தலைப்பு

வெள்ளி, 8 மார்ச், 2024

லிங்கோத்பவகரா சாயி லிங்கேஸ்வரா!!

அருவாய் உருவாய், உளதாய் இலதாய் இலங்கும் ஈசனுக்கு உகந்த திருவுறு லிங்கமாகும். உருவமாய், அதே சமயம் உருவமற்று சிவனின் அடையாளமாய் வணங்கப்படும் லிங்கம், சுந்தர ரூபனாய், சிந்திடும் கருணையாய் வந்து நம்மைக் காக்கும் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபா அவர்களுடன் இடையறாத் தொடர்பு கொண்டது... 


🌹பீடம் இங்கே லிங்கம் எங்கே? 

பால சாயியின் புகழ் கீழ்வானத்து ஆதவன் போல் பரந்து விரிந்து ஒளி வீசிய நேரம். பாபாவைக் காணவந்த பக்தர்கள் கூட்டம் பல்கிப் பெருகியது. அந்தக் குக்கிராமத்தில் எவ்வித வசதியும் இல்லை. ஆனால் தேடிவரும் பக்தர்களின் பிணிமட்டுமல்ல , பசிப் பிணியையும் போக்குவதில் பாபா கண்ணும் கருத்துமாக செயல்பட்டார். பக்தர்களின் தரிசன வசதிக்காக பழைய மந்திரம் 1944 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

பழைய மந்திரம் கட்ட, கடைக்கால் தோண்டப்பட்டபோது, லிங்கங்கள் இல்லாத அடிப் பீடங்கள் பல கிடைத்தன. அதிலிருந்த லிங்கங்கள் எங்கே என பாபாவைக் கேட்டபோது , தம் வயிற்றைச் சுட்டிக் காண்பித்து, லிங்கங்கள் எல்லாம் இங்கே இருக்கின்றன என்றாராம்.


🌹 பாபாவின் பக்தர் மர்பெட் விவரிக்கும் லிங்க உற்பவம்:

மகா சிவராத்திரி நாட்களில், புனித நிகழ்வாக, பாபா லிங்கோத்பவம் என்ற  அற்புதத்தை நிகழ்த்துகிறார், அவரிடமிருந்து லிங்கம்  வெளிப்படுகிறது. இந்த நிகழ்வை அருகிலிருந்து பார்க்கும் பாக்கியம் பெற்ற ஹோவர்ட் மர்பெட், இந்த பிரமிப்பூட்டும் அற்புதத்தைப் பற்றி தனது "சாய் பாபா: அற்புதங்களின் நாயகன்" என்ற புத்தகத்தில் விரிவாகக் கூறுகிறார்:

ஒவ்வொரு வருடமும் இந்த புனிதமான சிவராத்திரியின் போது சத்யசாயி பாபாவின் உடலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிவலிங்கங்கள் தோன்றியதாக என்னிடம் கூறப்பட்டது. அவர் லிங்கங்களைத் தன் வாயின் வழியே அனைவரும் பார்க்கும்படி வெளியேற்றுகிறார். அவை எப்போதும் கடினமானவை, படிகத் தெளிவான அல்லது வண்ணக் கல்லாலும் சில சமயங்களில் தங்கம் அல்லது வெள்ளி போன்ற உலோகங்களால் ஆனவை. அப்படிப்பட்ட ஒரு லிங்கோத்பவ புனித நிகழ்வை திரு மர்பெட் மேலும் விவரிக்கிறார்.

ஆறு மணிக்கு சாய்பாபா, ஒரு சிறிய குழு சீடர்களுடன், சாந்தி வேதிகாவிற்கு வந்தார். முதலில் அவர் தனது இனிமையான குரலில் இதயத்தைத் தொடும் ஒரு புனிதமான பாடலைப் பாடினார். பின்னர் அவர் தனது சொற்பொழிவைத் தொடங்கினார், அவர் எப்போதும் இதுபோன்ற பொது நிகழ்வுகளில், தெலுங்கு மொழியில் பேசுகிறார். திடீரென அவர் குரல் தடைப்பட்டது. சொற்கள் கமறலாக வெளிவருகின்றன.  இதைக்கண்ட பஜன் பாடகர்கள், ஒரு இனிய பஜனைப்பாட கூட்டத்தினரும் அதை பின்தொடர்ந்து பாடுகின்றனர். பாபா இப்போது இருக்கையில் அமர்ந்து நீரை அருந்துகிறார். அவர்முகத்தில் வலியின் வேதனைகள் தெரிய, தமது கரத்தை மார்பில் வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியும் அசைகிறார்.  இப்போது மேலும் கொஞ்சம் தண்ணீர் அருந்தி, ஒன்றுமில்லை என்பதுபோல புன்னகை செய்கிறார். அவரின் இந்த வேதனையைக் கண்டு பக்தர்கள் விம்மி அழுகின்றனர்.என் நெஞ்சமும் கசிந்து உருக ஆரம்பிக்கிறது. ஆயினும் நான் கண் கொட்டாமல் அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு 20 நிமிடங்கள் கழிந்தபின்... பாபாவின் வாயில் இருந்து ஒரு பச்சை நிற ஒளிக்கற்றையுடன் லிங்கம் வெளிப்படுகிறது. அதை அவர் தமது கரத்தைக் குவித்து பிடித்து பக்தர்களுக்கு நாற்றிசைகளிலும் தெரியும்படி காண்பிக்கிறார்.மேலும் அந்த அற்புத மரகதலிங்கம் ஒரு ஒளி பொருந்திய டார்ச் விளக்கின் முன்னால் வைக்கப்பட்டு பச்சை நிறமாகப் பிரகாசிக்கிறது.  

இதுபற்றி கஸ்தூரி அவர்கள் எழுதியதாவது... 5 அங்குல பீடத்துடன் கூடிய, 3 அங்குல நீளமுள்ள மரகத லிங்கம் பாபாவின் வாயில் இருந்து வெளிவந்தது. வியந்த பக்தர்கள் களிப்பின் திகைப்பினால் மெய் சிலிர்த்து அமர்ந்திருந்தனர்..

References

 “Sai Baba: Man of Miracles” by Mr. Howard Murphet. Page: 43-49 (Paperback Edition). Published by Macmillan India Ltd, 1972.

கஸ்தூரி அவர்களின் சத்யம் சிவம் சுந்தரம் தமிழ் பதிப்பில் விவரித்துள்ள சில நிகழ்வுகள்

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக