பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
📝 நிகழ்வு 351:
ஒரு நாள் காலை சாயி ரமேஷ் ஹாலில் குழுமியிருந்த பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதற்காக சுவாமி, த்ரயீ பிருந்தாவனத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பார்த்து, கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த கோடை வகுப்பிற்கு செல்லுமாறு பணித்தார். சுவாமியின் கட்டளைக்கு அடிபணிந்து அனைவரும் அங்கு சென்றனர். அன்றைய வகுப்புகளும் சிறப்பாக நடந்து முடிந்தன. பிறகு மாலையில் கல்லூரி ஆடிட்டோரியத்தில் உரையாற்றுவதற்காக உள்ளே மேடையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த சுவாமி திடீரென ஒரு முதியவரின் முன்னால் நின்றார். அவர் ஆந்திராவை சேர்ந்தவர் ஆவார்; அவரிடம் சிரித்துக்கொண்டே ,"இன்று காலை நீ உன் நெற்றியில் ஒரு பிளாஸ்டிக் பொட்டு (திலகம்)
வைத்திருந்ததை பார்த்தேன்! ஆனால் இப்போது மாலையில் நேர்த்தியான ஒரு குங்குமப் பொட்டுடன் வந்திருக்கிறாய்! ஏன் இந்த வித்தியாசம்?" என்று கேட்டார்! அதைக் கேட்ட நான் அதிர்ந்து போனேன்! ஏனெனில், அந்த முதியவர் காலையில் சுமார் ஒரு 50 வது வரிசையில் அமர்ந்திருந்ததை நான் அறிவேன்! ஆனால் இந்த கடவுளோ அத்தனை தொலைவில் அமர்ந்திருக்கும் ஒருவரது நெற்றியில் உள்ள பிளாஸ்டிக் பொட்டினை கவனித்திருக்கிறார்! அது மட்டுமல்ல!! மாலையில் அவரிடம் அதைப் பற்றி கேட்டும் விட்டார்!! எனக்கே உரித்தான ஆர்வக்கோளாறின் காரணமாக, "சுவாமி! நீங்கள் எப்படி அந்த சிறிய பொட்டினை கவனித்தீர்கள்? அவர் வெகு தூரத்தில் அமர்ந்திருந்தார்! எப்படி இது சாத்தியம், சுவாமி? எனக்குப் புரியவில்லை!"என்று சுவாமியிடம் கூறிவிட்டேன்! அதற்கு சுவாமி சிரித்துக்கொண்டே , "யாரும் எனக்கு எதுவும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை! அனைத்து நடப்புகளும் என் பார்வைக்கும் கவனத்திற்கும் வந்து கொண்டுதானிருக்கும்! யாரும் எனக்கு சொல்ல வேண்டாம்!" என்று பதில் அளித்தார்!! இது எனக்கு கிடைத்த , சுவாமியைப் பற்றிய ஒரு பெரிய தெளிவாகும் !
ஆதாரம்: திரு. டாக்டர். அனில் குமார் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.
📝 நிகழ்வு 352:
மூர் என்னும் பெயர் கொண்ட ஒருவன் இங்கே பிரசாந்தி நிலையத்திற்கு வந்து தரிசன வரிசையில் அமர்ந்தான். சுவாமி அவனை அழைத்து, "உனக்கு என்ன வேண்டும்?" என்று வினவினார்! அதற்கு அவன், " விபூதி!" என்றான்! உடனே சுவாமி அவன் மீது விபூதியைப் பொழிந்தார்! அவனுக்குள் விபூதியைப் புகுத்தினார் எனச் சொல்லலாம்! இதற்கு காரணம் என்ன? மூர் ஒரு சிறந்த பாடகனாக இருந்தான். பிறகு அவன் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் பணி செய்பவனாகவும் , உணவு பரிமாறுபவனாகவும் பணியாற்றிய பிறகு உதவி மேலாளராக பணி உயர்த்தப்பட்டான். தான் ஒரு நாள் மேலாளராக மாறுவோம் என்று எதிர்பார்த்தான்! ஆனால் அது நடக்கவில்லை! ஏனெனில் அவன் ஒரு கருப்பர் இனத்தைச் சார்ந்தவன். ஆனால் அவன் பணி செய்த உணவகமோ ஒரு வெள்ளைக்காரருடையது. அதனால் அவன் மிகவும் வெறுப்படைந்தான். இந்த நிகழ்வு, பொதுவாகவே தனது இனத்தைச் சார்ந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்களை குறித்து அவனை ஆலோசிக்க தூண்டியது. இதன் விளைவாக நாளடைவில் ஒரு கருப்பர் இனக் கூட்டத்தின் தலைவனாக மாறினான். பிறகு ஒரு கொள்ளைக் கூட்டத்தில் சேர்ந்து கடத்தல்களில் ஈடுபட்டான்! தன் வீட்டின் மாடியில் அந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன் வசித்து வந்தான். மூர் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அவளைப் பலவாறு துன்புறுத்தி வந்தான். இதனைக் கேள்வியுற்ற மனைவியின் சகோதரன் அவளை தன்னிடம் வந்து ஒரு மாதம் தங்குமாறு கேட்டுக் கொண்டான். அதற்கு செவி சாய்த்து அவள் தன் அண்ணனின் ஊரான கலிபோர்னியாவிற்கு சென்றாள். அங்கே அவள் சுவாமியின் பக்தர்களின் வீட்டில் நடந்த பஜனைகளில் கலந்து கொண்டாள். அங்கே சுவாமியின் படங்கள், மற்றும் சில புத்தகங்களை வாங்கி இருந்தாள். அவள் மறுபடியும் தன் கணவன் வீட்டுக்கு வந்த போது அந்த வீட்டில் ஆங்காங்கே சுவாமியின் படங்களை சுவற்றில் மாட்டினாள். மாடியில் ஒரு சிறிய மேசையை சுற்றி அமர்ந்து. இந்தக் கொள்ளைக் கூட்டத்தினர் திட்டம் போடுவது வழக்கம். அந்த மேசையின் மீது சுவாமியின் புத்தகத்தை வைத்தாள்! ஒருநாள் அந்த கூட்டத்தினர் ஒரு வங்கியை கொள்ளை அடிப்பதற்காக ஒரு திட்டம் வகுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒருவன் உள்ளே நுழைந்து, " வங்கிக் கொள்ளை நம்மால் இனிமேல் செய்ய முடியாது! காவல்துறையினருக்கு நமது திட்டம் பற்றிய தகவல் கிடைத்துவிட்டது!" என்றான்! உடனே மூர் மிகவும் கோபமடைந்தான். எவ்வளவு பக்குவாக ஆராய்ந்து தீட்டிய திட்டம் இப்போது பாழாகிவிட்டதே என்ற ஏமாற்றத்திலும் கோபத்திலும் தன் கால்களை வெகுவேகமாகத் தரையில் ஊன்றியதில், நிலை தடுமாறி அவன் (தலை கீழ்நோக்கி இருக்கும்படியாக) கீழே விழுந்தான்! அப்போது அவனது தலை அந்த மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த சுவாமியின் புத்தகத்தின் மீது மோதியது! அந்தப் புத்தகத்தையும் அதனுள் இருந்த சுவாமியின் படத்தையும் அப்போது அவன் பார்த்தான்! உடனே அந்த புத்தகத்தைத் தன் கையில் எடுத்தான்! அதன் விளைவு தான் அந்த "விபூதி அனுபவம்"!
உனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த சுவாமி மேற்கொள்ளும் வழிகளில் ஒன்று தான் 'உன் தலையில் அடித்து ' உணர்த்துவது!
ஆதாரம்: "Sathya Sai Baba -God in Action: Talks by Kasturi" என்னும் புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 353:
எனது இளைய சகோதரி பிரேமா தன் சிறுவயதில் இருந்தே ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். ஒருநாள் அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுபவித்த சிரமத்தையும் வேதனையையும் எங்களால் பார்க்க முடியவில்லை. அன்று இரவு மருத்துவர்களும் நம்பிக்கை இழந்துவிட்டனர். நாங்கள் மிகவும் கவலை மிகுந்த நிலையில் சுவாமியிடம் வேண்டிக் கொண்டிருந்தோம். எங்களைக் கைவிடாமல், எப்படியும் சுவாமி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். சுவாமிக்கு ஒரு தந்தி அனுப்பினோம். இரவு முழுவதும் சுவாமியையே நினைத்துக் கொண்டிருந்தோம். மறுநாள் காலையில் பிரேமாவின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. அவரது சுவாசமும் சிறிது எளிதாகத் தெரிந்தது. இது கண்டிப்பாக சுவாமியினுடைய அனுக்கிரகமாகத்தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். பத்து நிமிடங்களுக்கு பிறகு பிரேமா, தனக்கு பசியாக இருக்கிறது என்றும் தனக்கு ஏதாவது உணவு கொடுக்குமாறும் கேட்டபோது நாங்கள் பெருமூச்சு விட்டோம். உணவை முடித்த பின்னர் தனக்கு கிடைத்த அனுபவத்தை பிரேமா எங்களிடம் பகிர்ந்தார்:" சுமார் 2 மணி இருக்கும்; அப்போது எனது மூச்சுத் திணறல் என்னால் பொறுக்க முடியாத நிலையை எட்டியது. அப்போது நான் சுவாமியிடம், " சுவாமி என்னால் இதனை பொறுக்க முடியவில்லை! இனிமேல் என்னால் இந்த வேதனையை தாங்க இயலாது! ஆகையால் எனது உயிர் உங்களது பாதகமலங்களை வந்து சேரட்டும்!" என்று முறையிட்டேன். அப்போது ஒரு வினோதம் நிகழ்ந்தது! நான் , எனது மூச்சை உள்ளே இழுப்பதற்கும் வெளியே விடுவதற்கும், எவ்வாறு அவதிப்படுகிறேனோ அதேபோல சுவாமியும் அவதிப்படுவதை என் கண்களால் பார்த்தேன்!! இந்த நிகழ்வு எனது இதய வேதனையை மேலும் அதிகரித்தது. என் கைகளை கூப்பிக்கொண்டு கண்களிலிருந்து நீர் வழிய, சுவாமியிடம், "சுவாமி! தயவு செய்து இவ்வாறு செய்யாதீர்கள்! எனது விதி எனக்கு இட்டுள்ள இன்னல்களை நானே அனுபவித்துக் கொள்கிறேன்! நீங்கள் ஏன் என்னுடன் சேர்ந்து இந்த துன்பத்தை அனுபவிக்கிறீர்கள்? எனது துன்பங்களை நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? வேண்டாம், சுவாமி! நிறுத்திக் கொள்ளுங்கள் சுவாமி!! " என்று கெஞ்சினேன்! ஆனால் சுவாமி நிறுத்தவே இல்லை! பக்தர்களைக் காத்தருளும் அவர் எப்படி நிறுத்துவார்? அவர்தானே நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர் ஆவார்! அவர்தான் அன்பின் உருவமாயிற்றே ! அரை மணி நேரத்திற்கு பிறகு நான் என்னை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்தேன். விழித்தவுடன், நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். எனது சுவாசமும் எந்தவிதமான தங்கு தடை இன்றி இருப்பதை உணர்ந்தேன். சுவாமியினுடைய அளவிலாத அன்பு தான் இதற்குக் காரணம்! சுவாமியிடமிருந்து நாம் பெற்ற கடனை திருப்பி அளிக்க எந்த விதத்திலும் நம்மால் முடியவே முடியாது! இந்த நிகழ்வை இப்போது நினைத்தால் கூட நான் பூரிப்படைகிறேன்" என்று கூறி முடித்தார். மறுநாள் அவரை வந்து பார்த்த மருத்துவரது முகம், நடந்ததை நம்ப இயலாமல் வெளிரியது!
ஆதாரம்: திருமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய, " அன்யதா சரணம் நாஸ்தி " என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 354:
ஒரு நாள் ஒரு சிறுவனுக்கு திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவனது பெற்றோர்கள் அவனை சுவாமியின் பாதுகாப்பில் விட்டுவிட்டு தங்களது ஊருக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் அவனது வயிற்றுப்போக்கு ஒரு வார காலம் நீடித்தது. மேலும் அவன் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தான். ஆனாலும் சுவாமி அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை! ஆனால் அதே சமயம் சுவாமிக்கு தன் குழந்தைகளின் மேல் இருக்கும் எல்லையற்ற அன்பினை நாம் கவனிக்க முயற்சிப்போம்! அவனது உடல்நலப் பாதுகாப்பு சுவாமியின் பொறுப்பில் தான் இருந்தது! அந்த காலத்தில் கழிப்பறைகள் இல்லாததால் கையில் ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சுவாமிதான் அவனுடன் வெளியில் செல்வாராம்! யாருக்கும் அப்போது இந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை! இதற்கு முந்தைய யுகத்தில் திரௌபதியின் பாதரட்சைகளை ஸ்ரீ கிருஷ்ணர் தன் கையில் இடுக்கிக் கொள்ளவில்லையா? தனது பக்தர்கள் உணவு உண்டு முடித்த பின்னர் அவர்களது எச்சில் இலைகளை அவர் எடுக்கவில்லையா? கடவுளின் அன்பு அத்தகையது! மறுநாள் இரவில் அந்த சிறுவன் வெளியே செல்ல வேண்டும் என்று கேட்டபோது அவனை அந்த அறையை விட்டு வெளியே செல்ல சுவாமி அனுமதிக்கவில்லை! 'என்னால் அடக்க முடியவில்லை' என்று அவன் எவ்வளவோ கெஞ்சியும் சுவாமி கடுமையான குரலில் *'எங்கும் செல்லக்கூடாது, இங்கேயே உட்கார்!'* என்று சொல்லிவிட்டார்!! அவனும் எப்படியோ தனக்கு ஏற்பட்ட உந்துதல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தபோது சுவாமி அவனைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்து இருந்தார்! அரை மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் அவனது வயிற்று வலி முற்றிலும் குறைந்தது!! அவன் உறங்கத் தொடங்கினான்!! அதற்குப் பிறகு அவனுக்கு வயிற்று வலி மறுபடியும் வரவே இல்லை!!!
ஒருவரை குணப்படுத்துவதற்கு இறைவன் கையாளும் ஒரு புதிய வழிமுறை இதுபோலும்!
ஆதாரம்: திருமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய, " அன்யதா சரணம் நாஸ்தி " என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 355:
சுவாமி எவ்வாறு "மருத்துவர்களுக்கெல்லாம் பெரிய மருத்துவராக" இருக்கிறார் என்பதை இப்போது நான் (டாக்டர்.ரங்கசாமி வரதாச்சாரி ) விளக்குகிறேன்:
2001 ஆம் வருடம் டிசம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நாங்கள் நால்வரும் பிரசாந்தி நிலையத்தின் மந்திர் வராந்தாவில் அமர்ந்திருந்த போது இன்டர்வியூ அறையில் இருந்து வெளியே வந்த சுவாமி, நேராக எங்களிடம் வந்து நின்று கொண்டு பேச ஆரம்பித்தார். முதலில் எங்களின் நலம் குறித்து விசாரித்தார். அப்போது எங்களில் ஒருவர், ஆஸ்துமா நோயின் காரணமாக தன்னால் சரிவர மூச்சு விட முடியவில்லை என்று சுவாமியிடம் கூறினார். சுவாமி உடனே பதக்கத்துடன் கூடிய ஒரு தங்கச் சங்கிலியை அவருக்காக ஸ்ருஷ்டித்தார்; மேலும் அவர், "உனக்கு ஆஸ்துமா இல்லை;மாறாக, ஈசநோஃபிலியா தான்!" எனக் கூறிவிட்டு ஒரு குறிப்பிட்ட மருந்தின் பெயரைக் கூறி அதனை ஒரு வார காலம் தினமும் எடுத்துக் கொள்ளும்படி கூறினார். என் நண்பரும் சுவாமி கூறியபடியே செய்தார். ஒரு வாரம் கழித்த பிறகு அவரது மூச்சுத் திணறல் முழுமையாக மறைந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இவரது உடல்நிலை பற்றி அறிய எனக்கு வாய்ப்பு கிட்டியபோது, அவர் தனக்கு அந்த மூச்சு திணறல் திரும்பவும் தலைகாட்டவே இல்லை என்று என்னிடம் தெரிவித்தார்.
யாராவது ஒரு மருத்துவர் சாதாரணமாக இந்த கதையை கேட்டால் அதனை நம்பாமல் இருக்கலாம். ஆனால் சுவாமி எப்போதும் சொல்வது - "எங்கே விஞ்ஞானம் முடிகின்றதோ அங்கே இறைத்தன்மை தொடங்குகிறது" என்ற வாக்கு. இறைவனின் கட்டளையை சிறிதும் பிறழாமல் கடைப்பிடித்தால் அற்புதங்கள் நிகழும் என்பது முற்றிலும் உண்மை.
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 356:
சுவாமி, "அனைத்தும் அறிந்தவர்" என்பதை நிதர்சனப்படுத்துவதற்காக இப்போது மற்றொரு நிகழ்வினை நான் (டாக்டர் ரங்கசாமி வரதாச்சாரி) விவரிக்கிறேன்.
வயது முதிர்ந்த பக்தர் ஒருவருக்கு மிகுந்த காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு எடுக்கப்பட்டிருந்த எக்ஸ்ரேயின் வாயிலாக அவரது நுரையீரலில் புண் இருப்பது தெரியவந்தது. அதனை நாங்கள் நிமோனியா என்று முடிவு செய்து அவருக்கு சிகிச்சை அளித்தோம். எதேச்சையாக ஒருநாள் சுவாமி எங்களிடம் அந்த முதியவருக்கு நாங்கள் அளித்துக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றி கேட்டார். நாங்கள் அவருக்கு நிமோனியாவிற்கான சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதாக நான் தெரிவித்தேன். உடனே சுவாமி , "அது நிமோனியா இல்லை, மலேரியா!" என்றார்! நான் அவரது இல்லத்திற்குச் சென்று முன்பு எடுக்கப்பட்டிருந்த எக்ஸ்ரேக்களை மறு பரிசீலனை செய்தேன். சில வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டிருந்த படங்களிலும் அதே நிழல் (புண்) இருந்தது. சுவாமி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என்று அப்போது எனக்கு புரிந்தது! ஆறிய புண் போன்று தெரிந்த ஒரு பழைய எக்ஸ்ரேயை வைத்து அவருக்கு நாங்கள் நிமோனியாவிற்கான சிகிச்சை அளித்து வந்துள்ளோம்! உடனே அவருக்கு மலேரியாவிற்கான சிகிச்சை அளித்த பின்னர் அவரது காய்ச்சல் வேகமாக குறைந்தது.
சுவாமிக்கு இது எப்படி தெரிந்தது? நோயாளியைப் பார்க்காமலே அவரால் எப்படி இவ்வளவு துல்லியமாக அவரது நோயை பற்றி கணிக்க முடிந்தது? இதுதான் அவரது 'எல்லாம் அறியும் சக்தி'யின் வெளிப்பாடு!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 357:
நானும் (டாக்டர். எம் சாய்குமார், ஐஏஎஸ்) என் மனைவியும் எங்களுடைய திருமண ஆண்டு விழா அன்று சுந்தரத்திற்கு சென்றோம். அன்று ஹாலில் உள்ள மேடையின் மீது இருக்கும் சுவாமியின் பெரிய படத்தில் விபூதி தோன்றியிருந்தது. சுந்தரத்தில் மற்ற இடங்களில் உள்ள படங்களில் அவ்வப்போது விபூதி தோன்றிக் கொண்டு இருந்தாலும் சுந்தரத்தின் ஹாலில் இருக்கும் அந்த முக்கியமான படத்தில் விபூதி வருவது அதுதான் முதல் தடவையாகும். எனது மனைவி இந்த நிகழ்வை, எங்கள் இருவருக்கும் சுவாமியினுடைய ஆசீர்வாதங்களின் அறிகுறியாகவே எண்ணினாள். அப்போது நான் ஏதோ ஒரு முட்டாள்தனமாக இந்த விபூதி நமக்காகவே தான் என்றால் சுந்தரத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நம் வீட்டிலேயே தோன்றியிருக்க வேண்டும் அல்லவா என்று கேட்டுவிட்டேன். நாங்கள் வீடு திரும்பிய பின்னர் பூஜை அலமாரியின் கதவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தோம்! அங்கிருந்த சுவாமியின் படத்திலும் விபூதி உற்பத்தியாகி இருந்தது! நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக மட்டும் எண்ணாமல், வரும் காலங்களில் இனிமேல் எப்போதும் நான் மிதமிஞ்சிய சொற்களை பயன்படுத்தக் கூடாது என்ற அறிவைப் புகட்டும் நிகழ்வாகவும் கருதினேன்!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 358:
எனது (திரு. சாயி ஷ்ரவணம்) தாயார் திருமதி விஜயலட்சுமி ரமணி தன் சிறுவயதிலிருந்தே சுவாமியினுடைய தீவிர பக்தையாக இருந்தார். 2007 ஆம் வருடம் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது. சுவாமியினுடைய அனுமதியின்றி நான் மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார் அவர். ஆகவே வருட பிறப்பன்று நாங்கள் புட்டபர்த்திக்கு விரைந்தோம். என் தந்தையும் தாயும் விமானம் மூலம் பெங்களூரு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து அவர்களை அழைத்துக்கொண்டு நான் காரில் புட்டபர்த்திக்கு விரைந்தேன். நான் வெகுவேகமாக காரை ஓட்டினேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பிரசாந்தி நிலையத்தை சென்று அடைந்த பின்பு சுவாமியிடம் என் தாயாரின் உடல்நிலை பற்றி தெரிவிக்க முயற்சி செய்தேன். தரிசனத்திற்காக சக்கர நாற்காலியில் வந்த எனது தாயாரால் அதிக நேரம் உட்கார முடியாமல் திரும்பவும் எங்களது அறைக்கே அழைத்துச் செல்லப்பட்டார். தரிசனம் முடிந்த பிறகு நான் எங்களது அறைக்கு சென்றேன். பகவானிடம் தரிசனத்தின் போது எதுவும் விவரிக்க முடியவில்லை. ஆனால் மாலை சுமார் ஆறு மணிக்கு ஒரு சேவாதலத் தொண்டர் எங்கள் வீட்டிற்கு வந்து 'பகவான் உங்களை உடனே அழைக்கிறார்' என்று கூறினார்! நான் உடனே (சுவாமி அப்போது தங்கியிருந்த) யஜுர் மந்திரத்திற்கு ஓடினேன். அங்கே சுவாமி கோபமான முகத்துடன் என்னை பார்த்து, "ஏன் நீ உன் அம்மாவை இவ்வளவு தூரம் காரில் கூட்டிக் கொண்டு வந்தாய்?" என்று சுவாமி என்னிடம் கேட்டார். அதற்கு நான், 'சுவாமி! அவருக்கு உங்களுடைய அறிவுரை மிகவும் தேவைப்பட்டது. அவருக்கு உடல்நிலை சரியில்லை, எம். ஆர். ஐ. ஸ்கேன் செய்ததில் மூளையில் கட்டி இருப்பதாக தெரியவந்தது" என்றேன். அதற்கு சுவாமி, "நாளை காலையில் நான் வந்து பார்க்கிறேன்! அவரை மருத்துவமனை அறையில் இருக்க செய்; நான் அனைத்து ஏற்பாடுகளும் செய்கிறேன்!" என்று கூறியவர், கடுமையான முகத்தோற்றத்துடன் மேலும் தொடர்ந்து, "நீ ஏன் காரை அவ்வளவு வேகமாக ஓட்டினாய்?" என்று கேட்டார்! உடனே நான், "மன்னிக்க வேண்டும், சுவாமி! உங்களிடம் சீக்கிரம் வந்து சேர வேண்டும் என்று எண்ணினோம்" என்று பதில் அளித்தேன் அதற்கு சுவாமி, "இல்லை! நீ பின்புறம் இருப்பவர்களைப் பார்க்கும் கண்ணாடி மூலம் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாய்! நீ சாலையைப் பார்க்கவில்லை! அது மட்டும் அல்ல! வெகு வேகமாகக் காரை ஓட்டினாய்! உன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை! காருக்கு ஏதாவது நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்? நீங்கள் அனைவரும் புட்டபர்த்திக்கு பத்திரமாக வந்து சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் உங்களை பாதுகாப்பதற்காக சுவாமி உங்களுடன் சேர்ந்து உட்கார்ந்து வர வேண்டியது ஆயிற்று" என்றார்!! சுவாமியே எங்களுடன் காரில் பயணம் செய்தார் என்பதை கேள்வியுற்ற நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்!!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 359:
பல வருடங்களுக்கு முன்னர் மருத்துவத் துறையில் ஆற்றிய சேவைகளுக்காக இந்திய அரசின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்ற சென்னையைச் சேர்ந்த டாக்டர். டி.ஜே.செரியன் என்ற மிகவும் பிரபலமான இதய நோய் மருத்துவரைப் பற்றி அனைவரும் அறிந்திருக்கலாம். ஒரு நாள் அவர் சற்றும் எதிர்பாராத விதமாக அவரை புட்டபர்த்திக்கு வருமாறு சுவாமியிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் ஒரு உண்மையான கிறிஸ்துவராக இருந்த போதிலும் அவர் சுவாமியின் பக்தராக இல்லை. ஆகையால் இந்த அழைப்பை ஒருவிதமான ஐயத்துடன் அவர் நோக்கினாலும் அவருக்கு விமான பயணச்சீட்டு முதல் அவரது தங்கும் வசதி, உணவு போன்ற அனைத்தும் நன்றாக செய்யப்பட்டிருந்த தகவல் அவருக்கு கிடைத்தபின் எப்படியும் பார்த்துவிட்டு வரலாம் என்று ஆவலால் அவர் உந்தப்பட்டார் அங்கு சென்று அவர் அமர்ந்திருந்தபோது தரிசனத்திற்காக வந்த சுவாமி அவரிடம் நேராகச் சென்று அவரை பெயர் சொல்லி அழைத்து இன்டர்வியூ அறைக்குச் செல்லுமாறு பணித்தார்! ஏற்கனவே தன்னை அறிந்தவர் போல சுவாமி அவரை அழைத்ததை நினைத்து வியந்து கொண்டே உள்ளே சென்ற அவர், சுவாமியிடம் , "என்னிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும், பாபா?" என்ற கேள்வியை கேட்டார்! அதற்கு சுவாமி சிரித்துக் கொண்டே, "உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம்! ஆனால் உனக்கு என்னுடைய உதவி தேவை!!" என்றார்! இந்த பதிலை டாக்டர் செழியன் அவர்கள் சுவாமியிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே மிகுந்த ஆச்சரியத்துடன், "ஆனால் நீங்கள் தானே என்னை இங்கே வரவழைத்தீர்கள்? ஆகவே உங்களுடைய மருத்துவமனை தொடர்பாக, என்னுடைய உதவி தேவைப்படுமோ என்று நான் நினைத்தேன்!" என்றார்! திரும்பவும் புன்முறுவலுடன் சுவாமி, "இல்லை! நீ என்னிடம் தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்திருக்கிறாய். உனது தொழிலின் மேல் நீ வைத்திருக்கும் பக்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆகவே உன்னை நான் இங்கு கூப்பிட்டேன்!" என்றார்! மேலும் அதிகமான ஆச்சர்யத்துடன் அவர் சுவாமியிடம், "நான் உங்களிடத்தில் எப்பொழுதும் பிரார்த்தனை செய்யவே இல்லையே?" என்றார்! அதற்கு மீண்டும் சிரித்துக் கொண்டே, சுவாமி , "ஒவ்வொரு இரவும் நீ இயேசுவிடம் பிரார்த்தனை செய்வதில்லையா? நீ இயேசுவிடம் பிரார்த்தனை செய்யும்போது என்னிடம் நீ பிரார்த்திக்கிறாய்!" என்று கூறினார்! மேலும், எந்த இடத்தில் அவர் பிரார்த்தனை செய்வாரோ அந்த இடத்தை மிகவும் துல்லியமாக அவருக்கு சுவாமி சுட்டிக் காட்டினார்! இது டாக்டர்.செரியன் அவர்களை விவரிக்க இயலாத வியப்பில் ஆழ்த்தியது!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து...
📝 நிகழ்வு 360:
(முந்தைய நிகழ்வின் தொடர்ச்சி):
நம் சுவாமி, டாக்டர் செரியனிடம், "நீ மிகவும் கவலைப்படுகிறாய்; இரவுகளில் தூங்குவதில்லை என்பது எனக்குத் தெரியும். இனிமேல் நீ கவலைப்பட வேண்டாம், அதற்காகத்தான் நான் உன்னை இங்கே கூப்பிட்டேன்! நீ விஜயா மருத்துவமனையை விட்டு அகல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் வேறு ஒரு மருத்துவமனையில் எனக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்ற கவலையில் நீ இருக்கிறாய்!" என்று கூறினார். அதன் பிறகு விஜயா மருத்துவமனையின் இயக்குனரின் அறையில் நடைபெற்ற விவரங்கள், மேலும் அவர்கள் இவரிடம் பேசிய விவரங்கள் அனைத்தையும் சுவாமி, டாக்டரிடம் விவரித்தார்! மூடிய அறையில் ஒரு சிலர் மட்டுமே இருந்தபோது நடந்தவற்றை சுவாமியின் வாயிலாக கேட்ட டாக்டர், மிகவும் அதிர்ந்து போனார்! ஆகவே அவர் உடனே சுவாமியிடம், "உங்களுக்கு எப்படி இவை அனைத்தும் தெரிய வந்தது?" என்று கேட்டார்! அதற்கு சுவாமி, "எனக்கு எல்லாமே தெரியும்! அப்போது அந்த அறையில் நான் இருந்தேன்! ஆனால் உன்னால் என்னை பார்க்க முடியவில்லை!!" என்றார்!! மேலும் அவர் தொடர்ந்து, "உனக்கு வெகு சீக்கிரத்தில் ஒன்றல்ல, சென்னையில் இரண்டு மருத்துவமனைகளில் இருந்து அழைப்புகள் வரும்! எந்த வித பயமும் இன்றி அவற்றை நீ ஏற்றுக்கொள்ளலாம்!" என்று அறிவித்தார்! அத்துடன் நிற்காமல், சில வருடங்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு தீவிரமான நோயின் தாக்கம் இருக்கும் என்றும் அதற்காக அவர் ஒரு முக்கியமான அறுவை சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறினார்.
நோயினின்றும் அவரைக் காப்பாற்றி அருள் புரிவதற்காக சுவாமி ஒரு பச்சைக்கல் மோதிரம் ஒன்றை வரவழைத்து அதனை அவரது மோதிர விரலில் அணிவித்தார்! "எப்படி என் விரலுக்கு ஏற்ற ஒரு மோதிரத்தை அவரால் சிருஷ்டி செய்ய முடிந்தது?" என்று டாக்டர் வியந்தார்.
பல வருடங்களுக்குப் பிறகு சுவாமியினுடைய முன் அறிவிப்பின்படியே அவருக்கு சிறுநீரகப் புற்று நோய் ஏற்பட்டு ஒரு சிறுநீரகம் அகற்றப்பட வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இந்த காலகட்டத்தில் சுவாமி கொடுத்த மோதிரம் அவருக்கு பக்கபலமாகவும் ஆதரவு கொடுக்கும் ஒரு பொருளாகவும் இருந்து, அவர் அந்த நோயிலிருந்து முழுவதுமாக மீண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்தது! முழு ஆரோக்கிய உடல் நிலையை அவர் திரும்பப்பெற்ற அந்த தெய்வீக நிகழ்வை தொடர்ந்து பார்த்து வந்தவர்கள் அனைவருமே "எவ்வாறு தெய்வத்தின் கை அவருக்கு ஒவ்வொரு படியிலும் வழிகாட்டியாகவும் துணையாகவும் இருந்து வந்திருக்கிறது!"என்பதை நினைத்து வியக்கத்தான் முடியும்!!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 361:
கடந்த காலத்தில் 'இதயம் பேசுகிறது' என்ற பெயர்போன வார இதழின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றிப் புகழ்பெற்றவரான திரு.மணியன் அவர்கள் சுவாமியின் பக்தராக இருந்தார்.
அவர் ஒரு சமயம் மிகவும் கடுமையான பக்கவாத நோயால் பீடிக்கப்பட்டு தன் சுயநினைவை இழந்தார். அவர் உடனே மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில்தான் டாக்டர்.செரியன் பணிக்கு சேர்ந்திருந்தார். திரு மணியன் அவர்களின் தீவிரமான நிலைமையை பரிசோதித்த உணர்ந்த, அப்போது பணியில் இருந்த மருத்துவர், உடனே டாக்டர்.செரியனை தொடர்பு கொண்டு சீக்கிரம் வந்து மணியனைப் பார்க்குமாறு வேண்டினார். ஆனால் அன்றைய தினம் டாக்டர்.செரியன் அவர்களே தீவிரமான காய்ச்சலில் அவதிப்பட்டு கொண்டிருந்ததால் அவரால் இந்த கோரிக்கையை ஏற்று ஆவன செய்ய முடியவில்லை. ஆகையால் அதற்காக தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட டாக்டர்.செரியன், முடிந்தால் மறுநாள் வந்து பார்ப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அன்று மாலையிலேயே அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மலர் மருத்துவமனைக்கு டாக்டர். செரியன் வருகை புரிந்து திரு.மணியன் அவர்களைப் பார்க்க வந்திருப்பதாக தெரிவித்தார். அவர் லிப்டினுள் நுழைந்த போது அந்த சமயத்தில் தற்செயலாக அங்கிருந்த ஒரு சாயி பக்தர், டாக்டர்.செரியன் அணிந்திருந்த வெள்ளை நிற கோட்டில் ஒரு புதிரான ஆரஞ்சு நிற சாயல் தெரிந்ததை கவனித்தார். மேல் மாடிக்கு சென்ற டாக்டர் செரியன், நேராக மணியனின் அறைக்குள் நுழைந்தார்.
அப்போது மணியன் ஆழ்ந்த கோமாவில் இருந்துள்ளார்! அவரைப் பரிசோதிக்கத் தனக்குத் தேவைப்பட்ட சில நிமிடங்கள் தன்னையும் நோயாளியையும் தனியாக இருக்க விடும்படி அங்கிருந்தவர்களைக் கேட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர்.செரியன் அங்கிருந்தவர்களிடம் தான் மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு ஒரு நிம்மதி ததும்பும் முகத்துடன் அங்கிருந்து சென்று விட்டார்! ஆனால் டாக்டர்.செரியன் வெளியேறிய சில நிமிடங்களிலேயே அனைவரும் வியக்கும் வண்ணம், மணியனின் உடல்நிலையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. மணியன் அவர்கள் மெதுவாகத் தன் கண்களை திறக்க தொடங்கினார். தொடர்ந்து தன் சுயநினைவையும் முழுமையாகத் திரும்பப்பெற்றார்! மறுநாள் மருத்துவமனைக்கு வந்த டாக்டர்.செரியன் முந்தைய தினம் தன்னால் வர முடியாமல் போனதற்காக அங்கிருந்தோரிடம் தனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவிக்க தொடங்கினார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் அவர் உண்மையாகவே முந்தைய நாள் வந்திருந்து, மணியன் அவர்களைப் பரிசோதித்து விட்டு சென்றதை தாங்கள் கண்கூடாக பார்த்ததாக அவரிடம் தெரிவித்தனர்! ஆனால் என்றுமே உண்மை தவறாத டாக்டர்.செரியன், தான் அன்று காலைதான் அவரால் வர முடிந்ததாகவும், முந்தைய நாள் தான் வரவில்லை என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்! அதற்கு அந்த மருத்துவர்கள், அவர்கள்தான் டாக்டர்.செரியனை அழைத்துக்கொண்டு மணியனின் அறைக்குச் சென்றதாகவும், அவர் வந்து சென்றவுடன் நோயாளியின் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்ததாகவும் தெரிவித்தனர்! ஒரு சில நிமிடங்களில் இந்த புதிருக்கு விடை தெரிய ஆரம்பித்தது!
" தான் அணிந்திருந்த வெண்மை நிறக் கோட்டில் ஆரஞ்சு நிற சாயலுடன் மருத்துவமனைக்கு முந்தைய நாள் டாக்டர்.செரியன் அவர்களின் உருவத்தில் வந்து மணியனைப் பார்த்து, அவரை குணப்படுத்தியது நம் சுவாமியாகத் தான் இருக்க வேண்டும்" என்ற உண்மைதான் அந்த புதிருக்கான விடை!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 362:
2002 ஆம் வருடம் ஜூன் மாதம் இரண்டாம் தேதி நான் (திரு. G.வரதன், முன்னாள் மாநிலத் தலைவர், ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனம், தமிழ்நாடு) சென்னையில் இருந்த போது எனக்கு தாங்க முடியாத மார்பு வலி ஏற்பட்டது. எனது குடும்ப மருத்துவர் உடனே போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கே என்னை அட்மிட் செய்து விட்டார். அங்கே எடுக்கப்பட்ட பரிசோதனைகள் மற்றும் ஆஞ்சியோகிராமின் முடிவில் எனக்கு மூன்று இடங்களில் அடைப்புகள் உள்ளதாகவும் உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் கூறினர். எட்டாம் தேதி அறுவை சிகிச்சை செய்வதாக முடிவு செய்தார்கள்.
ஏழாம் தேதி அன்று மதியம் என்னை பிரசாந்தி கிராமத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருமாறு சுவாமியே அழைத்ததாக ஒரு தொலைபேசி வழி செய்தி வந்தது. ஆனால் அதனை நான் நம்பவில்லை. சுவாமிக்கு லட்சோப லட்சம் பக்தர்கள் இருக்கும் போது அவர் எப்படி என்னை நினைத்து இருப்பார் என்று எண்ணினேன்! ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில், நான் புட்டபர்த்திக்கு கிளம்பி விட்டேனா என்று கேட்டு மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தவுடன் நான் தவறு செய்து விட்டதாக உணர்ந்தேன். எனது மச்சினரின் சிபாரிசை பயன்படுத்தி எப்படியோ எட்டாம் தேதி ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து விடுவிப்பை பெற்று புட்டபர்த்திக்கு காரில் விரைந்தேன். இரவு இரண்டு முப்பது மணி அளவில் பிரசாந்தி கிராமம் மருத்துவமனை கேட்டினுள் நுழையும்போது அங்கிருந்த சேவாதலத் தொண்டர்கள், " நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து தான் வருகிறீர்களா?" என்று கேட்டபோது நான் ஆச்சரியமடைந்தேன். அங்கே மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே நான் நன்றாக இருப்பதைப் போல உணர்ந்தேன். அதிகாலையில் அங்கு நடைபெற்ற நகர சங்கீதனத்தில் பங்கு கொண்டு பாடினேன். காலை 8 மணி அளவில் நான் மருத்துவரைச் சந்தித்தேன். அங்கே எனக்கு தேவையான பரிசோதனைகள் பல செய்த பின்னர் எனக்கு உடனே அறுவை சிகிச்சை தேவையில்லை, ஆயினும் எனது நடவடிக்கைகளில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினர். மேலும் மருந்து மாத்திரைகள் மட்டும் எனக்குக் கொடுத்தனர். ஆனால் சில காலம் கழித்து அமெரிக்க மருத்துவர்கள் மீண்டும் சோதித்துப் பார்க்க வேண்டிய நோயாளிகளின் பட்டியலில் என் பெயரையும் சேர்த்தனர். அதன்படி நான் திரும்பவும் ஜூலை மாதம் அங்கே ஆஜர் ஆனேன். ஜூலை 20ஆம் தேதி அங்கே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன். டாக்டர் வோலெட்டி வெங்கடேஸ்வரலு என்பவரின் தலைமையில் ஆன மருத்துவர்கள் குழு என்னை பரிசோதித்தனர். எனக்கு ஜூலை 22ஆம் தேதி ஆஞ்சியோகிராபி செய்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. 21ஆம் தேதி இரவில் சுவாமி எனது கனவில் வந்து , "இனிமேல் நீ கவலைப்பட வேண்டாம்! ஏனெனில் 'நீ பாதலு(baadhalu) அன்னி நேனு தீசுகுன்னானு' (உன்னுடைய இன்னல்கள் அனைத்தையும் நான் எடுத்துக் கொண்டு விட்டேன்)!" என்றும் கூறினார்! 22 ஆம் தேதி எனக்கு ஆஞ்சியோகிராம் எடுக்கப்பட்டது. அது முடிந்தவுடன் அந்த மருத்துவர்கள் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஆஞ்சியோகிராமுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் காணப்பட்ட அடைப்புகள் இப்போது முற்றிலுமாக நீங்கி இருந்தன! அடைப்புகள் எதுவும் இப்போது இல்லாததால் இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறினர்!! உடனே நான் மிகுந்த நன்றி உணர்வு பொங்க "சாயிராம்! சாயிராம்!' என்று உரக்கக் கூவினேன்! இப்போது மேலும் 20 வருடங்களாக எந்த ஒரு இதய பாதிப்பும் இல்லாமல் உயிர் வாழ்ந்து வருகிறேன்!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 363:
ஒரு ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த ராவணம்மா என்ற பெண்மணி எங்களது வீட்டில் பல வருடங்களாக பணி செய்து வருகிறாள். தனது மூத்த பெண்ணிற்குத் திருமணம் கைகூடாமல் இருப்பதை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள். இறுதியாக ஒரு வரன் அமையப்பெற்றது. அந்தப் பையனுக்கே திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்று அவர்கள் முயற்சி எடுக்கும்போது அந்த மணமகனின் வீட்டார் இவர்களால் கொடுக்க முடியாத அளவிற்கு வரதட்சணை கேட்டனர்! இவர்களோ எப்படியும் கடன் வாங்கியாவது கொடுத்துவிடலாம் என்ற முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர். அப்போது அளவிலா கருணையுடன் நம் சுவாமி ராவணம்மாவின் கனவில் தோன்றி, அதிகமான வரதட்சணை கொடுக்க ஒப்புக் கொண்டதற்காக அவளை கடிந்து கொண்டார்! மேலும் உடனே இந்த திருமணத்தை நடத்த மறுத்து விடுமாறும் அவளது பெண்ணைத் திருமணம் செய்ய போகும் மணமகன் இவன் அல்ல என்றும் சிறிது காலம் கழித்து மற்றொரு குடும்பத்தினர் அவர்களை அணுகுவர் என்றும் கூறினார்!
சுவாமியின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டிருந்த ராவணம்மா இந்தத் திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டார்! பல நாட்கள் கழித்து இந்த பையனுக்கு தீய பழக்க வழக்கங்கள் பல இருந்தது இவர்களுக்கு தெரிய வந்தது! தன் பெண்ணைக் காப்பாற்றியதற்கு சுவாமியிடம் மனமார நன்று கூறினாள் ராவணம்மா! சில நாட்கள் கழிந்த பின்னர், மற்றொரு திருமணம் தொடர்பான முன்மொழிவு இவர்களை தேடி வந்தது. இந்த முறையும் சுவாமி அவளது கனவில் தோன்றினார்! அதில் அவளுக்குத் தனது ஒப்புதல் மற்றும் ஆசீர்வாதத்தின் அறிகுறியாக வெற்றிலை-பாக்கு கொடுத்தார் சுவாமி! இந்த முறை பிள்ளை வீட்டார் எந்த வரதட்சணையும் வேண்டாம் என்று கூறியதை கேட்ட ராவணம்மாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை! மிகச் சிறப்பாக இந்த திருமணம் நடந்தேறியது. இரு வீட்டாரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்று சொல்லத் தேவையே இல்லை!!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 364:
(நிகழ்வு எண் 363 இன் தொடர்ச்சி)
திருமணம் ஆகி மூன்று வருடங்களுக்கு பின்னர் ராவணம்மாவின் மகள் கருத்தரித்தாள். இந்த செய்தி ராவணம்மாவிற்கு மகிழ்ச்சியை அளித்தது; ஆனால் குழந்தை பிறப்பிற்கு முந்தைய காலத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழக்கமாக செய்யப்படும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையின் முடிவு அவர்களுக்கு அதிர்ச்சி தரும்படியாக இருந்தது! அதில் தெரிந்த மரபணு சார்ந்த குறைபாடு, பிறக்கப் போகும் குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி ஆகியவற்றில் தாமதம் இருக்கப் போவதின் அறிகுறிகளைத் தெரிவிப்பதாகும். இந்த நோயினை ஆங்கிலத்தில் "Downs' Syndrome" என்று கூறுவர். இதனை உறுதிப்படுத்த மேலும் ஒரு 'அமினோ சென்டெஸிஸ்' என்ற மற்றொரு பரிசோதனையை மேற்கொண்டார்கள். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை முடிவை கேள்விப்பட்ட உடனே எனது மகள் டாக்டர். அஞ்சனா, ராவணம்மாவின் மகளுக்காக நம் சத்ய சாய்பாபாவிடம் தனது இதயபூர்வமான பிரார்த்தனைகளை முன் வைத்தாள்.
ராவணம்மாவுக்கே தெரியாமல், இந்த உறுதிப்படுத்தும் பரிசோதனை முடிவு வரும் வரை, தனது வேண்டுதலின் வெளிப்பாடாக, உபவாசம் இருக்கத் தொடங்கினாள்! இந்த முடிவு வருவதற்கு சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேவைப்படும். சில நாட்கள் கழிந்தன; முடிவு வரப்போகும் நாளன்று விடியற்காலையில் எங்கள் வீட்டிற்கு ஓடோடி வந்த ராவணம்மா, என் மகளிடம் "அம்மா! சீரடி பாபா என் கனவில் வந்தார்! அவர் என்னிடம் " நான் டெஸ்ட் முடிவை பார்த்து விட்டேன். அது நெகட்டிவ் தான் (நோய் இல்லை)! "என்றார்! உடனே கனவில் நான் பாபாவிற்கு மிகுந்த நன்றி கூறினேன். அதற்கு அவர், "உனது முதலாளியான டாக்டர்.அஞ்சனாவிடம் போய் நன்றி சொல்! அவள்தான் உனக்காக தினமும் பிரார்த்தனை செய்தாள்! உனக்காக உபவாசம் மேற்கொண்டாள்!" என்றார்!!" எனத் தெரிவித்தார். உபவாசத்தைப் பற்றி அறியாத ராவணம்மா, " பகவான் பாபாவிடம் நீங்கள் பிரார்த்தனை செய்தீர்களா? என் மகளுக்காக உபவாசம் மேற்கொண்டீர்களா? " என்று என் மகளிடம் கேட்டாள். அதற்கு என் மகள், "ஆமாம்! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனிமேல் நீ எதனைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்! ஆயினும் ரிப்போர்ட் வரும் வரை காத்திருப்போம். ஏனெனில் நாம் இன்னும் முடிவைக் கண்கூடாகப் பார்த்து தெரிந்து கொள்ளவில்லை" என்றாள்! ஆனால் அன்று மதியமே பாபா கூறியபடியே, பிறக்கப் போகும் குழந்தைக்கு அந்த நோய் இல்லை என்று தெரியவந்தது! எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் பிரசவமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. அந்த பெண் குழந்தைக்கு இப்பொழுது எட்டு வயது ஆகிறது. எந்தவித உடல் உபாதைகளும் இன்றி பகவானின் கிருபையால் நன்றாக இருக்கிறாள்!
என் மகள் சத்திய சாய்பாபாவிடம் வேண்டிக் கொண்டால் இறைவன் சீரடி பாபாவாகக் கனவில் வந்து நல்ல செய்தியை கூறினார்! இரண்டு பாபாக்களும் ஒன்றுதான் என்ற உண்மையை இந்த நிகழ்வு பறைசாற்றுகிறது!
அது மட்டுமல்ல! ராவணம்மாவுக்கு நம் சுவாமியின் மீது இருந்த தீவிரமான நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது! தனக்குக் கனவு வந்த உடனே அவர் அதில் கூறப்பட்டதை முழுமையாக நம்பினாள்! மாறாக, நாங்களோ (நானும் என் மகளும்) படித்த மருத்துவர்கள் ஆக இருந்ததால், மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம்; முடிவு தெரிந்த பின்னரே முழுவதாக நம்புவதாக இருந்தோம்! இதில் தெரியும் மற்றொரு உண்மை என்னவெனில், " படித்த, வசதி பெற்ற நம்மைப் போன்றவர்களை விட ஏழை மக்களுக்கு இறைவன் மீது அதிகமாகவே நம்பிக்கை இருக்கிறது!" என்பதாகும்!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 365:
நான் (டாக்டர் டி. சிதம்பரம்) இப்போது என் வாழ்க்கையின் 81 வருடங்களை கடந்து விட்டேன். ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எனது எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அரசாங்க உத்தியோகத்தை முதன்முதலாக சேலத்தில் தொடங்கினேன். தனியாகவும் மருத்துவம் செய்து ஒரு செழிப்பான நிலையில் இருந்தேன். ஆனால் எனது மூன்றாவது குழந்தை ஒரு நீலக்குழந்தை (ப்ளூ பேபி) ஆக பிறந்தது. இது ஒரு பிறப்பில் இருந்தே வருகின்ற, கவலை தரும்படியான இதய நோய் ஆகும். (இரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாடு இருக்கும். அதனால் தோல் நீல நிறத்தில் காணப்படும்).
வேலூர் மருத்துவமனை, சென்னையில் ரயில்வே மற்றும் ஜெனரல் மருத்துவமனை ஆகிய இடங்களில் இருந்த பல சிறப்பு மருத்துவர்களை நான் அணுகிய போது அவர்கள் என் மேல் பரிதாபப்பட்டார்களே தவிர எந்த ஒரு தீர்வையும் அவர்களால் அப்போது கூற இயலவில்லை. எங்கே விஞ்ஞானம் முடிகின்றதோ அங்கே ஆன்மிகம் தொடங்குகிறது என்று சுவாமி நமக்கு கூறியுள்ளார் அல்லவா? குழந்தைக்கு 4 1/2 வயது இருந்த போது சிகாகோவில் இருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் எனக்கு ஒரு நம்பிக்கையை அளித்தார். சிகிச்சைக்காக குழந்தையை அமெரிக்காவிற்கு அழைத்து வருமாறு எனக்கு அவர் அறிவுரை கூறினார். அதன்படி என் குழந்தைக்கு Cook County ஹாஸ்பிடலில் இருந்த குழந்தைகள் நல மையத்தில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது வெளியே நடைபாதையில் நான் நின்று கொண்டு சுவாமியிடம் அழுது கொண்டே வேண்டிக் கொண்டேன். அப்போது யாரோ ஒருவர் பின்புறம் இருந்து என்னைத் தொட்டு அழைத்தது போல தோன்றியதால் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஆபரேஷன் தியேட்டரின் கண்ணாடி கதவின் உள்புறம் இருந்து கொண்டு அடர்ந்த தலைமுடியுடனும் காவி உடை அணிந்து கொண்டும் இருந்த சுவாமி என்னை உற்று நோக்கிக் கொண்டிருந்ததை பார்த்தேன்! மூன்று மணி நேரம் கழித்து வெளியே வந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்னிடம் வந்து, "டாக்டர்! நீங்கள் நம்பவே மாட்டீர்கள்! உங்கள் மகனுக்கு பலவிதமான குழப்பங்கள் நிறைந்த உடல் நிலை இருந்தபோதிலும் அவன் சிகிச்சைக்கு மிக சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தான்! அவனுக்கு ஒரு யூனிட் ரத்தம் மட்டும்தான் தேவைப்பட்டது. அனைத்திற்கும் மேல் யாரோ ஒருவர் எங்களுடன் முழுமையாக இருந்து உதவி செய்து கொண்டிருந்ததைப் போல, குழுவில் இருந்த அனைவரும் உணர்ந்தோம்! என்னால் இதற்கு மேல் அப்போதிருந்த என் உணர்வுகளை பதிவு செய்ய முடியவில்லை!" என்றார்! உடனே நான் மண்டியிட்டு சுவாமிக்கு நன்றி கூறினேன். பகவானின் கிருபையால் அதே மகன் இன்று என்னைப் போல ஒரு குழந்தை நல மருத்துவராக சிறந்து பணியாற்றி வருகிறான்!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 366:
புட்டப்பர்த்தியில் சுவாமியின் பிறந்தநாள் அமைந்த வாரத்தில் ஒரு நாள், வேதம் (உச்சரிப்பது மட்டும்) பயின்று கொண்டிருந்த மாணவர்களாகிய எங்களிடம், சுவாமி, " ருத்ரம் என்னும் வேதத்தின் பகுதியை முழுமையாக கற்றுக் கொண்டு விட்டீர்களா?" என்று கேட்டார். நாங்கள் உடனே, " ஆமாம், சுவாமி!" என்று கூறவே, அவர், " நான் உங்களை பரிசோதித்துப் பார்ப்பேன்" என்றார். நவம்பர் 18ஆம் தேதி முதல் சுவாமி சொற்பொழிவுகள் நடத்த தொடங்கினார். ஒருநாள் மாலையில் அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தார். சுவாமி, ஆடிட்டோரியத்தில் அவரது சொற்பொழிவிற்கு முன்னர், எங்களை அன்று சபையில் ருத்ரம் சொல்லுமாறு பணித்தார். எங்களது வேத கோஷத்தை கேட்டு சுவாமி மிகவும் மகிழ்ந்தார். சொற்பொழிவிற்குப் பின்னர் சுவாமி எங்களையும் ஆட்சியரையும் உள்ளே அழைத்தார். நாங்கள் ஆடிட்டோரியத்தின் மேடைக்குப் பின்னால் அமைந்திருந்த கிரீன் ரூமில் (ஒப்பனை அறை)அமர்ந்து கொண்டோம். அப்போது சுவாமி எங்களை நோக்கி "நீங்கள் அனைவரும் வேதம் கற்றுக் கொண்டு விட்டீர்களா" என்று கேட்டார். அதற்கு நாங்கள் "ஆமாம், சுவாமி!" என்றோம். உடனே அவர் மாவட்ட ஆட்சியரை பார்த்து, " பார்த்தீர்களா! எனது குழந்தைகள் ருத்ரம் உச்சரிக்கக் கற்றுக் கொண்டு விட்டனர். இதை கற்பது எளிதல்ல!" என்றார்! உடனே அந்த ஆட்சியர், "சுவாமி! அவர்களுக்கு இதன் பொருளும் தெரியுமா?" என்று கேட்டார்! உடனே சுவாமி எங்களை பார்த்து அதன் பொருளைக் கூறுமாறு சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயந்துவிட்டோம்! ஏனெனில் நாங்கள் உச்சரிக்க மட்டுமே கற்றுக் கொண்டோமே தவிர அதன் பொருளை உணர்ந்து கொள்ளும் முயற்சியில் இன்னும் இறங்கவில்லை; ஆனால் சுவாமி எங்களை அன்று காப்பாற்றினார்!
ஆட்சியரின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக சுவாமி, " பக்தியுடனும் பிழையற்ற உச்சரிப்புடனும் வேதத்தை ஓதுவது( மட்டுமே )மிகவும் புனிதமான செயலாகும். கடவுளின் ஆசிகளைப் பெறுவதற்கு இதுவே போதுமானதாகும்! ஆயினும் அதன் பொருளையும் சாராம்சத்தையும் இவர்கள் நன்கு அறிவர்;வேத கலாச்சாரத்தின் சாரத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டுள்ளனர்!" என்று கூறினார்! மேலும் நான் என்றுமே மறக்க முடியாத ஒரு எடுத்துக்காட்டை சுவாமி முன் வைத்தார். அவர் , "ஒரு தாய் தன் குழந்தையைத் தூங்க வைப்பதற்கு ஒரு தாலாட்டு பாடுவாள். அதன் பொருளையோ அல்லது அது எந்த ராகத்தில் உள்ளது என்பதையோ அந்த பச்சிளம் குழந்தை அறியாது! அன்னையின் அன்பு கலந்த குரல் ஒன்று மட்டுமே குழந்தை உறங்குவதற்கு போதுமானதாகும்! அதே போல வேத சப்தத்தை கேட்டாலே அதனுடைய பலனை கேட்போரும் உச்சரிப்போரும் சேர்ந்து பெற முடியும்! வேத உச்சரிப்பே இந்திய கலாச்சாரத்தின் சாரம் ஆகும். ஆகவே அதனை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!" என்றார்!
ஆதாரம்: சனாதன சாரதி ஜனவரி 2024 இதழில், முனைவர். சிவசங்கர் சாய் (முன்னாள் மாணவர், மற்றும் பேராசிரியர், SSSIHL) அவர்கள் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 367:
டிசம்பர் 1999இல் வெஸ்ட் இண்டீஸ் இல் உள்ள ட்ரினிடாட் அண்ட் டுபேகோ என்ற தீவில் அமைந்துள்ள ஒரு வங்கியின் தலைமை பொறுப்பு என் (திருமதி. மைத்ரேயி மோகன்) கணவருக்கு அளிக்கப்பட்டதால் நாங்கள் எங்களது இரு சிறிய குழந்தைகளுடன் அங்கே குடிபெயர்ந்தோம். எனது மகன் ஒரு மாற்றுத்திறனாளி ஆவான். எனது மகளுக்கு அப்போது ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும். அந்த ஊருக்கு வந்த இரண்டு வாரத்தில் எனது கணவருக்கு நியூயார்க் நகரில் ஒரு மாநாட்டிற்கு செல்ல வேண்டி வந்ததால் நானும் குழந்தைகளும் தனியாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது கிறிஸ்துமஸ் பண்டிகை காலம்; ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. ஒரு மேசையின் மீது ஏறிய என் மகன் கீழே விழுந்து விட்டான் என்று அலறிக்கொண்டே வந்தாள் என் மகள்! அந்த அறைக்குச் சென்ற நான் கண்ட காட்சி- வலிப்பு வந்தவாறு கீழே கிடந்த என் மகனின் வாயிலிருந்து நுரை!
உடனே நான் அடுத்த வீட்டில் இருந்த ஒரு இந்தியப் பெண்மணியிடம் சென்று புலம்பினேன்! உடனே அவர் தனது காரில் எங்களை அருகில் இருந்த பொது மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார்.
அவனை பரிசோதித்த அவர் உடனே அவனுக்கு மார்ஃபைன் ஊசி கொடுத்தார். ஓரிரு நாட்களில் அந்த ஊசியின் விளைவிலிருந்து மீண்ட பின்னர் அவன் நன்றாகி விடுவான் என்று அந்த மருத்துவர் உறுதி அளித்து அனுப்பினார். இந்த வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆதலால் நான் அடுத்த வீட்டு பெண்மணியிடம் எங்களை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினேன். நான் எப்படியாவது என் கணவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்; ஆனால் என் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. நான் பூஜை அறைக்கு சென்று மனமார சுவாமியிடம் வேண்டினேன். என்னிடமிருந்த சுவாமி விபூதியை என் மகனின் நெற்றியில் தடவினேன். அந்தப் பெண்மணியின் உதவியுடன் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம். கிறிஸ்துமஸ் அலங்காரங்களால் சிறந்து விளங்கிய அந்த இடத்தில் பண்டிகையின் காரணமாக மருத்துவர்கள் யாருமே அங்கு இல்லை. ஆனால் ஒரே ஒரு பயிற்சி மருத்துவர் மட்டுமே இருந்தார். என் மகனை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும்படி என்னிடம் கூறினார். ஏதேனும் வலிப்பு வந்தாலோ அல்லது மூக்கு அல்லது காதில் இருந்து இரத்தம் வந்தாலோ அவரிடம் தெரிவிக்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்! நான் மிகவும் பயந்துவிட்டேன்! சுவாமியே எனக்கு கதி என்று ஆழமாக எண்ணினேன்! அப்போது என் கைப்பையில் இருந்த சுவாமி புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
அப்படியே நான் நித்திரையில் ஆழ்ந்தேன்; அப்போது என் கனவில் சுவாமி தோன்றி, " கவலைப்படாதே! உன் மகன் ரோகித் நன்றாக குணமாகி விடுவான்!" என்று கூறினார். உடனே விழித்துக் கொண்ட நான் இது கனவே என்று உணர்ந்தேன். அப்போது காலையில் 4:00 மணி இருக்கும்; நன்றாக விழித்துக் கொண்டு விட்டதால் சுவாமியின் புத்தகத்தை தொடர்ந்து படிக்கலாம் என்று நினைத்து ஏதோ ஒரு பக்கத்தை திறந்தேன். அந்தப் பக்கத்தில் முதல் வரியாக "கனவில் நீ என்னை பார்த்தால் அது கனவல்ல; உண்மையான எனது வருகை தான்!" என்று எழுதியிருந்தது! இதன் உண்மை பின்னர் நடந்த சம்பவத்தில் உறுதி செய்யப்பட்டது.
காலையில் அந்த மருத்துவமனையில் ஸ்கேன் கருவி சரிவர செயல்படாமல் இருந்ததால் அருகில் இருந்த ஒரு பெரிய அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். உடனே நாங்கள் நேராக ஆம்புலன்ஸ் மூலம் அந்த ஸ்கேன் மையத்தின் வாயிலை சென்று அடைந்தோம். ஆனால் அங்கிருந்தோர் சற்று தொலைவில் இருந்த கட்டிடத்தில் பெயர் பதிவு செய்து கொண்டு வருமாறு என்னைப் பணித்தனர். ஆகவே மகனை ஸ்ட்ரெச்சரிலேயே விட்டுவிட்டு அங்கு சென்றேன். ஆனால் அங்கு ஒரு பெரிய க்யூ வரிசை நின்று கொண்டிருந்தது. மனம் வெறுப்படைந்தாலும், சாயி காயத்ரி சொல்லிக் கொண்டே அமைதியாக அந்த வரிசையில் நானும் சேர்ந்து நின்றேன். அப்போது கிட்டத்தட்ட 40 வயதிற்குள் இருக்கும் ஒருவர் என்னை அணுகி நீங்கள் உங்கள் மகனின் சிகிச்சைக்காக வந்திருக்கிறீர்களா என்று கேட்டார். அவர் குள்ளமாகவும் நல்ல நிறமாகவும் இருந்தார்; கண்ணாடி அணிந்திருந்தார்; அடர்த்தியான சுருட்டை முடியுடன் கூடியிருந்தார். மற்றும் மருத்துவர்கள் அணியும் வெள்ளை நிற கோட்டு அணிந்திருந்தார். அவருக்கு ஆமாம் என்று பதில் சொல்லிவிட்டு நீங்கள் இந்தியரா என்று ஆவலுடன் கேட்டேன் அதற்கு அவர் இல்லை என்று கூறிவிட்டு "நான் இந்தியாவைப் பற்றி நன்கு அறிவேன்; புட்டபர்த்தி எனக்கு தெரியும்!" என்றார்! நீங்கள் ஒரு மருத்துவரா என்று நான் கேட்டதற்கு அவர் "ஆமாம், எம்ஆர்ஐ ஸ்கேன் துறையை சார்ந்த மருத்துவர்தான்! நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்! நான் அந்த மையத்தில் தான் இருப்பேன்! நீங்கள் பதிவு செய்து கொண்டு அங்கே வாருங்கள், உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பேன்!' என்றார்! நான் அவரது பெயரைக் கேட்டேன். அதற்கு அவர் தன் கோட்டின் மீது இருந்த பேட்ஜை காண்பித்தார்.
அதில் டாக்டர்.சத்யநாராயணா என்று எழுதி இருந்தது! மேலும் அவர் சிரித்துக் கொண்டே , "ஆனால் இங்கே அனைவரும் என்னை சத்யா என்றுதான் அழைப்பார்கள்" என்றார்! பிறகு அவர் அங்கிருந்து சென்று விட்டார். ரிஜிஸ்ட்ரேஷனை முடித்துக் கொண்டு வந்த நான், எனது மகனின் ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு ஸ்கேன் மையத்தின் உள்ளே பிரவேசித்தேன். உள் அறையிலிருந்து வெளியே வந்து என் மகனை ஸ்கேன் செய்ய டாக்டர்.சத்யா வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் மற்றொரு இந்திய மருத்துவர் வெளியே வருவதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். அவர் தன்னை "டாக்டர்.அமித் , மும்பையில் இருந்து வந்திருக்கிறேன் " என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். உடனே நான் அவரிடம் "உங்களது நண்பர் டாக்டர் சத்யநாராயணா அவர்களை இப்போதுதான் சந்தித்தேன்" என்றேன். உடனே அவர் ஒன்றும் புரியாத முகத்துடன் "அந்தப் பெயருடன் இந்த மருத்துவமனையில் எந்த டாக்டரும் இல்லை! இதே ஸ்கேன் துறையில் ஆறு வருடங்களாக பணிபுரியும் ஒரே டாக்டர் நான்தான்!" என்றார்! இவ்வாறு சொல்லிக் கொண்டே என் மகனை உள்ளே அழைத்துச் சென்றார். இப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை!! எதேச்சையாக என் தலையை தூக்கி மேலே பார்த்தேன்! ஆச்சரியம்!! அங்கே சிரித்துக்கொண்டிருக்கும் நம் சுவாமியின் போட்டோ அந்த சுவற்றில் இருந்தது! அப்போதுதான் எனக்கு அனைத்தும் விளங்கியது! இதுவரை எனக்கு கிடைத்த அறிகுறிகளை நான் ஏனோ புரிந்து கொள்ளவே இல்லை!! நம் சுவாமியே டாக்டர் சத்யாவின் உருவத்தில் நேராக வந்து அருள் புரிந்திருக்கிறார்! ஸ்கேன் ரிப்போர்ட்டும் "நார்மல்" என்று வந்தது! டாக்டர். அமித் கூறியபடியே சில நாட்களில் முன்பளித்த ஊசியின் விளைவுகள் தீர்ந்த பின்னர் என் மகன் உடல் நலம் திரும்ப பெற்றான்! எனது வேண்டுகோளுக்கு மனம் இறங்கி பல ஆயிரம் மைல்களைத் தாண்டி , டாக்டர்.சத்யா உருவத்தில் வந்து அருள் புரிந்த சுவாமியின் அன்பானது, ஒரு மில்லியன் அன்னைகளின் அன்பிற்கும் மேலானது என்பதை நான் அப்போது உணர்ந்தேன்!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 368:
கோவிட் 19 தொற்று பரவத் தொடங்கிய பின்னர், சர்வதேச பயணங்கள் ரத்து செய்யப்பட்ட சில நாட்களுக்கு முன்னரே எங்களது( திரு. சுரேந்த்ரா பண்டாரி) இரண்டு மகள்களும் ஆஸ்திரேலியாவிலிருந்து நேபாளத்தில் உள்ள எங்களது வீட்டிற்கு வந்து விட்டனர். பிறகு டிசம்பர் 2021 இல் ஆஸ்திரேலியா அரசாங்கம் பயணத் தடையை நீக்கிய பின்னர் பிப்ரவரி 2022-ல் எனது மூத்த மகள் ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் திரும்பினாள். பிறகு சில நாட்கள் கழித்து எனது இரண்டாவது மகள் அனுஷ்காவும் ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட தயாரானாள். அனுஷ்கா ஒற்றைத்தலைவலியால்(migraine )
அவ்வப்போது அவதிப்படுவது வழக்கம். இதன் தாக்கம் பல நாட்களுக்கு தொடரும் தன்மை உடையதாக இருந்தது. சில நேரங்களில் அவள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் எதுவும் பயன் தராமல் போய் அவளை நாங்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் நிலைமை ஏற்பட்டு விடும். அவள் பயணம் செய்யும் நாளும் வந்தது; அன்று காலையில் மிகவும் சுறுசுறுப்பாகத்தான் தன் உடமைகளை சரியாக எடுத்து வைத்துக் கொள்ளும் செயலில் ஈடுபட்டிருந்தாள் அனுஷ்கா. ஆனால் மாலை வேளையில் இந்த நோயின் அறிகுறிகள் அவளுக்கு தென்பட ஆரம்பித்தன; அவளது வழக்கமான மருந்து எடுத்துக் கொண்டாள். நாங்கள் மாலை ஏழு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி வானூர்தி நிலையத்தை அடைந்தபோது, அவளுக்கு தலைவலி அதிகமாகி இருந்தது. அவள் உள்ளே சென்றபிறகு வெளிநாட்டுப் பயண ஆவணங்களை சரிபார்க்கும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது அவளது நிலமை மேலும் மோசம் அடைந்தது. தலைவலியுடன் குமட்டலும் சேர்ந்து கொண்டது! அவள் சிட்னி நகரத்தை அடைய 17 மணி நேரம் ஆகுமாதலால், இந்த நிலைமை எங்களுக்கு மிகவும் கவலை அளித்த நிலையில் நாங்கள் பயணித்தை ரத்து செய்து விடுமாறு அவளிடம் கூறினோம். ஆனால் அப்போது இந்த கோவிட்நோயின் பரவலின் தன்மை பற்றி முடிவாக எதுவும் கூற முடியாத நிலையில் இருந்ததால் மறுபடியும் அரசாங்கம் , பயணங்களை ரத்து செய்தால் தனக்கு பிரச்சனை ஆகிவிடும் என்று நினைத்த என் மகள், பயணத்தை எப்படியாவது தொடர்ந்து விடுவதாகக் கூறினாள்! என்ன செய்வது என்று அறியாத நானும் என் மனைவியும் பகவானிடம் சரணடைந்தோம். எங்கள் மகளைக் காப்பாற்றுமாறு சுவாமியிடம் வேண்டினோம். என் மனைவி, தொடர்ந்து காயத்ரி மந்திரத்தை உச்சரித்தாள்; ஆனால் நானோ, அவளது தலைவலியை என்னிடம் மாற்றி விடுமாறு சுவாமியிடம் வேண்டினேன்! பத்து நிமிடங்களில் என் மகள் எங்களை தொலைபேசியில் அழைத்து, தற்போது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தாள்! மேலும் தான் செல்லும் அதே வழியில் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்யும் ஒரு இளைஞனை சந்தித்ததாக கூறினாள். அவன் அனுஷ்காவின் அழுகைக்கான காரணத்தைக் கேட்டுவிட்டு தன்னிடம் இருந்த புதிய ' விக்ஸ் வேபோ ரப் ' டப்பியை கொடுத்துள்ளான். இந்தக் களிம்பினைத் தடவியதாலும் பேச்சுத் துணை கிடைத்ததாலும் இப்போது தான் சிறிது நன்றாகவே இருப்பதாக தெரிவித்த அனுஷ்கா எங்களை வீட்டிற்கு புறப்படுமாறு கூறினாள்.
11:30 மணி அளவில் பறக்க தொடங்கியது அவளது விமானம். இன்னும் நான்கு மணி நேரத்தில் அவள் சிங்கப்பூர் சென்றடைந்து விடுவாள் என்ற நோக்கத்தில் நான் அவளிடம் பேசுவதற்கு அலாரம் வைத்துக் கொண்டேன். திடீரென்று நடு இரவில் எனக்கு தலைவலி ஏற்பட்டு சற்று நேரத்தில் மிகவும் தாங்க முடியாமல் போன காரணத்தால் அவள் சிங்கப்பூரை அடைந்த பிறகும் கூட என்னால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை! ஆனால் கைபேசியில் அழைப்பு மணி ஒலித்த போது நாங்கள் மிகவும் பயத்துடன் அதனை கையில் எடுத்தோம். ஆனால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும்படியாக எனது மகள் மிகவும் உற்சாகத்துடன் கைபேசியில் பேசினாள்! தான் தற்போது மிகவும் 'நார்மல்' ஆக உள்ளதாகத் தெரிவித்தாள்! தனது தலைவலி முற்றிலும் மாயமாகி விட்டதாகக் கூறினாள்? இதனைக் கேட்ட எங்களுக்கு மிகுந்த நிம்மதியுடன் கூடிய மகிழ்ச்சி பொங்கியது! கண்களில் நீருடன் சுவாமிக்கு நன்றி கூறினோம்! வழக்கமாக சில நாட்களுக்குத் தொடரும் இந்த ஒற்றைத் தலைவலி, ஒரு சில மணிகளிலேயே மறைந்தது! இதோ, இங்கே நான் மிகவும் கடுமையான தலைவலியால் தவித்தேன்! எனது வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது!! சிங்கப்பூரில் மூன்று மணி நேர இடைவேளைக்குப் பிறகு அனுஷ்கா தனது இரண்டாவது பயணத்தை தொடர்ந்து இனிதே முடிவு செய்தாள். கூடவே பயணித்த அந்த இளைஞன், உடன் பிறந்த சகோதரனைப் போலவே அக்கறையுடன் அனுஷ்காவின் உடல் நிலையை கவனித்து உதவி செய்து வந்தான். இதுவுமே நம் பகவானின் கருணைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்!
ஆதாரம்: டாக்டர் வி. மோகன் அவர்கள் தொகுத்து எழுதிய "Eternal Divine Grace" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 369:
மிகவும் புனிதத் தன்மை வாய்ந்ததாக நான் கருதும் "பஜன் ஒருங்கிணைப்பாளர்" என்ற கடமை எனக்கு இருந்தும், சென்ற வருடம் (2016) ஒரு நாள் வேறு ஒரு பணியின் காரணமாக என்னால் சாயி குல்வந்த் ஹாலுக்கு செல்ல முடியவில்லை. ஆகவே நான் விடுதியில் எனது அறைக்குச் சென்று பஜன் செய்து மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
அந்த நேரத்தில்,
" சுவாமி! எனக்கு காலதாமதம் ஏற்படும் நாட்களில் எல்லாம் நான் ஏன் இங்கேயே பஜன் செய்யக்கூடாது? நீங்கள் நாற்காலியில் அமர்ந்திருப்பதை காணும் படியான காலம்தான் இப்போது இல்லையே? "என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. உடனே அதனை நான் பொருட்படுத்தாமல் ஒதுக்கி விட்டேன். அன்று இரவே யாரோ ஒருவர் என்னை கைபேசியில் அழைத்திருந்ததை மறுநாள் காலையில் தான் நான் பார்த்தேன். உடனே நான் அவரை என் கைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் யாரென்று எனக்குத் தெரியாத போதிலும் ஆறு மாதங்களுக்கு முன்பு நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்திருக்கிறோம் என்று தோன்றியது. அவர் என்னிடம், "சார்! சுவாமி நேற்று இரவு என் கனவில் தோன்றினார்" என்று கூறினார். விடுதியிலேயே பஜன் செய்து கொள்ளலாம் என்று நினைத்த மறுநாளே இந்த நிகழ்வு நடக்கிறது. சுவாமி எவ்வாறெல்லாம் நமக்காக நிகழ்வுகளை திட்டமிடுகிறார் என்பதற்கு இந்த ஒரு அனுபவமே சான்று. சுவாமி எனக்கும் என் மூலமாக மனித சமூகத்திற்கும் ஒரு செய்தி சொல்ல விரும்பி இருக்கிறார்! அந்த மனிதர் என்னிடம் கைபேசியில் தொடர்ந்து, "சுவாமி என்னிடம் இவ்வாறு கூறினார்: ' நான் இப்போதும் கூட பஜன் ஹாலில் அமர்ந்து தான் இருக்கிறேன் என்று சைலேஷிடம் சொல்! சுவாமிக்காக அங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலி இப்போது காலி என்றும் சுவாமியை பார்க்க முடியவில்லை என்றும் ஒருபோதும் எண்ணிவிட வேண்டாம்! அங்கே இருப்பது வெறும் சமாதி தான் என்ற எண்ணத்தையும் தூரமாக்கிக் கொள்ளச் சொல் !"என்றார்!!
ஆதாரம்: "ஶ்ரீ சத்ய சாயி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் லேர்னிங்"இல் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் திரு.சைலேஷ் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் பிரசாந்தி வித்வன் மகா சபா-2017இல் ஆற்றிய உரையிலிருந்து.
📝 நிகழ்வு 370:
சென்ற வருடம் 2016 நமது ஸ்ரீ சத்ய சாயி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு தனது பயிற்சிக்காக (இன்டர்ன்ஷிப்) அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகருக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அது முடிந்தவுடன் திரும்ப வேண்டிய நாளில் விமான நிலையம் செல்வதற்காக அன்று மதியம் மெட்ரோ டாக்ஸியை அழைத்தார். அவருக்காக வந்த காரின் ஓட்டுனர் ஒரு உயரமான கருப்பர் இனத்தைச் சார்ந்த அமெரிக்கர் ஆவார். விமான நிலையத்தை சென்று அடைந்தவுடன் ஓட்டுநருக்கு 60 டாலர்கள் கொடுப்பதற்காக தனது பணப்பையைத் திறந்தார் அந்த மாணவர்; அப்போது அதிலிருந்த நம் சுவாமியின் போட்டோவை பார்த்துவிட்டு அந்த ஓட்டுனர் இவரிடம், " அந்த மனிதர் யார்?" என்று கேட்டார்! இந்த மாணவர் உடனே சற்று பயந்தார்; ஏனெனில் இத்தகைய மனிதர்கள் சிலர் சில நேரங்களில் மிகவும் மோசமாக நடந்து கொள்வது உண்டு. ஆனால் அவர் கேட்ட விதத்தில் இருந்து, அவரது குரலில் ஏதோ ஒரு ஆர்வம் கலந்த ஆவல் இருப்பதை உணர்ந்த நம் மாணவர், "அவர் எங்களது ஆன்மீக குரு ஆவார்! நாங்கள் அவரை கடவுளாக வழிபடுகிறோம்!!" என்று கூறினார். இதனைக் கேட்ட அந்த ஓட்டுநர்- இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்த அமெரிக்கர்- நம் மாணவரிடம், "அவர் எனக்கும் கடவுள்தான்! நான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே அவரால் தான்!! ஒவ்வொரு மாதமும் அவர் என்னிடம் வந்து நான் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான பணத்தை கொடுப்பார்! எனக்கு மேலும் ஒரு பிறப்பு என்பது இருக்குமானால், அந்த பிறவியில் நான் நிறைய பணம் சம்பாதித்து, இந்திய கடவுச்சீட்டு பெற்று அவரை வந்து பார்க்க வேண்டும்!! என்று அழுது கொண்டே கூறினார்!!
( நல்லவேளை அந்த மாணவர் 2011 இல் நிகழ்ந்ததை அவரிடம் சொல்லவில்லை !)
ஆதாரம்: "ஶ்ரீ சத்ய சாயி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் லேர்னிங்"இல் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் திரு.சைலேஷ் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் பிரசாந்தி வித்வன் மகா சபா-2017இல் ஆற்றிய உரையிலிருந்து.
📝 நிகழ்வு 371:
1970களில் இலங்கையில் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசைதான் இருந்தது. நம் பகவானின் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை! ஆகவே தினந்தோறும் சுவாமியின் படத்தின் முன்னால் நின்று கொண்டு தனது ஆசையை அவரிடம் கொட்டித் தீர்ப்பான்! ஒருநாள் ஹாக்கி விளையாட்டுக்கு பின் வீடு திரும்பி கொண்டு இருந்த அவனுக்கு 'சுவாமிக்கு அருகில் செல்ல வேண்டும்' என்ற ஆசை திடீரென மேலோங்கியது! அதே நொடியில் அமிர்தத்தின் மணம் அருகில் வீசுவதைப் போல் உணர்ந்தான்! தானே புட்டபர்த்தியில் கடையில் வாங்கி, அணிந்து கொண்டிருக்கும் மோதிரத்தில் இருந்து அமிர்தம் வழிவதை அவன் கண்டான்! மேலும் அவன் எப்போதெல்லாம் சுவாமியை நினைக்கிறானோ அப்போதெல்லாம் இந்த நிகழ்வு நடந்தேறியது!
அதுமட்டுமல்லாமல் சுவாமி அவனது தந்தையின் கனவில் தோன்றி, மகனை பிருந்தாவனத்திற்கு அனுப்பிவைக்கும்படியும், தான் அவனைப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்! இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்த மாணவன் பிருந்தாவனத்திற்கு வருகிறான்! அங்கு பக்தர்களின் நடுவே அமர்ந்திருந்த இந்த மாணவனை அருகில் அழைத்து, தன் கல்லூரியிலே சேருமாறு சுவாமி கூறுகிறார்! சில வாரங்களுக்குப் பிறகு சுவாமி அவனுக்கு பிரத்தியேகமாக ஒரு இன்டர்வியூ அளிக்கிறார்; உள்ளே சென்றவுடன் அவன் தேம்பி அழுகிறான்! தனது ஆசை நிறைவேறியதை நினைத்த மாத்திரத்தில் அவன் கண்களில் பெருகிய ஆனந்தக் கண்ணீர், அது! அப்போது அவனிடம் சுவாமி, " இந்த வாய்ப்பு கிட்டுவதற்காக நீ ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகள் என்னிடம் வேண்டிக் கொண்டிருப்பாய்! இன்று நான் உனக்கு அதனை அளிக்கும்போது
எதற்காக அழுகிறாய்?" என்றார்!
இந்த நிகழ்வின் மூலம் நமக்குக் கிடைத்த பாடம் இன்றளவும் நம் அனைவருக்கும் பொருந்தும்! நாம் சுவாமியை ஆழமாக நம் அடி மனதில் நினைத்து நமது நியாயமான வேண்டுகோளை அவர் முன் தொடர்ந்து வைத்தோமானால் கண்டிப்பாக அதற்கு அவர் செவி சாய்ப்பார்! உடனே அவர் பதில் அளிக்கவில்லை என்றாலும் நாளையோ அல்லது மற்றொரு நாளோ உறுதியாக அவரிடம் இருந்து நமக்கு சாதகமான தீர்வை நாம் எதிர்பார்க்கலாம்! கடவுளின் "காலம் தாழ்த்துதலை" அவரது " மறுப்பு" என்று நாம் பொருள் கொள்ளலாகாது!
ஆதாரம்: "ஶ்ரீ சத்ய சாயி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் லேர்னிங்"இல் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் திரு. சாயி சதீஷ் அவர்கள் பிரசாந்தி வித்வன் மகா சபா-2016இல் ஆற்றிய உரையிலிருந்து.
📝 நிகழ்வு 372:
2012இல் மும்பையில் உள்ள என் வீட்டிற்கு சென்று இருந்த போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இதோ!
ஒருநாள் இரவில் எனது நண்பர்கள் சிலருடன் நான் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சாலை தடுப்பின் அருகே காவலர்கள் சிலர் எனது காரை நிறுத்தச் சொன்னார்கள். ஒரு காவலர் எனக்கு மறுபக்கம் உள்ள காரின் கண்ணாடியை தட்டி எனது நண்பரை திறக்கச் சொன்னார்! மேலும் எங்களை அவர், குற்றவாளிகளாக பார்க்கும் கண்ணோட்டத்துடன் ஒரு கடுமையான குரலில், " எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள்?" என வினவினார்! உடனே வெலவெலத்துப் போன என் நண்பர், பயத்தில் என்ன சொல்வது என்று அறியாது திகைத்தார்! எப்படியோ சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "இந்த காரின் ஓட்டுனர் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் கல்லூரியை சேர்ந்தவர்" என்று கூறிவிட்டார்!!
இவர் எதற்கு இதனை இப்போது கூறுகிறார் என்று நான் திகைத்து கொண்டிருக்கையில், அடுத்த நொடியிலேயே தனது கடுமையான முகத்தோற்றத்தில் இருந்து மாறி, "சாய்ராம்! சாய்ராம்! சாய்ராம்! " என்று அந்த காவலர் கூவினார்!! அடுத்த நிமிடம் என்ன நடக்கிறது என்பதை நான் உணர்வதற்குள் அவர் என் அருகில் வந்து என்னை ஆரத் தழுவிக்கொண்டார்.
என்னிடம் ஓட்டுனர் உரிமத்தை கேட்பதற்கு பதிலாக, 'நீங்கள் புட்டபர்த்தி சாய்பாபாவின் இன்ஸ்டியூட்டை சேர்ந்தவர்களா? "என்று கேட்டார்! நான் அதற்கு ஆம் என்று பதில் அளித்ததும் அவர், "எனக்கு உங்களது விசிட்டிங் கார்டை கொடுக்க முடியுமா?" என்றார் ! நான் உடனே ' SSSIHL ஆராய்ச்சியாளர்' என்று குறிப்பிட்டிருந்த எனது கார்டை அவரிடம் கொடுத்தேன்.
அவர் மேலும் தொடர்ந்து , "நீங்கள் புட்டபத்தியிலேயே வசிக்கின்றீர்களா?" என்றார். நான் ஆம் என்று அதற்கும் பதில் கொடுத்தவுடன், " தினமும் மந்திரத்திற்கு செல்கிறீர்களா? நீங்கள் பகவானை பார்த்திருக்கிறீர்களா?" என்றெல்லாம் கேட்டார்!! அதற்கும் நான் ஆம் என்றேன். உடனே அவர் "இந்த சாலையில் மேலும் இரண்டு தடுப்புகள் உள்ளன. அவ்விடங்களில் எந்த காவலராவது உங்களை தடுத்து நிறுத்தினால், சாய்ராம் என்று மட்டும் கூறிவிட்டு என் பெயரை அவரிடம் குறிப்பிடுங்கள்! அவர்கள் உங்களுக்கு வழி விட்டு விடுவார்கள்! " என்றார்!!
பிறகு காரை ஓட்டிச் செல்கையில் எனக்கு ஏன் இது நடந்தது என்று எனக்குள்ளே கேட்டு வியந்து கொண்டேன்!
"சுவாமியின் மாணவர்" என்ற பட்டமானது பக்தர்களிடையே எப்பேர்ப் பட்ட ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்றும், அதனால் ஏற்படும் நமது பொறுப்புகளையும் அதுவே நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது என்பதையும் நான் நன்கு உணர்ந்தேன்!!
ஆதாரம்: "ஶ்ரீ சத்ய சாயி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் லேர்னிங்"இன் முன்னாள் மாணவரான முனைவர் திரு. அமன் ஜவேரி அவர்கள் பிரசாந்தி வித்வன் மகா சபா-2016இல் ஆற்றிய உரையிலிருந்து.
📝 நிகழ்வு 373:
ஒருமுறை 25 வயது உள்ள ஒருவர் சுவாமியை தரிசிக்க வந்தார். அப்போது பிரசாந்தி நிலையத்திலிருந்த பாடசாலை பிளாக் என்ற கட்டிடத்தில் அவருக்கு தங்குவதற்காக சுவாமி அறை கொடுத்தார். ஒருநாள் சுவாமி அவரை அழைத்து, "வெளியில் உள்ள ஒரு கடையில் உனக்கு ஒரு பேண்ட்டும் சட்டையும் வாங்கிக் கொண்டு ஊருக்கு போய் சேர்!" என்றார்! அதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்து, "நான் ஒரு துறவு வாழ்க்கை வாழ்வதற்காக இங்கே வந்துள்ளேன். இதற்கு மாறாக நீங்கள் உலகியல் வாழ்விற்கே என்னை திரும்பச் செல்லுமாறு கூறுகிறீர்களே!" என்றார். அதற்கு சுவாமி அவரிடம், " ஒருவன் தன் வாழ்க்கையில் தனக்கென அமைந்த பொறுப்புகளை சரிவர ஏற்று பணியாற்றவில்லை எனில், எவ்வளவு ஆன்மீக சாதனைகள் செய்தாலும் அவை பலன் தராது! அது மட்டுமல்ல, ஒரு துறவியாய் சாதனைகள் செய்வதற்கு உனக்கு இன்னும் தகுதி ஏற்படவில்லை! உன்னை நன்கு வளர்ப்பதற்காக உனது தாய் பல வீடுகளில் ஊழியம் செய்தார்! உனக்காக உழைத்த தாயை நீ தனியாய் விட்டு விட்டு வந்தால் நான் எவ்வாறு உனக்கு கருணை காட்ட முடியும்? ஆகவே வீட்டிற்குத் திரும்பிச் சென்று உன் தாயை நன்கு கவனித்துக் கொள்! " என்றார்!!
ஆதாரம்: 2023- சனாதன சாரதி -ஏப்ரல் மாத இதழில் திருமதி. கருணாம்பா ராமமூர்த்தி அவர்களின் பதிவு.
📝 நிகழ்வு 374:
ஒருமுறை 'ஏலூரு' என்ற ஊருக்கு சென்றிருந்தபோது நான் நுழைந்த ஒவ்வொரு வீட்டிலும் சுவாமியின் படம் இருந்ததை பார்த்தேன். அவ்வாறு ஒரு வீட்டில் இருக்கையில், " இது என்ன அதிசயம்!? ஒவ்வொரு வீட்டிலும் சுவாயின் படம் உள்ளதே!? " என்று விமர்சித்தேன். பிறகு நான் பிரசாந்தி நிலையத்திற்கு சுவாமியின் தரிசனத்திற்காக சென்றபோது சுவாமி என் அருகில் வந்து, "ஏலூருவில் நீ என்ன சொன்னாய்? ' ஒவ்வொரு வீட்டிலும்(இண்டிலோ) சுவாமி இருக்கிறாரே!' என்று தானே? இல்லை! அது தவறு!! அவர் ஒவ்வொரு வீட்டில் மட்டுமல்ல, ஒவ்வொரு அங்குலத்திலும்(இஞ்சிலோ) இருக்கிறார்!! " என்று பறைசாற்றினர் !!
ஆதாரம்: பிரசாந்தி வித்வன் மகாசபா 2016ல் தெலுங்கு பண்டிதரான திரு. நல்லப்ரகட ஸ்ரீமன் நாராயணமூர்த்தி அவர்களது உரையிலிருந்து.
📝 நிகழ்வு 375:
1989இல் நாங்கள் (32 மாணவர்கள்)
சுவாமியுடன் கொடைக்கானலுக்கு செல்வதாக இருந்தபோது, சுவாமி புதிய பேருந்து ஒன்றை வாங்கினார். அப்போது அவர் எங்களிடம், " நீங்கள் சுகமாக பயணம் செய்வதற்காக நான் பேருந்து ஒன்றை வாங்கியுள்ளேன்! அதனுள் குளிர் பதன வசதி, ரேடியோ ஆகியவை உள்ளன! மிகவும் நன்றாக இருக்கிறது!" என்றார். அது வெகுதூரப் பயணமாதலால் அவர் தின்பண்டங்கள், உணவு மற்றும் பழச்சாறு முதலியவற்றை பேருந்துக்குள் நிரப்பச் செய்தார். புறப்படுவதற்கு முன்னர் எங்கள் அனைவரையும் அழைத்து எவற்றை எப்போது உண்ண வேண்டும் என்பதை கூட விவரமாக கூறினார்! பயணத்தின் வேறு பல அம்சங்கள் குறித்தும் விளக்கினார். இவை அனைத்தையும் கூறி முடித்த பிறகு அவர், " உங்களது சௌகரியத்திற்காக இந்த பேருந்து வாங்கப்பட்ட போதிலும் ஒரே ஒரு சிக்கல் மட்டும் உள்ளது! உணவு பொருட்கள் அடங்கிய பெட்டிகள் அடுக்கிய பின்னர் நீங்கள் அனைவரும் உட்கார்ந்துவிடுவீர்கள். பிறகு நான் இந்த பேருந்துக்குள் வந்தால் எங்கே அமருவேன்?" என்று கேட்டார்! சுவாமியுடன் செல்கிறோம் என்ற மகிழ்ச்சியில் உச்சத்தில் இருந்த நாங்கள் உணர்ச்சிவசப்பட்டு, "சுவாமி! இந்த பேருந்து முழுவதுமே உங்களுடையதுதான்! நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வந்து அமர்ந்து கொள்ளலாம்!!" என்றோம்! இதனைக் கேட்டவுடன் சுவாமியின் முகம் வாடியது! அவர் உடனே உயிரற்ற இந்த காலியான பஸ்ஸில் எனக்கு என்ன வேலை? நீங்கள் எனக்கென்று ஒரு சீட் கொடுத்தால் நான் அந்த மூலைக்கு சென்று உட்கார்ந்து கொண்டு உங்களுடன் பயணிப்பேன்!
நாம் செல்லும் இடம் வந்த பிறகு நான் என் வழியே செல்வேன், நீங்கள் உங்கள் வழியில் செல்வீர்கள்!!
ஆனால், அதற்கு மாறாக, ' சுவாமி! நீங்கள் எங்களுடையவர்! ' என்று கூறினால் நான் உங்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் அமர்ந்து கொண்டு உங்களுடன் பயணிப்பேன்! அப்போது அனைத்து காலத்திலும் உங்களுடனேயே இருப்பேன்! " என்று கூறினார்!
நான் உங்களுடனே இருக்க விரும்புகிறேன் என்று கூறிக்கொண்டு நமது அழைப்பைஆவலுடன் எதிர்நோக்கியே காத்திருக்கிறார், நம் சுவாமி!
ஆனால் அவரை அழைக்காமல், நாம் தான் தாமதம் செய்து கொண்டிருக்கிறோம்!
ஆதாரம்: சனாதன சாரதி 2023 ஜூன் மாத இதழில், முனைவர். திரு. எம்.சாய்நாத் அவர்களின் பதிவு.
📝 நிகழ்வு 376:
பேராசிரியர் திரு. கே.சி. ஸச்தேவ் அவர்கள், 1979இல் பிருந்தாவனத்தில் நடைபெற்ற "இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம்" என்ற தலைப்பில் நடைபெற்ற கோடை வகுப்புகளின் அழைப்பாளராக இருந்தார். அப்போது ஒருநாள் எனக்கு அவரிடம் உரையாடும் வாய்ப்பு கிட்டியபோது அவர் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை என்னிடம் விவரித்தார்: சில வருடங்களுக்கு முன்னர், சுவாமி, திரு. ஸச்தேவின் மனைவிக்கு ஒரு மோதிரம் வரவழைத்து கொடுத்திருந்தார். காலப்போக்கில் அவரது மனைவி இறைவனடி சேர்ந்த பின்னர் அந்த மோதிரத்தை சுவாமியிடம் திருப்பிக் கொடுத்து விடுவது தான் சரி என்று பேராசிரியர் நினைத்தார்! ஆனால் அவர் பிரசாந்தி நிலையத்திற்கு வருகை புரிந்த போது அந்த மோதிரத்தை எடுத்து வர மறந்து விட்டார். அதற்காக சுவாமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், வீட்டிற்கு சென்றவுடன் அதனை சுவாமிக்கு அனுப்பி விடுவதாகக் கூறினார்! இதனை கேட்ட சுவாமி, " இல்லை, வேண்டாம்! நீயே அதனை வைத்துக் கொள்! மேலும் நீயே அதனை அணிந்து கொள்!!" என்று உரைத்தார்.
தனது ஊரான சண்டிகருக்கு வந்த பின்னர், சுவாமி அந்த மோதிரத்தை தனக்கே அளித்துவிட்ட மகிழ்ச்சியில் அதனை எடுத்து அணிந்து கொள்ள முயற்சித்தார்! ஆனால் அந்த மோதிரம் தனது சுண்டு விரலின் முதல் மூட்டினையே தாண்டி செல்லவில்லை! இதனை எப்படி நான் அணிந்து கொள்வது என்று வியந்த அவர், "சுவாமி இந்த மோதிரத்தை எனது கழுத்தில் செயினுடன் கோர்த்து அணிந்து கொள்ளுமாறு கூறினாரோ? ' என்று சந்தேகப்பட்டார்! உடனே அந்த மோதிரத்தை தனது மோதிர விரலின் நுனியில் மாட்டிக்கொண்டு, இரண்டு கைகளையும் வணங்கும் பாணியில் சேர்த்துக்கொண்டு, தனக்கு வழிகாட்டி அருளுமாறு சுவாமியிடம் வேண்டினார். சிறிது நேரம் கழித்து அதனைப் பற்றியே நினைக்காமல் ஒரு அனிச்சை செயல் போல அந்த மோதிரத்தை பிடித்து இலேசாக கீழ் நோக்கி அழுத்தினார். உடனே அந்த விரலின் பருமனுக்கு ஏற்ப அந்த மோதிரம் மெதுவாக விரிவடைந்து கொண்டே விரலின் இறுதிவரை சுலபமாக சென்றுவிட்டது!! நான் அவரை சந்தித்த அந்த நேரத்தில் அந்த மோதிரம், அவரது விரலில் சரியாகப் பொருந்தி இருப்பதை நான் கண்டேன்!
இறைவனுடைய ஆற்றல் என்பது, இந்த உலகில் நாம் சாதாரணமாக உணரும் வெளி(space), தூரம்(distance ), பரிமாணம் (dimensions ) ஆகியவற்றின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டது என்னும் உண்மையை இத்தகைய நிகழ்வுகள் நமக்கு பலப்படுத்துகின்றன!
ஆதாரம்: ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2024 சனாதன சாரதி இதழ்களில், திரு. ஹோவார்ட் மர்ஃபெட் அவர்கள் எழுதியுள்ள பதிவு.
📝 நிகழ்வு 377:
தர்மாவரத்திற்கு அருகில் ஒரு குக்கிராமத்தில் வெங்கடலட்சுமம்மா என்ற பெண்மணி வசித்து வந்தாள். இவளை அந்த கிராமத்து மக்கள் ஒரு யோகினியாகவே கருதினர். அவள் ஒருமுறை எங்களது வீட்டிற்கு விஜயம் செய்தாள். அவளைப் பற்றி ஒன்றும் அறியாத எங்களுக்கு அவளது நடவடிக்கைகள் முதலில் வேடிக்கையாகவே தெரிந்தன. யாருடனும் அதிகம் பேசாமல் மிகவும் மௌனமாக இருப்பாள். இரவு நேரங்களில் உட்கார்ந்து கொண்டு ஜெபம் செய்வாள்; படுத்து உறங்க மாட்டாள். என் தாய்க்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. என் தாய் அவரிடம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பினாள். நாளடைவில் அவளது கிராமத்திற்கு என் தாயை அவள் அழைத்து ஒரு மந்திரத்தை உபதேசித்தாள். " இந்த மந்திரத்தை இடைவிடாது உச்சரிப்பதன் மூலம் உன் பிறவிப் பயனை அடைவாய்!" என்றும் கூறினார். இதன் காரணமாகவே பிற்காலத்தில் என் தாய்க்கு, நம் சுவாமி, மந்திர உபதேசம் செய்ய மறுத்தார். ஏற்கனவே அவள் பெற்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தும் வரும்படி கூறிவிட்டார். ஒரு சமயம் வழக்கம் போல சுவாமி பக்தர்களையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சித்ராவதி நதிக்கரைக்குச் சென்றார். அங்கே சிலருக்கு மருந்துகள் முதற்கொண்டு பல பொருள்களை சிருஷ்டி செய்து அளித்தார். இவ்வாறு அனைவருக்கும் பிரசாதம் அளித்த பிறகு என் தாயை அருகில் அழைத்தார். அவளை தன் கையிலேயே ஆற்று மணலை அள்ளுமாறு கூறினார்! என் தாய் அவ்வாறே செய்த பின், "அந்த மணலின் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்!" என்றார்!
அவள் அதிசயிக்கும்படியாக அதனுள் ஒரு சிறிய காகிதச் சுருள் இருந்தது! அந்த நேரத்தில் என் தாய்க்கு கண்பார்வை சரியாக இல்லாததால், மந்திரத்திற்கு சென்ற பிறகு அதனைப் பார்த்துக் கொள்வதாக சுவாமியிடம் கூறினாள். அதற்கு சுவாமியும் ஒப்புக்கொண்டார். அவ்வாறே மந்திரத்திற்கு சென்ற பிறகு அதனைத் திறந்து பார்த்தவுடன் என் தாய் மிகுந்த ஆச்சரியமடைந்தார்!
வெங்கடலட்சுமம்மா அவளுக்கு உபதேசத்திருந்த அதே மந்திரம் அதில் எழுதப்பட்டிருந்தது! அதன் பிறகு என் தாய்க்கு இருந்த சிறிய சந்தேகமும் முற்றிலும் மறைந்து விட்டது. தனது வாழ்க்கை முழுவதும் அந்த காகிதத்தை என் தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள் !
ஆதாரம்: அக்டோபர் 2022- சனாதன சாரதி இதழில் திருமதி கருணாம்பா ராமமூர்த்தி அவர்களின் பதிவு.
📝 நிகழ்வு 378:
திரு. திருமல ராவ் அவர்கள் சுவாமியின் தீவிர பக்தர் ஆவார். அவரது மனைவி அப்போதைய மதராசில் பணிபுரிந்து கொண்டிருந்த போது திருமல ராவ் அவர்களுக்கு மிகவும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனே தம்பதியர் இருவரும் மருத்துவர்களை கலந்து ஆலோசித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஒரு மிகவும் கடினமான சிக்கல் இருப்பதாகவும், அறுவை சிகிச்சையால் அதனை சரி செய்வது என்பதும் சந்தேகம்தான் என்று கூறிவிட்டனர். மேலும் அறுவை சிகிச்சை மூலமும் அவரது உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது என்றும் கூறிவிட்டனர்.
உடனே அவரது மனைவி, " இவர் இறக்க வேண்டும் என்ற நியதி இருந்தால் இந்த மருத்துவர்கள் கையினால் எதற்கு இறக்க வேண்டும்? பிரசாந்தி நிலையத்தில் சுவாமியின் சன்னிதியில் இந்த உலக வாழ்வை நீத்தலே உத்தமமானது "என்று எண்ணினார். அந்த எண்ணத்தை அவர் செயலாற்றும் விதமாக, புட்டப்பர்த்திற்கு வந்து அவ்விருவரும் சுவாமியிடம் சரணடைந்தனர்.
சுவாமியிடம் அந்தப் பெண்மணி, " சுவாமி! நீங்கள் அவரைக் காப்பாற்றுவீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது. முழுமையான நம்பிக்கையுடன் நான் அவரை உங்களது பாதாரவிந்தங்களுக்கு அருகில் அழைத்து வந்து விட்டேன்!"என்றார். மறுநாள் காலையில் பிரசாந்தி நிலைய மந்திரத் திறப்பு விழா நடைபெறவிருந்தது. அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பழைய மந்திரத்தில் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கிருந்த சுவாமி, " உன் கணவர் இன்று சுப்பம்மாவின் வீட்டில் எனக்கு பக்கத்திலேயே படுத்துக் கொள்ளட்டும் என்றார்! அதன்படியே திருமலராவ் செய்தார். என்ன ஆச்சரியம்!! மறுநாள் காலையில் அவர் எழுந்தபோது அவரது வயிற்று வலி மாயமாய் மறைந்து போயிருந்தது!! வயிற்றில் புண் அல்லது கட்டியின் அறிகுறிகள் எதுவுமே இல்லை! அங்கிருந்த அனைவரும் வியந்து போயினர்! அப்போது மேலும் இருவருடன் நானும் அங்கே இருந்தேன். இரவில் அவர் படுப்பதற்கு முன்னர், சுவாமி சாதாரணமாக அவரது வயிற்றில் ஒருமுறை தட்டியே அவரை பூரணமாக குணப்படுத்திவிட்டார்!
ஆதாரம்: அக்டோபர் 2022- சனாதன சாரதி இதழில் திருமதி கருணாம்பா ராமமூர்த்தி அவர்களின் பதிவு.
📝 நிகழ்வு 379:
எங்கள் குடும்பத்தின் மேல் சுவாமி வைத்திருந்த அளவற்ற அன்பின் அடையாளமாக நான் பின்வரும் நிகழ்வை விவரிக்க விரும்புகிறேன்:
எனது தந்தையார் என்னை ராஜ மகேந்திரவரத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்த்து இருந்தார். ஒரு சில வட்டாரங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் அப்பள்ளியின் காம்பவுண்டு சுவரை சுற்றிக்கொண்டு வரவேண்டியிருந்தது. ஆகவே ஒரு சில குறும்பு குணம் படைத்த மாணவர்கள் அந்த சுவற்றின் ஒரு இடத்தில் பெரிய துளை ஒன்றை போட்டுவிட்ட பின்னர் அதன் வழியே பள்ளிக்குள் நுழைவது என்பது வழக்கமாகிவிட்டது. நானும் அந்த வழியே தான் பள்ளிக்கு செல்வேன். அவ்வாறு ஒருநாள் அந்தத் துளையினுள் நான் நுழைந்து கொண்டிருந்தபோது மறுபக்கத்தில் யாரோ சிலர் எனது முகத்தை துணியால் இறுக்க மூடிவிட்டு என்னைக் கடத்திச் சென்றனர்! நான் மூச்சு விட முடியாமல் மயக்கமுற்றேன்! நான் மயக்கம் தெளிந்து எழுந்த போது கோதாவரி பாலத்தைக் கடந்து கொண்டிருக்கும் ஒரு இரயிலில் நான் இருப்பதை உணர்ந்தேன்! யாரோ ஒருவன் அந்த இரயில் பெட்டியின் கதவருகே எனக்கு காவலாக நின்றிருப்பதை பார்த்து மிகவும் பயந்தேன்! அந்தப் பெட்டியின் மறுபுறம் ஒரு மனிதர் தனியாக அமர்ந்திருப்பதை கண்ட நான் அவரிடம் ஓடினேன்! அவர் உடனே என்னை அமைதிப்படுத்திய பின் அந்த கடத்தல்காரனை நோக்கி உரக்க சத்தம் போட்டார்! அவன் அடுத்து வந்த ரயில் நிலையமான கொவ்வூரில் இறங்கி ஓடிவிட்டான்! அவர் என்னிடம் விவரங்களை சேகரித்த பின்னர் என்னை கொவ்வூரிலிருந்த எனது மைத்துனரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அந்த காலகட்டத்தில் எனது மூத்த சகோதரர் புட்டபர்த்தியில் இயங்கிக் கொண்டிருந்த சுவாமியின் வேத பாடசாலையில் பயின்று கொண்டிருந்தார்!
சம்பவம் நடந்த அன்று காலை சுவாமி என் சகோதரரை அழைத்து, " இன்று காலை யாரோ சில விஷமிகள் உன் தம்பியை கடத்திச் சென்றனர்! சுவாமி அவனை காப்பாற்றி உன் அக்காவிடம் ஒப்படைத்து விட்டேன்!" என்றார்!
ஆதாரம்: ஜனவரி 2019 - சனாதன சாரதி இதழில் அந்நாளைய 'புர்ர கதா' கலைஞரான நிடதவோலு சூரிபாபு அவர்கள் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 380:
1988 ஆம் வருடத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மனதில் ஆழமாகப் பதிந்த ஒன்றாகும். நான் அப்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்காகப் படித்துக் கொண்டிருந்தேன். நான் சுவாமியின் பக்தரான திரு சேஷகிரி ராவ் அவர்களின் குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் செய்திருந்தேன். நான் அப்போது வரை சுவாமியிடம் பேசிய அனுபவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் எங்கள் வீட்டின் முதியவர்கள் பலர், சுவாமி எவ்வாறெல்லாம் அவர்களிடம் பேசுவார் என்பதை சொல்ல, நான் கேட்டுள்ளேன். ஆகவே, எனக்கும் அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்று ஏங்கினேன்; அதற்காக எப்போதும் சுவாமியிடம் மனதில் வேண்டிக்கொள்வேன். சுவாமியின் பிறந்த நாளான 23-11 -1988 அன்று மதியம் மந்திரத்தின் முன்னால் அகல் விளக்குகளை வரிசையாக வைக்கும் சேவையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அந்த நாட்களில் சுவாமி இன்டர்வியூ அறைக்கு மேல் உள்ள அறையில் தான் வாசம் செய்து வந்தார். சுமாராக மதியம் 2:30 மணி இருக்கும்; அப்போது நான் பணி செய்து கொண்டே எதேச்சையாக என் தலையை உயர்த்தி சுவாமியின் அறையில் இருந்த ஜன்னலை நோக்கிய போது நான் இன்ப அதிர்ச்சியடைந்தேன்! சுவாமி ஜன்னல் அருகே நின்று கொண்டு கீழே நின்றிருந்த எங்களை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அக்கணம் நான்ஆனந்த பரவசம் அடைந்தேன்! ஆனால் யாரிடமும் இதனைப் பகிர்ந்து கொள்ளவில்லை.
அன்று மாலை ஸ்ரீ சத்யசாய் ஹில்வியூ ஸ்டேடியத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மந்திரத்திற்கு சுவாமி திரும்பும் நேரம் ஆயிற்று; அப்போது திரு.சேஷகிரி ராவ் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் இன்டர்வியூ அறையின் அருகில் சுவாமியின் வருகைக்காக காத்திருந்தோம். மிகுந்த எதிர்பார்ப்புடன், நெஞ்சம் படபடக்கக் காத்திருந்த கணமும் வந்தது! எனது தேர்விற்காக சுவாமியின் அருளை வேண்டி நான் எழுதிய கடிதம் என் கையில் இருந்தது; சுவாமி அங்கே வந்தவுடன் குடும்பத்தின் முதிய உறுப்பினர்களிடம் பேசிவிட்டு என்னிடம் வந்தார்! அப்போது என் கடிதத்தை அவரிடம் கொடுத்து அவரின் அருளுக்காக வாய்விட்டு வேண்டினேன். என்னுடைய வாழ்க்கையில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சுவாமியிடம் பேசியது அதுதான் முதல் தடவை! அன்பே உருவான அவர், உடனே, "ஆம், தங்கமே! என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கும்!" என்று கூறிவிட்டு நகர்ந்தார்! அப்போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை! இந்த உணர்வை முழுவதும் உள்வாங்குவதற்கு முன்னால், முன்னே சென்ற அவர், திரும்பி சில அடிகள் எடுத்து வைத்து என்னிடம் வந்து , "இன்று மதியம் தீபங்களை நீ ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது நான் பார்த்தேன் அல்லவா?" என்றார்!! இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்? என் ஆனந்தக் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை!! எனது ஆழ்ந்த வேண்டுகோள் நிறைவேறிய அந்த அனுபவத்தை நான் என்றென்றும் நினைத்து மகிழ்வேன்!!
ஆதாரம்: திரு சேஷகிரி ராவ் அவர்களின் கொள்ளுப்பேத்தியான திருமதி. ஆஹ்லாதினி பானு அவர்கள் பிப்ரவரி 2024 -சனாதன சாரதி இதழில் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 381:
ஒரு நாள் சுவாமி என்னை பார்த்து, " பட்டமளிப்பு விழாவன்று நடக்கவிருக்கின்ற நாடகத்தில் நீ பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக நடிக்கின்றாய்! ஸ்ரீ கிருஷ்ணரின் முகம் மிகவும் அழகாக இருந்தது. ஆனால் உன் முகம் முழுவதிலும் பருக்கள் நிறைந்துள்ளன. ஆகவே பார்ப்பதற்கு நன்றாக இருக்காது!" என்றார்! உடனே நான், " சுவாமி! நீங்கள் ஒருவர் மட்டும்தான் எனது இந்த சிக்கலை தீர்த்து வைக்க முடியும்!" என்றேன்! உடனே சுவாமி தன் கையை சுழற்றிய போது நிறைய கேப்சூல்கள் அடங்கிய ஒரு பிளாஸ்டிக் பை ஸ்ருஷ்டி ஆயிற்று! அந்தப் பையைத் திறந்து அத்தனை கேப்சூல்களையும் ஒன்று. இரண்டு, மூன்று, ... என்று முப்பது வரை சுவாமி எண்ணினார்! பிறகு கேப்சூல்கள் அடங்கிய அந்தப் பையை என்னிடம் கொடுத்து, "இன்று அக்டோபர் 22. பட்டமளிப்பு விழாவுக்கு இன்னும் சரியாக 30 நாட்கள் இருக்கின்றன. தினமும் ஒரு கேப்சுலை நீ உட்கொள்! உனது பருக்கள் அனைத்தும் எந்த சுவடும் இன்றி மறைந்து விடும்!" என்று கூறினார்! நானும் அவ்வாறே செய்தேன்! சில நாட்களிலேயே அனைத்து பருக்களும் மாயமாய் மறைந்து விட்டன! இவ்வாறு நான் சுவாமியை ஒரு தெய்வீக மருத்துவராக அனுபவித்தேன்!
ஆதாரம்: முன்னாள் SSSIHL மாணவர் திரு.என்.சுதீந்திரன் அவர்கள் அக்டோபர் 2024- சனாதன சாரதி ஆங்கில இதழில் எழுதியது.
📝 நிகழ்வு 382:
ஒருமுறை சுவாமி நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு மாணவர், சுவாமியின் பாதத்தில் நூல் ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். உடனே அவர் ஓடிச்சென்று சுவாமியின் பாதத்தைப் பற்றி , அந்த நூலை எடுத்து அதனை தூர எறிந்து விட்டார். உடனே சுவாமி புன்சிரிப்புடன், " நீ அந்த நூலை சாதாரணமாக( நினைத்து) எறிந்து விட்டாய்! உன் இடத்தில் வேறு ஒரு வெளிநாட்டவர் இருந்திருந்தால் அதனை மிகவும் புனிதமான பொருளாகக் கருதி தனது வீட்டின் பூஜையில் வைத்திருப்பார்! எனவே சுவாமிக்கு அருகில் இருப்பதை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளாதே! இந்த வாய்ப்பு கிடைத்ததற்குக் காரணம், பல பிறவிகளில் நீ செய்த புண்ணியங்களின் சேமிப்பே ஆகும்! ஆகையால் இந்த வாய்ப்பை வீணடித்து விடாதே!" என்றார்!!
ஆதாரம்: "நெக்டர் ஆப் டிவைன் மெலடிஸ்" என்ற புத்தகத்தில் தெய்வத்திரு. முனைவர் அனில்குமார் காமராஜு அவர்கள் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 383:
தெய்வத்திரு.மாதவ் தீக்ஷித் அவர்கள் அவரது 10 வயதில் தனது மாமா மற்றும் சீரடி பாபாவின் அன்னியோன்ய பக்தரான ஹரி சீதாராம் தீக்ஷித் அவர்களுடன் வாழ்ந்து வந்தார். மாதவ் தீக்ஷித் அவர்கள் தனது மாமாவை காகா என்று அழைத்து வந்ததனால் பாபாவும் அவரை காகா என்றே அழைத்தார். தனது மாமாவுடன் 1910 முதல் 1918 - பாபா தன் பூவுடலை நீத்த நாள் - வரை பாபா உடனேயே இருந்தார். அந்த காலகட்டத்தில் மாதவ் அவர்கள் தினமும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஒருநாள் பாபா மாதவை தன் அருகில் அழைத்து, நெருப்பில் இருந்து உதியை கையில் எடுத்துக்கொண்டு, அந்த உதியுடன் மாதவின் நெற்றியில் வேகமாக அறைந்தார்! அந்த பத்து வயது சிறுவன் உடனே அழ ஆரம்பித்து, தன் மாமாவிடம், "நான் இனி பாபாவின் அருகில் செல்ல மாட்டேன்!" என்றான்,! ஆனால் அதற்கு காகா அவர்கள், "இல்லை! நீ மிகவும் அதிர்ஷ்டசாலி! பாபா உனக்கு அனுக்கிரகம் செய்திருக்கிறார்! நாங்கள் அனைவருமே எப்போது இப்படி அடி வாங்குவோம் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்! " என்றார்! ஆனால் அந்த நொடியில் இருந்து மாதவ் தீக்ஷித் அவர்களுக்கு தலைவலியிலிருந்து பூரண நிவாரணம் கிடைத்தது!
இதே மாதவ் தீக்ஷித்துடன் அவரது 65 ஆவது வயதில் மங்களூரில் இருந்தபோது எனக்கு தொடர்பு ஏற்பட்டது! ஆனால் அந்த சீரடி பாபாவின் மறு அவதாரம் தான் பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபா என்ற உண்மையை அவர் நம்பத் தயாராக இல்லை! நான் சொல்வது உண்மையா என்று பரிசோதித்துப் பார்க்க அவர் 1962 ல் என்னுடன் புட்டபர்த்திக்கு வந்தார். தனது அறையில் இருந்து வெளியே வந்த சுவாமி என்னை பார்த்தவுடன், " ஆகவே மாதவ் தீக்ஷித்தை நீ அழைத்து வந்திருக்கிறாய்! அவர் ஏற்கனவே சுவாமியுடன் சீரடியில் எட்டு வருடங்கள் இருந்திருக்கிறார்!! "என்றார்!! அப்போது என் அருகில் இருந்த மாதவ தீக்ஷத் ஆச்சரியமடைந்தார்! ஆனால் இன்டர்வியூ அறையில் இதனை மேலும் சுவாமி ஊர்ஜிதம் செய்தார். சுவாமி அவரிடம் முதல் கேள்வியாக, " சீரடியில் உதியுடன் நான் உன்னை நெற்றியில் அறைந்த பிறகு உனக்கு மறுபடியும் தலைவலி வந்ததா? " என்று கேட்டார்! உடனே தீக்ஷித், பரவசத்துடன், "நீங்கள் தான் என்னுடைய பாபா!" என்று கூறி சுவாமியின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்!
டாக்டர். டி.ஜே. கடியா என்ற பழம்பெரும் பக்தர் சனாதன சாரதி- மே 2024 ஆங்கில இதழில் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 384:
1991இல் எனக்கு மாதவிடாய் முடிவடையும் காலகட்டம்; அப்போது மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து இரத்தப்போக்கு இருந்து வந்தது. எனக்கு வலியோ அல்லது தசைப் பிடிப்போ ஏதும் இல்லாத காரணத்தினால் நான் மருத்துவரிடம் செல்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இறுதியாக நான் மருத்துவரிடம் சென்ற போது அவர் என்னை ஹார்மோன் தெரபி எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். ஆனால் எனக்கு இதில் பயமும் நம்பிக்கை அற்ற தன்மையும் இருந்ததால் நான் மறுத்துவிட்டேன். அந்த காலகட்டத்தில் சாயி பக்தராக இருந்த எனது நண்பர் ஒருவர் வேறு ஒரு மருத்துவரிடம் இரண்டாவது கருத்தினைப் பெறுமாறு ஆலோசனை கூறினார். இவை அனைத்தும் ஒரு வியாழக்கிழமை அன்று நடந்தேறின. அன்று இரவு நான் படுக்க செல்வதற்கு முன்னர் எனது வழக்கமான பூஜையை செய்தேன். ஆனால் எனது சிக்கலை தீர்த்து என்னை குணப்படுத்துமாறு சுவாமியிடம் நான் கேட்கவில்லை! மறுநாள் அதிகாலையில் சுவாமி என் கனவில் தோன்றினார்! அவர் கையில் பட்டையான, ஒளி வீசக்கூடிய ஒரு கத்தியை வைத்திருந்தார்! அவர் என்னை கீழே படுத்துக் கொள்ளுமாறு கூறினார்! பிறகு அந்த கூர்மையான ஆயுதத்தை எனது அடி வயிற்றில் வைத்து மிகவும் வேகமாக அழுத்தினார்! கனவிலேயே நான் அதன் வலியை நன்கு உணர்ந்தேன். அந்த வலி தாங்க முடியாமல் " ஓம் சாய்ராம்!!" என்று உரக்க கூவினேன்! பிறகு சுவாமி என்னிடம் ஏதோ கூறிவிட்டு மறைந்தார். நான் எழுந்தபோது அவர் கூறியது என் நினைவிற்கு வரவில்லை.ஆனால் இரண்டு நாட்களில் இரத்தப்போக்கு மெதுவாக குறைய ஆரம்பித்தது! உடனே நான் எனது பூஜையறைக்கு சென்று சுவாமிக்கு முன்னால் அழுது கொண்டே, " ஓ, பாபா!! நான் உங்களை எதுவுமே கேட்காத போதிலும் நீங்கள் உங்களது அளவு கடந்த கருணையின் வெளிப்பாடாக எனக்கு உதவி செய்து உள்ளீர்!!" என்று கூறினேன். பிறகு நான் என் மருத்துவரிடம் சென்றபோது அவர் என்னை பரிசோதித்து விட்டு நான் இப்போது பூரண குணம் அடைந்திருப்பதாக கூறினார்!!
ஆதாரம்: திருமதி ஜெயா நரசிம்மன் என்ற பக்தர், தான் எழுதிய " பர்த்தி பாபா" என்ற புத்தகத்தில் இருந்து எடுத்த பதிவு.
📝 நிகழ்வு 385:
சாயி வைத்திய நாராயணா, ஒரு கைதேர்ந்த மருத்துவர் ஆவார்! அவருக்குத் தெரியாத மருந்தே கிடையாது! சித்ராவதி ஆற்றின் கரையில் ஒரு முறை நடந்து சென்று கொண்டிருந்தபோது அருகில் இருந்த ஒரு புளிய மரத்திலிருந்து சுவாமி ஒரு கொய்யாப்பழத்தை பறித்து அதனை ஒரு பக்தரிடம் அளித்தார்! உடனே அந்த பக்தர், "சுவாமி! எனக்கு ஆஸ்துமா நோய் உள்ளது. ஆகவே அந்தப் பழத்தை நான் உட்கொள்ளக்கூடாது " என்றார். சுவாமி உடனே சிரித்துக்கொண்டே, " இந்தப் பழம் சுவாமி உடைய அன்பளிப்பாகும்! ஆகவே ஒரு விதை கூட விடாமல் முழுமையாக தின்று விடு!" என்றார்! சுவாமியின் கட்டளைக்கு அடிபணிந்த அவருக்கு இருந்த ஆஸ்துமா நோய் அன்று முதல் சுவடு தெரியாமல் மறைந்து விட்டது! சுவாமியின் சிகிச்சை முறை மிகவும் வித்தியாசமானது! நோயாளி சாப்பிடக்கூடாததை அவரிடம் கொடுத்து அதனை உட்கொள்ளச் செய்து அந்த நோயாளியை குணப்படுத்துவது என்பதுதான் அது!
ஆதாரம்: ஸ்ரீமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய " அன்யதா சரணம் நாஸ்தி " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 386:
ஒருமுறை எனது தந்தையார் கடும் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்தார்! ஆகவே நாங்கள் உதவி கேட்பதற்காக மாடியில் சுவாமியின் அறைக்கு சென்றோம்(!!*) அப்போது யாரோ ஒரு அமைச்சர் வருவதாக இருந்ததால் சுவாமி அதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வந்தார். தட்டுகளில் பலவிதமான உணவு வகைகள் தயார் நிலையில் இருந்தன! அப்போது நாங்கள் சுவாமியிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே, சுவாமி ஒரு வெங்காய பக்கோடா துண்டு ஒன்றினை எடுத்து என்னிடம் அளித்து, என் அப்பாவிடம் கொடுக்கச் சொன்னார்! சிறிது நேரம் கழித்து சுவாமி என்னிடம் வந்து, "என்ன ஆயிற்று? சிக்கல் தீர்ந்ததா?" என்று கேட்டார்! அதற்கு நான், " சுவாமி! நீங்கள் மருந்து ஏதும் கொடுக்கவில்லையே? " என்றேன். அதற்கு அவர் உடனே, "அட, உன் தலை! நான் பக்கோடா கொடுத்தேன் அல்லவா?" என்றார்!! உடனே நான் என் தந்தையிடம் சென்று கேட்டபோது அவர், "சுவாமியின் பக்கோடா வேலை செய்து விட்டது! இப்போது நிம்மதியாக இருக்கிறேன்!" என்றார்! வரங்களை அள்ளித்தரும் சாயி காமதேனுவிற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் அனைத்துமே தெரியும்!
(*தொகுப்பாளரின் குறிப்பு: 1950- 60களில் சுவாமியின் அருகில் இருந்த பக்தர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்! அவர்களுக்கு எல்லாமே சுவாமிதான்! சுவாமியிடம் எதை வேண்டுமானாலும் போய் கேட்பது என்ற உரிமையை அவர்கள் பெற்றிருந்தனர். சுவாமியும் அவர்களுக்கு அத்தகைய சுதந்திரத்தை அளித்திருந்தார்! இந்த அனுபவத்தில், தங்களது அசௌகரியத்தை வாய்விட்டு கூறாமலேயே, சுவாமி அதற்கான மருந்தை அளித்து விட்டார்!)
ஆதாரம்: ஸ்ரீமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய " அன்யதா சரணம் நாஸ்தி " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 387:
2005இல் ஸ்ரீ சத்ய சாயி (தமிழ்நாடு) டிரஸ்டில் என்னுடன் மேலும் சிலர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்த பின்னர், அப்போது கன்வீனராக இருந்த திரு. ஜி. கே. ராமன் அவர்கள் அனைத்து உறுப்பினர்களையும் பிருந்தாவனத்திற்கு அழைத்து வந்து சுவாமியிடம் அறிமுகப்படுத்துவதற்காக சுவாமியின் அனுமதி கோரினார். பிருந்தாவனம் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் எனது (காலஞ்சென்ற) மனைவி, டாக்டர் ஹேமா திடீரென்று ஒரு காதில் கேட்கும் திறனை முற்றிலும் இழந்தார்! அப்போது எனது வகுப்பு தோழரும் நண்பருமான, உலகப் புகழ்பெற்ற காது- மூக்கு- தொண்டை நிபுணர், டாக்டர். மோகன் காமேஸ்வரனிடம் அழைத்துச் சென்றேன். என் மனைவியை பரிசோதித்த பின்னர், இரத்த நாளத்தின் வழியே ஸ்டீராய்ட் மருந்துகளை செலுத்துவதே ஒரே வழி என்றும், ஒரு சில வாரங்களுக்கு எங்கும் பயணிக்க கூடாது என்றும் டாக்டர் கூறிவிட்டார்! ஆனால் பிருந்தாவனம் செல்வதற்கு ஒரு நாள் முன்னர் அற்புதம் நிகழ்ந்தது! திடீரென்று ரேமா தனது காதில் கேட்கும் திறனை முழுமையாக பெற்றுவிட்டார்! உடனே டாக்டரிடம் நாங்கள் தெரிவித்த பின்னர், அவரும் இனிமேல் பயணிக்கலாம் என்று அனுமதி அளித்து விட்டார்! மிகுந்த ஆனந்தத்துடன் நாங்கள் பிருந்தாவனம் சென்று சுவாமியின் தரிசனம் மற்றும் பஜனையில் மகிழ்ச்சியுடன் பங்கு கொண்டோம். பஜனை முடிந்த பிறகு சுவாமியின் இன்டர்வியூவிற்காக எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் சுவாமியோ உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தார். இதனால் எங்களது குடும்பத்தினர் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் பஜன் ஹாலிலேயே தங்கி விட்டனர். அப்போது என் மனைவி ஹேமா தன்னை விரைவில் குணப்படுத்தியதற்காக சுவாமியிடம் மனதில் தொடர்ந்து நன்றி தெரிவித்துக் கொண்டே இருந்தார். இன்டர்வியூ அறையில் எங்களுடன் பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த சுவாமி திடீரென்று என்னிடம் திரும்பி, " டாக்டர்! தயவுசெய்து உன் மனைவியை 'மிக்க நன்றி சுவாமி, மிக்க நன்றி சுவாமி!' என்று சொல்ல வேண்டாம் எனக் கூறிவிடு! எனக்கு நன்றி கூற வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை! எதற்கு ஒரு பக்தர் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்? பக்தர்களை நன்கு பார்த்துக் கொள்வதும் , அவர்களை காப்பாற்றுவதும் எனது கடமையாகும்! அவ்வாறு இருக்கும்போது நன்றி சொல்வதற்கான அவசியம் எங்கே இருக்கிறது? ஆகவே அவளை நிறுத்திக் கொள்ளச் சொல்!!" என்றார்! பிறகு மற்ற உறுப்பினர்களிடம் பேசிக் கொண்டிருந்த சுவாமி, மறுபடியும் என்னை பார்த்து, "அவள் நன்றி சொல்வதை நிறுத்தவே இல்லை! அவளது நன்றிகள் என்னை வந்து அடைந்து கொண்டே இருக்கின்றன!!" என்றார்! இன்டர்வியூ முடிந்த பிறகு அனைவரும் வெளியே வந்தோம். எனது சக உறுப்பினர்கள் ஹேமாவிடம், " பஜன் ஹாலில் அமர்ந்து கொண்டு சுவாமிக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தீர்களா?" என்று கேட்டனர்! உடனே ஆச்சரியத்தில் ஆழ்ந்த ரேமா, " ஆமாம், உண்மைதான்! ஆனால் நான் என் மனத்திற்குள் தான் சொல்லிக் கொண்டிருந்தேன்? உங்களுக்கு எப்படி தெரிந்தது? என்று கேட்டாள். உடனே அவர்கள், " நீங்கள் தொடர்ந்து நன்றி கூறிக் கொண்டிருப்பதாகவும் அந்த நன்றிகள் அனைத்தும் அவரை வந்து அடைந்து கொண்டிருந்ததாகவும் சுவாமி எங்களிடம் கூறினார்!" என்றனர். நமது வேண்டுதல்கள் அனைத்தும் சுவாமியை அடைகின்றன என்பதற்கு இந்த அனுபவம், ஒரு ஆதாரம் மற்றும் சான்று ஆகும்! நம்மிடம் எந்த நன்றியையும் சுவாமி எதிர்பார்ப்பதில்லை என்ற உண்மையை வாசகர்களுக்கு தெரியப்படுத்தவே இந்த நிகழ்வை நான் இங்கு குறிப்பிட்டேன்!
தொகுப்பாளரின் பின்குறிப்பு: சுவாமியின் கட்டளைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நாம் நமது வாழ்க்கையில் இதயபூர்வமாக செயல்வடிவத்தில் கடைபிடிப்பதே சுவாமிக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும்! இதனை சுவாமியே பலமுறை கூறியுள்ளார்.
ஆதாரம்: டாக்டர். வி.மோகன் அவர்கள் சனாதன சாரதி- நவம்பர் 2024 -ஆங்கில இதழில் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 388:
ஒரு நாள் , இடைவிடாத இருமலால் தவித்து வந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் சுவாமியை காண வந்தார். அந்தக் காலத்தில் (1949-50) புட்டபர்த்தியில் மருத்துவமனை கிடையாது. அனைவரும் சுவாமியையே அணுகினர்! எப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டம்! ஒரு நாள், சுவாமி, அந்தப் பெண்மணியை அழைத்து அவருக்கு மருந்து கொடுப்பதாக கூறி தன் கையை நீட்டச் சொன்னார். அவரும் பயப்படாமல் தன் உள்ளங்கை மேலே பார்த்தவாறு தன் கையை நீட்டினார். சுவாமி தன் மூடிய உள்ளங்கையில் ஏதோ ஒன்றினை வைத்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி தன் கையை நீட்டிய உடனே சுவாமி அதனை அவர் கையில் வைத்தார். அவ்வளவுதான்! அந்த வஸ்துவை பார்த்தவுடன் அந்த பெண்மணி பயத்தில் உரக்க கத்தினார்!! நாங்கள் பயந்துவிட்டோம்!! அருகில் சென்று பார்த்தபோது அவள் கையில் ஒரு அழகான பச்சை நிற வண்டு இருந்தது! அந்த பூச்சியை பார்த்தவுடனே அவர் வெலவெலத்துப் போனார்! ஆனால் பயத்தில் அவர் கத்தியதற்குப் பின்னர் அவருக்கு இருமலே வரவில்லை!! அப்போது சிரித்துக்கொண்டே சாயி கோபால், தான் ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்ததாக கூறினார்!!
ஆதாரம்: ஸ்ரீமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய " அன்யதா சரணம் நாஸ்தி " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 389:
நாங்கள் 1954இல் புட்டபத்தியில் இருந்த போது எனது முதிய மைத்துனருக்கு அப்பென்டிசைடிஸ் (குடல் அழற்சி) நோய் ஏற்பட்டது. தாமதம் செய்யாது உடனே நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அனைவரும் கூறினர். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் சுவாமி மட்டுமே மிகச்சிறந்த மருத்துவ நிபுணர் ஆவார்! அவர் அருகில் இருக்கும் போது எதற்கு நாம் பயப்பட வேண்டும்? ஆகவே சுவாமியின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்ற போது சுவாமி, "சரி" என்று கூறினார். நாங்கள் அனைவரும் பஜனைக்கு சென்றிருந்தபோது மைத்துனரின் வலி மிக அதிகமாகியது! சுவாமி அவரை மாடிக்கு அழைத்துச் சென்று தனது படுக்கையில் படுக்கச் செய்தார்! அந்த நேரத்தில் எனது மைத்துனருக்கு என்ன நடக்கிறது என்று முழுமையாக தெரியவில்லையாம்! அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சுவாமி தன் கையை சுழற்றி, அறுவை சிகிச்சைக்கான கத்தியை வரவழைத்தார்! அதன் பிறகு என்ன நடந்தது என்று எனது மைத்துனருக்கு தெரியவில்லை! அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த பின்னர் தையல்கள் போட்டுவிட்டு நமது சுவாமியான சாயி வைத்திய நாராயண ஹரி , எனது மைத்துனரை படுக்கையில் சௌகரியமாக படுக்க வைத்துவிட்டு பஜனைக்கு வந்துவிட்டார்! பஜனை முடிந்த பின்னர்தான், சுவாமி தான் செய்த வேலையை எங்களுக்குத் தெரிவித்தார்! உடனே நாங்கள் அனைவரும் மாடிக்கு ஓடினோம். என்ன ஆச்சரியம்! மைத்துனர் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார்!! மூன்றாம் நாளே அவரை நடக்க வைத்து, அவருக்கு இட்லியையும் உணவாக அளித்தார் சாயி பிரபு!! நாங்கள் அனைவரும், எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் இதயபூர்வமாக "எங்களது ஒவ்வொரு பிறவியிலும் சுவாமி எங்களை ஆபத்துகளில் இருந்து காத்தருளும்படியான பாக்கியத்தை" எங்களுக்கு உறுதி செய்யுமாறு சுவாமியிடம் வேண்டிக் கொண்டோம்!
ஆதாரம்: ஸ்ரீமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய " அன்யதா சரணம் நாஸ்தி " என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 390:
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில்( Ivory Coast) அபிட்ஜன் (Abidjan) என்ற நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் போதகராக இருந்த திரு.J.Nkrumah என்பவரது கனவில் சுவாமி தோன்றி, அவரை புட்டபர்த்திக்கு வருமாறு அழைத்தார்! தான் முற்றும் அறியாத, இதுவரை தான் கேள்விப்பட்டிராத, தனக்கு அறிமுகமற்ற ஒரு நபரிடமிருந்து வந்த 'கட்டளை'யை எண்ணி மிகவும் குழம்பிப் போனார்! அந்த நாட்டிலிருந்து இந்தியா வருவதற்குத் தேவைப்பட்ட பண வசதி அவரிடம் இல்லாமல் இருந்த போதிலும் சுவாமியின் அழைப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஈர்ப்பை அவர் உணர்ந்தார்! ஒரு நாள் அவர் தன் ஊரில் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தெருவில் ஒரு மனிதர் இவரை சில கேள்விகள் கேட்டு வியப்பில் ஆழ்த்தினார்!! முதல் கேள்வியாக, " நீங்கள் இந்தியாவுக்கு செல்ல விரும்புகிறீர்களா?" என்றார்! அதற்கு அந்த போதகர் 'ஆமாம்' என்று பதிலளித்தார். உடனே இரண்டாவது கேள்வியாக, "உங்களுக்கு பணம் தேவைப்படுகிறதா?" என்றார்!! அதற்கும் ' ஆமாம் ' என்று பதிலளித்தார். மூன்றாவதாக, " எவ்வளவு தேவைப்படுகிறது?" என்ற கேள்விக்கு, ' 2000 டாலர்கள் ' என்று பதில் அளித்தார்!! உடனே அந்த மனிதர், "என்னுடன் வாருங்கள்! நான் உங்களுக்கு தேவையான பணத்தை தருகிறேன்!" என்றார்!!! உடனே போதகர் அந்த முன்பின் தெரியாதவரின் பின்னால் சென்று அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டார்! ஆனால் அவர் பிரசாந்தி நிலையத்தை அடைந்து சுவாமியின் சந்நிதியில் இருக்கும் வரை அவருக்கு இந்த மனிதர் மிகவும் ஒரு புரியாத புதிராகவே இருந்தார்!
சுவாமி அவரை இன்டர்வியூவிற்கு அழைத்து அவரிடம், "நான்தான் அபிட்ஜனில் உன்னை சந்தித்து, உன் பயணத்திற்குத் தேவையான பணத்தை அளித்தேன்!" என்றார்!! இன்று அந்த போதகர் சுவாமியின் தீவிர பக்தராக உள்ளார் என்பதை சொல்லவே தேவையில்லை!!
ஆதாரம்: திரு.V.I.K.Sarin அவர்கள் எழுதிய " Face to Face with God" என்ற புத்தகத்தில் இருந்து.
📝 நிகழ்வு 391:
எனது 12ஆவது வயதில் நான் ' மருவானா ' என்ற போதைப் பொருளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்! நான்கு வருடங்களுக்கு பின்னர் நான் (சத்ய)சாய்பாபாவை பற்றி கேள்விப்பட்டேன்! அவரைப் பற்றிய பல நற்செய்திகளை அறிந்தேன். அவரை நான் என் இதயபூர்வமாக நேசிக்க ஆரம்பித்தேன். எனது போதைப் பழக்கமும் பாபாவின் மேல் எனக்கு இருந்த அன்பும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று சிறிது காலத்திலேயே என் இதயம் எனக்கு அறிவுறுத்தியது. புகைபிடிப்பதை நிறுத்துவதற்கு பலமுறை முயன்றும் அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை! இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும் வலிக்கும் ஆளானேன். ஆயினும் நான் இந்த பழக்கத்தை நிறுத்துவதில் உறுதியாக இருந்தேன். இதற்காக நான் எப்பொழுதும் பாபாவிடம் வேண்டிக் கொண்டிருந்தேன்; எனது போராட்டத்தையும் நான் கைவிடவில்லை. எனது 19ஆவது பிறந்தநாள் கழிந்த பின் ஒரு நாள் இரவில் நான் எனது அக்காவின் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தேன். அவள் உறங்கச் சென்று விட்டாள்; ஆனால் இரண்டு கோப்பைகள் காபி அருந்திய பின்னர் நான் நன்கு விழித்துக் கொண்டிருந்தேன். பல மணி நேரங்களுக்கு என்னால் உறங்க முடியாது என்று எனக்குத் தெரியும். அந்த நேரத்தில் எனது புகைப் பழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொண்டிருந்தேன். முற்றிலும் அந்த பழக்கத்தை விட்டு விட நான் எடுத்துக் கொண்டிருந்த சபதத்திற்கு இப்போது பரீட்சை வந்தது!! எனக்கு முன்னால் இருந்த மேசையின் மீது மருவானா அடங்கிய ஒரு பெரிய பையும் புகை பிடிக்கும் குழலும் இருந்தன! "நீ புகை பிடித்து நீண்ட நேரம் ஆகிவிட்டது! ஆகவே மீண்டும் தொடங்கலாமே?" என்று என் மனம் என்னைத் தூண்டியது! ஆனால் நான் அந்தத் தூண்டுதலைக் கடுமையாக எதிர்த்தேன். மேலும் பாபாவிடம் மன உறுதிக்காக வேண்டி, " பாபா! உனக்காக நான் இதனை செய்கிறேன்!" என்று கூறினேன். எனக்கும் என் மனதிற்கும் இடையே தொடர்ந்த போராட்டத்தினால் நான் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக, நரக வேதனையை அனுபவித்தேன்!! இறுதியில், உடலும் மனமும் ஒருசேர தளர்ந்த பின்னர் நான் உறக்கத்தில் ஆழ்ந்தேன்!! நான் அனுபவித்த வலியின் மூலம், இறைவன் மீது நான் கொண்டிருந்த பக்தியை நிரூபணம் செய்ததாக என் தூக்கத்திலேயே நான் உணர்ந்தேன்!
மிக அருமையான ஒரு கனவின் மூலம் நான் விருது அளிக்க பெற்றேன்!
" என்னை நேசித்ததற்கு நன்றி!" என்று என்னிடம் வந்து பாபா கூறியதன் பிறகு எல்லா வலிகளும் களைப்பும் நீங்கப் பெற்றேன்!!
போதைப் பழக்கத்திலிருந்து அன்றே முழுமையாக நான் விடுதலை அடைந்தேன்!!
ஆதாரம்: நியூ யார்க் நகரைச் சேர்ந்த Mr. Doug என்ற பக்தர் ஜூலை 1981- சனாதன சாரதி ஆங்கில இதழில் எழுதியுள்ள பதிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக