எவ்வாறு நூலாசிரியரின் வலி மிகுந்த நகர முடியாத நிலையில் பாபாவே வலிமை மிகுந்தபடி அனுகிரகம் செய்தார் எனும் கருணை தோய்ந்த உருக்கப் பதிவு இதோ...!
அது 2000 ஆம் ஆண்டு! ஏப்ரல் 5! விடிந்தால் யுகாதி, ஆகவே விழாவுக்கான தடபுடல் ஏற்பாடுகள் பெங்களூர் வொயிட் ஃபீல்ட் பாபா ஆசிரமத்தில் கலை கட்டியது! ரமேஷ் ஹால் பரபரப்பாகிறது!
அந்த பாபா கல்லூரி மாணவர்களோடு தானும் சேர்ந்து யுகாதி விழாவில் பிரசாத தயாரிப்புகள் போன்ற ஏற்பாடுகளுக்கான சேவை புரிகிறார் நூலாசிரியர்!
அன்று இரவு! தூக்கமே இல்லை! நாளைய விழா குறித்த சிந்தனை!
சிறிது நேரமே பேசிவிட்டு , பிறகு பாபா பேச வருகிறார், நூலாசிரியர் சபைக்கு அதனை மொழி பெயர்க்கிறார்! பிறகு அப்படியே பூப்போல நகர்ந்து நகர்ந்து தனது அறை கட்டிலுக்குள் வந்து படுத்து விடுகிறார்! ஒரே முதுகு வலி! சரியாக இரவு தூங்கவில்லை, அந்தக் காரணமாகவும் இருக்கலாம்! யுகாதி நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.. எல்லாம் காதுகளில் விழுகிறது! இப்படி பாபா அங்கே இருக்க.. நூலாசிரியர் இங்கே இருக்க , இந்த நிலை தர்ம சங்கடத்தைத் தருகிறது நூலாசிரியருக்கு! இப்படி ஒரு நாளும் நிகழ்ந்ததில்லை! ஆனால் வலி அவர் முதுகை கவ்விப் பிடிக்க, அவரால் அதை மீறி எழ முடியவில்லை!
இசை அரசி பி.சுசீலா அம்மா பாடுவது அறையில் எதிரொலிக்கிறது, தன்னால் எழ முடியவில்லையே என்று ஒரே வருத்தம்! உறங்கி விடுகிறார்! நேற்றைய இரவுக்கும் சேர்த்துத் தூங்குகிறார்! பிறகு பாபா மாணவர் சுதீந்திரன் அவர் அறைக்கு வருகிறார், பாபா நூலாசிரியரை அழைக்கிறார் எனும் தகவலோடு!
ஆனால் நூலாசிரியருக்கோ ஒரே தர்ம சங்கடம் ! பதிலுக்கு தனது சூழலையும் , தாழ் பதித்த மன்னிப்பையும் கொண்டு செல்லுமாறு சொல்கிறார் நூலாசிரியர்! பாபாவிடம் இருந்து பதிலுக்கு ஆசீர்வாதங்களையும் விபூதி பிரசாதங்களையும் எதிர்பார்க்கிறார் நூலாசிரியர்!
அடுத்த நாள் வலியோடு தான் விடிகிறது! அதே மாணவர் வருகிறார்! ஆனால் கையில் பிரசாதமில்லை! காலையில் வந்து அவர் உடல் நலம் விசாரிக்கிறார்! பிறகு வலியோடு தூக்கம்! அப்போது காலை 10 மணி இருக்கும்! பாபா விடுதிக்கு வருகிறார் என ஒரு கல்லூரி பேராசிரியர் பறபறக்க.. அநேகமாக உங்களைப் பார்க்கத் தான் இருக்கும் என்று வேறு சொல்லி விட.. பாபா வருகிற பரவசத்தில் எப்படியோ உயிரைக் கையில் பிடித்து தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டு கதவோரம் வர, அதற்குள் பாபாவே அவர் முன் தோன்ற.. பாபாவின் கைகளைப் பிடித்து "சுவாமி! என்னை தேடி ஏன் சிரமப்பட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள்?" என்று நூலாசிரியர் உணர்ச்சிவசப்பட... பாபாவோ "இது சிரமா இல்லை பங்காரு பிரேமா!" என்று பாபா அன்பைப் பொழிகிறார்! "உன்னால் நடக்கவே முடியவில்லை என்று சொன்னார்களே! எப்படி இவ்வளவு தூரம் நடந்தாய்?" என்று பாபா கேட்க... நீங்கள் வருகிறீர்கள் என்று சொன்னார்கள், ஆகவே தான் சுவாமி சிரமப்பட்டு, என்று நூலாசிரியர் சொல்கிற போதே "உன்னால் என்னிடம் வர இயலாததால் , நானே உன்னிடம் வந்தேன்!" என்கிறார் பாபா! அவர் கண்ணோ கலங்க... வலியோ இறங்க.. அப்படியே பாபா அவரை கைத் தாங்கலாய் கட்டிலுக்கு அழைத்துச் செல்கிறார்! பாபாவின் காலில் விழ வேண்டும் என்று மீண்டும் அவர் எத்தனிக்க.. பாபா அதை மறுத்து அவரை கட்டிலில் அமர வைத்து, அறையில் இருந்த நாற்காலியை கட்டில் அருகே பாபாவே இழுத்து அதில் அமர்ந்து தனது திவ்ய பிரபந்தக் கால்களை அந்தக் கட்டிலின் மேல் உயர்த்தி, நூலாசிரியர் நமஸ்கரிக்க வழிவகை செய்கிறார்! பாபா மாணவர் சாயி கிருஷ்ணனும் , விடுதிப் பணியாளர் கங்காதரும் இந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காண்கிறார்கள்!
பிறகு தியாகராஜ கீர்த்தனையில் இருந்து நூலாசிரியர் ஒரு வரி பாடுகிறார் , அதன் அர்த்தம் "என்னைத் தேடி இத்தனை தூரம் நடந்தே வந்தீரா?" என்பது!
அதற்கு பாபா மிகவும் வேடிக்கையாக "நான் நடந்து வரவில்லை , விமானத்தில் வந்தேன்!" என்று சிரித்தவாறே கூறுகிறார்! பிறகு,
"பங்காரு உனக்கு ஒன்றுமில்லை! நாளைக்கு நீ தரிசனத்திற்கு வந்துவிடுவாய்!" என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்! ஒரு மூத்த பக்தரிடமும் இதையே சொல்ல.. அது நூலாசிரியர் காதுகளில் ரீங்கரிக்கிறது!
பாபா அவதாரம் அல்லவா ஆகவே தான் விமானம் தரை இறங்குவது போல் இந்தப் பூமியில் தரை இறங்கி இருக்கிறார்! வேடிக்கையாக பாபா சொல்வதிலும் வியன் ஞானம் ததும்பி வழியவே செய்கிறது!
தன்னையே தேடி வந்த பாபாவுக்கு நன்றி சொல்வதற்கு முன் அப்படி வரவழைத்த அந்த முதுகு வலிக்குத் தான் நூலாசிரியர் முதலில் நன்றி சொல்ல வேண்டும்!!
(ஆதாரம் : சத்யம் சிவம் சுந்தரம் | பாகம் - 7 | பக்கம் : 13 - 17 | ஆசிரியர் : ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி)
தேடி வந்து தெய்வமே அருள் புரியும்! பக்தி ஒன்றே காந்தம்! அந்த காந்தமே சாயி எனும் பிரசாந்தத்தை நமை நோக்கி இழுக்கச் செய்கிறது! துரு பிடித்து காந்தம் போல் அன்றி சுத்தமான காந்தமாக சுயநலமில்லா பக்தியோடு சாயி சன்னதியில் நாம் அனைவரும் சுடர்வோமாக!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக