இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பான கடினமான காலகட்டத்தில் தேவதாசி பிரிவில் பிறந்து சங்கீத சாஸ்திரம், நாட்டியக் கலை மற்றும் பன்மொழிப் பாண்டித்யம் பெற்று நாடுபோற்ற விளங்கியவர் பெங்களூர் நாகரத்னம்மா. அன்றைய மெட்ராஸில் "வருமான வரி செலுத்திய முதல் பெண் கலைஞர்" என்ற பெருமைக்கு உரியவர். சமூக நலனிலிலும், சமத்துவம் நாட்டலிலும் ஒரு பெரும் போராளியாகத் திகழ்ந்து சாதித்துக் காட்டிய பரோபகாரி. தனது மானசீக குருவான ஸ்ரீ தியாகராஜரின் சந்நதிக்கு அருகிலேயே தனக்கும் ஒரு நிரந்தர நினைவிடத்தைப் பெற்றவர். எல்லாவற்றிற்கும் மேலாக, கலியுக ராமபிரான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அருளுக்குப் பாத்திரமான புண்ணியாத்மா.
🌷இளமையும் கல்வியும் : பெங்களூர் நாகரத்னம்மா 1878ம் ஆண்டு மைசூருக்கு அருகில் ஹெக்டே தேவன்னகோட்டா என்ற கிராமத்தில் திருமதி. புட்டலட்சுமி என்ற தேவதாசித் தாயாருக்கும் வழக்கழிஞர் திரு. சுப்பாராவ் அவர்களுக்கும் மகளாகப் பிறந்தார். தந்தை சுப்பாராவால் கைவிடப்பட்ட தனது தாயாருடன், மைசூர் மகாராஜாவின் அரசவையின் சமஸ்கிருத அறிஞரான சாஸ்திரியிடம் தஞ்சமடைந்தார். அவர் சிறுமி நாகரத்னம்மாவிற்கு சமஸ்கிருதமும் இசையும் பயிற்றுவித்தார். பின்னர் பெங்களூருக்கு சென்று, அங்கே வயலின் கலைஞராக இருந்த தனது மாமா வெங்கிடசாமி பாதுகாப்பில் தனது படிப்பைத் தொடர்ந்தார். கன்னடம், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளைக் கற்றுக் கொண்டதோடு நடனத்திலும் தேர்ச்சி பெற்றார். இசை வித்துவான் திரு. முனுஸ்வாமப்பா அவர்களிடம் குரு-சிஷ்ய பாரம்பரிய முறைப்படி கர்நாடக இசைப் பயிற்சியும் பெற்றார். தனது 15வது வயதிலேயே வயலின் கலைஞராகவும் நடனக் கலைஞராகவும் தனது முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.
🌷தேவதாசிகளின் சட்டப் போராட்டம்: சுதந்திரத்திற்கு முன்பான இந்திய சமூகத்தில், தேவதாசிகளைக் குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவி வந்தன. முதல் கருத்து என்னவென்றால்... வசீகரமும், புத்திசாலித்தனமும், பண்பாடும், கலைத்திறமையும் நிரம்பப் பெற்றிருந்த ஆளுமை மிக்க சில பெண்கள், கோவில்களில் கடவுளுக்கு அடிமையாக தங்களைக் கருதி சேவை செய்ய உறுதி பூண்டவர்கள். அந்த உறுதிக்கு ஏற்ப இசை, நடனம் போன்ற கலை மரபு பரிபாலனம், பக்தி, வழிபாடு, தொண்டு எனப் பல்வேறு வகையிலும் சமுதாயத்தின் கலை வாரிசுகளாகத் திகழ்ந்தவர்கள். கோவில் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் சமூகத்தின் சிறப்பு நிகழ்வுகளில் அவர்களுக்கு ஒரு மரியாதைக்குரிய இடம் உண்டு.
இரண்டாவது கருத்து என்னவென்றால்... 18ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வலுப்பெறத் தொடங்கிய பின்னர், கோவில்களையும் அதனைச் சார்ந்த கலைஞர்களையும் பரிபாலிக்கத் தேவையான அதிகாரத்தையும் செல்வத்தையும்... நமது அரசர்களும் சிற்றரசர்களும் இழந்தனர். மிகுந்த கௌரவமும் கண்ணியமும் நிறைந்திருந்த தேவதாசி சமூகம்... சரியான ஆதரவின்றி பல சோதனைகளை சந்திக்க வேண்டி வந்தது. சுயநலம் மிக்க பிரபுக்களாலும் செல்வந்தர்களாலும் அந்த சமூகம் பல இன்னல்களுக்கும் கெட்ட பெயருக்கும் ஆளாயினர். எனவே தேவதாசி என்ற அமைப்பு கலைக்கப்பட்டு அவர்களும் சமுதாயத்தில் மற்றவர்கள் போல சாதாரண நடைமுறைக்கு திரும்பவேண்டும்! - - - என்ற அந்த இரண்டாம் கருத்தே தேவதாசி ஒழிப்பு சட்டத்திற்கு அடிகோலியது.
1927ல் தொடங்கிய விவாதம், இறுதியில் 1930ல் இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளை சட்டம் திருத்தப்பட்டதில் நிறைவடைந்தது. தேவதாசிகளுக்கு தரப்பட்டிருந்த கடமைகள், அவர்களுக்கு கோவில்களில் இருந்து வழங்கப்பட்டிருந்த மானியம், நிலங்கள் திரும்பப் பெறப்பட்டது. தேசத்தின் ஒருசில பகுதிகளில் தேவதாசி முறையை தவறாகக் கையாளும் அயோக்கியர்களை ஒழிப்பதை விடுத்து... ஆலயம் மற்றும் கலை சேவையை முழு அர்ப்பணிப்புடன் புரியும் ஒரு பக்தி இனமே அழிக்கப்படுவதா? என்று கோபம் கொண்டவராய் நாகரத்னம்மா, "சென்னை தேவதாசி சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கிப் போராடினார். ஆனாலும் இறுதியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் கடும் எதிர்ப்பால் இவர்களின் போராட்டம் தோல்வியடைந்தது. அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு தேவதாசி இனப் பெண்கள் கல்வி கற்க வேண்டும், அதற்கு ஏதுவாக அவர்கள் கோவில்களில் நடனமாட தடை விதிக்க வேண்டும் எனவும் அந்தத் தரப்பு வாதாடி ஜெயித்தது.
🌷 ஸ்ரீ தியாகராஜர் :
1767ம் ஆண்டு தமிழகத்தின் திருவாரூரில் பிறந்த "காகர்ல தியாகப்ரம்மம்" என்ற ஸ்ரீ தியாகராஜர், ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். பெரும்பாலும் தெலுங்கில் இயற்றப்பட்ட இவரின் பாடல்கள், ஸ்ரீராமரைப் புகழ்ந்தே அமைந்தவை. அவற்றில் பல பாடல்கள் இன்றும் மிகவும் பிரபலமாக உள்ளன. அதில் குறிப்பிடும் படியானவை, தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியில் பாடப்படும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் மற்றும் உத்சவ சம்பிரதாய கிருதிகள் ஆகும்.
ஸ்ரீ தியாகராஜர், புலனின்பத்தின் மீதான பற்றுதலைக் கடந்தவர்; இறைவனுடனான அகத்தொடர்பில் ஆனதத்தைக் கண்டுணர்ந்தவர். நாதத்தின் மூலமாக பிரம்மத்தை அணுக வழிசெய்தவர்களில் முக்கியமானவர். இறைவனிடம் தன்னை சரணாகதி செய்யாமல், மனிதனுக்கு பிறவிகளில் இருந்து விடுதலை இல்லை என்பதைத் தெளிவாக அறிந்திருந்தவர். "நான்" என்பதைக் கடந்து செல்லுங்கள், அப்போதே உண்மையான சுதந்திரத்தை உணர்வீர்கள் என்று எடுத்தியம்பியவர். எளிமையான நேர்மையான வார்த்தைகளுடன், இதயங்களை உருக்கும் இசை நுணுக்கங்களுடன் அவரிடம் இருந்து பிறந்த கீர்த்தனங்கள் இன்றைக்கும் என்றைக்கும் அமுதமாகத் திகள்பவை. ஸ்ரீ தியாகராஜரின் இசை சம்பிரதாயத்திற்கும் அவரின் பாடல்களில் மேலோங்கிய பக்திக்கும் ஞானத்திற்கும் அடிமையாகிப் போனவர்களுள் முதன்மையானவர் பெங்களூரு நாகரத்னம்மா. தியாகராஜரின் கீர்த்தனைகள், நாகரத்னம்மாவின் சங்கீதத்தை மட்டும் உயர்த்தவில்லை... அவரின் ராமபக்தியையும் பெருகச் செய்தது. ஸ்ரீ ராமர் மீதான ஆழ்ந்த பக்தியும், அந்த பக்தியினால்... ஸ்ரீராமரின் தரிசனத்திற்கான ஆவலும் ஏக்கமும் நகரத்னம்மாவிற்கு நாளுக்குநாள் பெருகியது.
🌷தியாகராஜர் சமாதியும், ஆராதனையும், சமத்துவமும் :
1847ம் ஆண்டு தனது உடலை விடுத்த ஸ்ரீ தியாகராஜரின் திருவுடல் காவேரி நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டு எழுப்பப்பட்ட சிறியதான நினைவுச்சின்னம் விரைவில் மக்களால் மறக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் 50 அல்லது 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தியாகராஜரின் சில சீடர்கள் அந்த இடத்தை சிறிய அளவில் புதுப்பித்து... அவரது நினைவு நாளில் வழிபடும் விதமாக விழா நடத்தத் தொடங்கினர். பின்னர் அவர்களுக்குள் போட்டி பிரிவுகள் தோன்றி... பெரிய கட்சி, சின்ன கட்சி என்று பிரிந்து தனித்தனியே விழாக்கள் நடத்தினர். சாதாரண அரசியல் தலைவர் தொடங்கி... யோகிகள்... அவதாரங்கள் வரை, அவர்களது ஸ்தூல உடலின் மறைவுக்குப் பின்னர், அவர்களின் பிரதான வாரிசுகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ள விரும்பும் சுயநலமிகளால் மக்கள்கூட்டம் துண்டாடப்படுவது காலம் காலமாகவே நடந்து வருகிறது. அதற்கு ஸ்ரீ தியாகராஜரும் விதிவிலக்கல்ல! இந்த ஆராதனை விழாவின்போது குறிப்பிடும்படியாக, இரண்டு கட்சிகளுமே பெண்களை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை.
பெங்களூரு நாகரத்தினம்மாள், இந்த கோஷ்டி பூசல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவற்றைக் கண்டு... இது தொடர்பான சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தார். எனவே தியாகராஜரின் நினைவுச்சின்னம் இருந்த நிலத்தை வாங்கினார். அங்கே ஒரு கோயில் கட்டி, உள்ளே தியாகராஜரின் சிலையையும் பிரதிஷ்டை செய்தார். 1926ம் ஆண்டு கோவிலின் கும்பாபிஷேகத்தையும் சிறப்பாக நடத்தி முடித்தார். அதுவரை எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காத இரண்டு கட்சிகளும், நாகரத்னம்மாவின் இசை நிகழ்ச்சியான ஹரிகதையை அந்தக் கோவிலின்முன் நிகழ்த்துவதற்கு அனுமதி மறுத்தனர். மனம் தளராத நாகரத்தினம்மா, அந்த சன்னதியின் பின்புறத்தில் பல பெண் கலைஞர்களை பங்குபெறச் செய்து தனிச்சிறப்பான முறையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பல ஆண்டுகள் தளராமல் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த அவர், ஒருபோதும் தனது கருத்தை விட்டுக் கொடுக்கவில்லை. இறுதியில் 1941ம் ஆண்டுக்குப் பின்னர், அரசாங்க அதிகாரிகள் தலையீட்டில் சமாதானம் ஏற்பட்டு, தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியில் அனைவருக்கும் சம உரிமை கிடைத்தது.
🌷வெங்கடகிரியில் ஸ்ரீராமர் :
செல்வத்திற்கும், அதிகாரத்திற்கும், சமூக அந்தஸ்த்திற்கும் எந்தக் குறைவுமில்லாத தன்னிகரற்ற துணிச்சலான பெண்மணியாக சென்னையில் பிரபலமாக வாழ்ந்து வந்த பெங்களூர் நாகரத்னம்மா. 1951ம் ஆண்டு திடீரென தனது உடைமைகள் அனைத்தையும் துறந்து, ராமநாமத்தையே மூச்சாக எண்ணி…. தன்னை ஸ்ரீராமருக்கே அர்ப்பணம் செய்து கொண்டதற்கு ஊக்கசக்தியாக அமைந்தது எது ?
1951ம் ஆண்டு, அவருக்கு நிகழ்ந்த ஒரு தெய்வீக நிகழ்வு தான் அது!.. ஸ்ரீ தியாகராஜர் நகரத்னம்மாவின் கனவில் தோன்றி அவருக்கு சில தெய்வீக ரகசியங்களையும் கட்டளைகளையும் வெளிப்படுத்தி ஆசி வழங்கினார். உடனே அது தொடர்பாக... வெங்கடகிரி ராஜாவிற்கு நகரத்னம்மா ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் பின்வருமாறு: ‘மஹாபிரபு! என் இஷ்டதேவதா ஸ்ரீ தியாகராஜர் கனவில் எனக்கு தரிசன பாக்யம் அளித்தார். இறைவனே பூலோகத்திற்கு இரங்கி, விரைவில் தனது பயணத்தில் வெங்கடகிரிக்கு வரவிருக்கிறார். அவரது தரிசனத்தைப் பெறுவதற்காக, என்னை வெங்கடகிரிக்குச் செல்லும்படி கட்டளையிட்டார்! மேலும் அவரின் தற்போதைய பெயர் "பகவான் ஸ்ரீ சத்ய சாயி" என்று என்னிடம் கூறினார். எனவே நான் வெங்கடகிரிக்கு வருவதற்காக உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்!’
அதற்கு ஒரு வருடம் முன்பாக (1950ம் ஆண்டு முதல்) பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா வெங்கடகிரி சமஸ்தானத்திற்கு விஜயம் செய்யத் தொடங்கியதை அறிந்தார். மேலும் அந்த சமஸ்தானத்தின் ராஜாவான ஸ்ரீ கிருஷ்ண யச்சேந்திரா அவர்களின் மாபெரும் தெய்வீக அனுபவத்தையும் கேள்வியுற்றார். அதாவது, ஒருமுறை ராஜா ஸ்ரீ கிருஷ்ண யச்சேந்திரா, சுவாமியிடம்... சில வருடங்களுக்கு முன்பு இறந்துபோயிருந்த தனது தாயாரை தரிசனம் செய்ய விரும்புவதாக கேட்டுக்கொண்டார். உடனே சுவாமி “ரத்னம்மா! வா”' என்றழைக்க ராஜாவின் தாய் ரத்னம்மா, அங்கிருந்த சுவரொன்றிலிருந்து ஸ்தூல சரீரத்துடன் வெளிப்பட்டாள்!. சகஜமாக ஒரு உயிருள்ள மனுஷியாகவே வந்த தாயார், தன் மகனான வெங்கடகிரி ராஜாவிடம், ‘இந்த நம் சுவாமி (பகவான் பாபா) நீ எப்பொழுதும் வழிபடும் ஸ்ரீராமரே! குணாதிசயங்களில்… ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்றவர். மாயையினால் உன் பார்வையில் இருந்து தப்பிக்கப் பார்ப்பார். ஜாக்கிரதையாக இருந்து, அவரை ஒருபோதும் விட்டுவிடாதே!’ என்று உறுதியுடன் பேசினாள். சில நிமிடங்களுக்குப் பிறகு ராணியார் அங்கிருந்து மறைந்து விட்டார். வெங்கடகிரி ராஜாவிற்கு நிகழ்ந்த இந்த தெய்வீகப் பேரதிசய அனுபவம், நாகரத்னம்மாவிற்கு உண்மையை உணர்த்தியது.
🌷சாயிராமரே சாயிராமர் : ஸ்ரீ சாயிராமரின் தெய்வீக சங்கல்பத்தின் விளைவாக, அவர் வெங்கடகிரிக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பத்தில் நகரத்னம்மாவிற்கு அங்கே செல்ல வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு கிருஷ்ண ஜெயந்தியின் உற்சவத் திருவிழா சமயம். அதில் பாபா தனது முன்னிலையில் தியாகராஜ கிருதிகளை இரண்டு மணி நேரம் பாடும் வாய்ப்பையும் வழங்கினார். ஆனந்தத்தில் மெய்மறந்து போயிருந்த நாகரத்னம்மாவை அருகே அழைத்து, ஸ்ரீ ராமரின் விக்ரகத்தை தனது அங்கை அசைப்பின் மூலமாக வரவழைத்துக் கொடுத்து ஆசீர்வதித்தார். சுவாமியின் கருணையின் விளைவாக, நாகரத்னம்மா ஸ்ரீ ராமபிரானின் தரிசனத்தையும் பெற்றார். த்ரேதாயுக ராமபிரானே இந்தக் கலியுகத்தில் சாயிராமராக வந்துள்ளதை நாகரத்னம்மா தெளிவாக உணர்ந்தார். அதற்குப் பின் ஏறத்தாழ 24 மணி நேரத்திற்கு ஒருவித தெய்வீக மயக்கத்தில் இருந்தாள் நாகரத்னம்மா. பாபா தனக்கு இரண்டு வரங்கள் (1. வாழ்வின் இறுதிவரை ராமநாமத்தை மறவாதிருத்தல், 2. அமைதியான இறப்பு ) வழங்கியதை எண்ணி எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தாள்.
சுவாமியின் வரங்களுக்கு ஏற்ப 74 வயது வரை ஸ்ரீராம நாமத்தை மறவாது சதாஜெபித்த வண்ணம் வாழ்ந்து, அமைதியான முறையில் உடலை நீத்தார். மேலும் திருவையாறு ஸ்ரீ தியாகராஜரின் சன்னிதிக்கு அருகிலேயே இவருக்கு சமாதியும் சிலையும் நிறுவப்படும் மகத்தான பேறுபெற்றார் புண்ணியாத்மா ஸ்ரீ பெங்களூர் நாகரத்னம்மா!
✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக