தலைப்பு

வெள்ளி, 5 ஜனவரி, 2024

எளிமையிலும் எளிமை - ஒரே ஒரு ராகிக் களி உருண்டை - பாபாவின் பழக்க வழக்கங்கள்!


21/10/2004 ஆம் ஆண்டு தசராவின் போது பாபா பகிர்ந்த அவரது அன்றாட சுவாரஸ்ய பழக்க வழக்கங்களை வெளிப்படையாகப் பகிர்வதற்கு ஸ்ரீ சத்யசாயி யுகம் மகிழ்கிறது.. இதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் பலருக்கு இருக்கிறது என்பது அடிப்படை...மேலும் இறைவன் பாபாவின் பழக்க வழக்கங்கள் நமக்கான முன்னுதாரண பாடங்கள்! அதையும் தனது திவ்ய திருமொழியாலேயே பாபா தெரிவிக்கிறார் இதோ...!


அன்பிற்குரிய மாணவர்களே! சாதாரணமாக எனது இந்த ஸ்தூல உடலின் பழக்க வழக்கங்களைப் பற்றி பேச நான் ஒருபோதும் விரும்பியதில்லை! இருப்பினும் உங்களுக்கு ஒரு நல்லவழிகாட்டுதலாக , வாழும் நெறிமுறைகளாக இது அமையும் என்ற நம்பிக்கையில் நான் எனது அன்றாட பழக்கங்களில் சில அம்சங்களை உங்களுக்குக் கூற விரும்புகிறேன்! 

ஒவ்வொரு நாளும் நான் இரவில் 4 முறை விழித்து எழுகிறேன்! நள்ளிரவில் எழுந்து எனது பற்களைத் துலக்குகிறேன்! நாக்கு மற்றும் வாய் முழுவதையும் சுத்தப்படுத்துகிறேன்! மீண்டும் இரவு 1.30க்கு மணிக்கும் , 3 மணிக்கும் எழுந்து அதே பணியைச் செய்கிறேன்! 


இரவில் என்னுடைய தேவைகளைக் கவனிப்பதற்காக எனது அறையில் படுத்துறங்கும் மாணவர்களுக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும், ஏனெனில் இதனால் அவர்களின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படலாம்! இருந்த போதிலும் என்னுடைய நாக்கு, வாய் மற்றும் பற்கள் எப்போதும் சுத்தமாக , தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த வழக்கத்தைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கிறேன்! ஒரு சுத்தமான நாக்கு உடல் சுத்தியையும் மன சுத்தியையும் பராமரித்துக் காத்து உதவுகிறது! 


புற சுத்தம் மட்டுமின்றி நாக்கு என்பதை புனிதமான , தூய்மையான வார்த்தைகளை மட்டுமே பேசப் பயன்படுத்தப்பட வேண்டும்! இந்தக் கோட்பாட்டினைப் பின்பற்றியே என்னைப் புனிதமான காரியங்களில் ஈடுபடுத்துவதனால் , என் நாக்கையும் அத்தகைய புனிதச் செயல்களில் ஈடுபடுத்துகிறேன்! எனது ஸ்தூல உடலைப் பூரணமாகச் சுத்தம் செய்த பின்னரே எனது அறையிலிருந்து நான் வெளியே வருகிறேன்! நான் அப்படி வெளிவரும் நேரத்தில், சமையல் பொறுப்பில் இருக்கும் ஒரு அன்பர் ஒரு இராகிக் களி உருண்டையை எனக்காகக் கொண்டு வருவார்! அந்த இராகிக் களியை உண்டு முடித்தபின் புத்துணர்ச்சியோடும் , மகிழ்ச்சியோடும் இருப்பேன்! அதற்குப் பிறகு திரும்பவும் என் வாயை நான் சுத்தப்படுத்துவேன்! பிறகு சிறிது தண்ணீரைப் பருகிய பின் கீழே வருவேன்! 

சுவாமி காலையில் என்ன உணவு சாப்பிட்டார்? என்று தெரிந்து கொள்ளும் வகையில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்! ஒன்றுமில்லை. எனக்கு நொறுக்குத்தீனிகளின் மீது விருப்பமோ ஆர்வமோ இல்லை! ஒரு குவளை குளிர்ந்த நீர் மட்டுமே நான் விரும்புவது! இதன் பிறகு எனது பக்தர்களோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவேன்! அவர்களுக்கு தரிசனம் கொடுப்பதும், சிலரோடு பேசுவதும் , தேர்ந்தெடுக்கப்பட்ட சில பக்தர்களோடு நேர்காணல் செய்வதுமாக எனது நேரத்தைப் பயன்படுத்துகிறேன்! எனது உடலும் மனமும் எப்போதும் தூய்மையாகவே இருக்கிறது! எனது வார்த்தைகள் தூய்மையானவை! எனது எண்ணங்கள் தூய்மையானவை! எனது செயல்கள் தூய்மையானவை, புனிதமானவை!


(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 187,188 | ஆசிரியர் : எஸ்.ஆர் ஹரிஹரகிருஷ்ணன் | தமிழாக்கம் : சேலம் எஸ்.ரமேஷ் சாயிராம்)


இறைவன் அவதாரமாக இறங்கி வருகையில் எப்படி வாழ்கிறார் என்பது நமக்கு பெரிய பாடமாக அமைகிறது! காரணம் அவர் அப்படி இறங்கி வருவது நாம் அவ்வாறு வாழ்வதற்காகத் தான்! நொறுக்குத் தீனிகளின் மீதே விருப்பமின்றி வெறும் ராகிக் களியை உண்டு எத்தகைய எளிய வாழ்க்கையை இறைவன் பாபா வாழ்ந்திருக்கிறார்! இறைவனே அப்படி எளிமையாக வாழ்கிற போது எத்தகைய எளிய வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்பதை நாம் விழிப்புணர்வோடு யோசித்து வழிநடக்க வேண்டிய உன்னத பகுதியாக இது அமைகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக