தலைப்பு

வெள்ளி, 19 ஜனவரி, 2024

இசைக் கச்சேரி நடத்துபவரோடு இறைக் கச்சேரி நடத்திய பாபா!

எவ்வாறு ஒரே இசைக் கச்சேரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாபாவை தரிசிக்கிறார்கள், பிறகு அவர்களுக்கு நடந்த மகிமை என்ன? சுவாரஸ்யமாக இதோ...!


ஜோஹ்னிமா, ஒரு இள அமெரிக்கன்! அவருக்கு இள வயதிலிருந்தே நண்பர்கள் யாருமே இல்லாமல் முழுக்க தனிமையில் இருக்கிறவர்! அவரை நேசிக்க யாருமே இல்லை! காற்று கூட தள்ளித் தான் வீசுகிறது! ஒரே தனிமை ஒரே நிசப்தம்! ஆகவே இயேசு கிறிஸ்துவையே தனது நண்பராக , சகோதரனாக உணர்கிறார்! பல ஆண்டுகள் கடந்து போகிறது! அவர் பாபா புகைப்படத்தை பார்க்கிறார்! அவருக்கு உடனே அது இயேசு கிறிஸ்துவின் புதிய வடிவமாகவே தோன்றுகிறது!

 

லைட்ஸ்டார்ம்(Lightstorm) என்ற இசைக் குழுவிற்கு தலைவராக இருக்கிறார் ஜோஹ்னிமா! அந்தக் குழுவில் இரு ஜோடிகள், புதிதாக அவர்களே எழுதி இசை அமைத்து விழா மேடையில் பாடுபவர்கள்! ஒருமுறை இந்தியா வருகிறார்கள்! பாபாவை பரவசமோடு தரிசனம் செய்கிறார்கள்! பாபா அவர்களை ஒரு புதிய பாடல் பாடச் சொல்கிறார்..


"New song - new song" (புதிய பாடல் - புதிய பாடல் ) என்று கேட்கிறார்!

அவர்கள் பாட ஆரம்பிக்கிறார்கள், என்ன ஆச்சர்யம்?! பாபாவும் உடனே அவர்களின் பாடலை இணைந்து அவர்களோடு சேர்ந்து இணைந்து பாடுகிறார்! நாம் எழுதிய பாடல் பாபாவுக்கு எப்படி தெரியும் என்ற வியப்பு மிகு விழியேந்தி இனிக்க இனிக்க அவர்களும் பாடுகிறார்கள்!

பாடல் எல்லாம் கேட்டு முடித்த பிறகு.. மிகவும் மகிழ்ச்சியோடு பாபா "நீங்கள் என் இதயத்திலேயே இருக்கிறீர்கள்!" என்கிறார்! 


அந்த இசைத் தம்பதிகளான ஜோஹ்னிமாவோ அவரது மனைவி சுய்-சன்'னோ குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர்கள்! பாபாவின் அறிவுரை மற்றும் அருளினால் ஒரு குழந்தை பிறக்கிறது , பாபா அந்தக் குழந்தைக்கு சாயி சங்கீத் என்று பெயர் வைக்கிறார்! எவரேனும் சுய்-சன்'னாவை "நன்றாக குழந்தை வளர்க்கிறாய்!" என்று யாரேனும் பாராட்டினால், "அதற்குக் காரணம் அது எங்கள் குழந்தை அல்ல.. பாபாவின் குழந்தை!" என்று சத்தியம் பகர்கிறார்! அவர்களுக்குத் தான் பாபாவிடம் எப்பேர்ப்பட்ட நன்றிவுணர்வு! 


(Source : Miracles of Divine Love - vol1 | Page : 34 - 35 | compiled by p.gurumoorthy)


பேரிறைவன் பாபா அவரவர் கர்மாப்படி அவரவருக்கு நிகழ்வதை - நிகழப் போவதை அனுமதிக்கிறார்! உண்மையான இறை பக்தி இருப்பின் தீய கர்மாவை குறைத்து இன்னலில் இருந்தும் நம்மை காப்பாற்றுகிறார்! நாம் எதிரே பாராத நேரத்தில் செயலாற்றுவதே பாபாவின் மகத்துவம்! பாபா நம் மேல் பொழிந்து வரும் காவலுக்கும், காதலுக்கும் , கருணைக்கும் அவருக்கு நாம் செலுத்த வேண்டிய ஒரே ஒரு கைமாறு அவர்பால் நமது நீங்காத நன்றிவுணர்வு மட்டுமே! அதுவே நம்மை பாபா வழியில் நிம்மதியோடு நடைபோட வைக்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக