பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
📝 நிகழ்வு 501:
திரு பிலிப் மேத்யூ பிரசாத் என்பவர் கேரளாவில் ஒரு நல்ல கடவுள் பற்று மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர்; ஆனால் தீய சகவாசத்தின் காரணத்தினால் அவர் தனது 17ஆவது வயதில் ஒரு தீவிர நக்சலவாதியாக மாறினார். 1968இல் காவல் படைக்கு எதிராக ஆயுதங்களுடன் கூடிய கொரில்லா போரில் ஈடுபட ஆரம்பித்தார். கோழிக்கோட்டில் 1973இல் சிறையில் இருந்தபோது மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானார். ஒருநாள் சத்ய சாயி சேவாதளத் தொண்டர்கள் சிறையில் ஒரு பஜனை நிகழ்ச்சி நடத்தினர். அதன் முடிவில் அனைவருக்கும் ஆரஞ்சுப் பழங்களை பிரசாதமாக அளித்தனர். அவருக்கு அந்த பழம் அளிக்கப்பட்டபோது, அவர் மிகுந்த கோபத்துடன் அதனை சேவாதளத் தொண்டரின் மீது விசிறி எறிந்தார். அதனால் அடிபட்ட தொண்டர், இந்த மனிதரின் மனநிலையில் ஒரு மாற்றத்தை அளிக்குமாறு சுவாமியிடம் பிரார்த்தனை செய்தார்.
பிறகு ஒருநாள் இரவில் சிறையில் அவருக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டபோது அவர் தனக்கு மன அமைதியை அளிக்குமாறு இயேசுவுடன் பிரார்த்தனை செய்தார். பல முந்தையை இரவுகளில் தூக்கமின்மைக்கு பின்னர் அன்று இரவு நன்றாக உறங்கினார்.
சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் சட்டத்துறையில் வேலை செய்யத் தொடங்கினார். கிறிஸ்துவ மதத்தின் கோட்பாடுகளையும் பாபாவின் தத்துவங்களையும் படித்து அறிந்தார்; இரண்டுமே கீழ்த்தர மக்களின் துன்பங்களைக் குறைப்பதற்கு முனைவதாக அறிந்தார்.
அதன்பிறகு அடிக்கடி தனது குற்றங்களுக்காக வருந்தி வந்தார். 1985இல் தனது குடும்பத்துடன் பிரசாந்தி நிலையத்திற்கு வந்தார். ஓணம் பண்டிகை முடிந்த மறுநாள் அவரது குடும்பத்துடன் இன்டர்வியூவிற்கு சுவாமியால் அழைக்கப்பெற்றார். அவர்கள் 45 நிமிடங்கள் சுவாமியுடன் இருக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றனர். அங்கே அவரது மனம் மிகுந்த ஆறுதல் அடைந்தது; பிறகு பச்சைக்கல் பொருந்திய மோதிரம் ஒன்றை சுவாமி அவருக்கு சிருஷ்டி செய்து அளித்தார்; பிறகு சீரடி பாபாவின் முகம் அடங்கிய டாலருடன் கூடிய தங்க சங்கிலி ஒன்றை சிருஷ்டி செய்து அவருடைய மனைவிக்கு அளித்தார்! அது மட்டுமல்லாமல், முத்துக்கள் பதிக்கப்பெற்ற சிலுவை ஒன்றை சிருஷ்டி செய்து அவரது மூன்று வயது மகனுக்கு அளித்தார்; ஒரு பக்கம் இயேசு கிறிஸ்துவும் மற்றொரு பக்கம் சத்ய சாயியும் பதிக்கப்பட்ட ( கழுத்தில் அணியப்படும்) பதக்கம் ஒன்றை அவருடைய ஆறு வயது மகளுக்கு சிருஷ்டி செய்து கொடுத்தார்.
பிலிப் ஒரு சிறந்த பேச்சாளர் ஆவார். கூடிய சீக்கிரத்தில் அவர் சத்ய சாயி நிறுவனங்களின் மிகுந்த சுறுசுறுப்பான பணியாளராக மாறினார். தனது சொற்பொழிவுகளின் மூலம் சுவாமியின் அறிவுரைகளைப் பல இடங்களில் மக்களுக்கு தெரிவிக்கும் உயர்ந்த பணியில் ஈடுபடலானார்.
ஒருநாள் அவர் தனது உரையை முடித்த பிறகு ஒரு முதியவர் பிலிப்பை அணுகி, " எனது இல்லம் இங்கிருந்து தொலைவில் இல்லை; நீங்கள் எனது இல்லத்திற்கு வந்து காபி அருந்துவீர்களா?" என்று கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்ட பிலிப், அவரைப் பின்தொடர்ந்து நடந்தார். அப்போது அந்த முதியவர், " நீங்கள் என்னை யார் என்று உணரவில்லை போலும்!
1973 இல் சிறையில் பஜனைக்குப் பிறகு உங்களுக்கு நான் ஆரஞ்சு பழம் கொடுத்தபோது நீங்கள் அதனை என் முகத்தில் விட்டெறிந்தீர்கள்" என்றார்! உடனே திலிப் அவரது கால்களில் விழ முயற்சித்த போது அவரை தடுத்த அந்த முதியவர், "அன்று நான் பகவானிடம் உங்களுக்கு மனமாற்றம் அளித்தருளுமாறு வேண்டினேன். இன்று நான் உங்களைப் பார்த்த போது உங்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றத்தை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 502:
திரு. என்.எஸ். வெங்கடேஸ்வரன் என்னும் பக்தர் முதன்முதலில் 1994ல் சுவாமியை தரிசித்தார். உடனே பிரசாந்தி நிலையத்தில் நிரந்தரமாக வசிக்க முடிவு செய்தார். பலவிதமான ஆற்றல்களைப் பெற்றிருந்த அவர், வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு பிரசாந்தி நிலைய ஆசிரம வாழ்க்கை முறையைப் பயிற்சி அளித்து வந்தார். அவர், தனக்கு கிடைத்த அனுபவத்தை அவரது வார்த்தைகளில் பின்வருமாறு விவரித்துள்ளார்:
" 01/10/1994 அன்று, நான் ,த்ரயீ பிருந்தாவனத்தில் பின்னால் இருந்த வரிசை ஒன்றில் அமர்ந்து கொண்டு, சுவாமி, மாணவர்களிடையே உரையாடிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று எனது இதயம் பிழியப்பட்டது போல உணர்ந்தேன்! என்னால் சுவாசிக்க முடியவில்லை! உடல் முழுவதும் வியர்த்தது! கண்கள் வீங்க ஆரம்பித்தன! நான் கீழே சாய்ந்து விட்டேன்! அங்கே அமர்ந்திருந்த மருத்துவர் ஒருவர் என்னைப் பரிசோதித்து, நான் இறந்து விட்டதாகக் கூறியதாக, பிறகு நான் கேள்விப்பட்டேன்!
நான் மயங்கியவுடன் அங்கே சலசலப்பு ஏற்பட்டது போலும்! அப்போது சுவாமி உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்து, தன் கையில் தண்ணீர் அடங்கிய டம்ளருடன் என்னை நோக்கி வந்தாராம்! அப்போது அங்கிருந்த மருத்துவர், சுவாமியிடம், " சுவாமி! அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார்!" என்று கூறினாராம்! அதற்கு சுவாமி, "ஆமாம்! அதனால் தான் நான் இங்கு வந்தேன்! அவர் மேலும் உயிர் வாழ வேண்டிய அவசியம் உள்ளது!" என்று கூறிவிட்டு, எனது முகத்தில் தண்ணீரைத் தன் கையினால் தெளித்து, "வெங்கடேஷ்! எழுந்திரு! உனது சுவாமி வந்திருக்கிறேன்! எழுந்திரு!" என்று கட்டளையிட்டாராம்! அந்தக் கணம் நான் என் கண்களை மெதுவாகத் திறந்தேன்! அருகில் இருந்த பக்தர்களிடம் சுவாமி பேசிக்கொண்டு இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. முழுமையாக எனது சுயநினைவை நான் அடைந்த பிறகு, இரு கைகளையும் கூப்பி சுவாமியை நமஸ்கரித்தேன்!"
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக