எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் தனது பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்து தனது தெய்வீக சுயரூபம் ஆட்கொண்டனர் எனும் ஆச்சர்ய ஆனந்தப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
அது துவாபர யுகம்!
"ஓ இறைவா ஸ்ரீ கிருஷ்ணா! உன்னுடைய பர ஞான பெரும்புகழையும், பெருஞ்சக்தியையும் , பேராற்றல் வலிமையையும் , இரு கண்களால் தரிசிக்க வேண்டும் என பேரார்வமும் பேருந்தாகமும் கொண்டிருக்கிறேன்! "உன்னுடைய பிரபஞ்ச பரவச ரூபத்தை எனக்கு திறந்தருள மாட்டாயா?" என்று அர்ஜுனர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் உருகி வேண்ட...
அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரோ
பஷ்ய மே பார்த ரூபாணி
ஷதவோ (அ)த ஸஹஸ்ரஷ:
நானா-விதானி திவ்யானி
நானா-வர்ணாக்ருதீனி ச
பஷ்யாதித்யான் வஸுன் ருத்ரான்
அஷ்வினெள மருதஸ் ததா
பஹூன்-யத்ருஷ்ட-பூர்வாணி
பஷ்யாஷ் சர்யாணி பாரத
இஹைக-ஸ்தம் ஜகத் க்ருத்ஸ்னம்
பஷ்யாத்ய ஸ-சராசரம்
மம தேஹே குடாகேஷ
யச் சான்யத் த்ரஷ்டும் இச்சஸி
(ஆதாரம் : ஸ்ரீ மத் பகவத் கீதை 11: 5,6,7)
ஓ அர்ஜுனா! ஆயிரமாயிரம் ரூபங்களும் , நிறங்களும் வடிவங்களும் எனக்குள் ஐக்கியமாகி இருக்கின்றன... அதனை அஸ்வினி குமாரர்கள், 42 மாருத்யாதிகள் இந்த பிரம்மாண்ட உருவினை கண்டிருக்கிறார்கள்! என்னுடைய இந்த உடம்பில் ஒட்டு மொத்த பிரபஞ்சமே உள்ளடங்கி இருக்கிறது!" என்று இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் மொழிந்து தனது விஸ்வரூப தரிசனத்தை காட்டுகிறார்! வானமே அதற்கு தன்னை விரிவாக்கித் திறந்து கொள்கிறது! அந்த விஸ்வரூபத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் பல்வேறு விதமான உலகிலும் பூத்த பூமாலையை அணிந்து கொண்டிருக்கிறார்! கண்கவர் நகைகள், ஜொலிக்கும் ரத்தினங்கள் , தர்மம் காப்பதற்கான தெய்வீக ஆயுதங்கள் மற்றும் பூசப்பட்ட சந்தனக் குழம்போடு காட்சி தருகிறார்! அதைக் கண்டு மெய் மறந்து போகிறார் அர்ஜுனர்! கோடி சூரியன் போன்ற தேஜோ மய ஸ்ரீ கிருஷ்ணரை சற்று நேரம் உற்று காண இயலாமல் கண் கூசுகிறது அர்ஜுனருக்கு... ஆன்மா வரை அந்த விஸ்வரூப தரிசனம் பதிவு செய்யப்படுகிறது!
"அனேக-பாஹூதர-வக்த்ர-நேத்ரம்
பஷ்யாமி த்வாம் ஸர்வதோ (அ)னந்த-ரூபம்
நாந்தம் ந மத்யம் ந புனஸ் தவாதிம்
பஷ்யாமி விஷ்வேஷ்வர விஷ்வ-ரூப"
(ஆதாரம் : ஸ்ரீமத் பகவத் கீதா - 11.16)
ஓ பிரபஞ்ச இறைவனே! ஆயிரமாயிரம் கைகளோடும் வயிறுகளோடும், இதழ்களோடும், கண்களோடும் எல்லா திசைகளிலும் உன்னை நீக்கமற காண்கிறேன்! நீ நடுவிலும் இல்லை மத்தியிலும் இல்லை.. உனக்கு முடிவே இல்லை! உன் தேஜோ மய ஒளி பட்டே எல்லா திசைகளிலும் சூரியன் ஒளிர்கிறது! எண்ணத்தில் அடங்கா மகிமையையும்... எண்ணில் அடங்கா பேராற்றலையும் நீ உன்னதத்தே கொண்டு இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிரச் செய்கிறாய்! பூமிக்கும் சொர்க்கத்துக்குமான இடைவெளியான அந்த வெட்ட வெளியை நீயே நிரப்பிக் கொண்டும் இருக்கிறாய்!
ஓ பேரிறைவா ஸ்ரீ கிருஷ்ணா! உன்னுடைய பிரம்மாண்ட பெரும் பேருருவை கண்டு பல்வேறு உலகங்கள் ஆச்சர்ய அதிர்ச்சியே அடைந்திருக்கின்றன! நானும் அவ்வாறே அடைந்திருக்கிறேன்! திருதராஷ்டிரனின் புதல்வர்கள் உன்னிடமே நுழைகிறார்கள்! அவர்கள் மட்டுமல்ல துரோணர் பீஷ்மர் கர்ணன் மற்றும் பாண்டவ கௌரவ இரு தரப்பு படையினரும் உனது வாய்க்குள்ளேயே புகுகிறார்கள்! அகில் சிலரின் தலை உன் பல் இடுக்கிலேயே மாட்டிக் கொண்டிருக்கிறது! உனது பிரபஞ்சப் பேராற்றல் இந்த பூமி சுற்றுவதற்கான நெருப்பையே தந்து கொண்டிருக்கிறது! "ஓ கடவுளரின் கடவுளே! இப்படி ஒரு பேருருவை நான் எவரிடத்திலும் கண்டதில்லை! நான் மட்டற்ற ஆனந்தத்திற்கே மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டேன்! அதே சமயம் என் மனதை கடும் அச்சம் கவ்விக் கொண்டிருக்கிறது! ஓ பல்வேறு உலகத்தவருக்குமான பகவானே! பிரபஞ்ச வியாபகமே! என்னிடம் கருணையோடும் பரிவோடும் இரு! இப்போது நீ உனது எப்போதும் உள்ள ரூபத்தைக் காட்டு!" என்று அர்ஜுனர் விஸ்வரூப ஸ்ரீகிருஷ்ணரின் இரு கால்களையும் பிடித்துக் கொண்டு அர்ஜுனர் கேட்டிட.. ஸ்ரீகிருஷ்ணரும் தனது வழக்கமான உருவுக்கே வந்து புன்னகைக்க... இப்படியே அர்ஜுனனுக்கு இருந்த உறவுகள் எனும் கற்பனையான பந்த பாசப் பற்று கழன்று வில்லில் தொடுத்த அம்பாய் வெளியே குதித்து வெட்டவெளியில் எரிந்து போகிறது!
போர்க்களத்தில் போர் புரிவதே தர்மம்.. அந்த தர்மத்தின் மையப் புள்ளிக்கு அர்ஜுனன் மனம் நகர்ந்து விடுகிறது!
இதே போல் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய ஆத்மார்த்தமான பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனம் தந்திருக்கிறார்!
பால பாபாவை தனது பௌதீக சிறு வயதில் தன்னோடு சித்ராவதிக்கு வரும் புட்டபர்த்தி கிராமவாசிகளை மற்றும் தேடி வரும் சில பக்தர்களை அழைத்துச் சென்று.. திடீரென மலைமேல் ஏறி பாபா விஸ்வரூப தரிசனமும் நெற்றிக் கண் காட்சியும்... சூரிய சந்திர தோற்றக் கோலமும் என ஆச்சர்ய அனுபவங்களை அவர்களுக்கு வழங்கி இருக்கிறார்! சிலர் அந்த உஷ்ணம் தாளாமல், பாபாவின் பேராற்றலை எதிர்கொள்ள இயலாமல் மயக்கமடைந்திருக்கின்றனர்.. இதை நேருக்கு நேர் தரிசித்தவர் தனது நேரடி வாக்குமூலத்தை "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற புத்தகத்திலும் பதிவு செய்திருக்கிறார்! அவர் பெயர் 'குப்பம்' விஜயாம்மா!
அது போல் ஒருமுறை பெங்களூர் வொயிட் ஃபீல்டில் கோடை ஞான போதனை வழங்கிக் கொண்டிருக்கிற காலகட்டம் அது! அந்த சமயத்தில் பாபா பக்தர்களுக்கு தரிசனம் தர நடந்து வருகிறார்... அப்போது ஒரு வெளிநாட்டு பக்தர் "சாயிராம் சாயிராம்" என்று அழைக்கவே பாபா அவர் அருகே வந்து..."சுவாமி! உங்களுடைய உண்மையான நிலை என்ன? என்று ஒரு பத்தே பத்து நிமிடம் காட்டுங்கள்! நான் அந்த பேரானந்தத்தை அனுபவித்துக் கொள்கிறேன்! அதற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்!" என்று விண்ணப்பம் விடுக்க... பாபா முதலில் ஒன்றும் சொல்லவில்லை... பிறகு இரண்டாவது முறை அதையே மீண்டும் அவர் கேட்டபோது... பாபா அவரது தலையில் தனது கையை வைக்கிறார்... அவரோ அமைதியாக அந்த பேரானந்தத்தை அனுபவிக்க இயலாமல் "ஆ ஊ" என்று வானுக்கும் பூமிக்கும் துள்ளுகிறார்...! பார்க்கின்ற பிற பக்தர்களுக்கு விநோத காட்சியாகத் தோன்றுகிறது! "சுவாமி போதும் போதும் ! என்னை காப்பாற்றுங்கள்!" என்று அவர் பதற... அருகே நின்று கொண்டிருந்த பாபா அவர் தலையை மீண்டும் தொட.. அப்படியே பிரசாந்தமாகிறார்! கண்கலங்கியபடி பாபாவின் பாதத்தை நெற்றி விழ ஒற்றிக் கொள்கிறார்!
அவரது அனுபவத்தை அவர் மாலை தரிசனத்தில் பேசுகிறார்! "அந்தக் காட்சியில் நான் பாபாவின் இந்த உருவத்தைக் காணாமல்.. பல்வேறு உலகத்தின் பல்வேறு மனித குரல்கள் "சாயிராம்" "சாயிராம்" என்று அலறுவதும் , கதறி முறை இடுவதும் என்னால் தெள்ளத் தெளிவாகக் கேட்க முடிந்தது! ஆனால் ஒரு நொடி கூட அதனை உள்வாங்க முடியவில்லை... அத்தனை பயங்கரமானதாக இருந்தது! ஆகவே தான் என்னையும் மீறி "சாயிராம்" என்று நானும் அலறினேன்! தனது எத்தனை கோடி கோடி பக்தர்களின் கவலைக் கண்ணீர் மொழிகளையும் மனம் சுழிக்காமல் முகம் மலர்ந்து ஏற்றுக் கொண்டு ... அவரவர்க்கு தகுந்தாற் போல் அதற்கு ஆவன செய்கிறார் என்பதை உணர்ந்த போது பாபாவே பிரபஞ்ச இறைவன் என்பது சந்தேகம் இன்றி தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது!" என்பதை பக்தர்கள் பலரோடும் விளக்குகிறார் அந்த வெளி நாட்டவர்!
அது 1974. ஒருமுறை பரம பக்தர் ஹிஸ்லாப் பாபாவிடம் "உங்களுக்கு கோடிக்கணக்கான உலகப் பொறுப்புகள் இருக்கிறது.. அதை தினந்தோறும் ஓய்வின்றி கவனித்து வருகிறீர்கள்.. ஆயினும் உங்களால் எப்படி ஆனந்தமாகவே அன்றாடமும் இயங்க முடிகிறது?" என்ற ஒரு நியாயமான ஆச்சர்யக் கேள்வியைக் கேட்கிறார்!
அதற்கு புன்னகைத்தபடி பாபா
"கடல் மேல் கப்பல் போவதைப் போல எனது தெய்வீக சேவையை ஆற்றி வருகிறேன்! கடலில் கப்பல் மிதந்தாலும் கடலை தனக்கு உள்ளே கப்பல் அனுமதிக்காதது போல் அன்றாடம் இயங்குகிறேன்! ஆகவே தான் என்னால் சுறுசுறுப்பாகவும் சுயநலமில்லாமலும் பல உலகங்களுக்கான பணிகளை சேவையாக செய்து வர முடிகிறது!" என்கிறார் பாபா சர்வ சாதாரணமாக...!
ஹோமர் என்கிற அமெரிக்க விஞ்ஞானி ஒருமுறை செயற்கோள் வழி புட்டபர்த்தியை புகைப்படம் எடுக்கிற போது பாபாவின் திருமுகம் மிக பிரம்மாண்டமானதாக விரிந்து புட்டபர்த்தியை நோக்கி இருப்பதற்கான தோற்றம் தெள்ளத் தெளிவாகத் தோன்றி பேராச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது! ஆனால் அதுவும் எடுத்த எடுப்பில் அல்ல...சில முயற்சியில் வெறும் கருப்பு வெள்ளை புள்ளிகளே! அதற்கு அவர் செலவழித்த பணம் அந்த காலத்திலேயே 60 டாலர்கள்!
அதற்குப் பிறகு ஹோமர் மனைவி புட்டபர்த்தியும் வந்து போகிறார்! ஒருமுறை சில பக்தர்கள் யோகினி இந்திராதேவியின் மகள் திருமணத்திற்காக வந்து அப்படியே ஹோமர் வீட்டிற்கு செல்ல.. அப்போது அவர்களிடம் சில புகைப்படங்களை ஹோமர் மனைவி காட்டுகிற போது... அப்போது எடுத்த அந்த செயற்கோள் புகைப்படத்தில் பாபா முதலில் தரிசனம் கொடுத்தது வந்திருந்த பக்தருக்கே...! அதை ஹோமர் மனைவி கூட காணவில்லை! பிறகே அனைவரும் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போகிறார்கள்!
ஹோமரோ 1978 ஆம் ஆண்டு பாபாவை மீண்டும் தரிசனம் செய்கிறார்! அப்போது பாபாவின் உடல் சுற்றி இருக்கும் தெய்வீக ஆராவை தனது நேரடி கண்வழியே காண்கிறார்! காரணம் அவர் சில ஆன்மீக சாதனைகளைப் பயில்பவர்! அப்படி ஒரு ஆரா யாருக்குமே இருக்கவில்லை என்று மனம் திறக்கிறார் ஹோமர்! அவரது மனம் திறந்த பகிர்வு அர்ஜுனர் துவாபர யுகத்தில் பகிர்ந்த பரவசத்திற்கு மிக பொருத்தமாக அமைகிறது!
அந்த செயற்கைக் கோள் புகைப்படம் எடுத்த பிறகும் , பாபாவும் அதில் காட்சி கொடுத்த பிறகும் ... 29 நவம்பர் 1972 ஆம் ஆண்டு பாபாவை தரிசித்து அதைக் காட்டுகையில் பாபா புன்னகைத்துச் சொன்ன வார்த்தையே இந்தப் பதிவுக்கான ஒட்டுமொத்த திருச்செய்தி!!
"பங்காரு! அந்த செயற்கைக் கோள் படம் எல்லாம் அர்ப்ப விஷயம்... அளக்கவே முடியாத என்னுடைய பிரம்மாண்ட இறை சக்திக்கு முன் அவை மிக மிக சாதாரண பதிவீடுகளே!" என்கிறார் பாபா! அதுவே எப்போதும் என்றைக்குமான நிரந்தர பேருண்மையும் கூட...!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No : 132 - 138 | Author : Dr J. Suman Babu )
அளவற்ற இறை சக்தியை எவ்வாறு அளவீடுகளால் அளக்க இயலும்? வானத்தைக் கூட வார்த்தையால் அளக்க இயலும்! ஆனால் பிரபஞ்சத்தை?
அந்தப் பிரபஞ்சத்திற்கு சக்தி கொடுக்கும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரை எதை வைத்து அளப்பது?
ஒரு பூவின் பனித்துளியில் சூரியன் தன்னை பிரதிபலித்துக் கொள்வதைப் போல் தூய பக்தர்களின் தூயமையான இதயத்தில் தன்னை பிரதிபலித்துக் கொள்கிறார் பாபா! வானம் ஏறி சூரியனைப் பிடிக்க நினைப்பது வீண் கற்பனை... ஆனால் ஸ்படிகம் போன்ற பனித்துளியாக மாறிவிடுவது நம்மால் இயன்ற காரியமே!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக