தலைப்பு

திங்கள், 29 ஜனவரி, 2024

திருமதி. (காபி பொடி) சாக்கம்மா | புண்ணியாத்மாக்கள்


பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி பாபாவுக்காக "பாத மந்திரம்" (பழைய மந்திரம்) என்னும் கட்டிடம் புட்டபர்த்தி கிராமத்தில் அமைய திருமதி.சுப்பம்மாவும் திருமதி. கமலம்மாவும் முக்கியப் பங்காற்றினர் என்பது அனைவரும் அறிந்ததே! அந்தப் பழைய மந்திர் கட்டிடம் வெகு சீக்கிரமே சிரியதாகிப் போகும்படி மக்கள் வெகுவாகக்குவியத் தொடங்கினர். எனவே ஒரு புதிய, பெரிய கட்டிடம் தேவை என்பதையும், எதிர் காலத்தில்...பாபா பெரும் கூட்டத்தை வரவழைப்பார் என்பதையும் உணர்ந்து அந்த காரியத்தைப் பலரும் ஆர்வமுடன்மேற்கொண்டனர். அந்த முயற்சியின் விளைவாக சுவாமியின் தெய்வீக சங்கல்பத்தில் உருப்பெற்றது தான் "பிரசாந்தி மந்திர்" என்கின்ற பிரம்மாண்ட கட்டிடம். அந்தக் கட்டிடம் இன்று அடையாளம் காண முடியாத அளவிற்கு அகன்று வளர்ந்து, பொலிவுபெற்று, தன்னைச் சுற்றி ஒரு மாபெரும் நகரம் உருவெடுக்கக் காரணமானது. புட்டபர்த்தி என்னும் புண்ணிய சேத்திரத்தின் கருவறையாகிய "பிரசாந்தி நிலையம்" மந்திரத்தை நிறுவியதில் பெரும்பங்கு வகித்தவர் பெங்களூரூவைச் சேர்ந்த புண்ணியாத்மா திருமதி சாக்கம்மா

🌷எளிமை முதல் எஸ்டேட் வரை:

            1880ம் ஆண்டு கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள பிடாரே கிராமத்தில் பிறந்த சாக்கம்மா, இளம்பெண்ணாக இருந்தபோது…​​அவரது பெற்றோர் வாழ்வாதாரத்தைத் தேடி பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர்.கல்வியில் தேர்ந்து விளங்கிய சாக்கம்மா… மைசூர் மாகாணத்தில், இடைநிலைப் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்ற மிகச் சில பெண்களில் ஒருவர். இருப்பினும் குடும்ப சூழ்நிலைகளால் 16 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல காபி தோட்டங்களுக்கு அதிபரரான கர்நாடகாவின் கூர்க் எனும் ஊரைச் சேர்ந்த திரு. சவுகர் தொட்டமானே சிக்க பசப்பா செட்டி என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக திருமணமான இரண்டே வருடங்களில் கணவரை இழந்தார் சாக்கம்மா. எளிமையான குடும்பப் பின்புலத்தில் வளர்ந்து வந்த இளம் பெண் திடீரென காபி எஸ்டேட்டுகளை நிர்வகிக்கத் தேவை ஏற்பட்டதால் சிரமத்திற்கு உள்ளானார். ஆனாலும் சவால்களுக்கு அஞ்சாமல் தனது பள்ளிக் கல்வியை பயன்படுத்தி நன்முறையில் சொத்துக்களை நிர்வகிக்க கற்றுக் கொண்டு காபி உற்பத்தித் தொழிலை செழித்து வளரச் செய்தார்.



 
கர்நாடகாவின் கூர்க்கில் உள்ள சாக்கம்மாவின் பங்களா மற்றும் காபி பதப்படுத்தும் ஆலை, பெங்களூரு

            சமுதாயத்தில் பக்தி மிக்கவராகவும், பரோபகாரியாகவும் வெகு சீக்கிரமே பெயரெடுத்தார் சாக்கம்மா. பெங்களூரில், குருஹின ஷெட்டி கேந்திரா சங்கம் மற்றும் விடுதி (இன்றைய பசவனகுடியில் உள்ள நியூ நேஷனல் ஹைஸ்கூல் சாலையில் அமைந்துள்ளது) ஆகியவற்றை நிறுவுவதற்கு தாராளமாக உதவி செய்தார். பெங்களூருவின் பசவனகுடியில் ஒரு பகுதி இன்றும் சாக்கம்மா கார்டன் என்று அழைக்கப்படுகிறது. வர்த்தகம் மற்றும் சமூக நலனுக்கான அவரதுசேவையை அங்கீகரித்து, மைசூர் மகாராஜா, ஸ்ரீ கிருஷ்ண ராஜா வாடியார் திருமதி. சாக்கம்மாவுக்கு 'லோகசேவ பராயினி' (சமூக சேவையில் அர்ப்பணிப்புள்ளவர்) என்ற மதிப்புமிக்க பட்டத்தை வழங்கினார். வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தில் பெண்களுக்கு குறைந்த வாய்ப்புகள் இருந்த காலத்தில் - அவரது சாதனைகளைப் பார்த்து ஆங்கிலேயர்கள் கூட பிரமித்து, அவருக்கு ‘கைசர்-இ-ஹிந்த்’ (இந்தியாவின் அணிகலன்) உயரிய பதக்கத்தை வழங்கினர். அவரின் சமூக அந்தஸ்த்தின் முத்தாய்ப்பாக 1928ம் ஆண்டு (அன்றைய) மைசூர் பிரதிநிதி சபைக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார் திருமதி. சாக்கம்மா.


🌷கைலாஸ் கமிட்டி (குழு):

            ஒரு நாள் காலை ஒன்பது மணியளவில்... சாக்கம்மாவின் பங்களாவிற்கு கைலாஸ் கமிட்டி என்று போர்டு வைக்கப்பட்டிருந்த பழைய கார் ஒன்று வந்தது. அதில் பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவன் வித்தியாசமான தலைமுடி அலங்காரத்துடன் முன்னால் அமர்ந்திருக்க... காரின் பின்புறம் ஒரு முதியவர் மான்தோலில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். தாடி மற்றும் திருநீற்றுடன் மங்கலமாக காணப்பட்ட அந்த முதியவரை வரவேற்று வணங்கி அவரது பாதங்களைக் கழுவி, பூக்களையும் பழங்களையும் வழங்கினார் சாக்கம்மா. அந்த முதியவரோ... ஆயிரம் ரூபாய் கொடுத்து கைலாஸ் கமிட்டியில் அங்கம் வகிக்கச் சொன்னார். சாக்கம்மாவும் மகிழ்ச்சியுடன் பணம் செலுத்தினாள். ஆனால் வினோதமான முறையில் பணத்தையும் ரசீதையும் அவளிடமே திருப்பிக் அந்த முதியவர், “நான் மீண்டும் வருவேன், அப்போது வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி விடைபெற்றார்.


            அந்த நிகழ்வுக்குப் பல ஆண்டுகள் கழித்து… ஒரு நாள் பெங்களூரில் தனது தோழிகள் ஒருவரின் வீட்டிற்கு சாக்கம்மா சென்றபோது, அங்கே அதே தலையலங்காரத்துடனான அந்த இளைஞனைக் கண்டாள். அவள் அந்த இளைஞனைப் பார்த்துக் கொண்டிருந்த போதே, அவர் தன்னை முதியவராகவும் மீண்டும் இளைஞராகவும் மாற்றிக்கொண்ட அதிசயம் நிகழ்ந்தது. இரண்டு உருவங்களாய் மாறிமாறித் தோற்றமளித்த அந்த அதிசய நிகழ்வினால் சாக்கம்மா திகைத்தாள். அவள் அந்த இளைஞனின் அருகில் சென்று, ‘என்னிடம் கைலாஸ் கமிட்டியாக வந்தவர் நீங்கள் தானல்லவா?’ என்று கேட்டாள். அதற்கு அந்த தெய்வீக இளைஞர், “ஆம்! நீங்கள் எனக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டியுள்ளது, அதை உங்களிடமிருந்து பெறவேவந்துள்ளேன்!” என்றார். அந்த தெய்வீக வெளிப்பாட்டை உணர்ந்த சாக்கம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஸ்வாமியின் முன் சாஷ்டாங்கமாக வணங்கி நமஸ்கரித்தாள்.


🌷பிரஷாந்தி மந்திர்:


பாபாவுடனான முதல் சந்திப்பிலேயே அவரின் தெய்வீகக் கூரையின்கீழ் வாழத் துவங்கி... அவரைத் தேடி புட்டபர்த்தி வந்து சேர்ந்த சாக்கம்மா, பின்னர் தீவிரமான பக்தையாகவும் ஆனார். ஒரு தாயார் தனது குழந்தையை நேசிப்பதைப் போல பாபாவை நேசித்தவர். பெரிய காபி எஸ்டேட்டுகளின் முதலாளியான அவர், மக்களால் வெகுவாக அறியப்படா ஒரு சிறிய கிராமத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தாள். ஆரம்ப காலத்தில்… வெறுமனே தெய்வீக சக்தி பொருந்திய இளைஞனாக பெரும்பாலோனாரால் அறியப்பட்ட பாபாவை, தெய்வமாகக் கண்டுகொண்டவள். எப்போதும் ஒரு தாயைப் போல உணவு சமைத்து சுவாமிக்குப் பரிமாறத் தயாராக இருந்தவள்.

மாலூர் திருமலை ஐயங்கார்

            திருமதி. சாக்கம்மா... 1946-ம் ஆண்டு, வெறும் தகரக் கொட்டகையாக இருந்த பழைய மந்திரத்திற்குத் தெற்கில் சிறிது தூரத்தில் தரிசும் பாறைகளுமான 3.86 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். புதிய ஆசிரமம் கட்டுவதற்காக பாபா அந்த நிலத்தை ஏற்றுக்கொள்ளும்படி சுவாமியிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டார். பாபா கனிவுடன் ஒப்புக்கொள்ள… 1947ல் நிலப் பரிமாற்றம் நடந்து, கட்டுமானம் 1948ல் தொடங்க திட்டமிடப்பட்டது. பாபாவோ இந்த சொத்துக்களின் தனிப்பட்ட உரிமையை மறுத்துவிட்டார். எனவே புதிய ஆசிரமக் கட்டிட வேலைகள் முறையாக நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாகக் குழுவால் நடத்தப்பட்டது. இந்த புனித காரியத்தின் போது... ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ​​அதிசயிக்கும் வகையில் சரியான நபர்கள் அவர்களாகவே வந்து சேர்ந்தனர். அதில் குறிப்பிடும்படியாக மாலூர் திருமலை ஐயங்கார் என்பவரும் ஒருவர். சாலைகள், பாலங்கள் மற்றும் அணைகள் போன்றவற்றைக் கட்டுவதிலும் பராமரிப்பதிலும் அனுபவம் வாய்ந்தவர். அவருடைய அனுபவமானது பெருமளவில் உதவி ஒரு மாபெரும் புண்ணிய சேத்திரத்தின் கருவறையாம் "பிரஷாந்தி மந்திர்" அழகிய வடிவெடுத்து என்றென்றுக்குமாய் வானுயர நிற்கிறது.


🌷பூர்ணாவதாரப் பூரணம் பிரேமசாயி:

            சுவாமி, திருமதி சாக்கம்மாவிடம் ஒரு மாபெரும் தேவ இரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை மைசூரில் இருந்து பெங்களூருக்குப் பயணம் செய்யும்போது, ​​ஸ்வாமி தன்னுடன் பயணித்த சாக்கம்மாவிடம் தான் மீண்டும் கர்நாடகாவில் பிறக்கப் போவதாகக் கூறினார். "எனது அடுத்த அவதாரத்தில் மைசூர் மற்றும் பெங்களூரு இடையே உள்ள ஒரு கிராமத்தில் பிறக்கப் போகிறேன். இந்த சத்யசாயி அவதாரத்தில் நான் செய்த போதனைகளின் சாராம்சம் எனது அடுத்த அவதாரமான பிரேம சாயி காலத்தில்... பக்தர்களால் முழுமையாக செரிக்கப்படும். வரிசையாக மூன்று அவதாரங்களாக அல்லாமல் ஒரே அவதாரமாக வந்திருந்தால், அதன் பிரம்மாண்ட சக்தியை மனிதகுலத்தால் தாங்க முடியாது!" என்றும் சுவாமி விளக்கினார் .மேலும் அந்தப் பயணத்தின்போது சுவாமி வீதியில் இறங்கி ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக் காட்டி, இந்த இடம்தான் நான் பிரேம சுவாமியாய் வரவிருக்கும் ஸ்தலம் என்றும்... தான் ஒரு ஏழைக் குடும்பத்தில் தான் பிறக்கப் போவதாகவும் குறிப்பிட்டார்.

பக்தியில் நிறைந்த சாக்கம்மாவின் மனம் பாபாவின் பாதங்களையே வாழ்வின் ஒரே குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும்... யதார்த்த  வாழ்வில், ஒரு தாய்க்கு நிகரான உரிமையை அவ்வப்போது சுவாமியிடம் காட்டிமகிழும் பெரும்பாக்கியத்தைப் பெற்றிருந்தார்.


🌷பரஞ்ஜோதி தரிசனம்

            பழைய மந்திரத்தில் சுவாமி இருந்த நாட்களில்… ஒருமுறை புட்டபர்த்தியில் இருந்து பெங்களூர்  கிளம்பவேண்டி, ஆசிபெறச் சென்ற சாக்கம்மாவுக்கு சுவாமி அனுமதி அளிக்கவில்லை. ஆனால் சாக்கம்மாவுக்கு, உடனே பெங்களூர்  செல்லவேண்டிய அவசியம் உள்ளதெனக்கூறி ஆசீர்வதிக்குமாறு  வற்புறுத்தினாள். சுவாமியோ விடைகூறி அனுப்புவதாகத் தெரியவில்லை. எனவே  சாக்கம்மா தைரியமாக பின்வருமாறு பாபாவிடம் கூறினாள், ‘சுவாமி நீங்கள் ஏதேனும் ஒரு அற்புத தரிசனத்தை தருவதாக இருந்தால் நான் எனது பெங்களூரு பயணத்தை ரத்து செய்து விடுகிறேன்’.இதுபோன்ற கோரிக்கைகளை உரிமையுடன் விடுக்க அவளால் மட்டுமே முடியும் என்று அங்கிருந்த அனைவரும் வியந்தனர்.



            மறுநாள் மாலை சுமார் 6.30 மணியளவில், மந்திரத்தில் இருந்த அனைவரையும் தன்னுடன் சித்ராவதி நதிக்கு அழைத்துச் சென்றார் பாபா. சுவாமி ஒரு குன்றின் மீது எரி நின்றார்; பின்னர் தனது கைகளைத் தூக்கிக் காட்டி... “நீங்கள் அனைவரும் நான் நிகழ்த்தப்போகும் காட்சியைக் காணத் தயாரா?” என்று கேட்டார். என்ன நடக்கப் போகிறது என்று ஒரு வித ஸ்தம்பிப்புடன் காத்திருந்த பக்தர்களின் முன்னர், சுவாமி நின்றுகொண்டிருந்த இடத்தில்… திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி தோன்றியது. அந்த ஒளி மாபெரும் பிரகாசத்துடன் இருந்தாலும் திகைப்பூட்டும் வகையில் அதனை இதமாகவும் மென்மையாகவும் பக்தர்கள் உணர்ந்தனர். அந்த ஒளிப்பிரகாசத்தின் நடுவில் சுவாமியின் திவ்ய ரூபம் தெரிந்தது . இந்த தெய்வீகக் காட்சியைக் கண்ட அனைவரும் அதிசயத்தில் பிரமித்துப் போனார்கள். ஒரு மாபெரும் தெய்வீகக் காட்சி அரங்கேறியதை முழுமையாக கிரகிக்க முயன்றுகொண்டிருந்த பக்தர்கள் நடுவே சுவாமி மெதுவாக கீழே இரங்கி நடந்து வந்தார். ஆனால் அப்போதும் அந்தப் பிரகாசம் சற்றும் குறையாமல் அவரைச் சூழ்ந்து ஒளிர்ந்து கொண்டிருந்தது. புராணக் கதைகளில் கேட்டு மகிழும் இது போன்ற சம்பவம் நிஜமாகவே தங்களுக்கும் நடந்ததை எண்ணி அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஆனந்தத்தில் வார்த்தையற்றுப் போயினர்.


            அந்த நிகழ்வுக்குப் பிறகு, அனைவரும் மந்திருக்குத் திரும்பி ஆனந்த உச்சத்தில் பஜனைகளைப் பாடி ஆரத்தி எடுத்தனர். அப்போது சுவாமி அந்த தெய்வீக ஒளி தரிசனத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறினார். ஒவ்வொருவரும் கடவுளை அவர்கள் விரும்பும் வடிவில் வழிபடுகிறார்கள் என்றும் இறைவனின் ரூபம் என்பது முற்றிலும் பக்தர்களைப் பொறுத்தது என்றும் கூறினார். ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான தெய்வரூபத்தை, இறைவனின் தூய பிரகாசத்தில் உணர்கிறார்கள் என்றும் விளக்கினார்.

🌷எண்ணற்ற லீலைகள்

            தெய்வத்தின் இதயத்தில் இடம்பிடிப்பவர்களுக்கு அதிசயத்தை உணரும் நரம்புகளெல்லாம் அறுந்துபோகுமளவு   எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது இறைவனின் வாடிக்கை அல்லவா. அந்த வகையில் திருமதி.சாக்காம்மா அனுபவித்த அதிசயங்கள் எல்லாம் பட்டியலிட்டு மாளாது.




            ஒருமுறை சாக்கம்மா கூர்க்கில் இருந்து புட்டபர்த்திக்கு கிளம்பும்போது ஒன்பது ரத்தினங்கள் பதித்த தனது மோதிரம் தொலைந்துவிட்டதை உணர்ந்தார். பாபாவிடம் அதைச் சொல்லி முறையிட்டபோது, பாபா முழு விவகாரத்தையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு  வெறுமனே கேலி செய்தார்; பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட குழப்பத்தையும் அந்த மோதிரத் தவறலையும் சொல்லி மனதார சிரித்தார். உண்மையில் அந்த மோதிரத்தை அவரது உறவினர்கள் சிலர் திருடிவிட்டிருந்தனர். அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு பாபா அவளது காபி தொழிற்சாலைக்கு வருகை தந்தார். அங்கே பின்னால் இருந்த ஒரு சிறிய வீட்டின் சமையலறையில் அமர்ந்து, காபியை பருகிக்கொண்டே, "அட, சாக்கம்மா, உனக்கு அந்த வைர மோதிரம் வேணும் இல்லையா? சரி, இதோ!" என்று சொன்னபடி அருகிலிருந்த சுவரைத் தட்டினார். கணத்தில் சுவாமியின் கைகளில் அந்த மோதிரம் மாயமாக வந்து சேர்ந்தது! மற்றொருமுறை புட்டபர்த்தியில் தனது கண்ணாடி உடைந்துபோன மிகவும் சிரமப்பட்ட சாக்கம்மாவிற்கு பாபா அவளுக்கான சரியான லென்சுகளுடன் கண்ணாடி வரவழைத்தும் கொடுத்தார். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பெட்ரோல் தீர்ந்துபோன காரில் வெறுமனே நீரை, பெட்ரோல் டேங்கில் நிறப்பச் செய்து… சுவாமி காரை ஓடவைத்த அதிசயத்தை சாக்கம்மா அனுபவித்திருக்கிறார்.


🌷கருணாமூர்த்தியின் கருணைத் தாய்

            இருபத்தைந்து வயதே நிரம்பிய தனது பிரியமான பாபா வெறும் வெள்ளை அங்கி அணிவதைக் கண்ட அவளது தாயுள்ளம் தாளாமல்... அவரை சிவப்பு அங்கி அணிந்து கொள்ளுமாறு கெஞ்சினாள். மேலும் வசதிகள் ஏதுமற்ற புட்டபர்த்தியை விட்டுவிட்டு பெங்களூரில் ஒரு ஆசிரமத்தை அமைக்குமாறும் பாபாவிடம் கெஞ்சினாள். தாய் ஈஸ்வரம்மாவிடம் செய்துகொடுத்த உறுதியின் காரணமாக அதைச் செய்ய இயாலதென சுவாமி மறுத்துவிட்டார். எனவேதான் மேலும் சிலருடன் கூடி, பிரசாந்தி நிலையத்தை கட்டுவதற்கு உண்டான தன்னுடைய தாராளமான பங்களிப்பைத் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் புக்கப்பட்டினத்தில் வானொலி பூங்கா மற்றும் பொது நூலகத்திற்கும் நிதியுதவி வழங்கினார்.

            பக்தர்களுடன் நாள்முழுக்க தனது நேரத்தை செலவிடும் இளம் பாபா தனது உடல் நலம் குறித்தோ ஓய்வு குறித்தோ பொருட்படுத்துவது இல்லை. இதைக் கண்ணுறும் சாக்கம்மா மதிய வேளைகளில் பாபாவை ஓய்வெடுக்கும்படி வற்புறுத்துவார். மேலும் சுவாமியைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மற்றவர்களிடமும் கெஞ்சுவார். மேலும் பக்தர்களுடன் மும்முரமாக உணவுமறந்து பாபா பேசிக்கொண்டிருந்தால், ​​கருணையுள்ளம் கொண்ட தாய்போல சாக்கம்மா, பாபாவை சாப்பிடும்படி பாசத்துடன் வலியுறுத்திக் கெஞ்சுவாள். பாபாவும் மிகுந்த அன்புடனே சாக்கம்மாவை அடிக்கடி கேலி செய்வார். சில சமயம் கண்களைச் சுழற்றிக் காண்பித்து தனக்கு காய்ச்சல் என்று கூறுவார். உடனே சாக்கம்மா மிகவும் கவலைப்பட்டு அவரது கன்னங்களைத் தொட்டு உடல் வெப்பத்தை பரிசோதிப்பாள். மூலிகை மருந்துகளை கொண்டு வர அவசரமாக ஓடுவாள். பின்னர் அது சுவாமியின் விளையாட்டு என்பதறிந்து வியப்பாள். பல சமயங்களில்… பாபா அறையில் தூங்குகிறார் என்று சாக்கம்மா நினைத்துக் கொண்டிருக்க, அவரோ யாருமறியாமல் மற்றவர்களுடன் விளையாடுவதற்காக ஓடிப்போய் ஏமாற்றுவார். சில சமயங்களில், சாக்கம்மாவால் கண்டுபிடிக்க முடியாதபடி சரியாக ஒளிந்துகொண்டு எல்லா இடங்களிலும் தேடும்படி செய்வார். நள்ளிரவில் குப்பம் குடும்பத்தினரிடம் தோசை சுட்டுக் கொடுக்கச் சொல்லி (இரவில் சத்தம் வாராமல் தோசை சுடப்பட்ட அதிசயம் - அது ஒரு தனிக்கதை) அதனை சாப்பிட்டுவிட்டு, காலை சாக்கம்மா சிற்றுண்டியுடன் வரும்போது “நள்ளிரவில் எனக்கு உணவு தந்தார்கள் அதனால் இப்போது பசியில்லை” என்று சொல்லி சாக்கமாவுக்கு குப்பம் குடும்பத்தினர் மேல் கோபம் வரும்படி தூண்டி... பின்னால் நின்று சிரித்துக்கொண்டிருப்பார் சாயி கிருஷ்ணன்.


🌷இறைவனையே மகிழ்த்திய இனிய வாழ்வு


            சாக்கம்மாவின் உறவினர்களில் பலரும் பாபாவைப் பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டவர்கள் அல்ல. பெண்களுக்கென்று பெரிதாக அதிகாரம் இல்லாமல் இருந்த அன்றைய காலகட்டத்திலும் கூட தனது உறவினர்களின் கருத்துக்களை மீறி தனக்கு சரி என்று பட்டதை துணிச்சலுடன் செய்பவளாக இருந்தார் சாக்கம்மா. அவளது துணிச்சல் மிகு பக்தியை பாபாவும் மெச்சுபவராக இருந்தார். 1950ல் அவள் நோய்வாய்ப்பட்டு சில மாதங்கள் மருத்துவமனையில் இருந்தபோது, ​​அவளைப் பார்க்க மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு சுவாமியே நேரடியாகச் சென்றார். தனது 75வது வயதில், மே 1950ல் இறந்த சாக்கம்மாவும்... கர்ணம்  சுப்பம்மாவைப் போலவே (புட்டபர்த்தி பழைய மந்திர் கட்டி முடிக்கப்படும் முன்பே முக்தியடைந்தார்), பிரசாந்தி நிலையத்தின் திறப்பு விழாவிற்கு முன்னரே சுவாமியின் திருவடியில் ஐக்கியம் ஆனார்.

            சாக்கம்மாவின் இறுதி ஐக்கியத்திற்குப் பலகாலம் கழித்தும் பகவான் அன்புடன் அவளை அடிக்கடி நினைவு கூறுவதுண்டு. அந்த சமயங்களில்... ஒரு குழந்தை தன் தாயைப் பற்றிப் பேசுவதைப் போன்ற உணர்வுடன் சுவாமி பேசுவதை அனைவரும் உணருவர். இறைவனின் பூரண அவதாரமாகிய ஸ்ரீ சத்யசாயி பாபாவே... ஒரு ஜீவாத்மாவை தனது தாய்க்கு நிகராக உணர்வுப்பூர்வமாக நினைவுகூறுகிறார் என்றால்... அந்தப் புண்ணியாத்மா எத்துணை உயர்ந்தவராக... எப்படிப்பட்ட செயற்கரிய செயல்களைச் செய்தவராக இருக்க வேண்டும்! என எல்லோரும் இன்றுவரை வியப்பதில் ஆச்சர்யம் இல்லை.

✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்

மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக