தலைப்பு

திங்கள், 18 மார்ச், 2024

பங்களாதேஷில் மோசடிகளுக்கு பெயர் போன ஒரு சிற்றூர் பாபாவால் பெற்ற புத்துயிர்!

மிக முரட்டுத்தனமான மனதை மலரினும் மென்மையாக மாற்ற பாபா எடுக்கும் மிகப் பெரிய ஆயுதம் பேரன்பு... பாபாவின் ஒவ்வொரு பேரற்புதங்களில் ஒளிந்திருப்பது பேரன்பே! தலைகீழாய் இருந்த பலரை எவ்வாறு பாபா நேராக மாற்றி அருளினார் என்பவை மிக சுவாரஸ்யமாய் இதோ...!

ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கம் அனைவரும் அறிந்ததே... அதைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் "நாங்கள் வேலை நிறுத்தம் செய்வதில்லை " என பாபாவிடம் ஒன்று சேர்ந்து ஒருமுறை உறுதிபடக் கூறுகிறார்கள்... நூலாசிரியர் இதனை பெரிய விஷயம் என பதிவு செய்கிறார்... அவர்களின் மனமாற்றம் பாபாவின் சங்கல்பத்தினால் அரங்கேறி இருக்கிற அந்த சமயத்தில் அவ்வாறு சொல்லும் அவர்களைப் பார்த்து...

*"ஏதோ என்னைப் பார்த்த உணர்ச்சிப் பரவசத்தில் இப்படி சொல்லி விடாதீர்கள்! சொன்னபடியே செய்ய முடியுமா? வாக்குறுதிகள் அனைத்தும் காற்றோடு கரைந்து போகும் காலம் இது என்பது எனக்கு நன்கு தெரியும்!"* என்கிறார் பாபா... "செயலிலே பார்த்து கொள்ளுங்கள் சுவாமி எங்கள் சொல்லை!" என கோரஸாக சொல்லி.. தாங்கள் சொல்லியவாறே வேலை நிறுத்தமின்றி செயல் புரிகிறார்கள்!


T.V ஆனந்தன் அவர்களின் அனுபவத்தை கேட்க மேல் காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்..

தெற்கு ரயில்வே ஊழியர்கள் பெரும்பாலானோர் பாபா பக்தர்களே! 30 ஆண்டுகளுக்கு முன் (1955) அதன் சங்கத்தலைவர் டி.வி ஆனந்தனுக்காக பாபா நிறைய அருள் விளையாடல்களை நிகழ்த்தி இருக்கிறார் என நூலாசிரியர் பதிவு செய்கிறார்!  

1984 ல் பெரியதொரு கலவரம்... முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டு வீழ்த்தியதன் எதிர்விளைவாக நிகழ்ந்த கொடூரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல... பஞ்சாப்- ஹரியானா மாநிலங்களில் கவ்விய வன்முறை பாரத இறையாண்மையின் கழுத்தையே நெறித்தது! பஞ்சாப் பஞ்சரானது... ஹரியானாவில் கலவரம் வெடித்து 'வெறி'யானாவானது... அப்போது கலவரங்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக பலர் உள்ளிருந்து தூண்டிவிடுகின்றனர்... அதில் ஒரு லாரி நிறைய குண்டர்கள் மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு ஊற்றிக் கொடுத்து மேலும் அந்த கலவரங்களை தொடரலாம் எனும் தீய எண்ணத்தில் விரைகின்றனர்... அப்படி அவர்கள் விரைந்து வந்த ஒரு இடம் குர்காவ் சேரி..

 விலை உயர்ந்த அயல்நாட்டு மது பாட்டில்கள் அவை... ஆனால் அந்த சேரியே அதை எதிர்க்கிறது... தூரத்திலேயே அந்த தீமையைச் சுமந்து வரும் லாரியை மறிக்கிறது.. அதுவும் எப்படி ? பாபா பஜனை பாடியபடியே... அந்த சேரியே பாபாவின் அறநெறிகளைப் பின்பற்றும் இடம்... அது இடமே அல்ல ஆன்மீகத்தடம்..‌மிகவும் எளிய மக்கள் வலிமையான பாபாவின் ஆன்மீக நெறிகளை பின்பற்றுபவர்கள்...

அவர்களை பாபா தடுத்தாட் கொள்வதில் அவர்களோ லாரியை தடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து... வேறெங்கும் அவை செல்லாத வண்ணம் உடைத்து கழிவு நீரில் மதுவை கொட்டுகிறார்கள்... புரட்சி என்பது யாதெனில்? அது இதுவே! என்பதை அம்மக்கள் நிரூபிக்கிறார்கள்...! கொதிக்கும் வன்முறை நெருப்பில் மதுவை ஊற்றி மேலும் அதை வளர்க்கலாம் என நினைத்திருந்த கெட்ட எண்ணத்தை அவர்கள் தவிடு பொடியாக்குகிறார்கள்... 

அவர்களிடம் எப்படி பாபா மீதான பக்தி வந்தது என கேட்கிற போது... அவர்களோ... "இந்த சாமி.. என்னா என்னா அற்புதம் பண்றாரு... அட எஞ் சாயீ! சின்ன லோட்டா'ல இருந்த பிரசாதப் பால நூத்துக் கணக்கான பேருக்கு கொடுக்கற மாதிரி வளர்க்கறாரு... ஊதுபத்திய ஏத்தினா ஒரு ராத்திரி முழுக்கா புகை வர்ற மாதிரி பண்றாரு... என்னா அற்புத லீல!" என ஆச்சர்யப்படுகிறார் அந்தச் சேரியில் ஒரு பக்தர்... அவர் பெயர் சர்பஞ்ச். இப்படி பாபா தனது திருவிளையாடல்களால் தனது பேரிருப்பையும், பேரன்பையும் அதனால் விளைகிற பேரற்புதங்களையும் புரிந்து அவர்களை அக மாற்றத்திற்கு உள்ளாக்குகிறார்! 

பங்களாதேஷ் எல்லையிலிருந்து 200 அடிகளில் உள்ள ஒரு சிற்றூர்... பெயர் குறிப்பிட விரும்பாத நூலாசிரியர்.. D என்பதாக மட்டுமே அந்த சிற்றூரை பதிவு செய்கிறார்... ஆரம்பகால கட்டத்தில் அந்தச் சிற்றூர் சட்டவிரோத செயல்களுக்கான பாசறையாக மட்டுமே இருக்கிறது... முழுக்க முழுக்க அது கள்ளக்கடத்தல் பகுதி... தலைகீழாக இருந்த அந்தச் சிற்றூரில் அங்குள்ள ஒருவரை அகமாற்றம் செய்ததின் மூலம் அவ்வூரையே தனது நாம மகிமையை துலங்கச் செய்கிறார் இறைவன் பாபா.. அந்த நபர் பெயர் பீம சேன். "எங்க கிராமத்துக்கு யார் என்ன திருடிட்டிப் போனாலும் திருடினவங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டம் வர்றதுங்களாம்...அதுனால திருடிய பொருள எல்லாமே திரும்ப வந்து எங்க கிட்டயே போட்டுட்டு போயிடறாங்க!" என பாபா ஆட்கொண்ட கிராமத்தைப் பற்றிய தனது அனுபவத்தை மனம் திறக்கிறார் பீம சேன்! திருடியவர்கள் எங்கேனும் திரும்பித் தருவார்களா? எங்கேனும் நடந்திருக்கிறதா? பாபா அருள் வளையம் வருமே ஆயின் அருட்பாதுகாப்பு தானாக சூழ்ந்து விடுகிறது...ஒரு புல் பூண்டு கூட தெய்வீகத்தில் ஆழ்ந்து விடுகிறது! இப்படியே அந்தச் சிற்றூர் முரணிலிருந்து அரணுக்கு அக மாற்றம் அடைகிறது!

(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி / பக்கம் : 99 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


அவரவர் கர்ம வினைக்கேற்ப சம்பவங்கள் வாழ்வில் நிகழ்கிற போது ஏதேனும் சிறு நன்மை செய்திருந்தாலும்/ செய்து வந்தாலும் அதற்கு தகுந்தாற் போல் தனது அருட்காவலை நீட்டி தடுத்தாட் கொள்வதே இறைவன் பாபாவின் தர்ம நியதி! மனம் மென்மையாக வேண்டும்... சொல் உண்மையாக வேண்டும்... செயல் நன்மையாக வேண்டும்.. இவை மட்டுமே அக மாற்றம்! அப்பேர்ப்பட்ட அக மாற்றமே சுக மாற்றம்... அது பாபா சொல்படி நடப்பதால் மட்டுமே ஏற்படுகிறது.. ஒவ்வொருவர் அக மாற்றத்திலேயே ஜக மாற்றமும்.. ஜக மாற்றத்தால் யுக மாற்றமும் அடங்கி இருக்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக