலையும் மத பேதமற்ற ஆன்மீகமயமாக்க, அன்புமயமாக்குவதை பாபா இயங்கி வருவதை வி.கே.என் உணர்கிறார்! சுதந்திரம் அடைந்த பல ஆப்ரிக்கா கண்டங்களின் தலைவர்கள் தங்களது தேச மேம்பாடு குறித்த ஆலோசனைகளை பாபாவிடம் கேட்டு நடப்பதை வி.கே.என் குறிப்பிடுகிறார்! 


பிரசாந்தி நிலையத்தில் 1980'ல் நவம்பர் 19 முதல் 25 வரை பாபா நிகழ்த்திய உலக மாநாட்டிற்கு 2,500 உலக தேசத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதை ஆச்சர்யமாக வி.கே.என் கவனிக்கிறார்! வெறும் வாய்மொழியால் அல்ல வாழ்ந்து காட்டுபவர், மக்களால் அவதாரம் என்று கொண்டாடப்படுபவர் ஸ்ரீ சத்ய சாயி பாபா என்பதை தெள்ளத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்! 


பாபாவிடம் ஒருமுறை உங்களின் எத்தனை பக்தர்கள் உங்களின் நினைவில் இருக்கிறார்கள் என்று வி.கே.என் கேட்கிற போது பாபாவோ "அனைவருமே!" கோடான கோடி பேர்களையும் நான் நினைவில் வைத்துக் கொள்கிறேன்! ஏனெனில் அவர்களை நான் நேசிக்கிறேன்! நேசிக்காத ஒன்றை நீங்கள் மறந்துவிடுவீர்கள்! நேசிப்பதாலேயே நான் யாரையும் எதையும் மறப்பதே இல்லை!" என்று பாபா பதில் பொழிகிறார்! மேடையில் ஞான உரையாடல் பேசிவிட்டு சில சமயங்களில் "எப்படி இருந்தது எனது உரையாடல்?" என்று வி.கே.என்'னிடம் கேட்பார் , அப்படி கேட்கிற ஒருமுறை பகவத் கீதை பற்றி பாபாவின் ஒரு புதிய கோணம், அதை அவர் சுட்டிக்காட்டிய போது ஆம் என்று பாபா புன்னகையோடு ஆமோதித்திருக்கிறார்! 


நேரம் தவறாமைக்கும் , நேரத்தை எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் மகாத்மா காந்தியும், பரமாத்மா பாபாவும் உதாரணமாகத் திகழ்கிறார்கள் என்கிறார் வி.கே.என்!

ஒருமுறை 1941 ஆம் ஆண்டு செப்டம்பர் , மகாத்மா காந்தியை வி.கே.என் தனது மனைவியோடு தரிசிக்கச் செல்கிறார், ஒரு ஹிந்து ரிப்போர்ட்டர் வழி... பல திருக்கோவில்களுக்குச் சென்று அப்படியே காந்திஜியையும் தரிசிக்கச் செல்ல... காந்திஜியோ அவரோடான தனது உரையாடலின் உட்பொருளாக அடுத்தவர் பணம் மற்றும் நேரத்தில் நமது சொந்த வேலைகளை கவனித்துக் கொள்வது தவறு என்கிற சுயநலப் போக்கை போகிற போக்கில் சுட்டிக்காட்டி அவரை சுத்தீகரிக்கிறார்! நேர்மையின் சிகரம் மகாத்மாஜி! இரண்டே இரண்டு நிமிடம் என்று வி.கே.என் தம்பதிகளை அழைத்துப் போனவர் கேட்டதால் சரியாக இரண்டே இரண்டு நிமிடம் பேசிவிட்டு தான் பேசிக் கொண்டிருந்த ராஜேந்திர பிரசாத் அவர்களுடன் தனது பேச்சை தொடர ஆரம்பிக்கிறார்! அதுவும் கையில் இராட்டைச் சுற்றலோடு! அப்படி ஒரு துல்லிய நேரச் சிக்கனம் மகாத்மா காந்திஜி! எவரேனும் தன்னை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கினால் அவர்களோடு எதுவும் பேசாமல் இராட்டைச் சுற்ற ஆரம்பிப்பது மகாத்மாஜியின் வழக்கமாம்! அந்தக் "கதர் கதிர்" தான் எத்தனை கடமை வெளிச்சத்தை தேசத்திற்கு விட்டுப் போயிருக்கிறது!

அது போல் புட்டபர்த்தி சென்று வந்த பிறகு "யாரேனும் கடவுள் இருக்கிறாரா? பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டால் பயமோ தயக்கமோ கூடாது , கடவுள் புட்டபர்த்தியில் தான் இருக்கிறார் என்கிற அவரவர் அனுபவங்களை பிறரிடம் வெளிப்படையாகப் பகிர வேண்டும் என்று வி.கே.என் விவரிக்கிற போது எப்பேர்ப்பட்ட அனுபவ பக்தராக அவர் திகழ்கிறார் என்பதை இதன்வழி உணர முடிகிறது! 

(Source - Bapu to Baba | Chapter 1 - A Journalist's odyssey | Page : 3 - 10, 157,162) | Author : V.K. Narasimhan) 


வி.கே.என் அவர்களுக்கு பாபுஜியான மகாத்மா காந்தியடிகளும், பாபாவும் இரண்டு கண்கள்! மகாத்மாவை நன்கு உணர்ந்து அவரால் மன மேம்பாடு அடைந்து, பூரண ஆன்மீக மேம்பாடு அனுபவிக்க பரமாத்மா பாபாவிடம் வந்து சேர்கிறார் வி.கே.என்! காந்தியின் அறவழியே பாபாவின் வழியும், மேலும் செயல்வழி ஆன்மீகமே பாபாவின் ஆன்மீகம்! மகாத்மா காந்தியின் அப்போதைய தேச சூழ்நிலை புற விடுதலையை பிரதானமாகக் கொண்டே இயங்கியது , ஆனால் பாபாவின் வழியோ அக விடுதலை வழியே புற விடுதலை என்கிற பூரண ஆன்மீக  வழியிலேயே அமைகிறது! மகாத்மா காந்தி எனும் தூய்மையான ஜீவ நதி பாபா எனும் சமுத்திரத்துடனேயே தனது புனித இருப்பை தர்ம அலை வழி இன்றளவும் அர்ப்பரித்துக் கொண்டே இருக்கிறது! உலகில் கடைசி நல்ல மனிதர் இருக்கிற வரை காந்தியோ காந்தியமோ அழிவதே இல்லை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக