தலைப்பு

சனி, 15 மார்ச், 2025

பாபாவிடம் ஒருவர் வாட்ச்சுக்கு பில் கேட்டார்! - பிறகு நடந்தது என்ன?

ஒரு சாயி நேர்காணலில் நிகழ்ந்த மிக வித்தியாசமான அனுபவம் இது - அது மிக சுவாரஸ்யமாக இதோ...!

அது பிரசாந்தி நிலையம்! தரிசனக் கூட்டம்! கூட்டம் அலை மோதுகிறது! ஆங்கிலேயர்கள் பலரும் அங்கே குவிந்திருக்கிறார்கள்! கருப்பு சிகப்பாக ஏகப்பட்ட நிறங்கள்! நிறங்களை ஒன்றிணைக்கும் நிற பேதமற்ற வெளிச்ச வானவில்லாகிய பாபா அங்கே தரிசனம் தர எழுகிறார்!  

அப்போது ஒரு தென் ஆப்ரிக்கா பக்தரை நேர்காணலுக்கு வரச் சொல்லி கை அசைக்கிறார்!

அவரும் பயபக்தியோடு எழுந்து நேர்காணல் அறைக்குச் செல்கிறார்! 

அவருக்கு இதுவே முதல் புட்டபர்த்தி விஜயம்! முதல் பாபா தரிசனம்! முதல் சாயி நேர்காணல்! ஆகவே அவருக்கு சந்தேகங்கள் மனதில் தொக்கி இருந்தன! அதைத் தீர்ப்பதற்கே நேரில் வந்திருக்கிறார்!

அவரிடம் தனது நேர்காணல் அறையில் சில நிமிடம் பேசிக் கொண்டிருந்த பாபா "என்ன வேண்டும்?" என்று கேட்கிறார்! அவரும் பதிலுக்கு கைக்கடிகாரம் வேண்டும் என்கிறார்!

உடனே பாபா தனது கை அசைப்பால் ஒரு கைக்கடிகாரத்தை வரவழைத்துத் தருகிறார்! 

அவரும் வியந்து பார்த்து வாங்கிக் கொள்கிறார்! ஒரு சிறு சந்தேகம் - எனவே அந்த தென் ஆப்ரிக்கா பக்தர் அந்த வாட்ச்சுக்கு பில் கேட்கிறார்! பாபாவும் ஒரு நொடி கூட யோசிக்காமல் - இப்படி எல்லாம் ஏன் சந்தேகப்படுகிறான் என்கிற ஒரு பொட்டு தர்மசங்கட ரேகைக் கூட முகத்தில் தோன்றாவாறு - உடனே தனது கை அசைப்பில் அந்த வாட்ச் பில்'லை சிருஷ்டித்துத் தருகிறார்! அதில் தான் ஒரு டுவிஸ்ட்!


என்னவெனில் அந்த பில்'லில் உள்ள கடையில் முகவரி - இவர் தென் ஆப்ரிக்காவில் தங்கிய வீட்டின் அருகே இருக்கிறது! அதிர்ந்து போகிறார்!

நேர்காணல் எல்லாம் சிறப்பாக நிகழ - அங்கே சில நாள் தங்கிய அந்த பக்தர் பிறகு தனது தேசம் வருகிறார்! வந்ததும் வராததுமாக அந்த பில்'லை எடுத்துக் கொண்டு - அந்தக் கடையின் முகவரிக்குச் சென்று - அந்த பில் குறித்தும் - யார் வாங்கியது எனவும் விசாரிக்கிறார்! 

அந்தக் கடைக்காரர் அந்த பில்'லை இனம் கண்டு கொண்டு - வந்தவர் எப்படி இருந்தார் என்பதை விவரிக்கிற போது அது பேரிறைவன் பாபாவின் தோற்றம் என்று புரிந்து கொள்கிறார் அந்த தென் ஆப்ரிக்கர்! பம்பை கேசம் - சிறு உருவம் - காவி உடை போன்ற தோற்றம் விவரிக்கப்படுகிறார்!

அந்தக் கடைக்காரர் அந்தச் சம்பவத்தை விவரித்ததில் மேலொரு ஆச்சர்யம் எனில் - நெடுநேரம் பல கைக்கடிகாரங்களை கண்ணோட்டம் இட்டு விசாரித்த பிறகு தான் தாங்கள் கைகளில் கட்டி இருக்கிறீர்களே அந்த கைக்கடிகாரத்தை தேர்ந்தெடுத்து - அதற்கு பணமும் கொடுத்து அவர் திரும்பிச் சென்றார் - மீண்டும் வந்து பில் கேட்டார் - அவரின் வித்தியாசமான தோற்றம் பழகும் பாங்கு - இதை எல்லாம் தன்னால் மறக்கவே முடியாது என கடைக்காரர் தெரிவிக்கையில் அது தென் ஆப்ரிக்கர் இதயத்தை அப்படியே நெகிழச் செய்கிறார்! இதயம் நெகிழ்கையில் விண்ணில் இருந்து வராத கங்கையும் கண்ணில் இருந்து வந்துவிடுகிறது!


(Source : Beyond Borders | Chapter 1 | Page : 9 | Author : K.Karthikeyan | year of publication :2015)


பாபா நெடுநேரமாக தென் ஆப்ரிக்காவில் தேர்ந்தெடுத்து பணம் கொடுத்து வாங்கியது அந்தக் கைக்கடிகாரம் - ஆனால் புட்டபர்த்தியில் ஒரு நொடியில் அதை அந்த தென் ஆப்ரிக்கா பக்தர் முன் நீட்டுகிறார்! பாபா அங்கே சென்ற அந்த நேரமும் - அந்த பக்தர் வாட்ச் கேட்ட நேரமும் - ஒரே நேரம்! எப்படி இது சாத்தியம்?!? காரணம் ஸ்ரீ சத்ய சாயா அஷ்டோத்திரத்திலேயே இருக்கிறது -

"ஓம் ஸ்ரீ சாயி காலாதீதாய நமஹ"

ஆம்!! காலத்தை கடந்தவரே பேரிறைவன் பாபா! பாபா எதைத் தருகிறார் என்பது முக்கியமல்ல - அவர் பேரன்போடு தருகிறாரே அந்தப் பேரன்பு தான் பிரதானம் - அதுவே சன்னிதானம்! பாபாவின் சிருஷ்டி பொருளால் அல்ல அவரது தெய்வீகம் - அவரின் பேரன்பே உண்மையான அவரின் தெய்வீகம்!!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக