தலைப்பு

சனி, 16 மார்ச், 2024

ஒரே நேரத்தில் இரு இடங்களிலும் நிறைந்திருக்கும் இரு சர்வ வியாபக அவதாரங்கள்!


அது எப்படி சாத்தியம்? ஒரே நேரத்தில் ஒரே நொடியில் பௌதீகமாகக் கூட அவதாரங்களால் இருக்க முடியுமா? ஆம் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் அவதாரங்களால் இரு இடங்களில் இருக்க இயலாதா? எனும்படி ஆச்சர்யம் தரக் கூடிய அற்புதப் பதிவு சுவாரஸ்யமாக இதோ..


அது துவாபர யுகம்! ஸ்ரீ கிருஷ்ணர் அரண்மனையில் இருக்கிறார்! அது மயன் சில நாட்களில் உருவாக்கிய பிரம்மாண்ட அரண்மனை! இடம் துவாரகை! அதே சமயத்தில் நிமி வம்சத்தை சேர்ந்த அரசன் ஒருவன்! பெயர் பஹுலாஷ்வன்! மிதிலாவை ஆண்டு வருகிறான்! அவனது அதே தேசத்தில் ஒரு அந்தணர் வாழ்ந்து வருகிறார்! பழுத்த ஸ்ரீ கிருஷ்ண பக்தர்! அவர் பெயர் ச்ருத தேவர்.



ஒருமுறை அரசன் பஹுலாஷ்வன் ஸ்ரீ கிருஷ்ணரை தனது தேசத்திற்கு பேரன்போடு அழைக்கிறார்! அப்படி அவர் பாதம் பட தனது தேசம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என உணர்கிறார்! பல பாறை மனங்களை பால் வார்க்க வைத்த பாதம் அது... கல்லை மீண்டும் கற்புக்கரசியாக்கிய பாதம் அது! நாளை பூமிக்கே பிரசாந்தத்தை ஏற்படுத்தக் கூடிய பாதம் அது! அதே நாளை அகில உலகையும் வலம் வரக்கூடிய பிரேம பாதம் அது! நன்றாக உணர்ந்திருந்தார் அந்த அரசர்!

  

ஸ்ரீ கிருஷ்ணரும் வேத வியாசர் முதலிய ரிஷிகளோடு விஜயம் புரிகிறார் மிதிலாவுக்கு... அரசரோ ஒரு குடிலில் தங்கி இருந்த ஸ்ரீ கிருஷ்ணரை தனது அரண்மனைக்கு அழைக்கிறார்! அவரும் சரி என்று சம்மதிக்கிறார்! பூ எங்கே மலர்கிறது என எங்கிருந்தோ வரும் வண்டு உணர்ந்து கொள்வது போல் அந்த தேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அந்தண பக்தர் அறிந்து கொண்டு அந்தக் குடிலுக்கு விரைந்து... ஸ்ரீ கிருஷ்ணரை தனது குடிலுக்கும் அழைக்கிறார்! அவருக்கு சொன்னது போலவே அதே போல் சரி என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்!

அது எப்படி ஒரே நாளில் என்னிடமும் சரி என்கிறார்.. அவனிடமும் சரி என்கிறார் என குழம்பிப் போகிறார் அரசர்! அப்படியே பேசிக் கொண்டிருந்து அப்படியே ஸ்ரீ கிருஷ்ணரை அழைத்துக் கொண்டு போகத் திட்டம் தீட்டி யாரையும் அணுக விடாமல் சில அறிவிலிப் பணக்காரர்கள் கோவிலிலும் ஆசிரமத்திலும் அதிகாரம் புரிவது போலான ஒரு வளைப்பு... யாரையும் அணுகவிடாத ஓர் சுற்றி வளைத்தல்.. ஸ்ரீ கிருஷ்ணரோ எதுவும் அறியாதவர் போல் அந்த அரசரின் அரண்மனைக்கு ராஜ பரிவாரங்களோடு அப்படியே முதுகு திருப்பாமல் சென்றுவிடுகிறார்! அதுவும் தனது அந்தண பக்தரின் கண் முன்னமே! 

"நாம் ஏழை ஆகவே தான் பகவான் அங்கே சென்று நம் கோரிக்கையை நிராகரித்து விட்டாரோ!" என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க...

அரண்மனையில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தடபுடல் வரவேற்பு ! பூர்ண கும்ப மரியாதை! வேதப் பொழிவு! நாதஸ்வர இசைத் தோரணங்கள்! வாரணங்களோடு சூழ்ந்திருந்தன வீதிகள்! ஏதோ திருவிழாவே வந்தது போல் ஸ்ரீ கிருஷ்ணர் வருகிறார்!

ராஜ சபையில் கந்தர்வ லோகமே வியக்கும் வண்ணம் இசை என்ன! நாட்டியம் என்ன! சபையே களை கட்டுகிறது! ஸ்ரீ கிருஷ்ணரோ அதனை வெகுவாக ரசிக்கிறார்! அப்படி ஒரு பக்கம்... ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தரான அந்த ஏழை அந்தணரோ கவலைப்பட்டுக் கொண்டிருக்க.. திடீரென ஒரு குரல்‌...


"உங்களை எங்கு எல்லாம் தேடுவது! ஸ்ரீ கிருஷ்ணர் தனது அடியார்களோடு உங்கள் வீடு தேடி வந்திருக்கிறார்!" என்ற ஒரு அழைப்பு! பரவசப்படுகிறார் அந்தணர்! அப்படி அழைத்தது அவரது உறவுக்கார பையன் ஒருவன்! நேராக மூச்சிறைக்க ஓடிப் போகிறார்... ஸ்ரீ கிருஷ்ணரை தனது இல்லத்தில் காண அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. அதிர்ச்சிக் கண்ணீர் அப்படியே ஆனந்தக் கண்ணீராக மடைமாற்றம் பெறுகிறது! கண் வழி கசிந்த உப்புத் தண்ணீர் இனிப்புத் தண்ணீராக மாறுகிறது! அப்படியே ஸ்ரீகிருஷ்ணர் பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுகிறார் அந்தணர்! 

யாரை இதுநாள் வரை உபாசித்தாரோ, யாரின் பெயரை நாள் தவறாமல் ஜபித்தாரோ.. யாரை மட்டுமே நம்பி வாழ்ந்தாரோ... யாரை ஒரே இறைவனாக உணர்ந்து பூஜை புரிந்தாரோ...சாட்சாத் அதே ஸ்ரீ கிருஷ்ணர் தனது இல்லத்தில்... பூரிப்பில் பூரணமாகிறார் அந்த அந்தணர்!



சில நேரம் கடந்து... அரண்மனையில்.. சில வேத பண்டிதர்கள் வருகிறார்கள்... "அந்த ச்ருத தேவருக்கு எத்தனை கொடுப்பினை... அவரைத் தேடியே ஸ்ரீ கிருஷ்ணர் சென்றிருக்கிறார் என்றால் சாதாரண விஷயமா? எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார்! ஆத்மார்த்தமாக அவரை உபசரித்து அருளை மூட்டை மூட்டையாக கட்டிக் கொண்டு விட்டார் அவர்!" என்று அரசரிடமே அவர்கள் அந்த அந்தண பக்தரை பற்றிப் பாராட்டுகின்றனர்‌.

"ஸ்ரீ கிருஷ்ணரை பன்னீர் தெளித்து, சந்தனக் குழம்பு தடவி.. மலர்களை தூவி, மாலைகள் சாற்றி , இசையை ரசிக்க வைத்து, பல்வேறு விதமான விருந்துகளை ஏற்க வைத்து இதே எனது அரண்மனையில் தானே தங்க வைத்திருக்கிறோம்! அதற்குள்ளே எப்படி மாயமாக மறைந்து அங்கே சென்றார்?" என ஆழ்ந்த யோசனை... அதிர்ச்சியான குழப்பம்! 

"அவர் ஓய்வெடுக்கும் அறையில் தான் இப்போது இருக்கிறாரா பார்ப்போம்?! " என அரண்மனை அறைகளுக்குள்ளே அவசரமாகப் போக.. அரசர் அவரை அம்ச தூளிகா மஞ்சத்தில் சயனிக்க வைத்த கோலாகல அறை அது! அதற்குள் நுழைகிறார் அரசர்.. பார்த்தால்! ஏதும் அறியாதவர் போல் கண்களை மூடி அப்படியே சயனித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! ஆம் அதே மர்ம புன்னகையோடு தான்! சுவாமி ஸ்ரீ கிருஷ்ணரின் கூடவே அவதரித்த புன்னகை அந்த மர்ம புன்னகை! 

விக்கித்துப் போகிறார் அரசர்! "ஓ இங்கே இருந்து கொண்டே அங்கேயும் இருக்கிறாரா? என்ன ஆச்சர்யம்! இவர் சாட்சாத் இறைவன் தான்!" என... அந்த அறையில்.. இருந்த இடத்தில் இருந்தே அவரை தொந்தரவு செய்யாதவாறு அரசர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க... அதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு சிரிக்கிறார் பிரபஞ்சப் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்!


(ஆதாரம் : ஸ்ரீமத் பாகவதம் 10. 1173)




இதே போல் இதில் இம்மி அளவிலும் பிசகின்றி தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் புரிந்த விசித்திர மகிமை ஒன்றோ இரண்டோ அல்ல பற்பல... இப்போதும் அவை தொடர்கிறது! அதில் சிலவற்றை சுருக்கமாக அனுபவிக்கலாம்!

      இரு பால்ய நண்பர்கள் பாபாவுக்கு... புக்கப்பட்டணத்தில் தன்னோடு பள்ளிக் கல்வி பயின்றவர்கள்! ஹோஸ்பேட்டில் வசித்தவர்கள்! பாபா அவதாரம் என்பதை உணர்ந்த உடன் ஒருமுறை இல்லத்திற்கு அழைக்கிறார்கள்! வருகிறேன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணராக தான் சொன்னது போலவே! அப்படியே ஒருநாள் மாட்டு வண்டியில் வருகிறார்.. அவரை வரவேற்று வீட்டிற்கு அழைத்து.. இருவரும் பால பாபாவோடு மகிழ்ந்து விளையாடி... பழைய கதைகள் பேசி.. ஒன்றாக உண்டு...ஒன்றாக தூங்கியே போகிறார்கள்! அடுத்த நாள் காலை அந்த இருவரின் தாய் பாபாவுக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும் என்றும் காய்ச்சிக் கொண்டிருக்க... இருவரும் எழுந்து பார்க்க.. பாபாவை காணவில்லை... எண்ணெயில் விழுக்கிடும் கைகளாக எங்கேயோ மறைந்து போயிருக்கிறார்! சரி என்று புட்டபர்த்தியில் விசாரிக்க‌.. நேற்றிலிருந்து பாபா புட்டபர்த்தியில் தான் இருக்கிறார்.. எங்குமே செல்லவில்லை எனும் தகவல் வருகிறது! ஆச்சர்யப்படுகிறார்கள் அந்த இரண்டு பால்ய நண்பர்கள்!


அது தசரா காலம்! அடுத்த நாள் தசரா! ஆகவே முந்தைய நாளே அனைவருக்கும் வேஷ்டி தானம் புரிய வேண்டும் என பாபா தனது பக்தர்களோடு வேஷ்டிகளை எடுத்து வைப்பதற்கான சேவையில் ஈடுபடுகிறார்! அந்த சேவையில் இருந்த ஒரு பக்தர் பெயர் பார்த்த சாரதி! அவரும் மும்முரமாக வேஷ்டியின் ஒழுங்கைப் பார்ப்பது, அடுக்குவது போன்ற சேவையில் ஈடுபட ...

"பார்த்தசாரதி!" என்று பாபா அவரை அழைக்க.. அவர் திரும்பிப் பார்க்க... "நான் என்ன இங்கே மட்டும் தான் இருக்கிறேன் என நினைத்துக் கொண்டிருக்கிறாயா? கொஞ்ச நேரம் முன்பு நான் மதராஸில் இருந்தேன்! உன் மூத்த மகன் குசனுக்கு கொடுமையான கவம்! உனது இளைய மகன் தான் அவனை பதட்டத்தோடு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றான்!" என்கிறார் பாபா! பார்த்த சாரதி அதிர்கிறார்!. "கவலைப்பட ஒன்னுமில்லை! சுவாமி நான் காப்பாற்றிவிட்டேன்!" என்கிறார் பாபா!

கண்கலங்கிப் போகிறார் அவர்... இத்தனை நேரமும் பாபாவுடனேயே சேவைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பார்த்த சாரதிக்கு பாபா சொன்னதைக் கேட்டுப் புல்லரிக்கிறது! பாபா சாட்சாத் இறைவனே! என்பதை உணர்ந்து கொள்கிறார்! பாபாவே சாட்சாத் பார்த்தசாரதி என்று உணர்ந்தார் அந்த பார்த்தசாரதி!


அதே போல் வேறொரு அற்புத அனுபவம்! 

ஒருமுறை பக்தரின் குடும்பமே  புட்டபர்த்தி வந்திருந்தது! அது 1968. அந்த காலத்தில் பக்தர் தங்க அறைகள் இல்லை! மரத்தடி நிழலே வாசம்! வராண்டா போன்றவற்றிலே தூக்கம்! ஆனால் வந்திருந்த பக்த குடும்பத்திற்கோ தூக்கமல்ல துக்கம்! காரணம் அவர்களது பெண்ணுக்கு தீராத வலிப்பு நோய்! ஆக பாபாவிடமே சரணாகதி அடைகின்றனர்! அந்தக் குடும்பத்தின் தலைவர் பெயர் சன்யாசி ராஜு! ஆனால் சன்யாசி அல்ல அவர் பழுத்த சம்சாரி! அனகாபள்ளியை சார்ந்தவர்! இந்திய வங்கியில் கிளார்க் ஆக பணியாற்றுகிறவர்! ஓரிரு நாள் விடுப்பு சொல்லி வலிப்பு எனும் அந்த கொடிய நோயை எப்படியாவது பாபாவிடம் முறையிட்டு குணமாக்கிட வேண்டி வந்திருக்கிறார்! இவர்களோ பாபாவின் தரிசனம் பெறும் போதெல்லாம் "சாயிராம் சாயிராம்" என்று கை கூப்புகிறார்கள்!  ஆனால் பாபாவோ "காத்திரு காத்திரு!" என்று மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்! விடுப்பு நாளைத் தாண்டி அவரது விடுப்பு சென்று கொண்டே இருக்கிறது! பாபாவோ அவர்களை அங்கிருந்து புறப்பட அனுமதிக்கவே இல்லை! அப்படியே 2 மாதம் கடந்து போகிறது! அதன் மாத இறுதியில் பாபா நேர்காணல் வழங்கி.. விபூதி சிருஷ்டித்து அவரது மகளின் வலிப்பு நோயை முற்றிலும் நீக்கிவிடுகிறார்!

வலிப்பு நீங்கியது போல் தனது வேலையும் நீங்கி இருக்குமோ? 


திக் திக் என்ற மனநிலையில் வங்கி செல்கிறார் ராஜு! சொல்லாமல் கொள்ளாமல் 2 மாத விடுப்பு! 2 நாள் 2 மாதமாக நீ....ண்டதில் மேனேஜர் சிங்கமாய் சீறி புலியாய்ப் பாய்ந்து கழுதையாய் விரட்டி அடிப்பார் என பயந்து கொண்டே நுழைகிறார் அவர்!

ஆனால் வழக்கத்திற்கு மாறாக அலுவலக பணியாளர்கள் அவரோடு சகஜமாக நடந்து கொள்ள ஆச்சர்யப்படுகிறார்! 

"உங்கள மேனேஜர் கூப்பிடறார்!" என்று பியூன் சொல்ல..‌ ஏதோ சத்தம் கேட்டது.. அது அவரது சீட்டை கிழிக்கும் சப்தமோ என்று பயம் பயங்காட்டியது! 

அது மேனேஜர் அறை- புன்னகைத்துக் கொண்டே ஒரு கவரை நீட்டுகிறார்மேனேஜர்... அது டிஸ்மிஸல் ஆர்டாக இருக்குமோ... பயம் மேலும் விடவில்லை ராஜுவுக்கு...

கவரைத் திறந்து பார்த்த ராஜு மயங்கியே விழுகிறார்!

காரணம் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது! இந்த 2 மாதமும் அவர் கடினமாக உழைத்ததில் வங்கிக்கு சக்கரை ஆலையில் இருந்து வர வேண்டிய வாரா கடன் 5 லட்சம் வந்து சேர்ந்திருந்தது! இதனை அங்குள்ளவர்கள் அனைவரும் ஆமோதித்தனர்... "நானா? 2 மாதம் வேலை செய்தேனா?" என புதிராகிறார் ராஜு! புரிந்து போகிறது யார் செய்த வேலை என்று! அது யார் செய்த லீலை என்று!

இப்படி ராஜுவுக்கு மட்டுமல்ல துகா ராமுக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் விட்டலனாக விநோதங்கள் பல புரிந்திருக்கிறார்! இந்த மகிமை வரிசைக்கு ஒரு அளவுகோல்களே இல்லை!



ஒருமுறை பாபாவிடம் "எப்படி சுவாமி உங்களால் இரண்டு இடங்களிலும் இரண்டு உடம்புகளிலும் தோன்ற முடிகிறது? " என்று ஒரு பக்தர் கேட்க.. 

"இரண்டு உடம்பில் மட்டுமா? 1000 உடம்புகளிலும் கூட ஒரே நேரத்தில் தோன்றுவேன்!" என்கிறார்!

     ஒருமுறை குப்பம் ராதாகிருஷ்ணய்யா வயிற்று வலி தாங்க முடியாமல் கிணற்றில் விழ.. நடுக்கிணற்றில் மூழ்காமல் ஏதோ கல் மேல் நிற்பது போல் நிற்கிறார் கழுத்து வரை முங்கியபடி...  கிணற்றுக்குள் பக்கவாட்டில் படிக் கல் இருக்கலாம்... ஆனால் நட்ட நடுக் கிணற்றில் கல்படி எப்படி இருக்கும்? அதை எல்லாம் யோசிக்கவில்லை அவர்! இரவு முழுக்க அப்படியே அவர் நிற்க.. காலையில் மீட்கப் படுகிறார்! பிறகு புட்டபர்த்தி வரும் அவரை.. "எவ்வளவு கனம் நீ!! அப்பப்பா! உன்னை எவ்வளவு நேரம் என் தோள்களால் அந்த கிணற்றுக்குள் தாங்கிக் கொண்டிருப்பது! பார் என் தோள்களை கண்ணிப் போயிருக்கிறது!!" என்று பாபா காட்ட.. தோள் கண்டார் தோளே கண்டார் என்பது போல் பாபாவின் தோள் உண்மையாகக் கண்ணிப் போயிருந்தது!

இதனை ஒரு பக்தர் "அது எப்படி உங்களால் சாத்தியப்படுகிறது?" என்று கேட்கிறார்!

"கடவுள் நான் எங்கும் நிறைந்திருப்பவன்! எனக்கு எங்கே எது நடந்தாலும் தெரியும்! ஆகவே நான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு அங்கே அவர்களுக்கு என் வெவ்வேறு வித ரூபங்கள் காட்டியும் நொடிப்பொழுதில் காப்பாற்றி விடுகிறேன்!" என்கிறார் சர்வ சாதாரணமாக! 


ஒருமுறை யோகினி இந்திரா தேவியோடு அமெரிக்க பிரஜை ஒருவர் பாபா நேர்காணல் அறையில் இருக்க.. "எப்படி உங்களால் ஒரே நேரத்தில் இரண்டு இடத்திலும் இருக்க முடிகிறது?" எனும் அதே கேள்வி! பாபா உடனே "உன்னோடு இருக்கும்போதே  இப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன்! உன் மனைவிக்கு விபத்து! பயப்பட வேண்டாம்! நான் காப்பாற்றிவிட்டேன்!" என்கிறார்! 

அந்த அமெரிக்க பிரஜையின் முகத்தில் ஈ ஆட வில்லை! அதற்குப் பிறகு அந்த கேள்வியையே அவர் கேட்கவில்லை! மிரண்டு போயிருந்தார்! 

"கவலைப்படாதே! உன் திட்டமிடல் படியே நீ உன் விடுமுறையை செலவிடு! அவசரமாக அமெரிக்கா செல்ல வேண்டாம்!" என்கிறார் பாபா!

பிறகு அவர் தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து விசாரிக்க... அவரது கார் விபத்தானது உண்மை என்றும் அப்போது பரந்த கேசம் கொண்டு ஆரஞ்சு அங்கி அணிந்த ஒருவர் தன்னை காப்பாற்றியதாகவும் அவரது மனைவி தெரிவிக்க...!

ஃபோனை வைத்திருந்த அவரது கைகள் நடுங்குகிறது! கண்கள் குளமாகிறது! "சாயிராம்!" என்று சொல்லி தொலைபேசியின் தலையை கவிழ்த்துகிறார் அந்த அமெரிக்கர்! 


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 146 - 152 | Author : Dr J. Suman Babu ) 


எல்லா இடத்திலும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே நீக்கமற நிறைந்திருக்கிறார்! நம்மை 'கட'ந்தும் நிறைந்திருக்கிறார்... நமக்கு 'உள்'ளும் நிறைந்திருக்கிறார்! ஆகவே தான் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் கடவுள்! வேறு எதனால் கடவுள்? விபூதி சிருஷ்டிப்பதாலா? இல்லை! அது அவருக்கு அர்ப்ப விஷயம்! எல்லா இடங்களில் இருக்கும் ஆற்றலே அவருக்கு கொசு போன்றது தான்! *பிரபஞ்சத்தையே சிருஷ்டித்ததால் தான் அவர் இறைவனே தவிர!  பஸ்பம் சிருஷ்டிப்பதால் அல்ல! அது விருந்து! இது மருந்து! "பக்தா நீ முதலில் திருந்து!" என்றபடியே யமுனை நதியும் சித்ராவதி நதியும் ஒரே ஞான ஓசையை நமது காதுகளில் சுமந்து கொண்டு தூது சொல்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: